புதிய பரிமாணங்களும் பெருவிடுதலையும் – வெண் பெருமுரசு பயணம்: ரம்யா

அன்பு ஜெ,

இன்று (ஜூலை 18, 2025) இரவு வெண்முரசு நாவல் வரிசையை நிறைவு செய்தேன். ஏதாவது விசேஷமான நாளா என்று தேடிப் பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. இரவு பதினொரு மணி ஆகியிருந்தது. வானத்தைச் சென்று பார்த்தேன். தென்பக்கம் திருக்குறுங்குடி கால பைரவனின் கண்கள் போல மினுங்கும் இரு அழகான நட்சத்திரங்கள் மட்டும் இருந்தது. வேறு நட்சத்திரங்கள் தெரியாதபடிக்கு வான் மேகங்களால் மூடியிருந்தது. இளம் தூரல் தூரிக்கொண்டிருந்தது. அங்கு அப்படியே அந்தக் கூர்மையான கண்களுக்கு முன் அமர்ந்து வெண்முரசு முதலாவிண்ணின் இறுதி அத்தியாயத்தை வாய்விட்டு வாசித்து முடித்தேன். இரவு எங்கள் கிராமத்தில் ஒலி எதிரொலிப்பு அதிகமாக இருக்கும். வீட்டில் கீழேயிருந்து மாமா வந்து எட்டிப்பார்த்து விட்டு சீக்கிரம் வரும்படி அழைத்துவிட்டுப் போனார்கள். 

சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்து அசைபோட்டிருந்தேன். நான்கரை ஆண்டு காலப் பயணம். விஷ்ணுபுரம் தொடங்கி வெண்முரசு, காவியம் வரை என அதை நீட்டிக் கொள்ளலாம். மனம் முழுவதுமாக மகிழ்வும் நிறைவும். அடுத்தடுத்த நாட்களில் வேறு எந்த வேலையையும் செய்யவில்லை. மனதில் நாவல் வரிசைகளை அசைபோடுவதும் மெல்ல எழுத முற்படுவதும், உணர்வு பொங்கி கண்ணீர் விடுவதும் என இருந்தேன். நீலிக்கான பதிவேற்றும் பணிகள் செய்தேன். அதற்கு பெரிதாக மனதை செலுத்த வேண்டியிருக்காது என்பதால் அதை மட்டும் செய்தேன். அருகிலிருக்கும் தாணிப்பாறைக்கு சிறு பயணம் சென்று வந்தேன். மழை தூரிக்கொண்டே இருந்தது இதமாக இருந்தது. ஏற்கனவே வெண்முரசுக்கென நான் எடுத்த குறிப்புகள், கட்டுரைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

டிவிட்டர் பக்கம்: வெண்முரசு பயணம் (வெண்முரசு குறிப்பெடுக்கும் பக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. மின்னும் வரிகளின் தொகையாக இப்போது உள்ளது : (https://x.com/rumsramyal?t=wkCdg4SLqWgRpgsKuBY99A&s=08)

ஏப்ரல் 2021-இல் இந்த டிவிட்டர் பக்கம் ஆரம்பித்தேன். முதற்கனல் ஆரம்பித்ததிலிருந்து வெண்முரசுக்கு குறிப்பெடுக்க பல வழிமுறைகளை முயற்சிசெய்து கொண்டிருந்தேன். முதற்கனலுக்கு பிடித்த வரிகளை கையால் எழுத முற்பட்டு முடியாது என்று கண்டு கொண்டேன். வேர்ட் ஃபைலில் குறிப்பெடுக்க ஒரு இடத்தில் உட்காருவது அவசியமாக இருந்தது. எனவே அதைக் கைவிட்டு அனைத்தையும் வாட்ஸாப்பில் சேமித்து வைத்தேன். 2021 எனக்கு பணிக்கான பயிற்சிக்காலம். கொரனா பெருந்தொற்று சற்று தனிய ஆரம்பித்திருந்த காலகட்டமும் கூட. பணிக்கான பயிற்சிக்காக தென்காசி, சென்னை என அலைந்து கொண்டிருந்தேன். பேருந்துகள் பல தாவிகுதித்து ஒவ்வொரு நாளும் பயணம் செய்து கொண்டிருந்தேன். இமைக்கணத்தைத் தவிர பிற வெண்முரசு நாவல்கள் முழுவதையும் இணையத்தில் வாசிக்க வேண்டும் என்றும் டிவிட்டரை குறிப்பெடுக்கும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். அது கச்சிதமாக இருந்தது.

விஷ்ணுபுரம் நிறைவு செய்த கையோடு முதற்கனல் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். குறிப்புகள் எடுப்பது நாவல் வாசிப்பதற்கு துணை புரிந்தாலும் நாவல் வாசித்து முடித்ததும் ஒரு நிறைவின்மையே கை கூடி வந்தது. அதை தொகுத்துக் கொள்ள கட்டுரைகள் எழுதினேன். முதற்கனலுக்கு மட்டும் மூன்று கட்டுரைகள் எழுதினேன். கட்டுரைகள் எழுதுவது சிந்தனையை சீராக தொகுத்துக் கொள்ள உதவியது. 

முதற்கனல் என் தத்துவநோக்கில்   பெண்களின் நெஞ்சில் மூண்ட கனல் (அகழ்) முதற்கனலின் பிதாமகன் (கனலி)

ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தோறுவாய் ”இச்சை” என்னும் புள்ளியினின்று பிறப்பெடுக்கிறது என்னும் தத்துவம் என்னுள் கேட்டுக் கொண்ட பல கேள்விக்கான விடையாக அமைந்தது என்று கட்டுரையில் எழுதியிருக்கிறேன். பிரபஞ்சத்தின் முதல் அசைவு நா-அகத்தின் அசைவாக சித்தரிக்கப்பட்டு “நான் இருக்கிறேன்”; “இனி” என்று விரிகிறது. ”நான்” என்பதே அகங்காரமாகி அதன் இருப்பை நினைத்து பெருமிதம் கொண்டு பல்லாயிரம் கோடியாக பெருகுகிறது.

முதற்கனலின் நாயகனான பீஷமரையும், நாயகியான அம்பையையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன். ”சுனந்தையின் காமத்தின் கனல்” என்ற சொல்லை கட்டுரையிலுருந்து மீட்டு நினைவு கொள்கிறேன்.

”குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது! தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டதுஏறிவிட்டது! வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது. இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” என்ற வரி, வருவதை முன் அறிவிக்கும் நிமித்தச் சொல்லாக முதற்கனலிலேயே இருந்ததை நினைத்துக் கொள்கிறேன். அழிவின் கதை, போரின் கதை என்பதை விடவும் அறத்தின் கதை என்று இப்போது உணர முடிகிறது. எல்லா நேர்வுகளிலும் விசாரிக்கப்பட்டது எது அறம் என்பது தான். “மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அறைந்து அமுதைத் திரட்டிக் கொண்டிருக்கிறது. சொல்லும், அறமும், மெய்யும் பிறக்கும் இடம் அது” என இறுதி நாவலில் யுதிஷ்டிரர் சொல்கிறார். அறத்தையும், மெய்மையையும் எல்லா நாவல்களிலும் விசாரிக்கிறது இந்த வெண்பெருமுரசு என்றே கொள்ள முடிகிறது.

முதற்கனலில் ஆழமாக நிற்கும் சொல் ”ஆடிப்பிம்பம்” என்பது. ”அது நீயே. மகனே நானே நீ”, “தத்வமசி” என சிகண்டிக்கு அக்னிவேசரால் மொழியப்படும் வரியையும் நினைத்துக் கொள்கிறேன். முதற்கனலுக்குப் பின் ஓரிரு மாதங்கள் தொகுத்துக் கொள்வதில் தான் அதிகம் கவனம் செலுத்தினேன். எந்தத் தொடக்கமும் சரியாக அமைந்தால் தான் முடிவு சரியாக இருக்கும் என்பது நான் எல்லா செயலிலும் கடைபிடிப்பது. அதன் பின்னர் அதுவே தனக்கான பாதையை எடுத்துக் கொள்ளும். 

இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” ஆரம்பிக்கையில் பாதை இலகுவாக இருந்தது. முதற்கனல் அஸ்தினாபுரியைப் பற்றிய பெருஞ் சித்திரத்தைக் கொடுத்தது என்றால், மழைப்பாடல் காந்தார அரசையும், யாதவ அரசையும் பற்றிய சித்திரத்தை அளித்தது. ஹஸ்தியின் குலம் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்ததால் அதை எளிதாக மனதில் பதிக்க முடிந்தது. ஆனால் காந்தார அரசு, யாதவ அரசு சார்ந்த பெயர்களையும், குலத்தின் வரிசையையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்ததை நினைவு கூர்கிறேன். அதனை தொகுத்துக் கொள்ளும் பொருட்டு சில முயற்சிகள் எடுத்தேன். நாவலில் சொல்லப்பட்ட காந்தார அரசு, யாதவ அரசு பற்றிய சித்திரத்தை மனதில் பதிக்க வரைபடம் ஒன்றை தயாரித்தேன்.

மேலும் சில படங்கள் வரைந்ததாக நினைவு. ஆனால் இப்போது எதுவும் அவசியமில்லை என்று தோன்றுகிறது. இவையாவும் சட்டகங்கள் தான். ஒட்டுமொத்தமாக மகாபாரதக் கதை மாந்தர்களும், கதையுமே வெண்முரசில் சட்டகம் மட்டும் தான். அதை மறுஆக்கம் செய்து ஊற்றும் ஆன்மா தான் முக்கியமானது என்று ஒரு தருணத்தில் கண்டுகொண்ட பின் மெல்ல இந்த முயற்சிகள் இல்லாமல் ஆனது. பெயர்கள் மறந்துவிடும் பதற்றம் மெல்ல இல்லாமல் ஆனது.

மழைப்பாடல் பதினேழு பகுதிகளைக் கொண்ட பெரிய நாவல். பீஷ்மர், பாண்டு, விதுரரைப் பற்றி விரிவாகவும், கெளரவ நூற்றுவர்கள், பாண்டவர்களின் அறிமுகமும் கொண்டது. நாயக பிம்பமாக ஆண்கள் இருந்தாலும், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் விழைவும் தோன்றிய இடம் பெண்களாக இருப்பதாக அமைத்திருந்தது. அப்படி இந்த நாவலில் எழுந்து வரும் முக்கியமான பெண்களாக சத்தியவதியும், அம்பிகையும், பிருதையும் அமைகிறார்கள். நாவலை பகுதிகள் வாரியாகவும், கதைமாந்தர்களைக் கோர்த்தும் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டேன்.

மழையும் நிலமும் 

மழையின் வேதம், வேழாம்பல் ஆகிய சொற்கள் இந்த நாவலை நினைவு கூர்கையில் வருபவை. இதற்குப் பின் எப்போது தவளைச் சத்தம் கேட்டாலும் அதை ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அந்த ஒலியை மாண்டூக்ய உபநிஷதம் என்றும் மழைக்கான தவம் என்றும் அதற்குப் பின்னான நாட்களில் பார்க்க ஆரம்பித்தேன்.

கிருதம், திரேதம், துவாபரம், கலி என யுகங்களின் வரிசையைப் பட்டியலிட்டு அதைப் பற்றிச் சொல்லி ஆரம்பிக்கும் மழைப்பாடல் துவாபார யுகத்தின் அழிவைப் பற்றி நிமித்திகம் கூறி முடிக்கிறது. ”அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும். எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்” என்பதன் மூலம் கண்ணனின் வரவை அறிவித்து முடிந்தது சிலிர்ப்பைத் தந்தது.

மூன்றாவது நாவல் வண்ணக்கடல். அந்த நாவலின் நாயகனென எழுந்து வருபவன் கர்ணன். “விண்ணவர் அறிக! மூதாதையர் அறிக! இந்தக் கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை“ என துரியோதனன் கர்ணனை அரசனாக்கும் அந்த அத்தியாத்தை இரவில் வாசித்து முடித்து அழுது கொண்டிருந்த தருணத்தை நினைவு கூர்கிறேன். எளிய உணர்வுகள் என இன்று மேல் நோக்கியிருந்து ஒரு பார்வையை அடைந்தாலும் அந்தத் தருணத்தில், காலத்தில், இடத்தில் கட்டுப்பட்டு மானுடர் அடித்துச் செல்லப்படும் விசையை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

வண்ணக்கடலின் அருமுத்து கர்ணன் 

இந்த நாவலில் அறியாத ஒரு கை காய்களை நகர்த்துகிறது என்ற சிந்தனையையும் அடைந்தேன். கர்ணன், துரியோதன், பீமன் என ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கும் நாகத்தை இறுதியில் உணரமுடிந்தது. இச்சையென்னும் தந்திரத்தால் ஆடும் நாகங்களின் ஆட்டம் ஒருக்கப்பட்டிருப்பதையும், அந்த ஆடலில் நன்மை தீமை என்ன? என்பதை வகுத்து ஒரு தரப்பைச் சொல்ல வருபவனை அது நினைவுபடுத்தியது.

இயல்பாக நீலத்தில் அவன் வருகையை அத்தனை தெய்வீகத்தோடும், பிரேமையோடும் வாசித்தேன். எல்லா அத்தியாயங்களையும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்து வாய் விட்டு வாசித்த நினைவு. சில அத்தியாயங்களை ஆண்டாள் கோவிலின் நந்தவனத்தில் வைத்து வாசித்தேன். இனிமையான நினைவுகள். நீலத்திற்கு என்னால் கடிதம் எழுத முடியவில்லை. அத்தனை மதுரமும் பித்தும் நிறைந்திருந்தது. அதை எழுதும் அளவுக்கான அழகான மொழி என்னிடம் இருக்கவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்தே பிரயாகை வாசித்தேன்.

பிரயாகை என்றவுடன் நினைவுக்கு வருவது துருவன் தான். பிரயாகை வாசிப்பின் போது ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து துருவனை பார்த்துக் கொண்டிருந்தேன். உளமார வணங்கினேன். துருவனைக் காணும்ப்பொதெல்லாம் நினைவிற்கு வரும் வரி இது:

”அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.” 

துருவனுக்கு இதைவிடவும் பொருளளிக்க முடியுமா அல்லது மானுடம் பிரம்மத்தை நோக்கி கை நீட்டிய அத்தருணத்தை நிலைபெயராமையை நோக்கி சித்திக்க ஆரம்பித்த புள்ளியோடு முடிச்சிட்டதை நினைத்து சிலிர்த்துக் கொண்டதை நினைத்துக் கொள்கிறேன். துருவனை கண்ணனுடனும் இந்த நாவலில் எழுந்து நிற்கும் இன்னொரு படிமம்மான கங்கை அன்னையை திரெளபதியுடன் ஒப்பிட்டுக் கொண்டேன். பிரயாகை உணர்வுத்தருணங்களால் நிரம்பியதாக நினைத்தேன். எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை அவை மட்டுமே என்று நினைத்து அதைப் பற்றி தொகுத்து வைத்துக் கொண்டேன். இளைய யாதவரின் ”அந்தப் புன்னகையை” தரிசித்த இடமாக பிரயாகை நினைவிலுள்ளது.

பிரயாகையின் துருவன் பிரயாகையின் உணர்வுத் தருணங்கள்  அந்தப் புன்னகை

பெரும்பாலும் நாவல் முடிந்ததும் டிவிட்டரில் குறிப்பெடுத்தவற்றை வேர்ட் ஃபைலில் மாற்றி மீள வாசித்து அதில் தொகுத்துக் கொள்ள வேண்டியவை இருந்தால் மட்டும் கட்டுரை எழுதினேன். கதைமாந்தர்கள் பற்றிய குறிப்பெடுத்தல் முற்றிலும் இல்லாமல் ஆனது பிரயாகையில் தான். அதன்பின் நாவல் வரிசைகளில் அடித்துச் செல்லப்பட்டேன் எனலாம்.

அகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்ததையொட்டி புறத்திலும் மாற்றங்கள் எனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததை இன்று உணர்கிறேன். ஒரு கட்டத்திற்குமேல் வாழ்வு வெண்முரசுடன் இணைந்துவிட்டிருந்தது. சில நாட்களில் மனதில் எழும் கேள்விகளுக்கு அங்கு விடை இருந்தது. வெண்முரசில் கதைமாந்தர்களுக்கு நிகழும் உளச்சிக்கலும் கேள்விகளும் என் வாழ்க்கையில் எழும்படிக்கு வாழ்வின் நிகழ்வுகள் அமைந்து வந்தது. சில கதைமாந்தர்களுடன் அணுக்கமாகியும் முரண்கொண்டும் அவர்கள் கேள்விகள் வழியாக அவர்கள் அடையும் பதில்களுடன் ஊடியும் முயங்கியுமென சென்று கொண்டிருந்தேன். இதுவே நான் என் வாழ்வில் முக்கியமான உடைவுத் தருணத்தில் இருந்த காலகட்டமும் கூட. ஆனால் அக்காலகட்டத்தில் தீவிரமாக செயல்கள் செய்து கொண்டிருந்தேன். தமிழ்விக்கி, நீலி என ஒருபுறமும், புனைவெழுத்து இன்னொரு புறமும் என புதிய பயணத்தை இக்காலகட்டத்தில் தான் துவங்கியிருந்தேன். மண்டை முற்றிலும் கேள்விகளால் நிறைந்திருந்தது. தூங்கும் நேரம் குறைவாக இருந்தது. காரணமேயில்லாமல் அழுகை வரும். சிறிய விஷயங்களுக்காக மகிழ்வதும், கண்ணீர் உகுப்பதும் நிகழும். ஒரு சமயம் மனிதர்களை மன்னித்துவிட்டதாக நினைத்து பேரன்னை போல என்னையே உணர்வேன். மறுமுறை ஏன் மன்னிக்க வேண்டும். மனிதர்கள் காலத்துக்கு கட்டுப்பட்டவர்கள் நான் மனிதராகவே இருந்து கொள்கிறேன் என பெருங்கோபமும் ஆத்திரமும் எழும். சில நாட்கள் சம்மந்தமே இல்லாமல் அத்தனை மதுரம் நிறைந்திருக்கும். இனித்து இனித்து சாகும் நிலை என வெண்முரசில் வரும் வரியை நினைத்துக் கொள்கிறேன். தாங்கவே இயலாத உணர்வுப் பெருக்கான நாட்களை நாவல் வரிசை அளித்துச் சென்றது.

எல்லா கேள்விகளையும் பகுக்கும்படியாக சொல்வளர்காடு அத்தியாயம் அமைந்தது. அதை குறிப்பெடுக்கும் எண்ணம் வந்தது. ஆனால் குறிப்பெடுக்கெடுத் தேவையே இல்லாத அளவுக்கு மொத்த புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் முக்கியமானதாக இருந்தது. உங்களுக்கு எழுதக்கூடிய அளவு நீங்கள் தொலைவில் இல்லாததுபோல உணர்ந்தேன். உங்கள் அருகில் இருந்தேன். நானே கார்கேயியாகவும் மைத்ரேயியாகவும் நாவலுக்குள் இருந்தேன். சொல்வளார்காடு வாசித்தபோது கனவுகளில் நான் காடுகளுக்குள் அமர்ந்து பாடம் கேட்பது போன்ற சித்திரம் வந்து கொண்டே இருந்தது. அப்போது நீங்கள் தத்துவ வகுப்பை ஆரம்பித்திருந்தீர்கள். மூன்றாவது வகுப்பு என்பதாக நினைவு. ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து அந்தி சாயும் நேரத்தில் நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அது ஏற்கனவே நடந்ததாகத் தோன்றி சிலிர்த்துக் கொண்டேன். அந்தத் தருணத்தை ஒருவர் புகைப்படம் எடுத்திருந்ததை அறிந்தபோது வரமாகவே கருதினேன். வெள்ளிமலையில் வகுப்புகள் என் புறத்தில் நிகழ்ந்த இன்னொரு நேர்மறையான அம்சம். ஒவ்வொரு முறை வரும்போது அந்த மலைகளை நோக்கி நின்றிருக்கும் பெரிய கல்லில் நின்று என்னையே பார்த்துக் கொள்வதுண்டு. எத்தனை எடையுடன் மனம் இருந்த நாட்களை கடந்து வந்திருக்கிறேன் என்பதை அது மெல்ல இலகுவாகுகையில் நினைத்து அந்த மலைகளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதுண்டு.

கிராதம் அனைத்து இருளின் உச்சம். அந்த நாவல் முடியும் வரை புறமாக இருளை அள்ளி என்னைச் சுற்றி நிறைத்துக் கொண்டேன். அலைக்கழிதலின் உச்சத்திலிருந்த நாட்கள் என கிராதம் நாவலின் நாட்களைச் சொல்வேன். அந்த நாட்களில் சோழபுரம் கோவிலுக்கு அவ்வபோது சென்று காலபைரவரை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். “நான் என எழுந்து காலத்தின் முன் நிற்பது மட்டுமே என் கனவு. நான் இருந்த இடம் விதைபுதைந்த மண். கீறி எழுந்து வானோக்கவேண்டும். அதற்காகவே கிளம்பினேன்.” என்று பிச்சாண்டவர் முன் சொன்ன வைசம்பாயனரை நினைத்துக் கொள்கிறேன். அர்ஜுன்னனின் திசைப்பயணமும், அலைக்கழிதலும், வெற்றியும், பணிதலும் என கிராதம் செயற்களத்திற்கான அத்தனை உந்து சக்தியையும அளித்தது. 

கிராதத்தைக் கடந்து நான் வந்து நின்றது மாமலரின் முன். கல்யாணசெளந்திகம் என்ற மலரின் வாசனையை நினைவு கூர்கிறேன்.

பெருங்காதலின்பயணம் 

உங்கள் படைப்புகளை என் வசதிக்காக மூன்றாக பகுத்துக் கொள்கிறேன். முதலாவதாக உங்கள் சொந்த தத்துவச்சிக்கல், வாழ்க்கை நோக்கு, கேள்விகள் சார்ந்தவை. அதன் வழியாக நீங்கள் அடைவதை முழுமையாக உங்களுடன் இணைப்பயணமாக தொடர்ந்து வரும் வாசகர்கள் அடைகிறார்கள். உங்களுக்கு இணையாகவே அலைக்கழிதலும், பித்தும் அடைந்து அது தரும் அனுபவத்தால் என்றைக்கும் அப்பாதையை விட்டு அகலாதவர்கள். இரண்டாவதாக என்றுமுள அறம் சார்ந்தது, மானுட மெய்மையை சார்ந்தது. இது நீங்கள் முற்றிலும் எந்தக் கேள்வியும் இல்லாமல் நம்பும் விஷயங்கள். அந்த ஸ்திரத்தன்மையின் பொருட்டும், அது நின்றிருக்கும் உயரத்தைப் பொறுத்தும் ஏற்பு, மறுப்பு என்ற நிலையைத்தவிர இன்னொன்றுக்கு இடமில்லை. அத்தகைய வாசகர்களைக் கொண்ட படைப்புகள் அவை. மூன்றாவதாக மெல்லுணர்வுகள், காதல் சார்ந்தவை. தற்கணங்கள் சார்ந்தவை. எளியவை என்று மயக்குபவை. முதல் இரண்டின் வழியாக முதலில் அணுக்கமானாலும் என் அடியாழத்தில் மூன்றாவது வகை சார்ந்த எழுத்துக்களே உங்களில் அதிகம் அணுக்கமானது. அது மலர்த்துளி, மதுரம், பெருங்கை, இச்சாமதி, தீற்றல், மாமலர், கல்யாண செளந்திகம், சியமந்தகம் என பெரும் படிமமாக எழுந்து நிற்பவை. பேராளுமைகள் பெரும்பயணம் செய்தவர்களுக்கு இணையாக அதனால் தான் வெண்முரசில் மாத்ரியையும், காளிந்தியையும், மாலினியையும், சுபகையையும் நினைவு கூற முடிகிறது. 

விஷ்ணுபுரமும் இமைக்கணமும் என் வாழ்வில் மிக முக்கியமான பொக்கிஷங்கள் என நினைப்பதுண்டு. அதைவிட ஒரு படி மேலாக மாமலரை என்னால் வைக்கமுடியும் என்று இன்று தைரியமாக சொல்லிவிட முடிகிறது. “வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும்.” என்று சொன்னால் மிகுந்த பலத்துடன் தலையாட்டி அதை வாங்கி வைத்துக் கொள்வேன்.

இவற்றையெல்லாம் கடந்து குருதிச்சாரல் வந்து சேரும்போது மீண்டும் பதற்றம் வந்து சேர்ந்தது. உங்களுக்கு கடிதம் எழுதிவிட்டு மறுநாள் “இமைக்கணம்” ஆரம்பித்தேன்.

குருதியின் முடிவில்

இமைக்கணத்தின் ஒவ்வொரு வரியும் எனக்கு முக்கியமானது. மேன்மையான அனைத்திலும் உறைபவனை தரிசித்த நிறைவு. இரக்கமற்ற அவனின் விளையாட்டை மேலிருந்து பார்க்கும் பார்வை கிடைத்தது. எத்தனை உருவகங்கள், ஐயங்கள், குறியீடுகள்! ஒவ்வொருவருக்குமான கேள்விகளும் பதில்களும் எந்தவித மறுபேச்சுக்கும் இடமின்றி அளிக்கப்பட்டு, அந்த யுகத்துக்கான செயலை நோக்கி அவர்களை முடுக்கி விட்டது. ஊழ் பற்றிய பெரும் திறப்பு, அறிவு இதன் வழியாக கிடைத்தது. இந்தக்கணத்தில் என்னிடம் இருப்பவற்றில் எது விலைமதிக்கமுடியாதது என்று கேட்டால் தயக்கமே இல்லாமல் நான் விஷ்ணுபுரம், இமைக்கணம் என்று சொல்வேன். ”காவியம்” நாவல் கையில் கிடைக்கும்போது அதையும் சேர்த்துக் கொள்வேன்.

இமைக்கணத்திற்குப்பின் ஒரு மாதம் எதையும் வாசிக்கவில்லை. அதன் பின் போர். எளிய போர் அல்ல. பாரதத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படும் மிகப்பெரும்போர். இன்றளவும் கூத்தாகவும், நாடகமாகவும் நடிக்கப்படும் போர். சடங்காக கிராமங்களின் மூலை முடுக்குகளில் கூட அறிய முடிவது. திரெளபதியும், கர்ணனும், இளைய யாதவரையும் அறியாத மக்கள் இந்தியாவில் இல்லை எனுமளவும் படிமமாக, தொன்மமாக, சொலவடையாக மாறி அன்றாடத்தில் கலந்துவிட்டவர்கள். ஒவ்வொருவரும் இறக்கும் தருவாய் மனதை கனமாக்கிக் கொண்டே வந்தது. மெல்ல ஒவ்வொன்றாக இழந்து ஒரு விடுபடுதல் நிகழ்ந்து கொண்டே வந்தது.

கல்பொருசிறுநுரை நாவல் வரும் போது மீண்டும் சோர்வின் உச்சத்தை அடைந்தேன். அந்த சொல்லைப் போல எழுப்பட்ட அனைத்தும் பாழ் என்றாகி உடைந்து நொறுங்கி சிதறிக் கிடப்பதைப் பார்ப்பதைப் போன்ற வெறுமை. அவ்வளவுதானா எல்லாம்? என்ற உணர்வு நிலை. ஆனாலும் எந்த ஒன்றோ இது அல்ல என்று என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. நத்தை போல மெல்ல மெல்ல ஊர்ந்தபடி தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் காவியம் நாவலை நீங்கள் எழுத ஆரம்பித்தீர்கள். ஒருவேளை காவியம் வாசித்திருக்காவிட்டால் இப்போது அடைந்திருக்கும் இந்தப் பார்வையை அடைந்திருப்பது சாத்தியமில்லை. கதைமாந்தர்களுக்கும் மேலாக கிருஷ்ண த்வைபாயன வியாசரும், உக்ரசிரவஸும், எண்ணிலடங்கா சூதர்களும் என்னுள் எழுந்து நின்றிருக்கின்றனர் இப்போது.

”காவியம்” நாவல் வெண்முரசின் இறுதியில் எஞ்சுவது என்ன என்று காட்டுவது. வெண்முரசையே மொத்தமாக சட்டகமிட்டு அதற்குமேலான ஒன்றைக் காண்பிப்பதாக இருந்தது. அனைத்து காவிய ஆசிரியர்களையும் வரிசையில் நிறுத்தி அவர்களை முன் வைப்பது. என்றுள கதைசொல்லல் எனும் கலையை முன் நிறுத்துவது. காவியம் நாவல் முடித்த கையோடு வெண்முரசின் கல்பொருசிறுநுரையையும் முதலாவிண்ணையும் வாசித்து முடித்தேன். முதலாவிண்ணில் உக்கிரசிரவஸை வியாசர் “இவன் தான்” என்று சொல்லும் தருணம் மேலும் சிலிர்ப்பானது காவிய நாவலால் தான். ஓர் நாயகனின் வரவை உணர்ந்தேன். காவியம் நாவல் வெண்முரசை மொத்தமாக சுருட்டி வியாசரின் காலடியில் சமர்ப்பிப்பது. அதற்கு இணையாக பிற காவிய ஆசிரியர்களை நிற்க வைப்பது. யாவற்றிற்கும் மேலாக கதை சொல்லிகளை வைப்பது. அதற்கும் மேலாக கதையை, இன்னும் ஒரு படி மேலாக மானுடரால் விளங்கிக் கொள்ளவியலாத உணர்வை, அறிவை வைப்பது என்று புரிந்து கொண்டதால் அந்த உணர்வெழுச்சியை அடைந்தேன்.

கணிகரையும் மிகவும் விரும்பும்படி செய்து விட்டுத்தான் நாவலை முடித்திருக்கிறீர்கள். மீள வெண்முரசை மீட்டுப்பார்த்தால் என் மனதிற்கு அணுக்கமானவர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். நான் என்று உணர்ந்த தருணங்களை, மனிதர்களை, உணர்வுகளைச் சொல்ல முடியும். ஆனால் இவரை வெறுத்தேன் என்றோ, இவர் கெட்டவர் என்றோ ஒருவரையும் என்னால் சொல்ல இயலவில்லை. அப்படி ஒருவர் கூட இல்லை. 

ஓவியம்: ஷண்முகவேல்

வெண்முரசு நாவல் வரிசை த்வாபார யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பிப்பதோடு முடிகிறது. வேதமுடிவை நோக்கி அனைத்தையும் செலுத்துவது. வேதமுடிவு என்பது எத்தகைய எதிர்காலம் கொண்டிருக்கும் என்பதை இன்று இந்த காலத்திலிருந்து தெளிவாக காண முடிகிறது. இதன்வழியாக கலியுகத்தின் முடிவையும் காண இயல்வதற்கான கற்பனையையும் அளித்திருக்கிறீர்கள். அனைத்து பழைய மதிப்பீடுகளின், சிந்தனையின் வீழ்ச்சியை கண்ணுற்றேன் எனலாம். ஆனால் இதை பழைய மதிப்பீடு என்று சொல்லிவிட இயலவில்லை. ஒரு காலகட்டத்திற்கான சிந்தனை என்பேன். ஒவ்வொரு சிந்தனையையும் ஏற்கவும் மறுக்கவும் வைக்க முடியும் ஓர் பார்வையையும் அளிக்கிறது. ஒரு யுகம் பிறந்து நிகழ்ந்து முடியும் இந்த பெருங்காலமும், இடமும் வழிநடத்தப்படுவது அக்காலகட்டத்தை தொகுக்கும் ஒற்றைச் சிந்தனையால் என்று தோன்றுகிறது. ஒரு பெரிய காலகட்டத்தை மீட்டுறுவாக்க, மறு உருவாக்க, கற்பனையில் நிகழ்த்திப் பார்க்கத் தேவையானது அக்காலகட்டத்தையே வழி நடத்தும் ஒரு சொல் தான். அச்சொல்லே அதன் விழைவு. அவ்விழைவே யாவற்றின் தோற்றமும். உங்கள் முன் அருவாக வந்தமர்ந்த அந்த ஒற்றைச் சொல்லை இந்த நேரத்தில் மானசீகமாக வணங்குகிறேன்.

த்வாபாரயுகமும், அஸ்தினாபுரி பேரரசும், அதன் கொடி வழிகளும், குடியும், கதை மாந்தர்களும் யாவும் ஒரு நிமித்தமே. ஒரு எலும்புக்கூட்டைப் போல வெண்முரசுக்கான கட்டமைப்பை வழங்குவன. ஆனால் இது முதன்மையாக மானுடர்களின் கதை. எக்காலமும் வந்து சேரக்கூடிய மானுடர்களின் கதை. யாவராலும் தொடர்பு படுத்தக் கூடியது. எத்தனை வகையான மனித உறவுகள். எத்தனை நிகழ்த்தகவுகளில் இங்கு மனித உறவுகள் நிகழ்கின்றன. அனைத்தையும் வாழ்ந்து பார்த்துவிட முயன்று பார்க்கும் ஒரு முயற்சி. நான் வாசிப்பின் வழியாக அதை நிகழ்த்திப் பார்த்தேன்.

இந்த நான்கரை ஆண்டுகளில் 26 நாவல்கள், 1932அத்தியாயங்கள், 22,400 பக்கங்கள் வாசித்திருக்கிறேன். அளவு எனக்கு எப்போதும் பொருட்டல்ல. ஆனால் ஆழமே பொருட்டு. 26 நாவல்களும் அமைந்திருந்த ஆழங்களை சற்று நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு என்னைப் பிடித்து இழுத்துச் சென்றது. கற்பனையால் எத்தனை இடங்களை கட்டி எழுப்பியிருக்கிறேன். எத்தனை கதை மாந்தர்களை என் எண்ணங்களால் தீட்டியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். அவர்களாக சில சமயம் வாழ்ந்திருக்கிறேன். யாவற்றையும் விட நான் வியந்தது இதிலிருக்கும் அறிவின் ஆழத்தைப் பொருத்து தான். 

தமிழ் இலக்கியத்தில் வெண்முரசு மிக முக்கியமான திருப்பு முனை. பெருங்களஞ்சியம் எனலாம். ஏற்கனவே நம்மிடமிருந்த தத்துவ சிந்தனையின் ஒட்டுமொத்த தொகை. மனித உறவுகள், அது சார்ந்த சார்ந்த சிக்கல்கள், உணர்வுகள் சார்ந்து நம்மிடம் இருந்த உச்சபட்ச நிகழ்த்தகவு சாத்தியங்கள் சார்ந்த தொகை. ஒட்டுமொத்தமாக நம் வரலாற்றை, சிந்தனையை நீங்கள் எழுதிய காலகட்டத்தில் நின்று திரும்பிப் பார்த்து தொகுக்கப்பட்ட தொகைக்களஞ்சியம்.

மொழி, மொழி நடை சார்ந்து நவீனத்தமிழ் மொழியின் உச்ச பட்ச சாத்தியமான மொழிவெளிப்பாடு. புதிய செவ்வியல் இயக்கம் ஒன்றின் தொடக்க காலத்தை தமிழ் மொழியில் பறைசாற்றுவதான கூறு கொண்டது. இதை நான் ஒரு முனைப்பாட்டுடன் சொல்லவில்லை. சுண்டக் காய்ச்சிய பாலில் கட்டியான ஏடு உருவாவது போல வெண்முரசு தமிழ் இலக்கியத்தில் வந்தமைந்துள்ளது. பின்நவீனத்துவத்துக்குப் பின்னான காலகட்டத்தில் உதித்த பல்வேறு கிளைகளில் ஒற்றை தங்க இழையாக வெண்முரசு இந்த புதுச்செவ்வியல் போக்கை ஆரம்பித்து வைத்துள்ளது. அதற்கு முன்பே விஷ்ணுபுரம், கொற்றவை என அதன் சுவடுகள் இருந்தாலும் இது அதன் மணிமகுடம் என்று சொல்லலாம். தமிழ் வாசகர் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இனி வாசித்திருக்க வேண்டிய நூலாக அவர்கள் முன் நின்றுகொண்டிருக்கப்போகும் மகத்தான கதைக் களஞ்சியமாக என்றும் நிற்கும். வெண்முரசுக்குப் பின் எழுத்தாளராக விரும்பும் ஒவ்வொருவரும் இதை வாசித்து முடிக்காமல் இதற்கு இணையாக இனியொரு செவ்வியல் படைப்பை படைக்க இயலாது என்றும் சொல்லலாம். ஆனால் வேறு புதுவகை எழுத்துக்கள் உருவாகலாம். எளியவையாக இருக்கலாம். ஆனால் அனைத்துக்குமான ஒரு ஒப்பீட்டுப்புள்ளியாக வெண்முரசு அமையும். பாறை அடுக்குகளுக்கு தாய்ப்பாறை நின்றிருப்பது போல வெண்முரசு நின்றிருக்கும். பிற மொழிகளில் இது நவீன இலக்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே தொகுக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு பலமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழில் இப்போது நிகழ்ந்திருப்பது நமக்கான ஒரு புதுப்பாதையைக் காண்பிப்பதாக உள்ளது.

ஓவியம்: ஷண்முகவேல்

பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமண்யம் எனத் தொடரும் இச்சரடில் உங்களை கோர்க்க முடியாத படிக்கு, வியாசர், உக்கிரசிரவஸ், குணாட்யர், ஜைமினி, வைசம்பாயனர் என நீளும் காவிய ஆசிரியர் மரபில் வைக்கப்பட வேண்டியவராக இந்த நாவல் வரிசையின் வழியாக மொழி கடந்து சென்று வைத்துக் கொண்டுவிட்டிருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் சரியாக சொல்வதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்த வார்த்தைகளை எழுதும்போது மனதார விரும்புகிறேன்.

இத்தனைக்குப் பின்னும் அறிந்தவற்றிலிருந்து அறியாததற்கு செல்லும் ஞானத்தின் போதமே மேலும் இயக்குகிறது. 

ஓர் பெரிய நாவலின் வாசிப்பிற்குப் பின் நிகழ்வது என்ன? என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னில் ஒரு பகுதி அடியோடு மாறிவிட்டது என்று சொல்லலாகுமா? கட்டோடு இவற்றையெல்லாம் கடந்து விட்டேன் என்று பட்டியலிட முடியுமா? நான் உத்தமமான இடத்தை அடைந்து விட்டேன் என்று சொல்லிவிட இயலுமா? எதுவுமே இல்லை. அப்படி எதுவும் இங்கு கட்டோடு மாறவில்லை என்பதை உணர்கிறேன். என்னால் எதையுமே மாற்ற முடியாது என்பதை அறிகிறேன். முன்பு அதை அறிவீனமாக நினைத்திருக்கிறேன். ஆனால் அதுவல்ல இது. பெரும் விடுதலை. எதையுமே மாற்ற இயலாது என்று அறியவருவது உச்ச சாத்தியமான விடுதலையை அளித்து வாழ்வு சார்ந்து நம்முன் விரிக்கப்பட்ட அனைத்தையும் தயக்கமே இல்லாமல் செய்ய வைக்கிறது. உண்மையில் ஊழை நன்கு அறிவது செயலின் உச்சத்தை கை கொள்வதற்கான வழியே. ”நான் முழுமையாக அனைத்தையும் உணர்கிறேன், வாழ்கிறேன்” என்று இன்று சொல்ல முடியும். 

ஒரு பெருநாவல் அளிப்பது வாழ்க்கையைப் பார்க்கும் ஒரு பார்வைக்கோணத்தை என்று சொல்லலாம். உங்களின் ஒவ்வொரு நாவல் வழியாகவும் நான் அடைந்தது ஒவ்வொரு பார்வைக்கோணத்தையே. ஒரு நிகழ்வு, மனிதர், செயல் ஏன் காலத்தைப் பொறுத்து இடத்தைப் பொறுத்து வலியை அளிக்கிறது என்று யோசித்தால் அது அளிக்கும் ஒரே ஒரு பார்வைக்கோணத்தால் என்று சொல்ல முடியும். கதைகள் வழியாக பல்வேறு பார்வைக்கோணங்கள் இணைந்து வலியும், துக்கமும், மகிழ்வும், யாவும் வேறொரு பரிமாணத்தை அடைகிறது. ரூபமாக பரிமாணங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.