மூத்த படைப்பாளிகளுடன் விவாதிப்பது

அன்புள்ள ஜெ

இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் குறித்து தான் ஆதர்சமாக கருதும் முன்னோடி எழுத்தாளரின் பார்வை என்ன என்பதை நேரடியாக அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்ளலாமா ? கூடாதா ? இவ்விஷயத்தில் இளம் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அலகுகள் என்ன ? இது குறித்த உங்களது பார்வை, தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை சார்ந்து பேச முடியுமா ?

அன்புடன்

சக்திவேல்

சு.ரா.நினைவின் நதியில் வாங்க

ஞானி நூல் வாங்க

அன்புள்ள சக்திவேல்,

மூத்த எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் வழியாகவே அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வருவது வழக்கம்– பல நூறாண்டுகளாக அப்படித்தான். நாம் அறியும் புகழ்பெற்ற மேலைநாட்டு எழுத்தாளர்கள் அனைவருக்குமே அப்படிப்பட்ட ஒரு மூத்த எழுத்தாளர் தொடர்பு இருக்கும். மேலைநாட்டில் அதை குரு– சீட உறவு என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அது உண்மையில் அப்படித்தான். ரஸ்ஸலுக்கும் எலியட்டுக்குமான உறவு குருசீட உறவேதான்.

தமிழ் நவீன இலக்கியத்திலேயேகூட பாரதிக்கு அரவிந்தருடனான உறவு, புதுமைப்பித்தனுக்கு டி.எஸ்.சொக்கலிங்கத்துடனான உறவு என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளம் படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளைச் சந்தித்து உரையாடும் வட்டங்கள் செயல்பட்டுள்ளன. நான் அத்தகைய பல வட்டங்களுடன் தொடர்புடையவன். மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன். தமிழில் சுந்தர ராமசாமி, கோவை ஞானி. அவர்கள் என் படைப்புகளை விமர்சித்திருக்கிறார்கள். செம்மை செய்திருக்கிறார்கள்.அடிப்படையான ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார்கள். கோவை ஞானி கொற்றவை நாவலின் மூன்று முன்வடிவங்களை நிராகரித்திருக்கிறார். வெறும் நிராகரிப்பு அல்ல, அதற்கான காரணங்களை எனக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால் இன்றைய சூழல் வேறு. இன்று எனக்கு இளம்படைப்பாளிகள் தங்கள் கதைகளை அனுப்பி கருத்து கேட்கிறார்கள். சிலர் முன்னுரைகளும் கேட்பதுண்டு. நான் முன்னுரைகள் எழுதுவதில்லை என்பதே அதற்கான பதில். தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் கதை, கவிதைகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. காரணம், நீண்ட பதில் தேவைப்படும். அந்தப் பதில்மீதான கேள்விகளுக்கு விளக்கமும் அளிக்கவேண்டியிருக்கும். அது மிகப்பெரிய உழைப்பு. தனித்தனியாக அவ்வுழைப்பை நான் செலுத்தமுடியாது. 

இக்காரணத்தால்தான் வாசகர்சந்திப்புகளை ஒருங்கிணைத்தோம். 2016 முதல் நடைபெற்ற அந்த புதிய வாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் பலர் இன்று தமிழில் நிலைகொண்டுவிட்ட எழுத்தாளர்களாக ஆகியுள்ளனர். அந்த புதியவாசகர் சந்திப்பின்பொருட்டு உருவாக்கப்பட்ட இணையக்குழுமங்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற்றன, அவற்றில் அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் வாசித்து விவாதித்தனர். ஆகவே அது ஒரு நல்ல வழிமுறை என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

ஆனால், அந்த வாசகர் சந்திப்புகளுக்கு வர பலருக்கு தயக்கம் உள்ளது. பலருக்கு அந்த சந்திப்புகளில் கலந்துகொள்ள உளத்தடை உள்ளது. என்னுடைய ‘வட்டத்தை’ சேர்ந்தவராக முத்திரை வந்துவிடுமா, அதனால் பிறர் ஒதுக்கிவிடுவார்களா என்றெல்லாம் ஐயம் கொள்கிறார்கள். வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் பலர் அவற்றை இப்போது வெளியே சொல்வதில்லை.தன் கதைகளை அனுப்பி கருத்து சொல்லக் கோருபவர் அதை ரகசியமாக வைக்கும்படி கேட்கிறார். இன்னொருவர் அவருடைய கதைகளை அனுப்பியபின் அவற்றைப் பற்றி எழுதுவதாக இருந்தால் நானாகவே அவற்றை படித்ததாக எழுதும்படியும், எனக்கு அவர் அனுப்பியதாகச் சொல்லவேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறார். இத்தகைய உளநிலை கொண்டவர்களிடம் எப்படி வெளிப்படையாக உரையாட முடியும்?

அத்துடன் இன்றைய படைப்பாளிகளில் மிகப்பெரும்பான்மையினர் சமூகவலைத்தளங்களில் செயல்படுகிறார்கள். தனி நண்பர்வட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு விமர்சனத்தைக்கூட உடனே பொதுவெளி விவாதமாக ஆக்குகிறார்கள். அப்படி பொதுவெளியில் விவாதிக்கத்தக்கவை அல்ல கதையின் அழகியல் நுட்பங்கள். எழுதுபவர்கள், நுணுக்கமாக வாசிப்பவர்கள் மட்டுமே அவற்றில் ஈடுபட முடியும். பொதுவெளி விமர்சனம் உருவானால் உடனே அங்கே அழகியலோ இலக்கியமோ தெரியாத அரசியல் சல்லிகள்தான் பாய்ந்து உள்ளே வந்து காழ்ப்புகளைக் கொட்டி விவாதிக்கிறார்கள். அவர்கள் முழுநேரக் காழ்ப்புத் தொழிலாளிகள். ஒருவரின் கதையைப் பற்றி கருத்துச் சொல்லிவிட்டு அதன்பின் நாம் அந்த சல்லிகளுடன் அதை விவாதிக்கவேண்டும் என்றால் அதைப்போல வெட்டிவேலை வேறில்லை.

ஒரு முறை ஒருவர் எனக்கு கதை அனுப்பி கருத்து கேட்டார். நான் மிக மென்மையாக அதன் சில குறைபாடுகளைச் சொன்னேன். அவர் அதை முகநூலில் போட்டு என்னைப்பற்றி சலித்துக்கொண்டார். அதற்குக் கீழே என்னை புளிச்சமாவு சங்கி என்றெல்லாம் நாற்பதுபேர் வசைபாடியிருந்தனர். அதை அவர் அனுமதித்தார். அதற்குப்பின் கருத்துச் சொல்லும் விஷயத்தில் எச்சரிக்கை ஆகிவிட்டேன்.

மூத்த எழுத்தாளர்கள் இளம்படைப்பாளிகள் பற்றி கருத்துச் சொல்லலாம். ஒரு சிறு வட்டத்திற்குள். அக்கருத்து பொதுவெளி விவாதத்திற்குரியது அல்ல. கலையின் உருவாக்கம் பற்றிய அடிப்படை அறிதல் இல்லாதவர்கள் உள்ளே நுழையவே கூடாது. அதில் ஆசிரியர் கவனிக்கவேண்டியவை

படைப்பின் தொழில்நுட்பம் பற்றி மட்டுமே பேசப்படவேண்டும்திருத்தியமைக்கக் கூடாது. தன் கருத்தைச் சொல்லவேண்டும். அந்த படைப்பாளி அதைப்பற்றி யோசிக்கலாம், அவ்வளவுதான்அது விமர்சனம் அல்ல. கருத்து மட்டுமே என்னும் தெளிவு இருக்கவேண்டும்

எழுதும் இளம்படைப்பாளி கவனிக்கவேண்டியவை

அது நேர்மையான நோக்கத்துடன் மட்டுமே சொல்லப்படுகிறது என நம்பவேண்டும். ஓர் ஆசிரியரின் நேர்மை, தகுதி பற்றி ஐயமிருந்தால் கருத்தே கேட்கக்கூடாது.அது நிராகரிப்பு அல்ல. பொருட்படுத்தி வாசிப்பதே ஏற்புதான். அது மேலும் கூர்மையாக ஆக்கப்படுவதற்கான வழிகாட்டல்தான். அந்த புரிதல் இளம்படைப்பாளிக்கு இருக்கவேண்டும்தன் உள்ளத்தில் எந்நிலையிலும் மாறாத மதிப்பு கொண்ட மூத்த படைப்பாளியிடம் மட்டுமே கருத்து கேட்கவேண்டும்.ஒரு வடிவம் சார்ந்த கருத்து என்பது அதை முன்வைப்பவரின் கோணம் சார்ந்தது. அவருடைய காலகட்டம் சார்ந்தது. அது அறுதியானது அல்ல. அது தீர்ப்பு அல்ல. அதை தெரிந்துகொள்வது வடிவப்புரிதலுக்காகவே. வடிவப்புரிதலை அடைந்த பின் மீறிச்செல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.

சுந்தர ராமசாமியிடம் கதைவடிவம் பற்றிய நீண்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய வடிவக்கொள்கைகளை மீறி முன்சென்றேன். ஏனென்றால் என் இயல்புக்கான வடிவை நான் உருவாக்கிக்கொண்டேன். ஆனால் அதை உருவாக்குவதற்கு அவருடனான உரையாடல்களே வழிகாட்டிகள். ஆகவே அவரே என் முதன்மை ஆசிரியர் என கொள்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.