தூரன் விழா- ஈஸ்வரி
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
தமிழ் விக்கி தூரன் விருது விழா நாங்கள் கலந்து கொண்டது இதுவே முதல் முறை. நான், என் கணவர் பொன்ராஜ் மற்றும் என் 13 வயது மகனுடன் (பொன் முகேஷ்) கலந்து கொண்டோம். வெள்ளி காலை சென்னை இல் இருந்து எங்கள் கார் இல் ராஜ் மஹால் மண்டபத்திற்கு மதியம் 3 மணி அளவில் வந்து சேர்ந்தோம். கடந்த வருடம் முதல் தான் தீவிர இலக்கிய வாசிப்பு, அதன் நீட்சியாக முதல் முறையாக நாங்கள் முதலில் விஷ்ணுபுரம் விருது விழா 2024ல் கலந்து கொண்டோம். அன்றே முடிவு செய்து விட்டோம், இனிமேல் முடிந்த வரை அணைத்து விஷ்ணுபுரம் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று. குமரகுருபரன் விருது விழாவிலும் கலந்து கொண்டோம். ஒவ்வொரு விழாவிலும் ஒவ்வொரு புரிதல், கற்றல், அனுபவம்.
வெள்ளி மாலை 4 மணியில் இருந்து அமர்வுகள் ஆரம்பமானது. முதல் அமர்வு நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமனுடன். நாணயவியல் ஆய்வு, வரலாற்றை அறிந்து கொள்வதற்கு எத்துணை முக்கியமான பங்கு அளிக்கிறது என்பதை விவரமாக விவரித்தார். நாம் அமர்ந்து இருக்கும் இந்த இடத்தின் அடியில் இருந்தும் நமக்கு நாணயங்கள் எடுக்க முடியும் என்றும், பெரும்பாலான நாணயங்கள் ஆற்று படுகையில் கிடைப்பதன் காரணத்தையும் தெளிவுற விளக்கினார்.
அடுத்த அமர்வு விழா நாயகனான வேதாச்சலம் அவர்களின் அமர்வு. அமர்வின் முழு நேரமும் இருக்கையில் அமராமல் நின்ற படியே உரை ஆற்றினார். அமரும் படி கூறியதற்கு அனைவரின் முகங்களை பார்த்து பேசுவதற்கு இதுவே வசதியாக உள்ளது என்று கூறி நின்றபடியே கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். வரலாற்று ஆய்வாளரின் பார்வையில் தரவுகளின் முக்கியத்துவத்தை விளக்கி வரலாற்றில் எந்த ஒரு காலமும் பொற்காலமும் அல்ல இருண்ட காலமும் அல்ல என்ற வரலாற்று ஆய்வாளரின் தரப்பை முன் வைத்தார்.
சனி கிழமை காலை ஆய்வாளர் வேலுதரன் அவர்களின் நடு கற்கள் குறித்த ஆய்வுகளின் கலந்துரையாடல். ஒவ்வொரு காலத்திலும் நடு கற்களின் அமைப்பு, சதி கற்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினார். மேலும் ஷிண்டே அவர்களின் ஹரப்பா ஆராய்ச்சி பற்றிய கலந்துரையாடல் மற்றும் மூத்த ஆய்வாளர் சுப்பாராயலு அவர்களின் அமர்வுகள்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நாதஸ்வர இசை நிகழ்ச்சி. தூரன் விருது அறிவிக்க பட்ட உடனே தினமும் தளத்தில் இசை கலைஞர்களின் பதிவுகள் வந்த வண்ணமே இருந்தன. அதன் மூலம் ஏற்கனவே அவர்களின் இசை காணொளிகளை பார்த்து வந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தேன். இது வரை நாதஸ்வர நிகழ்ச்சிகள் எதற்கும் சென்ற முன் அனுபவம் கிடையாது. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சஞ்சராம் நாவல் வாசித்ததில் இருந்து நாதஸ்வர நிகழ்ச்சியை நேரில் அமர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. தூரன் விழாவிற்கு ஒரு வாரம் முன்னதாகவே வாசிக்க இருக்கும் அனைத்து பாடல்களின் இணைப்பும் தளத்தில் பகிரப்பட்டது. அனைத்தையும் முன்னரே கேட்டு வந்ததால் இன்னும் ஆர்வம் அதிகமானது.
மங்கள விநாயகனில் ஆரம்பித்த உடனே மெய் சிலிர்த்து விட்டது. இரண்டு மணி நேரம் முழுவதும் இசையில் அரங்கமே லயித்து தான் விட்டது. சின்ன குழந்தை கீர்த்தனையை நாதஸ்வர இசையில் கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருந்தது. எனக்கு வார்த்தையினால் அதை விளக்க தெரியவில்லை. அதை அரங்கில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணர்ந்து கொள்ள முடியும். அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு துளியேனும் கண்ணீர் வராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
விருது வழங்கும் நிகழ்வே கடைசி நிகழ்வு. வரலாற்று ஆய்வுகளும் அதன் தொகுப்பும் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியம், இலக்கிய வாசகர்களுக்கு வரலாற்று ஆய்வுகள் எவ்வளவு முக்கியம், என்ற தங்களின் சிறப்புரை ஒரு பெரிய திறப்பாக அமைந்தது எனக்கு. வேதாச்சலம் அவர்களின் ஏற்புரை, ஒரு ஆய்வாளனின் இடையறாத உழைப்பையும் அதற்கு கிடைக்கவேண்டிய தக்க அடையாளத்தையும் அனவைருக்கும் விளக்கியது. அனைத்துக்கும் மேலாக அரங்கில் அமர்ந்தவர்களின் ஆர்வம் பற்றிய அவரின் வியப்பு சந்தோஷமாகவே இருந்தது. வரலாற்று ஆய்வுக்கு ஒரு இலக்கிய வட்டம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து சற்றே அதிர்ந்து தான் விட்டார் வேதாச்சலம் அவர்கள்.
அனைத்து நிகழ்வுக்கு பின் ஞாயிறு அன்று அறக்கல்வி மாணவர்களுடன் நடந்த வகுப்பில் கலந்து கொண்டது ஒரு அறிய வாய்ப்பு என்று தான் சொல்லவேண்டும். விஷ்ணுபுரம் நிகழ்வில் கலந்து கொள்வது என்பது ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதை விட சிறப்பான ஓன்று. எங்கும், எப்போதும், அனைவரிடமும் இலக்கிய கலந்துரையாடல் தான். ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு வகுப்புகளிலும் ஒவ்வொரு புதிய நண்பர்கள் கிடைக்காமல் செல்ல வாய்ப்பில்லை. தங்கை என்றும் அக்கா என்றும் தோழி என்றும் கிடைக்கும் நண்பர்கள் வட்டம் பெருகிய வண்ணமே உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு பின் கிடைக்கும் ஒரு வித செயல் ஊக்கம். இவை அனைத்திற்கும் காரணமாக அமைந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் தங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புடன் ஈஸ்வரி
படங்கள் மோகன் தனிஷ்க்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
