நம் குழந்தைகளுக்கான கதைகளின் தரம்
இந்த ஆண்டு குழந்தை எழுத்தாளருக்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச்சிறகு ஓவியா என்ற நூலைப் பற்றி பிரபாகரன் சண்முகநாதன் எழுதிய பதிவு இது.
மொழியில் கனவு காண்பது: பிரபாகரன் சண்முகநாதன்சாகித்ய அக்காதமியின் விருது விஷ்ணுபுரம் சரவணனுக்கு கிடைத்தபோது நீங்கள் பாராட்டு தெரிவித்திருந்தீர்கள். இந்நூலை நான் வாசித்தேன். என் மகனுக்கு வாங்கிக்கொடுத்தேன். ஐந்து பக்கம் வாசித்துவிட்டு அவன் ‘போர்’ என்று பதில் சொன்னான். நான் வாசித்துவிட்டு இந்தக் காலக் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அசட்டு நாவலை எப்படி கொடுக்க முடியும் என்று திகைத்துப் போனேன். அதன் சகிக்கமுடியாத அட்டைப்படத்தைப் பார்த்ததுமே நான் யோசித்திருக்க வேண்டும்.
உங்கள் கருத்து என்ன?
ராஜேந்திரன் பெரியசாமி
அன்புள்ள ராஜேந்திரன்,
நான் தமிழில் குழந்தைகளுக்கான நூலை எழுதத் தொடங்கியதே நான் தொடர்ச்சியாகச் சந்திக்கும் குழந்தைகளின் உளநிலைகளுக்கும் அறிவுநிலைகளுக்கும் உகந்தவையாகத் தமிழிலுள்ள குழந்தை இலக்கியங்கள் இல்லை என்பதனால்தான். நம் குழந்தைகளின் அறிவியல் அறிவு, பொது அறிவு மிகுதி. ஆனால் மொழியறிவு மிகக்குறைவு. ஆகவே உயர்ந்த அறிவியல்- தத்துவ- வரலாற்றுச் செய்திகளுடன் சிறுவர்களுக்கான மொழியில் அந்நூல்களை எழுதினேன்.
பனிமனிதன் 1999ல் தினமணி சிறுவர் மணியில் வெளிவந்தது. இருபத்தாறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அது மறுபதிப்பு கண்டு வாசிக்கப்படுகிறது. இரண்டு தலைமுறை வாசகர்களைக் கண்டுவிட்டது. இன்று என்னுடைய தீவிர வாசகர்களில் கணிசமானவர்கள் சிறுவர்களாக பனிமனிதனை வாசித்தவர்கள். அதன்பின் வெள்ளிநிலம் நாவலும், அண்மையில் உடையாள் நாவலும் வெளிவந்துள்ளன. இந்நாவல்கள் இப்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளன.
நான் உத்தேசிக்கும் வாசகர்கள் என்னுடைய தீவிரமான படைப்புகளின் வாசகர்களின் இளம்வயதினரைத்தான். என் சிறார் இலக்கிய நூல்களை வாசிக்கும் பெரியவர்கள் பலர் பனிமனிதனில் உள்ள பரிணாமவியல் பற்றிய செய்திகளையோ, அல்லது வெள்ளிநிலம் நாவலில் உள்ள மதங்கள் உருவான வரலாற்றையோ, அல்லது உடையாளில் உள்ள தத்துவத்தையோ புரிந்துகொள்ளமுடியவில்லை என்று சொல்வதுண்டு. ஆனால் குழந்தைகள் மிக எளிதாக அவற்றை உள்வாங்குவதையும் காண்கிறேன்.
(பாக்டீரியாக்களின் படலத்தை கண்ணால் பார்க்கமுடியாது, ஏனென்றால் ஏழாம் கிளாஸ் பாடநூலில் பாக்டீரியா கண்ணால்பார்க்கமுடியாதது என்று இருக்கிறது என்றெல்லாம் எழுதிய சீனியர் அறிஞர்கள் இங்கே உண்டு. இன்றைய குழந்தை உடனே கூகிள் ஏ.ஐயிடம் அதை தேடிவிடும். பாக்டீரியா படலங்களை பலநூறு இடங்களில் பல வடிவங்களில் பார்க்கமுடியும் என்றும், கண்ணால் பார்க்கமுடியுமளவு பெரிய பாக்டீரியா உண்டு என்றும் உடனே தெரிந்துகொள்ளும்)
நம் குழந்தைகளுக்கு அறிவியல்புனைவுகள் எளிதில் புரிகின்றன. ஏனென்றால் அச்சிறாருக்கு இதே தரத்திலான ஆங்கில நூல்கள் ஏராளமாக வாசிக்கக் கிடைக்கின்றன. திரைப்படங்களும்கூட பல உள்ளன. ஏன் இவற்றை தமிழில் எழுதவேண்டியுள்ளது என்றால் அந்த ஆங்கில நூல்களில் இல்லாத தமிழ்நாடு சார்ந்த, இந்தியா சார்ந்த ஓர் உலகை அவர்களுக்காக நாம் உருவாக்கவேண்டியுள்ளது என்பதனால்தான்.
ஆனால் தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் என் நூல்களை புத்தகவடிவில் படிப்பதை நான் கண்டதில்லை. உண்மையில் அப்படி ஒரு எதிர்வினைகூட இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை. பள்ளிகளில் இந்நூல்களை எவரும் வாங்குவதில்லை. பெற்றோர் வாங்கி அளிப்பதுமில்லை. எதிர்வினை இல்லை என்பதனால் அவர்களின் அறிவுநிலை என்ன, அவர்களுக்கான நூல் என்ன என்று எனக்குப் புரியவுமில்லை. நான் கிராமப்புறப் பள்ளிகளுக்குச் செல்கிறேன், அவை மிகப்பின்தங்கிய பள்ளிகள். அங்கே குழந்தைகளுக்கு எந்த மொழியும் சரளமாக வாசிக்கத் தெரியவில்லை என்பதையே கண்டிருக்கிறேன்.
அத்துடன் என்னால் மிகத்தொடக்கநிலையிலுள்ள மாணவர்களுக்கான ‘குழந்தை இலக்கியத்தை’ எழுத முடியாது. என் உளநிலை, இப்போது, அதற்குரியது அல்ல. என் எல்லா நூல்களிலும் நான் எழுதுவது என் சொந்தத் தேடலையும், சொந்த கண்டடைதலையும்தான். பனிமனிதனும் விஷ்ணுபுரமும் எனக்கு நடை, கதையமைப்பு, கட்டமைப்பு என்ற அளவில் மட்டுமே வேறுபட்டவை. அடிப்படையான தேடல் ஒன்றே.
இன்று குழந்தையிலக்கியம், சிறார் இலக்கியம் ஆகியவற்றுக்கான சந்தை இரண்டு வகை. ஒன்று ஆங்கிலச் சிறார் இலக்கிய நூல்களுக்கான சந்தை. ஆனால் தமிழகத்தில் ஆங்கில நூல்களை வாங்கும் பெற்றோர், வாசிக்கும் சிறுவர்கள் இந்திய அளவிலேயே மிகக்குறைவு. முதல் இருபது நகரங்களில்கூட தமிழகத்தில் சென்னை உட்பட எந்நகரும் இல்லை. இங்கே ஆங்கில நூல்களுக்கான கடையே இல்லை.
தன் குழந்தைகளுக்காக ஆங்கிலநூல் வாங்கும் சிறிய வட்டம்தான் பனிமனிதனைப் போன்ற நூல்களையும் வாங்குபவர்கள். அவர்கள் வாங்குவதே குறைவு, தமிழில் வாங்குவது மிகக்குறைவு என்பதனால் நிறைய நூல்களுக்கு வாய்ப்பில்லை. தரமான குழந்தையிலக்கியத்துக்கான பல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆதரவில்லாமல் அவை தோல்வியடைந்தன. சந்தையை உருவாக்கவே முடியவில்லை.
இன்னொரு களம் என்பது பள்ளிகள் வாங்கும் நூல்கள். கரும்பலகைத் திட்டம் , ராஜாராம் மோகன் ராய் நிதி போன்ற வெவ்வேறு அரசுத்திட்டங்களின் நிதியுதவியால் பள்ளிகள்தோறும் நூல்கள் வாங்கப்படுகின்றன. அது சில கோடி ரூபாய் பெறுமானமுள்ள சந்தை.
தமிழில் குழந்தையிலக்கியக் களத்தில் இன்று தீவிரமாக இருப்பவர்கள் இடதுசாரி அமைப்புகள். இருபதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவெங்கும் உருவான வயதுவந்தோர்க் கல்வி இயக்கத்தில் இடதுசாரிகள் ஈடுபட்டு பணியாற்றினர். அதன் விளைவாக அவர்கள் கல்வித்துறையில் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டனர். அத்துடன் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகவே இடதுசாரி அமைப்புகளின் பதிப்பகங்களே இன்று சிறார் இலக்கியங்களையும் குழந்தை இலக்கியங்களையும் அதிகமாக வெளியிடுகின்றன. அந்த இரண்டாம்நிலைச் சந்தை முழுமையாகவே அவர்களின் கையில் உள்ளது. பனிமனிதன் எல்லாம் அங்கே செல்லவே முடியாது.
ஆகவே இன்று வெளிவந்துகொண்டிருக்கும் சிறார் இலக்கியம், குழந்தை இலக்கியம் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒரு சாராரால் எழுதப்படுகிறது. ஒரு கூட்டுச்செயல்பாடு போல.கேரளத்திலும் அப்படியே. யூமா வாசுகி போன்றோரால் அங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படும் நூல்களும் அதே உலகைச் சார்ந்தவையே. அந்த எழுத்தாளர்கள் எவரும் கதைகளை எழுதுவதற்கான பயிற்சி உடையவர்கள் அல்ல. கதை என்னும் அமைப்பே அவர்களுக்குக் கைவரவில்லை, கற்பனை கொஞ்சமும் இல்லை என்பதே என் எண்ணம். பொதுவான கருத்துக்களை மட்டுமே அவர்களால் சொல்லமுடியும். ஆகவே அக்குழந்தைக் கதைகள் மிக எளிமையான கருத்துப்பிரச்சாரங்கள் மட்டுமே.
ஆனால் அப்படியாவது நூல்கள் வெளிவரட்டுமே என்பதே என் எண்ணம். இன்று இடதுசாரிகள் அன்றி எவரும் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டு விற்றுவிட முடியாது என்பதே நடைமுறை. கிராமப்புறக் குழந்தைகளுக்கு நூல்கள் என ஏதேனும் கிடைக்கின்றன என்றால் இவைதான். குறைந்தபட்சம் இவற்றில் இன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ள சமூகவியல் செய்திகளாவது உள்ளன. ஆகவே இவை பரவலாகட்டும். ஆனால் இந்நூல்களைக்கூட பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுப்பதில்லை, பிள்ளைகளால் வாசிக்கவும் முடியவில்லை என்பது இன்னொரு துயரம்.
நீங்கள் கொடுத்த சுட்டியை வாசித்தேன். இந்த நூல்கள் சற்றும் கற்பனைவளம் அற்றவை என எனக்குத் தெரியும். ஏனென்றால் இன்றைய சராசரிக் குழந்தை இருக்கும் அறிவுத்தரத்துடன் ஒப்பிட்டால் மிகப்பின்தங்கிய அறிவுத்தரம் கொண்டவர்கள் இந்த குழந்தை எழுத்தாளர்கள். ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு பிடித்திருக்கலாம் என நினைத்தேன். கதைச்சுவாரசியம் இல்லையேல் அவர்களும் வாசிக்கமாட்டார்கள் என்பது ஒரு முக்கியமான கோணம்தான்.
நீங்கள் அளித்த சுட்டியில் அக்கதையின் சுருக்கத்தை வாசித்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா எழுதிய கதைகள்கூட இதைவிட மேலான கதையம்சம், கற்பனை கொண்டிருந்தன. இன்று நவீன வரைகலைக் கதைகளை, கணிப்பொறி விளையாட்டுக்களை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு இந்தக்கதைகள் மிகப்பெரிய சலிப்பையே அளிக்கும்.
இந்தவகைக் கதைகள் விருது பெறும்போது இவற்றை புகழ்ந்து, இவற்றையே ஒருவகைச் சாதனைகளாகக் காட்டி, ஒரு முன்னுதாரணமாக நிறுவிவிடுவார்கள் நம்மவர்கள். அது அவர்களின் வணிகத்துக்காக. ஆகவே இக்கதைகளின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுவது நல்லதுதான்.
இடதுசாரி எழுத்தாளர்கள்தான் குழந்தை எழுத்தாளர்களாக ஆகமுடியும் என்பதே சூழல். இந்நிலையில் அவர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். குழந்தைகளுக்காக எழுதும்போது ஒன்று உண்மையான வரலாற்றுநாயகர்களின் கதைகளை எழுதலாம். அல்லது வேறு நல்ல கதைகளை தழுவியாவது எழுதலாம்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
