விக்டோரியா அறியாதது…
போலந்தைச் சேர்ந்த ’விளாகர்’ (காட்சிப்பதிவர்?) ஆன விக்டோரியா என்பவர் இந்தியாவுக்கு ஒரு ‘சோலோ டிரிப்’ வந்துவிட்டு இன்ஸ்டாவில் தொடர் பதிவுகள் போட்டிருந்தார். அதை மலையாள கௌமுதி இதழ் எடுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தது. வெவ்வேறு படங்களுக்குக் கீழே விக்டோரியா சுருக்கமான குறிப்புகளை எழுதியிருந்தார்.
விக்டோரியாவுக்கு இந்தியாவிலுள்ள பேருந்து,ரயில் பயணங்கள் வசதியானவையாக தோன்றின. இந்தியாவில் இமைய மலையடிவாரங்களும் தெற்கே உள்ள பசுமைமாறாக் காடுகளும் பிடித்திருந்தன. உணவில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் ‘ஒருபோதும் இந்தியாவில் ஒரு தனிநபர் பயணத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தார்.
அவருடைய முதல் ஒவ்வாமை இங்கே ஆட்டோ, டாக்சி ஓட்டுபவர்கள் மற்றும் வழிகாட்டிகளின் நடத்தை. அவர்கள் மொய்த்துக்கொண்டார்கள், மிரட்டினார்கள், வசைபாடினார்கள். பெரும்பாலும் வழிப்பறி மனநிலையிலேயே இருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. பிச்சைக்காரர்களும் வசைபாடினார்கள். தனியாக வந்த பெண் என தெரிந்ததும் பாலியல் மீறலிலும் ஈடுபட்டார்கள்.
அதைவிட விக்டோரியாவை கசப்படையச் செய்தது, இங்குள்ள அசுத்தம். அத்தனை நீர்நிலைகளும் குப்பைமலைகளுடன், கெட்டுப்போய் நாற்றமடிக்கும் நீருடன் இருந்தன. மேலும் மேலும் குப்பைகளைக் கொண்டுசென்று நீர்நிலைகளில் கொட்டிக்கொண்டிருந்தார்கள். நடுச்சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. படித்தவர்கள் கூட குப்பைகளை கண்டபடி வீசினார்கள். சாக்கடைகள் அடைத்து சாலைகளிலெங்கும் அதன் நாற்றம். அதைப்பற்றி கவலையே படாமால் அதன்மேல் நடந்தார்கள்.
இந்தியா இரண்டு பகுதிகளாலானது என்று விக்டோரியா சொன்னார். உயர்குடிகள் வாழும் ஓர் உலகம் உண்டு. அங்கே அழுக்கும் சீரழிவும் ஏதுமில்லை. தூய்மையானது, ஆடம்பரமானது. இன்னொன்று குப்பைமலைகள் நடுவே அமைந்தது. முதல் உலகம் மிகச்செலவேறியது என்றார்.
அதைப்பற்றி விக்டோரியாவின் குறிப்புக்கு மக்கள் ஆற்றிய எதிர்வினை பற்றித்தான் எனக்கு அக்கறை. எதிர்வினைகள் இரண்டுவகை. ஒன்று அவரை வசைபாடுவது. இரண்டு அவருக்கு ஆலோசனை சொல்வது. வசைபாடுபவர்கள் அவர் ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை முன்வைக்கிறார் என்றனர். ஆலோசனை சொல்பவர்கள் ‘இந்தியப் பண்பாடு தொன்மையானது. ஐரோப்பியர் உடைகளை அணிய தொடங்கு முன்னரே வேதங்கள் எழுதப்பட்டுவிட்டன’ என்றனர். ‘இந்தியாவில் மாபெரும் கலைச்செல்வங்கள் உள்ளன. அவற்றைப் பாருங்கள்’ என்றனர். ‘இந்திய மக்கள் நல்லவர்கள், விருந்தோம்புபவர்கள்’ என்றனர். ‘இந்தியாவில் பாலியல் ஒழுக்கம் உண்டு. ஐரோப்பா போல அல்ல’ என்றனர். இப்படி பல.
நமக்கே உரிய இரண்டு தொழில்நுட்பங்களை விக்டோரியா புரிந்துகொள்ளவில்லை. அந்த எதிர்வினைகள் அந்த இரண்டு தொழில்நுட்பத்தின் சொல்வடிவங்கள் மட்டுமே. ஒன்று திரைத்தொழில்நுட்பம். இதை சுவர்த்தொழில்நுட்பம் என்றும் சொல்வார்கள். அதாவது சாக்கடை, குப்பை, அழுக்கு ஆகியவற்றை ஆள்வோர், விருந்தினர் கண்ணுக்குப் படாமல் திரையோ, சுவரோ கட்டி மறைப்பது. டெல்லியில் மோடிஜியும் இங்கே ஸ்டாலினப்பாவும் அதைச் செய்கிறார்கள் என நாமறிந்ததே.
இரண்டாவது தொழில்நுட்பம் செண்ட் தொழில்நுட்பம் என அறியப்பட்டாலும் நடைமுறையில் அது பிளீச்சிங் பவுடர் தொழில்நுட்பமே. அதன்படி மேற்படி இடங்களின் மேல் பிளீச்சிங் பவுடரை கொட்டுவது. பிளீச்சிங் பவுடராலேயே ஒரு கோடு வரைந்து அதற்கு அப்பால் ‘நாகரீகத்திற்குள்’ வராது என அறிவித்துவிடுவது. ஒரு விஐபி வருகிறார் என்றால் வழியெல்லாம் பிளீச்சிங் பௌடர் வட்டங்கள் இருக்கும். முன்பு கோடு போட்டனர்க். அது செலவேறியது என்று இப்போது கூடையில் பிளீச்சிங் பௌடரை போட்டு வைத்து வைத்து எடுக்கிறோம். அந்த பிளீச்சிங் பௌடரிலும் கலப்படம், பெரும்பகுதி சுண்ணாம்புத்தூள்தான். இதன் வழியாக நாம் நம் கலாச்சாரத்தையே பிளீச்சிங் செய்து வருகிறோம்.
போலந்துக்காரர்கள் இப்படி இந்தியாவுக்கு அடிக்கடி வருவது நல்லது அல்ல. பாருக்குள்ளே நல்ல நமது நாடுதான் உலகிலேயே திறந்தவெளிக் கழிப்பிடம் உடைய ஒரே நிலம். சால்மனெல்லாவின் சரணாலயம். போலந்துக்காரிகளின் கால்கள் வழியாக சால்மனெல்லா அங்கே சென்று குளிருக்கும் தாக்குப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் வம்பு. இதைத்தான் நம் மகாகவி ’வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!’ என்று பாடியிருக்கிறார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
