கல்வி, செயற்கைநுண்ணறிவு- கடிதம்
வணக்கம் ஜெ,
இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களின் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். அண்மையில் மிக நெருங்கிய ஒருவரின் மகள் படிக்கும் பள்ளியில் (அந்த ஊரின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று) நடந்த சம்பவம் இது.
நான்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் creative writing என்ற பகுதிக்கு ஆசிரியர் மாணாக்கருக்குக் கொடுத்துள்ள வழிமுறை இது (வீட்டுப்பாடத்திற்காக).
மாணவர்களைப் பெற்றோரின் கைபேசியை வாங்கி அதில் ChatGPTயை பதிவிறக்கம் செய்து வீட்டுப்பாட தலைப்பைக் உள்ளீடாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதில் வரும் பத்திகளை பார்த்து எழுதி வரும்படியும் கூறியிருக்கிறார்.
(பிள்ளைகள் சுயமாக எழுதினால் பிழைகள் அதிகமாக இருக்கிறதென்றும் ChatGPT பயன்படுத்தினால் அத்தனை பிழைகள் வராதென்றும், திருத்துவதற்கு எளிமையாக இருக்கும் என்றும் அன்று வகுப்பில் கூறியிருக்கிறார்!)
நான் அறிவியலில் முனைவர் படிப்பில் உள்ளேன். இதைக் கேட்ட எனக்கு இதில் உள்ள hypocrisyயைக் கண்டு சிரிப்பும் பதற்றமும் ஏற்படுகிறது. ஆராய்ச்சித் துறையில் செயற்கை நுண்ணறிவை எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதைக் குறித்து அவ்வப்போது விவாதம் செய்பவர்கள் நாங்கள். இந்நிலையில் ஆரம்ப கல்வி நிலையங்களில் இவ்வாறு நடப்பது பயம் தருகிறது.
பள்ளிக்கல்வியில் இது போன்ற விஷயங்கள் நடப்பது சரியா தவறா என புரியவில்லை. தாங்கள் சமீபக்காலத்தில் கல்வியின் வருங்காலத்தைக் குறித்து எழுதி வருகிறீர்கள். இச்சூழ்நிலையில் இதைக்குறித்த தங்களது கருத்து என்ன?
நன்றி,
மனீஷ.
அன்புள்ள மனீஷ்,
இது ஏற்கனவே நடந்துவந்த ஒன்றின் நீட்சிதான். சுயமாக எழுதும் குழந்தைகளை விட மனப்பாடம் செய்து அச்சு அசலாக எழுதும் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுவதாகவே நம் கல்விமுறை உள்ளது. ஏன்? விடை மதிப்பிடுவது எளிது. முழுமையாக வாசிக்கவேண்டியதில்லை. விளைவாக சுயசிந்தனையே இல்லாமல் நம் குழந்தைகள் பள்ளிகளில் பயில்கின்றனர்.
‘அசைன்மெண்ட்’ போன்றவற்றில் இணையத்தில் இருந்து வெட்டி ஒட்டி எழுதுவதை ‘மிக உயர்தர’ கல்லூரிகளில்கூட இயல்பானதாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்று அவை அப்படியே செயற்கை நுண்ணறிவுக்குச் சென்றுவிட்டன. இப்போது பள்ளிகளிலேயே வீட்டுப்பாடங்களைச் செயற்கை நுண்ணறிவைக்கொண்டு எழுதிக்கொண்டுவர ஆசிரியர்களே ஊக்குவிப்பது சாதாரணமாகிவிட்டது.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அதைக் கற்பிப்பதும் நடக்கிறது.
வழக்கம்போல சரியான கல்வியை மேற்கு தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும். நாம் எண்ணிக்கைபலத்தால் மட்டுமே தாக்குப்பிடிப்போம்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
