தமிழ்விக்கி- தூரன் விழா,கடிதம்

ள்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நான் தமிழ்விக்கி தூரன் விழாவுக்கு 16 காலை வந்திருந்தேன். 15 வரமுடியாத நிலை. அந்த கூடமே நிறைந்து சிரிப்பும் பேச்சும் அதிர்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அத்தனை இளைஞர்கள். அனைவருமே இலக்கியவாசகர்கள், அறிவுஜீவிகள் என்று அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து தெரிந்தது. ஷிண்டேயின் ஆய்வேட்டிலிருந்து வரை கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. இத்தனை அறிவார்ந்த விவாதம் நிகழும் ஒரு சபை இன்றைக்கு உண்மையில் தமிழகத்தில் எங்குமே இல்லை. எந்தக் கல்லூரியிலும் இல்லை என்று என் கல்லூரி அனுபவங்களில் இருந்தே சொல்லிவிடமுடியும்.

இங்கே வந்திருந்த எவருக்கும் எந்த கட்டாயமும் இல்லை என்பதுதான் வேறுபாடு. சொந்த அறிவுத்தாகத்தால் வந்தவர்கள். யாருக்கும் ஸ்காலர்ஷிப் இல்லை. பயணப்படியெல்லாம் இல்லை. சொந்தச்செலவில் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்த அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்த்து நானெல்லாம் இழந்திருந்த நம்பிக்கையை மீண்டும் அடைந்தேன். அங்கே வந்திருந்த ஆய்வாளர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரு சுப்பராயலு அவர்களின் உரை மிக முக்கியமான ஒன்று. அந்த கூட்டத்தில் இருந்த ஆர்வத்தைப் பார்த்துத்தான் அவர் அதைச் சொல்லியிருக்கவேண்டும். வரலாற்றாய்விலே பரபரப்பான செய்திகளுக்கு இடமில்லை. வரலாற்றாய்வாளன் எந்தக் கண்டுபிடிப்புக்கும் முழுச்சொந்தம் கொண்டாடக்கூடாது. வரலாற்றாய்வில் அவசரத்துக்கே இடமில்லை.

கீழடி பற்றி செய்திகளை எல்லாம் அவர் சொன்னது நம மிகமிகக் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயம். இதையெல்லாம் இன்றைக்கு அவரைப்போன்ற ஒரு சூப்பர்சீனியர்தான் நமக்கெல்லாம் சொல்லமுடியும். இன்றைய அரசியல்சூழல் அப்படி. எல்லாப்பக்கமும் வரலாற்றுமோசடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம் அல்லவா?

மிகச்சிறப்பான விழா. இப்படி ஒரு விழா வரலாற்றாய்வுக்கு நிகழ்வது என்பதே தமிழில் அரிது. அதிலும் விஐபிகளை கூட்டிவைத்து அவர்களின் உளறல்களைக் கொண்டாடிக்கொண்டு ஆய்வாளர்களை ஓரம்கட்டும் நிகழ்வுகளைக் கண்டு சலித்த எனக்கெல்லாம் உண்மையான ஆய்வாளர்கள் மட்டுமே முன்வைக்கப்பட்ட இந்த விழா இனிய அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த விழாவில் ஒவ்வொரு எழுத்தாளராக வந்து ஆய்வாளர்களை கௌரவித்ததை ஓர் அரிய நிகழ்வாகவே பார்க்கிறேன். ஆய்வாளர்களின் நூல்களை எழுத்தாளர்கள் வாங்கிப்படிப்பதும் ஒரு பெரிய திருப்புமுனை. அதை நிகழ்த்திய உங்கள் அமைப்புக்கு நன்றி.

க.மயில்வாகனம்

அன்பிற்குரிய ஜெ

தூரன் விழாவன்று ஒலித்த இசையை நான் என் வாழ்க்கை முழுக்க மறக்கப்போவதில்லை. நாதச்வரத்தை நான் நாதத்துடன் கேட்டதே இல்லை. ஸ்வரத்தையும் கவனித்ததில்லை. என் வரையில் அது ஓசைதான். இசை அல்ல. மைக் இல்லாதபோது அந்த இசையின் தூய முழக்கத்தை கேட்டேன். கனவுலகில் இருப்பதுபோல் இருந்தது. சுவர்களெல்லாம் இசையாக ஆவதுபோல் இருந்தது. மகத்தான இசை. இசைக்கலைஞர்களை பாதம் பணிந்து வாழ்த்துகிறேன்.

ஜெயக்குமார் ராகவ்

 

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.