நெகிழ்வும் மகிழ்வும்- கடிதங்கள்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களது சிறுகதை தொகுப்பில் இருந்த ‘ஆமை‘ என்ற சிறுகதையை படித்தேன். பனை எப்படி ஒரு உயிரை, குடும்பத்து வாழ்வை காத்தது என்பதை அக்கால சமூக, வரலாற்று பின்னணியில் எழுதி இருந்தது வியப்பு.
கொரம்பைக்கான நன்றியை அனக்கன் நினைவுகூர்ந்து சொல்வதாக கதை நகர்கிறது.அன்றைய சமூக பிரச்னைகளிலும் பனை பங்காற்றியுள்ளது. அனக்கன், பனையை அழியாமல் காப்பவர்களுக்கு நன்கொடை தருவதை அன்றைக்கான நினைவுகூரல் என கொள்ளலாம். பனை மரத்தோடு பிரித்துப் பார்க்க முடியாத வாழ்வை கொரம்பையில் குடும்பம் உருவாக்கிக் கொள்கிறது. சாதி மேலாதிக்க சூழலில் வறியவர்கள் பலரும் அப்படியான வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, அனக்கன் பனையை ஓரிடத்தில் அனைத்தும் கொடுக்கும் அம்மா என்கிறார்.இக்கதை கூறப்படும்போது, நன்கொடை ஆட்களோடு குடும்ப பார்வையாளர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் அனக்கனின் மகன், அடுத்து அவரது பேத்தி. அவர்களது முன்னோரின் உயிர், மானம் காத்த பனை பற்றிய கதை இருவரது மனதையும் பாதிக்கிறது. கதை நிறைவடையும்போது பேத்தி கண்ணீரோடு அமர்ந்திருப்பார். அவரளவு இல்லை. ஆனால், உணர்வுரீதியாக மனதில் பாரமான ஒன்றை உணர முடிந்தது.
நன்றி!
அரசு கார்த்திக்
அன்புள்ள ஜெ
ஆனையில்லா தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒருவாரத்தில் தொடர்ச்சியாக வாசித்தேன். அபாரமான வாசிப்பனுபவம். சிரிப்பும் கொண்டாட்டமும் நெகிழ்வுமான கதைகள். நினைவுகளாலான உலகம் என்றும் தோன்றியது. இல்லை இன்றும் வாழும் ஓர் உலகம் என்றும் தோன்றியது. அந்த குரங்குகள், யானைகள், நாய்கள்… மனிதர்களுடன் பிணைந்த உலகம்.
நன்றி
ராஜ் கண்ணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
