குருதிகோரல்- கலைச்செல்வி
அரசக்குல அன்னையர்கள் பதறுகின்றனர். போர் மூளுமெனில், அது நிலத்துக்கான போர் என்பதால் அதன் முதற்குறியும் பலியும் இளவரசர்களாகதானிருக்க முடியும் என்ற அச்சம் அவர்களை கவ்வியிருந்தது. யுதிஷ்டிரனின் மனைவியும் சிபி நாட்டு இளவரசியுமான தேவிகை நடக்கவிருக்கும் போரில் தன் மகன் களம் படுவான் என்ற நிமித்திகரின் சொல் கேட்டுப் பதறி அவன் நலம் வேண்டி குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்த புண்டரீகச் சுனையில் நீராட வருவதில் தொடங்குகிறது நாவல்.
பெண்களின் உலகை அதிகமும் பேசும் நாவல் இது. பொதுவாக ஆண்களின் உலகம் பெண்கள் அறிய முடியாதது. பெண்களின் உலகம் ஆண்கள் அறிய விழையாதது. குடிகளாக பெண்கள் இருப்பதை விட அரசக்குல பெண்களாக இருப்பது சிரமம்தான். நல்வாய்ப்பாக அவர்களின் ஆணவமும் மேட்டிமையும் சாதாரண பெண்களிடமிருந்து அவர்களை பிரித்து விடுவதால் குடிப்பெண்களின் இயல்பான, அதிகம் பாசாங்குகளற்ற வாழ்வை அரசியர்களால் அணுகி அறிய முடிவதில்லை. அவர்கள் மகளென ஒற்றை வாரிசாகப் பிறந்தாலும் குழந்தையிலிருந்து குமரியென்றாகும் தருணத்தில் மனைவியென பலரில் ஒருவராக மறுநாடு புகுந்து எப்போதோ கிடைக்கும் கணவனின் அன்புக்காக காத்திருக்க வேண்டும். அதிலும் அவர்களை பூச்சிகளைக் கவ்வும் பல்லிகளைப் போல கவர்ந்துக் கொண்டு போகவும் அரசர்களுக்கு அதிகாரமுண்டு. அதற்கு அரசர்களின் வயதோ இளவரசியரின் விருப்பமோ பொருட்டே அல்ல. அரசியென ஆன பின்னர் அவர்களின் அரிதாரங்களில் புன்னகையும் சேர்ந்துக் கொண்டுவிடும். அதிகாரம், அது தொலைந்து விட கூடாத அச்சம், அதனை நிகழ்த்தித் தரும் சூழ்ச்சி, அது கிளர்த்தும் வஞ்சம் என எதிர்உணர்வுகளுடன் வாழ வேண்டியிருக்கும். அரண்மனையின் முறைமைக்குள் அடங்கவியலாது தவித்து திகைத்து சொல்லிழந்து பின்னர் பிறர் செய்வதை போன்று செய்வதற்கு பழகி, வெற்றுச் சடங்குகள், பொருளற்ற சொற்கள்., மீள மீள நிகழும் நீண்ட பகல்கள், களைந்து களைத்து உறங்கிப் போகும் குறுகிய இரவுகள் என்று அவர்களின் வாழ்வு சாணவண்டு நகர்த்திச் செல்லும் சாண உருண்டையென நகர்ந்து முடிந்து விடும். அவர்களை சிறுதாளம் கூட தப்பி விட கூடாத இசைக்கருவி, சிறு சுருதி கூட மாறி விட கூடாத பாடல் எனலாம். கருத்திருந்தும் நாவிழந்து, மொழியறிந்தும் சொற்களற்று, சிந்தனையிருந்தும் செயலற்று தேவயானி, திரௌபதி போன்று எங்கோ முளைக்கும் சில விதிவிலக்குகள் தவிர்த்து அழுத்தம் நிறைந்த வாழ்வில் குரல் என்ற ஒன்றேயிருக்காத உயிர்ப்பதுமைகள் அவர்கள். ஆனால் நிகழவிருப்பதோ அசாதாரணமான அசம்பாவிதம். அது கொண்டு வரவிருக்கும் சாவு, தாங்கள் கொடுக்க வேண்டிய காவு என்னவென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மங்களத்தை இழப்பதை விட உதிரத்தை இழப்பதே அதிக தவிப்பு அவர்களுக்கு.
குருஷேத்திரம் என்ற தொன்மையான போர்க்களத்தின் வர்ணனையே பயமுறுத்துகிறது. முட்புதர்கள், செம்மண்புற்றுகள், மரப்பட்டைகளில் பரவியேறிய செம்புற்றுப்பரப்பு, என்றோ இறந்த வீரர்களின் எலும்புகள், மண்டையோடுகள் என ஈரத்தின், இதயத்தின், ஆக்கத்தின், அறத்தின் வாசனையற்ற குண்டும் குழியுமான வெயிலாலான அந்த சிவந்த பூமி தன் நிலமெங்கும் முளைத்தெழுந்த கைகளோடு பலிக் கோரிக் காத்திருக்க, அதன் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்கள் தங்களால் இயன்றதை முயன்றுக் கொண்டிருந்தனர்.
திருதராஷ்டிடிரர் உணர்ச்சிகளாலும் பெருங்கருணையாலும் ஆளபட்டவர் மட்டுமன்று, சூட்சமக்கணக்குகளும் சூழ்ச்சியும் நிரம்பியரும் கூட. நிலம் மொத்தமும் தன் மகன் வசமிருப்பது அவருக்கு ஏற்புடையதே. அவர் மக்கள் நலம் நாடும் பேரரசரன்று. தம் மக்களுடன் நேருக்குநேர் போரிடுவதோ அவர்களை கொல்லுவதோ கூடாதென்று தன் மகனறியாது சஞ்சயன் மூலம் பாண்டவர்களுக்கு துாது அனுப்பி தன் வாரிசுகளை பாதுகாத்துக் கொள்ள விழையும் இயல்பான தகப்பன். வேள்விப்பழிக்கு தேர்வான அந்தண இளைஞன் உளம் விழைந்தாலும் உதடுகளால் மறுப்பேதும் சொல்ல முடியாததை போன்று பாண்டவர்களால் பெரியதந்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாது. அப்பேரரசரின் விழைவும் அதுவே.
புண்டரீக அன்னையிடம் முறையிட்டதோடன்றி தேவகி பூரிசிரவஸ் மூலம் பானுமதிக்கும் அசலைக்கும் அங்கரின் அரசி விருஷாலிக்கும் போர் வேண்டா துாது அனுப்புகிறாள். அதோடு உபப்பிலாவ்யத்தில் தங்கியிருக்கும் திரௌபதியிடம் வருகிறாள். தன்னிடம் காரசாரமான விவாதித்த தேவகியின் வாதத்திலிருக்கும் உண்மையும் அன்னைமையும் திரௌபதியின் தாய்மை என்ற மெல்லுணர்வை வெளிக்கொணர, அதனை எடுத்துரைக்க வேண்டி தேவகியோடு அஸ்தினபுரிக்குச் செல்ல திட்டமிடுகிறாள். இளமைகாலம் வேகத்தை முன் வைக்கும். முதுமை விவேகத்தை முன்னிருத்தும். அரசியானவள், அரசியென்றே வளர்க்கப்பட்டவள், அதிகாரத்தை பிடுங்கி அவமானப்படுத்தப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்டவள் என்ற நிலையிலும் எந்த முறைமையும் இன்றி அஸ்தினபுரி செல்லுமளவுக்கு இப்போது அவளிடம் விவேகமிருந்தது. ஆனால் யுதிஷ்டிரரோ இளைய யாதவரின் வருகையை காரணம் காட்டி மனைவியின் பயணத்தை ஒத்திப் போடுகிறார்.
சகுனியுமே எண்ணமற்றவராக மாறியிருந்தார். அவரின் வஞ்சமுமே நீர்மையிழந்திருந்தது. போரின் விளைவுகளை அறிய முடிந்த அவர் போர் நிகழ்வதற்குள் மைந்தர் அனைவருக்கும் மணம் செய்வித்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதன் உட்பொருளை பெண்கள் அறியாதவர்கள் அல்ல. பானுமதியை விட துச்சாதனனின் மனைவி அசலை வேகமானவள். தேவகியின் துாது அவர்களிருவரையும் சென்றடைய அதனை ஏந்திக் கொண்டு மருமகள்களான அத்தமக்கையர் பேரரசி காந்தாரியிடம் செல்கின்றனர். காந்தாரிக்கு கற்சிலையாகி விட்ட கணவன் மீதும் அறமற்ற மகன் மீதும் நம்பிக்கை இல்லை. அவள் பீஷ்மரிடம் செல்கிறாள். பீஷ்மர் இருசாரராலும் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத ஒரு முதியவன் மட்டுமே நான் என கைவிரித்து விட காந்தாரியை போல அசலை அவரை விட்டு விடுவதாக இல்லை. உள்ளத்தின் கேள்வியை எதிர்க் கொள்வதை விட அதிலிருந்து ஒழிந்து செல்வதே கடந்துச் செல்வது என்ற வழிமுறையை கைக்கொண்டு விட்ட அவர் இப்போதும் உண்மையிலிருந்து ஒழிந்து செல்லும் பொருட்டே இத்தருணத்தில் எடுக்க வேண்டிய முடிவை தவிர்ப்பதாக அவரை கூறு போடுகிறாள் அசலை. அம்பைக்குப் பிறகு அவரை நேர்குறுக்காக வகுப்பவள் அவளே. அவரோ வழக்கம்போல தந்தைக்கும் சகுனிக்கும் தான் அளித்தச் சொல்லை முன்வைத்து துரியோதனனின் அரியணை அமர்வை நியாயப்படுத்தி விட்டு எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்துவேன் என்ற தனது ஒருதலைப்பட்ட நியாயத்தை முன் வைத்து விட்டு சென்று விடுகிறார். பெண்களின் துாதுக்குழு துரோணர், கிருபரிடம் செல்ல, அவர்கள் தாம் போரில் பங்கெடுக்கவில்லையெனில், இறப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனர்.
பீஷ்மரின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்ற அசலையின் பரிதவிப்பு அது அங்ஙனம் இருக்கப் போவதில்லை என்ற உணர்ந்த பிறகு ஏற்கனவே அறிந்து விட்ட ஒன்றை வெறும் சொற்களெழுப்பும் ஒலிகளாக கேட்டுக் கொள்கின்றன. அரசியரில் பானுமதி, அசலை, தாரை, துச்சளை பலந்தரை, கரேணுமதி, பிந்துமதி, விஜயை, தேவிகை, சுபத்தரை, விருஷாலி, சுப்ரியை, தாரை போன்ற பல பெண்களின் ஆளுமை வெளிப்படுகிறது. கலிங்க இளவரசிகளில் சுதர்சனை தவிர்த்து சேதி நாட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன சுனந்தை, சுனிதை போல கர்ணனின் மனைவி சுப்ரியையும் தன் கருப்பை ஷத்திரிய இரத்தத்தை சுமக்கவியலாது போனதை எண்ணி கணவரை வெறுப்பவள். தேவிகை, விஜயை போர் மூளாதிருக்க எண்ணுகின்றனர். பிந்துமதிக்கும் கரேணுமதிக்கும் அந்த எண்ணமில்லை. பலந்தரை விதிவசத்தால் பீமனிடம் அகப்பட்டு கொண்டவள். அவளுக்கும் பீமனுக்குமான ஆழ்மனப்பிடிப்பை இளையயாதவர் வெளிக்கொண்டு வருகிறார். பாரதவர்ஷத்திலேயே அதிக தீயூழ் நிறைந்தவள் காந்தாரியாகதான் இருக்க முடியும் இவற்றோடு கணவரான திருதரை அணுகுவதற்கு பிரகதியை சிபாரிசு கோரும் அவலம் வேறு.
துரியோதனனுக்கு அப்பெருநிலத்தை தானே ஆள வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். அதிலொன்று குந்தி. தன் மைந்தர்களுக்கு நிலவிழைவை உண்டாக்குவதால் ஏற்பட்ட கசப்பு என்பதை விட கர்ணன் அவன் தோழன் என்பதே அவள் மீதான வஞ்சத்தின் பெருங்காரணமாக இருக்க முடியும். கர்ணன் யாரென அறிவான் அவன். அதனாலேயே குந்தியை வெறுப்பவன். ஷத்திரிய பேரவையில் குந்தியை அவமானப்படுத்துகிறான். கணவர் அறியாமல் விரும்பியவருடன் சென்று கருத்தரித்த மைந்தர்களே பாண்டவர்கள் என்கிறான். அவ்வண்ணம் இல்லையெனில் அவைக்கு வந்து தன் கற்புக்கு அவள் சான்றுரைக்கட்டும். மைந்தர்களை அளித்தவர்களின் பெயர்களை கூறட்டும் என்கிறான். ஆனால் வேள்விக் காவலனான தனதருகே வேள்வித் துணைவனாக கர்ணன் அமர முடியாமல் அவமானத்தோடு வெளியேறும்போது அவன் அமைதிக் காத்தது ஏனோ? இறுதியில் அவ்விடம் ஜெயத்ரதனுக்கு கிடைக்கிறது.
குந்தியின் மீதான துரியனின் குற்றச்சாட்டைக் கேட்டு விதுரர் மயங்கி விழுகிறார். இளையயாதவர் கண்கலங்குகிறார். பீஷ்மரோ ஆசிரியர்களோ வாய் திறக்கவில்லை. யாரை குறைக்கூறுவது? சத்யவதியின் மீது காமம் கொண்ட சாந்தனுவையா? அதன்பொருட்டு பிரம்மசர்யம் மேற்கொண்டு வாரிசுகளற்று போன நிலையில் தன் இளவலுக்காக காசியின் இளவரசிகளை முறைமை தவறி கவர்ந்து வந்த பீஷ்மரையா? வாரிசுக்காக அப்பெண்களை பயன்படுத்திக் கொண்ட சத்யவதியையா? சொந்த நாடான காசியிலும் காதல் கொண்ட சால்வனிடமும் அதை தொடர்ந்து மலர காத்திருந்த தன்வாழ்வை சிறுமொட்டென பறித்தெறிந்து விட்டு போன பீஷ்மரிடம் தன் மனம் சென்றிருப்பதை அறிந்து திகைத்து, பின், தன் சுயம் கொண்ட உயர்வனைத்தையும் தொலைந்து பணிந்து இரந்து நின்ற அம்பையை புறக்கணித்த பீஷ்மரையா? எல்லாமுமே என்றாலும் பீஷ்மர் பேச வேண்டிய நேரத்தில் அமைதி காப்பதும் செய்ய வேண்டியவற்றை செய்யாது வாளாவிருப்பதும் வேண்டத்தகாததை நிறைவேற்றிக் காட்டுவதுமென பெருங்குற்றங்களை இழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் அம்பையின் சாபம் அஸ்தினபுரியில் நிழலென படர்வதற்கு பொறுப்பு. பானுமதி கூட அம்பையை போல காசிநாட்டு இளவரசிதான். பாஞ்சாலிக்கு துகில் அளித்த பானுமதியின் மனம் இப்போது கணவன் வசம் சென்றிருந்தது. ஒருவேளை அது அவளுள் அம்பை செய்திருக்கும் மாயமா?
தேவகிக்கும் பால்ஹீகனுக்கும் நடக்கும் சந்திப்பு கதையை அங்கேயே விட்டு விட்டு அவர்களை தொடர வேண்டுமென எண்ண வைக்கிறது. மனஅணுக்கம் கொண்ட பழையவர்களின் புதிய சந்திப்பு. கலிங்கம், வங்கம், பௌண்டரம், கூர்ஜரம், மாளவம், அவந்தி, காமரூபம், அயோத்தி, கோசலம், விதர்ப்பம் போன்ற நாடுகளுக்கு மன்னர்பொருட்டு துாது சென்று அவர்களை கௌரவர் தரப்புக்கு கொண்டு வந்த வீரன் பூரிசிரவஸ். அவளோ யுதிஷ்டிரனின் மனைவி யௌதேயனின் தாய். அவையெல்லாம் பின் நகர்ந்து விடுகிறது. இப்போது அவள் தன் தோற்றம், வார்த்தைகள் என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தும் பெண். அவன் அவளை விரும்பும் ஆண். அனைத்தும் நீதான் என உளம் அணுக்கம் கொண்டு நெருங்கி விடும் தருணம் அது. உரிமை எடுத்துக் கொள்ளும். ஒருமையில் பேசத் தோன்றும். பேசும்போதே தெரியாமல் பட்டது போல காமமற்று அங்கத்தை எங்காவது தொட்டு விடத் துடிக்கும். வார்த்தை விடுக்கும் மொழியின் தாளக்கட்டுக்குள் சுதி சேராமல் கண்களின் மொழி படபடத்துத் தவிக்கும். அதை மறைக்க உதடு வார்த்தைகளுக்கு அதிகம் சப்தம் சேர்க்கும். வார்த்தைகள் அர்த்தமற்று விழும். ஒருவரையொருவர் சுமந்து கனத்த இதயத்தோடும் உடல் முழுக்க கண்களோடும் பிரிந்து நகர்கையில் கால்கள் தளர, கண்கள் இருள, எப்போது சந்திப்போம்…? என்ற மனதின் கேள்வியை கவனம்.. கவனம் என்று எங்கோ பின்னால் கிடந்த அறிவு ஓடி வந்து கைத்தலம் பற்றி பகர, இனி எப்போதும் வேண்டாம் என்று பதறி நகர்வர். அதெல்லாமே நிகழ்கிறது இருவருக்குள்ளும். இன்னொரு சுவாரஸ்யமான இணை கர்ணனின் துணைவி சுப்ரியையும் துச்சளையின் கணவன் ஜெயத்ரதனும். அடுத்து துச்சளை, பூரிசிரவஸ். பானுமதி கூட கூட தான் ஒளித்து பாதுகாக்கும் மயிற்பீலியை எடுத்துப் பார்த்துக் கொள்கிறாள்.
பாண்டவர்களுக்கு தனியொரு நாடோ மக்களோ படைகளோ இல்லை. பெண் எடுத்த வீட்டின் வழியே வந்து சேர்ந்த நிலத்தில் அரசரென வீற்றிருக்க வேண்டிய காலியான வாசனைத் திரவிய குப்பி. காலம் நீர்க்க வைத்த வஞ்சக்கணக்குகளை திரட்டி எடுக்க வேண்டிய கட்டாயம் வேறு. கௌரவர்களோ புகழின் உச்சியில் இருந்தனர். சத்யவதியின் ஆட்சி காலத்தில் பலவீனமான வாரிசுகளுடன் நுண்வடிவில் யயாதியையும் ஹஸ்தியையும் குருவையும் வைத்துக் கொண்டு முதிய இளைஞனான பீஷ்மனுடன் தள்ளாடிக் கொண்டிருந்த அஸ்தினபுரியில் இப்போதோ நினைவுக் கொள்ளவியலாத அளவுக்கு வாரிசுகள். எங்கெங்கெங்கிலோ இருந்து மணம் செய்வித்து அழைத்து வரப்பட்ட பெண்கள். அஸ்தினபுரி என்பது பெயர் மட்டுமல்ல. பெருமையும் கூட. முன்னோர்களின் வீரம் செறிந்த அதன் பழமையும் அதன் நீட்சியாக அமர்ந்திருக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என்று பெருமக்களின் கூட்டமும். ஷத்திர குல பாரம்பரியமும் அதன் பொருட்டு அவ்வணியில் திரண்டு நிற்கும் ஷத்திரிய நாடுகளும் பின்னும் கர்ணன் என்னும் பலமும் துரியோதனன் துச்சாதனன் என்னும் அதிகாரத்துடன் கூடிய துடிப்பும் நிமிர்வும் திமிறி நிற்க அதற்கு நிகரென வைக்க குந்தியின் வெஞ்சினம் தவிர பாண்டவர்களுக்கு வேறேதுமில்லை. ஆனால் இளையயாதவர் என்ற பொருளை தராசிலிடும்போது அதற்கு நிகர் வைக்கவியலாது போய்விடும்.
குந்தியும் கணிகரும் உயிர்ப்புடன் இருந்தனர். கணிகர் உசுப்பி விட்ட குன்று பெருமலையென கலிதேவனின் கருணையுடன் இப்போது நிமிர்ந்து நிற்கிறது. குந்தியும் மைந்தர்களை உசுப்புகிறாள். ஒருவேளை போர் நின்று விடுமா? பயம் சூழ்கிறது அவளுள். மைந்தர்கள் நெஞ்சம் இளகி விடுவரோ? எது அவளை இயக்குகிறது? அவளேதும் முடி சூடி ஆள போவதில்லை. அதிகபட்சம் போனால் ராஜமாதா. அதுவொன்றும் அவள் அடையாத இடமல்ல. அவள் தன்னிலை இழந்து மகன்களிடம் அவர்கள் பாண்டுவின் குருதியினர் அல்ல என்ற தன் ரகசியங்களையெல்லாம் கவிழ்த்துக் கொட்டுகிறாள். விராடர் மகற்கொடையாக கொடுத்த கையளவு மண்ணில் அரியணை அமைத்து பொய்முடியும் வெறுங்கோலும் கொண்டு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு தருணமும் பாண்டுவின் முகத்தில் காறி உமிழ்கிறாய் என்ற அவளின் வார்த்தை தெறிப்பும் ஆழம் தொடும் வீச்சும் அதிகம். தன்னுள்ளிருக்கும் தவிப்பென்பது பாண்டுவின் இயலாமை எழுப்பிய வஞ்சினமே. அது ஒருபோதும் சொல்லென திரளாது உளபரிமாற்றத்தின் வழி உணர்ந்த கணவனின் கனவு. அது சிதைந்து விடாதிருக்க எத்தனை சிதைவுகளையும் உண்டாக்கலாம். அவர் கொடிவழிகள் பாரதவர்ஷத்தை ஆள வேண்டும். பாண்டு என்ற பெயர் புவியில் நிலைத்திருக்க வேண்டும். இதுவே தான் செய்துக் கொண்டிருக்கும் தவம் என்கிறாள். இது தவமா? தந்திரமா? அல்லது அனைத்துமே பாசாங்கா? யாராறிவார் யாருள்ளத்தை?
அங்கத்தை கர்ணனின் மைந்தன் விருஷசேனன் ஆள அங்கரின் உடலை மதுவும் உள்ளத்தை அஸ்தினபுரி அவையில் பாஞ்சாலியை சிறுமை செய்த வார்த்தைகளும் ஆண்டுக் கொண்டிருந்தன. அதன் பொருட்டு தன்னை மதுவில் எரித்தழிந்துக் கொண்டிருந்த கர்ணனை இளைய கௌரவர்களான சுஜாதன், விகர்ணன் அவன் மனைவி தாரை, குண்டாசி ஆகியோர் அஸ்தினபுரி அழைத்து வருகின்றனர்.
போரை விரும்புவோருக்கும் விரும்பாதோருக்கு அவரவருக்கான நியாயம் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி போருக்கான தேவையும் இருந்தது. இளையயாதவர் தனது அரசுரிமையை மகன் மீது இறக்கி வைத்து விட்டு தானே துாதுவனாக சாத்யகியுடன் அஸ்தினபுரி கிளம்புகிறார். திருதராஷ்டிரர் சஞ்சயன் மூலம் உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பிய துாதை பற்றி கூறி விட்டு தன் முதற்செய்தியை எடுத்து வைக்கிறார். அவரின் இந்த முதற்செய்தி அறவுணர்வும் மென்னியல்பும் உணர்வு வயப்படுபவர்களுக்கும் போதுமானதொன்று. ஆனால் துரியோதனன் கல்லென அமர்ந்திருக்க விகர்ணன் குரலெழுப்ப, திருதர் உணர்வுகளில் பொங்கி வழிய இளையயாதவர் எங்கோ எதுவோ எவருக்கோ எதிலோ என்னவோ நடப்பதுபோல மோனத்தில் ஆழ்ந்து விட, கணிகர் இருக்கும்போது கவலையெதற்கு? கூடி வரும் கருமேகங்களை காற்று கலைப்பதுபோல எங்காவது கருணைமழை பொழிந்து விடுமோ என்று வஞ்சக்காற்றை வீசிக் கொண்டே இருப்பவர் அவர். ஒரு துறும்பை கூட பாண்டவர்களுக்கு விட்டு தர முடியாது என்கிறான் துரியோதனன்.
துரியோதரர்கள் போரை நோக்கி நெடுந்தொலைவு சென்று விட்டிருந்தனர். அதுதானே இளையயாதவர் விழைவதும். துச்சளை கலிதேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கவிருக்கும் தமையனுக்கு அறுதியும் இறுதியுமான அறம் போதிக்கிறாள். ஆனால் துரியோதனன் கைகளில் எதுவுமில்லை. அவன் எடுப்பார் கைப்பிள்ளை. எதுவாகிலும் அதை மிச்சமின்றி செய்ய வேண்டும். அதுவே நிறைவு, அது அழிவென்றாலும். அதையே தேர்கிறான். அது மீள வழியில்லாத பாதை. இறப்பு. மிரள வைக்கிறது கலி பூசை. அவன் எதை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்திருந்தான். இனி காலம் அவனை சுமந்துக் கொள்ளும்.
இளைய யாதவர் துள்ளல், துடிப்புகளற்ற அமானுடம் கொள்ளாத மானுடனாக இந்நாவலில் வருகிறார். பாரதவர்ஷத்தின் ஷத்ரியப்பேரவை கூடுகிறது. இப்போது அவர் ஐந்து கிராமங்களாவது கொடுக்க வேண்டும் என்ற துாதை அள்ளிக் கொண்டு வருகிறார் பாண்டுவின் மக்களிடமிருந்து. அது கூட அவர் எடுத்த முடிவே. குழம்பிக் கிடந்தார் தருமர். பீமருக்கு தோள்கள் பரபரத்தன. ஆயினும் அவர் இரண்டாமானவரே. தோள் அளிக்கலாம், ஆனால் முடிவுகளை அவர் எடுக்க முடியாது. மற்றவர்கள் எதிலுமே இல்லாதிருந்தனர், திரௌபதியைப் போல, அங்கரைப் போல. ஒருவாறு ஷத்திரியக்கூட்டு தகைந்து வரும் நிலையில் இளையயாதவர் அந்தணர்களை நோக்கி அன்று வேதமந்திரமுரைத்து தொடங்கிய அவையில் பனிரெண்டாண்டுகள் கானுறைவும் ஓராண்டு விழி மறைவும் இயற்றி மீண்டு வந்தால் விட்டுச் சென்றவை அவ்வண்ணமே திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது இப்போது மீறப்படுகிறது எனில், வேதச்சொல் முறிக்கப்பட்டு விட்டதாக தானே அர்த்தமாகிறது என்று அவையை குழப்பமாக்க, துரியோதனன் குந்தியை அவைக்கிழுத்து பாண்டவர்களை குடியிலிகளாக்கி, ஆகவே தன்னால் வேதச்சொல் காக்கப்பட்டதென்றே கொள்க என்றுரைக்க, யாதவர் இறைஞ்சி நிற்க, துரியோதனன் மறுத்து விடுகிறான். போர் நடக்க வேண்டும். நடந்தேயாக வேண்டும். கை மீறி செல்லும்போது ஆட்டத்தை கலைத்து விட்டு புதிதாக தொடங்க வேண்டும்.
அஸ்தினபுரி போர் அறிவிப்பு செய்து விட்ட நிலையில் அங்கு நடந்த புருஷமேதயாகத்தில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் என்ற முறையில் இளையயாதவர் கலந்துக் கொள்கிறார். ஞானசபை விவாதங்கள் நடக்கின்றன. சபையில் கர்ணன் வழமைபோல சிறுமைப்படுத்தப்படுகிறான். மீண்டும் இறைஞ்சுகிறார் யாதவர். ஞான விவாதத்தில் நான் சொன்ன சொற்களுக்கான பரிசிலாக பாண்டவர்களுக்கு ஐந்து இல்லங்களையாவது கொடு என்கிறார். இரந்து நின்ற கரங்களில் வெறுமை வந்து விழுகிறது. அஸ்தினபுரியின் எளியகுடிகளாக கூட ஏற்க முடியாது என்கிறான் துரியோதனன்.
தன் மைந்தரையோ பேரனையோ போர்களத்தில் எதிர்கொள்வதோ கொல்வதோ செய்யலாகாது என்று பாண்டுவின் மக்களுக்கு தான் இட்டிருந்த ஆணையை திருதர் விலக்கிக் கொள்கிறார். அது இளையயாதவர் வழியாக சொல்லி அனுப்பப்படுகிறது. போரில் நேர் நிற்றலுக்கான தடைகள் இப்போது விலகி விட்டன. இனி சகோதரர்கள் களம் காண வேண்டியது மட்டுமே மீதம். வஞ்சனை மேகங்கள் குருஷேத்திரத்தில் கவிய, கொட்டவிருக்கும் குருதி மழைக்கான முன்னறிவிப்பாக குருதிச்சாரல் வீச தொடங்குகிறது. இயற்கையை, நிலப்பரப்பை, அந்நாளைய வரலாற்றை, புவியியலை, தத்துவத்தை, சமூக அமைப்பை, பண்பாட்டுத் தளத்தை அறியாமல் இதிகாசத்தை எழுத முடியாது. அவ்வகையிலேயே இந்நாவலும் தகைந்து வருகிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
