தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி)
ஆகஸ்ட் 16 காலை ஆறுமணிக்கு எழுந்து நண்பர்களுடன் டீ குடிக்க நடந்து சென்றேன். மண்டபத்திலேயே டீ இருந்தது, ஆனால் டீயை நடந்து சென்று குடித்து பழகிவிட்டிருக்கிறேன். பேசிக்கொண்டே வந்து சிறிது நேரம் விவாதம் நீண்டபோது காலைச்சாப்பாடு வந்துவிட்டது. குளித்துவிட்டு வந்தேன்.
மொத்தம் நான்கு தங்குமிடங்கள். ராஜ்மகால் மண்டபம், இன்னொரு திருமணமண்டபம், இரண்டு ஈரோட்டு தங்கும் விடுதிகள். நான் எப்போதும் ராஜ்மகாலில்தான் தங்குவது வழக்கம். மண்டபத்தில் இருந்து பங்கேற்பாளர்கள் வர ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே மண்டபம் முழக்கமிடத்தொடங்கியது.
ஒன்பதரை மணிக்கு முதல் அமர்வு. மூத்த தொல்லியலாளர் வசந்த் ஷிண்டேகலந்துகொண்ட அரங்கை நீலி இணைய இதழ் ஆசிரியை ரம்யா ஒருங்கிணைத்தார். ஷிண்டேயை தேவதேவன் கௌரவித்தார். ஹிண்டேஇருபது நிமிட உரைக்குப்பின் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஷிண்டே தன் உரையில் எப்படி இந்தியா முழுக்க தொல்லியல் தடங்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு விரிந்துள்ளன என விவரித்தார். வரலாற்றில் பொற்காலமோ இருண்டகாலமோ இல்லை என்னும் வெ.வேதாசலத்தின் கூற்றை ஆதரித்து இந்து மறுமலர்ச்சி நிகழ்ந்தமையால் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் குப்தர்காலகட்டம் எப்படி வேறொரு கோணத்தில் பின்தங்கியதாகவும் இருந்தது என்றார். இலக்கியப்பதிவுகளின்படியே அவ்வாறு ஊகிக்கப்படுகிறது, அவை அரச சபை புலவர்களின் பதிவுகள். மக்களின் வாழ்க்கை, வணிகம் ஆகியவற்றின் கோணத்தில் வேறொரு சித்திரம் வரக்கூடும் என்றார்.

வரலாற்றுக்கு முந்தைய நகரநாகரீகம் ஹரப்பாவில் கண்டடையப்பட்டமையால் அது சிந்துவெளி நாகரீகம் என அழைக்கப்பட்டது. இன்று கட்ச் பகுதியிலும், பிகார் வரைக்கும்கூட அந்நாகரீகத்தின் தடங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஷிண்டே சொன்னார். அவருடைய ஆய்வேடுகளில் இருந்தும்கூட விரிவான வினாக்கள் கேட்கப்பட்டன.
மூத்த ஆய்வாளரான சுப்பராயலு அரங்கை தாமரைக்கண்ணன் (குருகு பண்பாட்டு இணைய இதழ்) ஒருங்கிணைத்தார். சுப்ரபாரதி மணியன் அவரை கௌரவித்தார். சுப்பராயலு முதிய வயதில் அத்தனைதூரம் பயணம் செய்து வந்து அவருக்குக் கீழே பணியாற்றியவரான வேதாசலத்தை கௌரவித்தது நிறைவளிக்கும் செயல்.
தொல்லியலாய்வு நிகழும் விதம் பற்றியும், அதன் நெறிகள் பற்றியும் பேசினார். தொல்லியலாய்வுச் செய்திகள் முழுமையான அறிக்கையாக வந்தபின்னரே மக்களிடம் அளிக்கப்படவேண்டும், அதுவும் முறையான அறிக்கையாக. உடனுக்குடன் செய்திகளை அளிக்கத் தொடங்கினால் ஆய்வே தடம் மாறிவிடக்கூடும் என்றார். தமிழகத் தொல்லியலாய்வு குறித்து விரிவான சித்திரத்தை அளித்தார். சோழர் கால கோட்டம் கூற்றம் முதலியவை கிராமஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை நிலவுடைமையாளர்களின் கூட்டமைப்புகளே என்றார்.
ஒரு பொது வாசகனுக்கு இந்த தொல்லியலாளர்களின் ஒட்டுமொத்தமான அணுகுமுறை வியப்பும் கொஞ்சம் சோர்வும் ஊட்டுவதாக இருந்திருக்கக்கூடும்.வரலாறு சார்ந்து பொதுவாசகர்கள் கொண்டிருக்கும் எந்த பரபரப்பையும், கிளர்ச்சியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எளிய கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. பெருமிதங்களை மறுத்தார்கள். தரவுகள், அத்தரவுகளைச் சேகரிக்கும் முறைமை ஆகியவற்றை மட்டுமே வலியுறுத்தினார்கள். நீண்ட ஆய்வின் விளைவாக தாங்கள் வந்தடைந்த முடிவுக்கு மாறாக ஒரு கருத்து சுட்டிக்காட்டப்பட்டால் தங்கள் கருத்தை உணர்ச்சிகரமாகப் பாதுகாக்கவில்லை. அந்த கோணத்திலும் பார்க்கலாம், தரவுகள் தேவை என்றே பதில் சொன்னார்கள்.
மதிய உணவுக்குப்பின் இசை நிகழ்வு. மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நாதஸ்வர இசை. அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவா ஆகியோரின் தவில். அவையில் இருந்த ஓரிருவர் முன்னர் ஒரு நாதஸ்வர இசைநிகழ்வை கேட்டிருக்கக்கூடும். ஏனென்றால் இன்று தமிழகத்தில் சென்னையில் அதிகமானவர்கள் வராத ஒரு நிகழ்வைத் தவிர்த்தால் எங்குமே நாதஸ்வர இசைநிகழ்ச்சி நடைபெறுவதில்லை. கோயில்களில் நடைபெற்று வந்த இசைநிகழ்வுகள் வருகையாளர் இல்லாமல் நின்றுவிட்டன. நாதஸ்வரம் மங்கல இசையாக, ஒரு பின்னணி இசையாக மட்டுமே நிகழ்கிறது. அதை எவரும் அமர்ந்து கேட்பதில்லை.
ஆனால் இரண்டுமணிநேர இசைநிகழ்வில் அனைவரும் அசையாமல் இசையில் லயித்து அமர்ந்திருந்தார்கள். பலருக்கு அது வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் இசையனுபவத்தின் தொடக்கம் என தோன்றும். ஏனென்றால் நாதஸ்வரம் வெறும் இசை அல்ல. நம் தெய்வங்களுடன், நம் ஆலயங்களுடன், நம் மலைகளுடன், நம் ஆறுகளுடன் இணைந்தது அது. நம் மலைமுடிகள் ஒலியாகுமென்றால், நம் கோபுரங்கள் இசையாகுமென்றால் அதுதான் நாதஸ்வரம்.
மிகச்சிறந்த லயமும் சுதியுமாக அரங்கை நிறைத்தது நாதஸ்வர இசை. ஒருவகையில் அது காலமே அற்றது என்று தோன்றியது. அங்கே அமர்ந்திருக்கையில் இசை எங்கோ நிகழ்வதுபோலிருக்கவில்லை. இசை நம்மைச்சுற்றி சுழித்து அலைகொள்ள நாம் அதற்குள் இருப்பதாகத் தோன்றியது. நாதஸ்வரத்திற்கு மட்டுமே இந்தியாவில் அந்த அனுபவத்தை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அண்மையில் வியன்னாவில் ஒரு மாபெரும் தேவாலயத்தில் ஆர்கன் இசை பொங்கி பெருகி என்னை அள்ளிச்செல்வதுபோல உணர்ந்தேன் . அதுபோன்ற அனுபவம் இது.
இரட்டை நாதஸ்வரத்தை விழிமூடி அமர்ந்தே கேட்கவேண்டும். அவையிரண்டும் ஒரே வாத்திய இசையாக இணைந்து கேட்கும். அது அறுபடாத ஒரே நீட்சியாக, ஒரே சுழற்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பாடல் முழுக்க ஒரே மூச்சில், ஒரே ஒலியாக நிகழ்வதாகத் தோன்றும். இரு நாதஸ்வரக் கலைஞர்கள் நடுவே ஒத்திசைவு இருக்கவேண்டும். மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நடுவே அத்தகைய மிகச்சிறந்த ஒத்திசைவு இருந்தது.
தூரனின் அமரத்துவம் வாய்ந்த வரிகள். ‘தொட்டுத் தொட்டு பேசவரான் கண்ணன்’ என்னும் வரிகளைக் கேட்டுவிட்டு வந்தவர்களுக்கு நாதஸ்வரம் அதன் தேவர்களுக்குரிய குரலில் அச்சொற்களைப் பேசுவதைக் கேட்கும் அனுபவம் அமைந்திருக்கும். அந்தக் கொஞ்சலை கேட்கும் பரவசம் அமைந்திருக்கும். மானுடமொழியிலமைந்த வரிகள், மானுடமல்லாத ஏதோ ஒரு குரலால் அவை பாடப்பட்டன.
பின்னர் பேசிக்கொண்டிருந்தோம். நான் சொன்னேன். மிகச்சிறந்த கற்பனை கொண்ட கலைஞர்கள் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் இருவரும். உருவாகி வரும் மேதைகள் என்றே சொல்லலாம்.. நாதஸ்வரம் அவர்கள் கையில் இருப்பது தெரியாமல் இருந்தது. அவர்களும் நாதஸ்வரமும் இரண்டாகவே இல்லை. அவர்களின் அகம்சென்ற இடங்களுக்கு இசை சென்றது. ‘நல்ல கலைஞன், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பானவர் அல்ல’ என்று ஒரு கூற்றே இல்லை. குளிரும் தீ போல அது இல்லாத ஒரு சாத்தியம்.
தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தே கலைஞன் தொடங்குகிறான். மயிலை எம்.கார்த்திகேயன் நாதஸ்வரத்தை கையாளும் விதத்தில் இருந்த தேர்ச்சி பெரும்தாகத்துடன் தன் கலைச்சாதனத்தைக் கண்டுகொண்ட கலைஞனுக்குரியது. நாதஸ்வரத்தில் மிக எளிதாக அபஸ்வரத்துளிகள் வரும். மூச்சுக்காக சம்பந்தமே இல்லாத இடத்தில் ஸ்வரம் துண்டுபோடப்படும். அந்த ஒரு குறைகூட இல்லாத முழுமையான ரீங்காரமாக இருந்தது அவர்களின் இசை. மலை ஒன்று வண்டாகி சுழன்றுபறப்பதன் ரீங்காரம் போல.
பீத்தோவனின் சிம்பனி ஒன்றின் தொடக்கத்தை வாசித்தார்கள். அதன்பின் அதை ஒரு கர்நாடக சங்கீத ராகமாக ஆக்கி விரித்து வாசித்துக் காட்டினார்கள். நாதஸ்வரத்தில் மேலையிசையின் நீண்ட நோட்டுகளைக் கேட்பது இனிய அனுபவமாக இருந்தது. சர்ச் ஆர்கனை நினைவூட்டவும் செய்தது. இசைக்கலைஞர்களை மீனாக்ஷி ரவீந்திரன், பத்மாவதி, அருண்மொழி நங்கை ஆகியோர் கௌரவித்தனர்.
மாலை ஆறரை மணிக்கு விருதளிப்பு நிகழ்வு. எங்கள் விழாக்களில் விருது நிகழ்வு இறுதியாக அமைகையில் ஒரு நிறைவான சோர்வு உருவாவதுண்டு. கோவையில் விருதுநிகழ்வுக்காக மட்டும் வரும் புதிய கூட்டம் அந்தச் சோர்வை ஈடுசெய்யும். ஈரோட்டில் அத்தகைய கூட்டம் குறைவு. ஒன்றரைநாட்கள் நீண்ட விவாதங்களின் இறுதியாக மீண்டும் உரைகள்.
அரங்கில் காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சுரேஷ்குமார் வரைந்த வெ.வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. வேதாசலத்துக்கான பாராட்டுப் பத்திரத்தை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஈரோடு சார்பில் ஏ.எஸ்.கிருஷ்ணன் வாசித்து அளித்தார். வசந்த் ஷிண்டேயை ரா.செந்தில்குமார் கௌரவித்தார்.வேதாசலத்தை ஜா.ராஜகோபாலன் கௌரவித்தார்.சுப்பராயலுவை தேவதேவன் கௌரவித்தார்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் தொகுத்த வேதாசலத்தைப் பற்றிய வெ.வேதாசலம் மதிப்பீடுகள் வாசிப்புகள் என்னும் நூல் சுப்பராயலுவால் வெளியிடப்பட்டது. சொ. தர்மன் பெற்றுக்கொண்டார். வெ.வேதாசலத்தின் பேட்டி, அவரைப்பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் இது. தமிழ்விக்கியின் பங்களிப்புக்கான விருது அமெரிக்க வாசகரும் நண்பருமான ஜெயஶ்ரீக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் மதுசூதனன் சம்பத் விருதைப் பெற்றுக்கொண்டார். காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்ட நண்பர் பிரகாஷ் வரைந்த வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
நான் களைத்திருந்தேன். மேடையேறுவதற்கு சற்றுமுன்புதான் வரலாறுக்கும் இலக்கியத்துக்குமான உறவு, வரலாற்றின் வெவ்வேறு அடுக்குகள் என நண்பர்களுடன் தேநீர்க்கூட விவாதம். அங்கே பெருங்கூட்டம் ஆதலால் கத்தவேண்டியிருந்தது. குரல் தழைய தொடங்குகிறது என்று தெரிந்தாலும் நிறுத்த முடியவில்லை. ஆகவே மேடையில் என் குரல் உடைந்துவிட்டிருந்தது.
விருதுவிழாவுக்குப் பின் ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்லத் தொடங்கினார்கள். இந்நிகழ்வின் இயல்பான இறுதிப்பகுதி. ஒரு சிம்பனியின் முடிவுபோல. களைப்பும் வெறுமையும் நிறைவுமாக இரவுக்குள் சென்றுகொண்டே இருத்தல். நான் தூங்கும்போது இரவு ஒரு மணி கடந்துவிட்டிருந்தது.
மறுநாள் ஈரோட்டிலேயே இருந்தேன். இன்னொரு சிறு நிகழ்வு. கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கான நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கினேன். அதன்பின் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக அறிதல் பற்றி ஒரு வகுப்பை நடத்தினேன்.
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் ஒரு சடங்கு, பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும். நண்பர் பிரபுதான் இந்த விழாவுக்கான உழைப்பில் பெரும்பகுதியைச் செய்வது வழக்கம். அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினேன். ஈஸ்வர மூர்த்தி பனம்பழம் கொண்டுவந்திருந்தார். அவற்றை சுட்டு நண்பர்களுடன் சாப்பிட்டோம். தென்னைப்பதநீர் ஒரு நண்பர் கொண்டுவந்திருந்தார். அதை குடித்தோம்.
இரவு ஒன்பது மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில். சிவசங்கரும் குடும்பமும் அந்த ரயிலில்தான் வந்தனர். யோகேஸ்வரன் வந்து ரயிலேற்றிவிட்டார். நான்குநாட்களின் களைப்பு. படுத்து கண்விழித்தால் நாகர்கோயிலில் ரயில் நின்றுகொண்டிருந்தது. மொத்த ரயிலிலும் என்னைத்தவிர எவருமில்லை.
(நிறைவு)
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
