நீலமெனும் அழகு

வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவது நாவல் இந்திரநீலம். தினம் ஒரு அத்தியாயம் என்ற முறையில் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுடன் இணைந்து , தினமும் எனக்குள்ளும் ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன் வெண்முரசை. ஒருநாவல் முடிந்ததும் அடுத்ததை எடுத்து வெறுமனே எனது பார்வையில்படும்படி வைத்துக்கொள்வேன். பின்பு முன்னுரைகளை வாசிக்க ஒருநாள் எடுத்து அதை என்னுள் ஓடவிட ஒருநாள் என்று போகும். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இம்முறை இறங்கியபோது எப்போதும்போல இப்போதும் பொய்க்காது நான் கண்டது திருசூழ் பெருநிலையை அதன் மூலமாய் அறிந்தேன் கேளு சரண் மகாபாத்யாய அவர்களை.

இப்போது இந்திரநீலம் பற்றி ..

துவாரகை கண்ட இளையயாதவன் தனது துணைவியராய் ருக்மிணி , ஜாம்பவதி , சத்யபாமை, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை , பத்ரை , காளிந்தி ஆகிய எட்டு நாயகியரை கண்டடைந்து காதல்கொண்டு தம் உள்ளம் அமர்ந்த அத்தேவியரை வான்தோய் வாயில் கொண்ட துவாரகையில் அமர்த்தும் கதைகளை சொல்வதே இந்த நாவல். எட்டு குலங்களில் இருந்து பெண்கொண்டு வரும் கதைகள் துருபத இளவரசன் திருஷ்டத்யும்னன், இளைய யாதவருக்காக தொழும்பர்குறி பெற்ற சாத்யகி இவர்கள் இருவரின் நட்பாடல்களில் நேர் உரையாடல்களாகவும் சூதர்கள் வழியாகவும் காவிய நாடகங்களின் காட்சிப்படுத்துதல்களிலும் சொல்லப்படுகிறது.

சுப்ரை நினைவிருக்க மலைமுடித்தனிமையுடன் திரௌபதியின் ஆணைப்படி உதவிகோரி துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் அந்த நகரின் பிரமாண்டத்தில் ஆடல்களில் பெண்களில் கவரப்படுகிறான். ஆனால் கரையாமல் கரைந்து கட்டுண்டு கிடப்பது இருவருக்காகவே ஒன்று தனது உற்ற நண்பனாய் மாறிய சாத்யகி, இன்னொருவர் தன்னை காண்பவரை மிச்சமில்லாமல் அனைத்தையும்விட்டு தன் நெஞ்சச் சிறையடைக்கும் இளையயாதவர்.

எட்டுக்குலங்களுக்கும் சென்று பெண்கொண்டுவந்த கதைகள் ஒவ்வொன்றும் அந்தந்த குலங்களின் வரலாறை அவர்களின் பண்பாட்டை , அரசியல், பொருளாதார தகுதியை என அனைத்தையும் சொல்கிறது . அதோடு மறுக்கமுடியாமல் அந்நாயகியர் துவாரகை மன்னன் மீது கொண்டுள்ள காதலையும் விவரிக்கிறது மிகைப்படுத்தாத காவியத்தன்மையுடன். பாராதவர்ஷத்தையே திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அரசு அமைத்து ஷத்ரிய தகுதி நோக்கி சென்று கொண்டிருக்கும் தலைவன் இளையயாதவன் . ஆனால் சிறிய அரசுகளில் துவாரகை கொள்ளும் மணவுறவுகள் அதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஆய்ந்தறிந்து பெண் கொண்டு மீள்கிறார் அவர் .

‘அவன் விரும்புவதை என்னை வைத்தே நிகழ்த்திக்கொள்கிறான் அது சில நேரங்களில் நான் விரும்பாததாக முதலில் இருந்தாலும் கூட‘ என்ற வகையில் ஒரு தருணத்தில் எப்போதும்போல சிரித்தபடி சொல்லும் பலராமர் , துவாரகையின் மூத்த அமைச்சர் அக்ரூரர், திருஷ்டத்யும்னன் , சாத்யகி போன்றவர்கள் இளையயாதவருக்கு உடன் நிற்பதுபோல காட்சியளிக்கிறார்கள் ஆனால் அவர்களும் நானே என்று காட்சிப்பிழை களைகிறார் இளையயாதவர்.

இந்தநாவலில் மைய ஆட்டத்தை நிகழ்த்துவது சத்யபாமையின் முன்னோர் சத்வ குலத்தின் வீரசேனன் சூரியனிடம் பெற்றதாக சொல்லப்படும் சியமந்தகமணி. வீரசேனரிடம் அகந்தை நிரப்பி இந்திரனை வணங்கவிடாமல் செய்தது  தொடங்கி அது செய்த வினைகள் பல. சத்ராஜித்தை கர்வம்கொண்டு நடைபோட செய்து பிரசேனனை பழிவாங்கியது, பின்பு அவரும் அதன் விழைவால் கொல்லப்படுவது , சத்யபாமையை பெண்கொள்ள வந்த சேதிநாட்டரசன் சிசுபாலன் நோய்பெற்று செல்வது,  இளையயாதவரின் அணுக்கர்களான அக்ரூரரை , திருதவர்மனை, ஏன் சாத்யகியைக்கூட விடவில்லை அந்த மணி. ஆனால் சாத்யகியிடம் அந்த மணி கொண்ட ஆடலை தூயநட்பு எனும் முழுபலத்துடன் எதிர்கொண்டு நிறுத்துகிறான் திருஷ்டத்யும்னன்.

காளிந்தி தவிர்த்த அரசியர்கள் எழுவரும் கொண்டுள்ளனர் ஒரு காரணத்தை மணி தனக்கே என்றுகூற. அவள் மட்டுமே சரியான பாடம் தன்தந்தையிடம் படித்ததாக சொல்கிறாள் . சாந்தர் ஒவ்வொரு அரிசியின் கையிலும் அந்த மணியை வைக்க சொல்லி இறுதியாக காளிந்தி கையில் வைக்கும்போது அது அனைவருக்கும் கூழாங்கல்லாய் காட்சி அளிக்கிறது. ‘ மகா யோகிகள் அருமணிகளைத் தொடமாட்டார்கள் , தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை‘ என்கிறாள் காளிந்தி. என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே . என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்பட வேண்டியவள் இவளே என்கிறார் இளையயாதவர்.

அந்த அரங்கில் நடந்த உரையாடல்களில் இதுவே உச்சம் என எண்ணி முன் செல்லும் இடத்தில்

காளிந்தி கைவிரித்து முகம்பொத்தித் தலைகவிழ்ந்திருக்க , சத்யபாமை எழுந்து சென்று ‘இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே , நீடுழி வாழ்க ! என்று சொல்ல பிற அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்ப சுபத்திரை மணியை இளைய யாதவரிடம் இருந்து பெற்று சாளரம்வழியாக வெளியே கடலில் போடுவது மற்றொரு உச்சம். அந்த நிகழ்வுகளின் பயனாய் யோகம் எதுவென அறிகிறான் திருஷ்டத்யும்னன்.

அரசியலும் சமூக அடுக்குகளும் ஊடுபாவாய் கலந்து வருகிறது இளையவர் மணம் கொண்ட எட்டுக்கதைகளிலும். ஆயர்களின் ஒவ்வொரு குடியும் அவர்களுக்கான தனிப்பெருமையை எக்கணமும் விடாது கொண்டிருப்பது மற்றும் அந்த பெருமை அவர்களை இட்டு செல்லும் பாதை. இது இன்றும் நம்மை ஊழாய் விழைவாய் தொடர்வதை உணரலாம்.

திரௌபதியின் தூதுடன் துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் சாத்யகியுடன் செல்லும் நகருலாக்கள் , பயணங்கள் , களியாட்டங்கள், நிகழ்த்துக்கலை மன்றங்கள், சூதர் அமர்வுகள் போன்றவை காண்பிப்பது வேறொரு உலகை. அவர்களின் உரையாடலின் ஊடாகவே இளையவர் மணம் கொண்ட கதைகள் நிகழ்கின்றன.

நகரில் அவன் கண்ட பிரமாண்டத்துக்கு நேரெதிராக காட்சி தந்து எளிமையான முறையில் திருஷ்டத்யும்னனை

வரவேற்கிறார் துவாரகை அரசர். அக்ரூரர் திருஷ்டத்யும்னன்  உரையாடல் ஒரு விரிவான சித்திரத்தை எந்த பூச்சும் இல்லாமல் அரசியலில் இன்று துவாரகையின் இடமென்ன என்று சொல்லிச்செல்கிறது அதன் மையமாக வேளாண்குடி மற்றும் யாதவகுடிகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடும் .

திருஷ்டத்யும்னன் துவாரகையில் மரியாதை நிமித்தமாக அரசியர்களை தனித்தனியாக சந்திக்கிறான் . அவன் பார்வையில் அவர்கள் அனைவரும் வேறொரு தோற்றம்கொள்கின்றனர். ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் அழகுடனும் அறிவுடனும் என ஒவ்வொருவரும் பல வகையில் தங்களை முன்வைக்கிறார்கள். அந்த சந்திப்புக்களில் சற்றே நாம் நின்றுசெல்லத்தக்க ஒரு இடம் ஜாம்பவதி ‘கற்பதறியாமல் கற்கவேண்டுமென்பதே எங்கள் குலமுறை‘ என்று சொல்வது.

அரசியர்களையும் அரசரின் அணுக்கர்களாகிய அக்ரூரர் , கிருதவர்மர் , சாத்யகி என அனைவரையும் பகடை என ஆட்டுவிக்கிறது சியமந்தக மணி. அந்த அனைத்து அக புற ஆடல்களுக்கு சாட்சியென நிலைகொள்கிறான் திருஷ்டத்யும்னன்.

சததன்வாவின் அரசியலாடலில் கட்டுண்ட அக்ரூரர் கிருதவர்மனை எண்ணி சினம் கொண்டவேளையில் நிகழும் போரில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தம்வீரர்கள் அனைவரையும் இழக்கும் தருவாயில் படகில் நின்றிருக்க எஞ்சிய இருவரில் ஒருவரான முதிய வீரர் திருஷ்டத்யும்னனை பார்க்கும் பார்வை எளியவன் ஒருவனை அரசனும் அஞ்சுவான் என்பதற்கு சான்று. அதன்பிறகு வரும் இளையவர் படகில் தான் முதலில் ஏறாமல் உயிருக்கு போராடும் வீரனை ஏற்றுவது இளவரசனும் மனிதனே என்பதற்கு சான்று.

அரசியலில் நாம் ஒன்று நினைக்க தலைமையும் ஊழும் வேறொன்று நிகழ்த்தும் என்பதற்கு திருஷ்டத்யும்னன் கிருதவர்மனை கைது செய்து அழைத்துவரும் காட்சியை சொல்லலாம். அவனின் தவறுக்காகவா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறோம் என அவனே அவனை கேட்டுக்கொண்டு இல்லை சத்யபாமாவின் முன் அவனை அப்படி காண்பிப்பதே தனது ஆழ்மனதின் நோக்கம் என்று விடைகாண்கிறான்.

 

இருவரில் ஒருவர்(கிருதவர்மன்) மிகக்கீழான நிலையில் கொண்டுவரப்பட அடுத்தவர் (அக்ரூரர் ) சத்யபாமையின் அடைக்கலத்தில் சபை நுழைகிறார். ‘அடைக்கலம் கோரியவரிடம் வணிகம் பேசக்கூடாது அது அரசியருக்கு அழகல்ல ‘ என்கிறாள் சத்யபாமா பலராமரிடம்.

சததன்வா படைகொண்டு வரக்கூடும் என்பதில் தொடங்கி இறுதிவரை ஆடலை அதன்போக்கில் விட்டுவிட்டுபின்பு மொத்தத்தையும் தனதாக்கிக்கொள்கிறார். சபையில் ஒருவேண்டா விருந்தாளியைப்போல திருஷ்டத்யும்னன்  இருக்க, சத்யபாமை தன்னிடத்தை ஒருவகையில் நிறுவ என சென்றுகொண்டிருக்க, இளைய யாதவர் ஒரு நுண்ணிய செயலின்மூலம் அவர்கள் இருவரின் முனைப்பையும் சற்றே மட்டுப்படுத்துகிறார்.

மித்ரவிந்தையை பெண்கொண்டுவர இளையவர் தங்கை சுபத்திரையுடன் செல்லும்பயணம். அகச்சோர்வுறும் நேரங்களில் எல்லாம் எடுத்துவாசிக்கவேண்டிய பகுதியது ( இமையாநீலம் ஒன்பதில் ). சுபத்திரை உணர்வதாய் சில வரிகள் முதன்முறையாக இளையயாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளைப் பொருத்திக்கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம் . அவரோ மிதந்து ஒழுகிச்செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது ‘ . இங்கு அவரவர் தத்தம் புரவியை எண்ணிக்கொள்ளலாம் . நாம் யாரென அறிய!

இளைய யாதவர் , பார்த்தனுடன் சென்று யமுனை ஆடி களிந்தவிழி தேடி செல்லும் பயணத்தில் பார்த்தன் அறிவது ‘தொடக்கம் எதுவும் மையமே‘ என்று. ‘சூரியனை வழிபட சியமந்தகம் எதற்கு‘ என்று சத்யபாமாவிடம் கேட்கிறார் கண்பார்வையற்று இருந்தாலும் ஒளிநோக்கும் திறன் மிகக்கொண்ட சாந்தர்.

கவிதைகள் / காதல்வரிகள் நாவலில் கொட்டிக்கிடக்கிறது என்றாலும் சில வரிகள் உவப்பாய் கூர்ந்து நோக்கி குறித்து வைக்க தூண்டிற்று .

‘இப்புவி ஓர் இனிய மதுக்கிண்ணம்‘

மன்மதனுக்கு உடலிருக்கலாகாதென்று கண்ட மூதாதை போல காமத்தை அறிந்தவன் எவருமில்லை .

விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று சொன்ன சூதன் ஞானி

புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண்விரும்புதல் இயல்பு.

பட்டில் பட்டுப் பதிந்த பட்டுத்தடம்

அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை (இந்த வரிகள் துவாரகை நகரில் உள்ள பெண்களை குறித்து சொல்வது. ஆனால் நான் எனக்கு எடுத்துக்கொண்டேன் , யார் யார் மேலேல்லாமோ போட்டுப்பார்த்தேன் அப்படியே பொருந்தியது. அகாலத்தில் கணவனை இழந்த நான் கண்ட பலருக்கும் கூட அது பொருந்தியது என்றால் மிகையில்லை )

இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலை பெற்றவர்களாக மட்டுமே பார்க்கவிழையும் ஆண் அவர் ஒருவரே .சத்யபாமா கண்ணனை சந்திக்கும் தருணம் (எழுந்த நீலத்திருமுகம் ..நீயென சுட்டும் விரலென மூக்கு  :) )சத்யபாமைக்கு காட்சி அளிக்கும் ஏழு தேவியர்கள் வைஷ்ணவி, மகேஸ்வரி, வராகி , சாமுண்டி , இந்திராணி, பிராமி…

ஒரு முகத்தை மட்டும் மட்டும் எண்ணி ஒரு பெயரை மட்டும் மூச்சென ஆக்கி இருப்பதன் பேரின்பத்தின் முன் அவன்கூட ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

ஊனுடம்பு செல்லா வழிகளில் எல்லாம் உள்ளம் செல்லமுடியுமல்லவா .

மொழியிலும் காணாப்பெருவெளியிலும் எம்மைத் தவழவிடும் ஆசிரியருக்கு மிக்க நன்றி . உடன் பயணிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு என் அன்பு

சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள் . அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் இருக்கிறேன் .

https://kmrvignes.blogspot.com/2025/07/blog-post.html

அன்புடன்

கே.எம்.ஆர். விக்னேஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.