தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள்

வழக்கம்போல தமிழ்விக்கி தூரன் விழா அமைப்பு- நிர்வாகம் முழுக்கவே ஈரோட்டு நண்பர்களால் செய்யப்பட்டது. ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டுதலில் பிரபு, பாரி, சிபி, மெய்யரசு, அழகியமணவாளன் என பல நண்பர்கள் இணைந்து நடத்தினார்கள். நான் விருந்தினராக விழாநாள் அன்று காலை சென்று இறங்கினேன். விழா ஒருங்கிணைப்பு நிகழும்போது ஐரோப்பியப் பயணத்தில் இருந்தேன், ஆகவே என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளவில்லை.

ஐரோப்பாவில் இருந்து 31 ஆம் தேதி வந்தேன். வந்து ஒரு வாரத்தில், 7 ஆம் தேதி புக்பிரம்மா விழா. அங்கிருந்து 12 ஆம் தேதி நாகர்கோயில் மீண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் 14 ஆம் தேதி மாலை ஈரோடு ரயிலில் நானும் அருண்மொழி நங்கையும் கிளம்பி மறுநாள் காலை ஐந்தரைக்கு சென்று சேர்ந்தோம். அந்தியூர் மணி, யோகேஸ்வரன் ராமநாதன் என பலர் ரயில்நிலையம் வந்திருந்தார்கள். நேராக விழா நிகழும் ராஜ்மகால் அரங்குக்குச் சென்றுவிட்டோம். அங்கே அஜிதன், தன்யா, ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி, (அவர்களின் மகள் மானசாவும்தான்) ஆகியோருடன் தேவதேவனும் வந்து தங்கியிருந்தார்.

ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ் விக்கி -தூரன் விருதுகள் நண்பர் வழக்கறிஞர் செந்திலின் திருமண மண்டபத்தில்தான் நிகழ்வது வழக்கம். நகரில் இருந்து சற்று தள்ளி இருக்கும் இடம். ஆகவே நகர்மக்கள் இயல்பாக வரமுடியாது. ஆனால் அந்த இடம் எங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமாகவே அளிக்கப்படுகிறது.(பராமரிப்புச் செலவு மட்டும்) எங்கள் செயல்முறையே மிகக்குறைவான செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான்.

நான் அறைக்குச் சென்றதுமே படுத்து ஒன்பது மணிவரை தூங்கிவிட்டேன். நிகழ்வுகள் மாலை நான்கு முதல்தான். வரும் வழியில் ஒரு காபி சாப்பிட்டிருந்தாலும்கூட நல்ல தூக்கம் வந்தது. ரயிலிலும் நன்றாகவே தூங்கியிருந்தேன். எப்படியும் கண் விழித்ததும் பேச்சும், சிரிப்பும் தொடங்கிவிடும். சக்தியை ஏற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. ஒன்பது மணிக்கு சிற்றுண்டி வந்துசேர்ந்தபோதுதான் விழித்துக்கொண்டேன்.

பிரகாஷ் வரைந்த ஓவியம்

நண்பர்கள் வரத்தொடங்கினார்கள். உரையாடல் தொடங்கியது. இத்தகைய நிகழ்வுகளின் அழகு என்பதே அந்த உரையாடல்கள்தான். இலக்கியவாதிகள் நடுவே ஒருங்கிணைக்கப்படும் உரையாடல்கள் ஒரு வகையில் உதவியானவை, அவர்களின் இலக்கியப்புரிதலுக்கு அவை உதவும். இலக்கியவாதிகள் வாசகர்களை இயல்பாகச் சந்திக்கும் இத்தகைய நிகழ்வுகளில்தான் தங்களை எவர் வாசிக்கிறார்கள், எப்படி வாசிக்கிறார்கள் என எழுத்தாளர்கள் அறியமுடியும். வெவ்வேறு களங்களில் எழுதிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்களை வாசகர்கள் அறியவும், சந்திக்கவும் முடியும்.

இத்தகைய விழாக்கள்தான் இலக்கியத்தை கொண்டாட்டமாக ஆக்குபவை. நீண்டநாட்களுக்குப் பின் இத்தகைய நிகழ்வுகளைத்தான் இலக்கியவாழ்வின் சிறந்த கணங்களாக நினைவுகூர்கிறோம். அரிய சந்திப்புகள் ஒருபக்கம். முக்கியமான தொடக்கங்களை நிகழ்த்திய உரையாடல்கள் இன்னொரு பக்கம். பலசமயம் அவை நிகழும்போது அவை எத்தகைய முக்கியத்துவம் கொண்டவை என நமக்குப் புரிவதில்லை.

 

நான் க.நா.சுவை இப்படி ஒரு நிகழ்விலேதான் முதலில் சந்தித்தேன், உரையாடினேன். அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.மிகமிக இளம் வயதில் இத்தகைய ஒரு நிகழ்வில்தான் பெருநாவல் என்னும் கனவை என்னிடம் பி.கே.பாலகிருஷ்ணன் உருவாக்கினார். இத்தகைய நிகழ்வுகள் வழியாகவே நாம் இலக்கியம் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்துகொள்கிறோம்.

ஆனால் இலக்கியப்படைப்புகளை எழுதும் பலருக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, எதையும் அறியவோ கற்கவோ முடியாத தேக்கநிலை. இரண்டு, தாங்கள் அங்கே எப்படி மதிக்கப்படுவோம் என்னும் பதற்றம். மதிக்கப்பட மாட்டோமோ என்னும் குழப்பம். மதிக்கப்படவில்லை என்னும் சீற்றம். இக்காரணங்களால் விழாக்களைத் தவிர்ப்பவர்கள் உண்டு. அதைப்பற்றி எந்தக் கவலையும் தேவதேவனுக்கு இல்லை, அவர் மதிக்கப்படாத இடமும் இல்லை என்பதே அதற்கான பதில்.

ஷிண்டே அரங்கு

மாலை நண்பர்களுடன் ஒரு நடையாகச் சென்று கவுண்டச்சிப்பாளையத்திலுள்ள டீக்கடையில் டீ குடித்தேன். இந்த விழாவின்போது இது ஒரு சடங்கு. இந்த ஒரே கடைதான் அமர்ந்து டீ குடிக்க பொருத்தமானது. நம் நிகழ்வுக்காலம் முழுக்க எந்நேரமும் அங்கே இலக்கியவாதிகள் சிலர் அமர்ந்து ஆவேசமாக விவாதித்துக் கொண்டும் வெடித்துச் சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் அப்படி அங்கே டீ குடிப்பது ஒருவகையான இனிய சடங்காக ஆகிவிடுகிறது. காரணம் நல்ல நினைவுகள்.

நிகழ்வுகள் மாலை நான்கு மணிக்கு தொடங்கின. மதியத்திற்கு முன்னரே இருநூறுபேர் வரை வந்துவிட்டனர். இம்முறை இருநூறுபேருக்கு தங்குமிடம் தேவைப்பட்டது. கோவை விழாவில் தங்குமிடம் கோரி பதிவுசெய்பவர்களில் இருபது முப்பதுபேர் முன்னரே தெரிவிக்காமல் வராமலிருப்பதுண்டு. அந்த இடங்களுக்கு நாம் செய்த செலவு வீணாகும். ஈரோட்டில் கிருஷ்ணன் முந்தைய விழாக்களில் அப்படி வரத்தவறியவர்களை பட்டியலிட்டு அவர்களை நீக்கப்பட்டியல் ஒன்றில் சேர்த்துக்கொண்டே இருந்தார். கோவை பட்டியலில் அப்படி தெரிவிக்காமல் இருந்தவர்களை கண்டுபிடித்து நீக்கம் செய்தார். ஆகவே பதிவுசெய்த அனைவருமே வந்துவிட்டார்கள்.

சென்ற முறை விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்) எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்) மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்) என நண்பர்கள். தேவதேவன் , சோ.தர்மன், சுப்ரபாரதி மணியன் என மூத்த எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.

நான்கு மணிக்கு நிகழ்வு தொடங்கும்போது அரங்கு முழுமையாகவே நிறைந்திருந்தது. ஓர் ஆய்வாளர் பேசும் அரங்குக்கு முந்நூறுபேர் கண் நிறையும் தொலைவு வரை நிரம்பியிருப்பது தமிழகத்தில் இன்னொரு வாய்ப்பில்லாத காட்சி. ஆறுமுக சீதாராமன் அரங்கை சபரீஷ் வழிநடத்தினார். ஆறுமுக சீதாராமனை எஸ்.ஜே.சிவசங்கர் கௌரவித்தார்.

வேலுதரன் அரங்கு

ஆறுமுக சீதாராமன் நாணயவியலில் இன்று தமிழகத்தின் முதன்மையான ஆளுமை. அவரும் அமைச்சர் தங்கம் தென்னரசும் இணைந்து எழுதிய தமிழகக் காசுகள் என்னும் பெருநூல் இப்போது வெளிவந்துள்ளது. ஒரு கலைக்களஞ்சியம் போன்ற பெருந்தொகுப்பு அது.

நாணயவியல் போன்ற துறைகளே வரலாற்றாய்வுக்கான அடிப்படைகளை வழங்குகின்றன. ஒரு தொல்பொருளில் மிக அதிகமாக அடையாளங்களும் எழுத்துக்களும் இருப்பது நாணயங்களிலேயே. ஆகவேதான் அவை வரலாற்றெழுத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. நாணயவியலை ஆழ்ந்து கற்பது ஒரு பக்கம். ஆனால் பொதுவாசகர்களுக்கு நாணயங்களின் உலகம் அறிமுகமிருக்கவேண்டும், அதனூடாக தான் வாழும் சமூகத்தின் ஒரு சித்திரம் அகத்தே உருவாகும்.

ஆறுமுக சீதாராமன் முதல் இருபது நிமிடங்களில் சங்ககாலத்து நாணயம் முதல் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தொடக்ககால நாணயங்கள் வரை தமிழகத்தின் வரலாற்றை நாணயங்கள் வழியாகவே சித்தரித்தார்.அதன்பின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒவ்வொன்றும் நம் புரிதலை வெவ்வேறு திசைகளில் திறப்பவை.

உதாரணமாக, தமிழகத்தின் தொன்மையான காசுகள் பெரும்பாலும் சதுரவடிவமானவை, ஐரோப்பியத் தொடர்பால்தான் வட்டவடிவ நாணயங்கள் உருவாயின. இது பலருக்கும் தெரியாத எளிய செய்தி. ஓர் இலக்கியவாதிக்கு இது ஒரு குறியீடாகக்கூட விரியக்கூடும்.

கே.ஜி.கண்ணபிரானை கோவை மணி கௌரவிக்கிறார்.

பல முக்கியமான கேள்விகளும், வியப்பூட்டும் பதில்களும். உதாரணமாக, பழைய நாணயங்களின் மாற்றுமதிப்பு என்ன? (நாணயங்கள் பழங்காலத்தில் அவற்றின் உலோகத்தின் சந்தை மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கொண்டிருந்தன, தங்கம் மற்றும் வெள்ளியாலான காசுகள் அதனால்தான் வெளியிடப்பட்டன. ஆனால் செம்புக்காசுகளின் மதிப்பு உள்ளூரில் மட்டுமே. உள்ளூர் அரசு நிர்ணயம் செய்வது அது)

எவர் நாணயங்களை வெளியிட அனுமதி இருந்தது?(பழங்காலத்தில் ஒரு மைய அரசு மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்சியாளர்களும் நாணயங்களை வெளியிட்டனர்) பழங்கால நாணயங்களில் மிகப்பெரும்பாலும் உள்ள சின்னம் எது? (வேலியிடப்பட்ட மரம். ஆட்சிமரம்). நாணயங்களிலுள்ள தேள் எதைக்குறிக்கிறது? (பிரசவத்தை).ஒரு மணிநேர அமர்வு சட்டென்று முடிந்தது போல இருந்தது.

சுப்பராயலு அரங்கு

அடுத்த அமர்வு வெ.வேதாசலம் அவர்களுடையது. வேதாசலத்தை மு.இளங்கோவன் கௌரவித்தார். அதன்பின் ஒரு பாடலும் பாடினார். வேதாசலத்தின் அமர்வை ஜி.எஸ்.எஸ்.வி.நவின் ஒருங்கிணைத்தார்.

வேதாசலத்தின் அமர்வு அமர்வு சென்ற ஆண்டும் இருந்தது. இவ்வாண்டு அவரே விருது பெறுவதனால் அவருடைய நூல்களை வாசித்துவிட்டு வந்திருந்தார்கள். ஆகவே அவருடைய நூல்களை ஒட்டி தொடர்ச்சியாக வினாக்கள் எழுந்துகொண்டிருந்தன. அவர் கைக்கொள்ளும் ஆய்வு முறைமைகள், தமிழகத்தில் சமணம் தென்னிந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே கப்பல் வழியாக நேரடியாக வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்பதுபோன்ற அவருடைய ஊகங்கள், பாண்டிய நாட்டு நிலமானிய முறை பற்றிய அவருடைய கணிப்புகள் என தொடர்ச்சியான விவாதம்.

வேலுதரன் ஓர் சுதந்திர தொல்லியல் ஆய்வாளர். எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. கல்வித்துறையாளரும் அல்ல. தனிப்பட்ட ஆர்வத்தால் ஆலயங்களுக்குச் செல்லத்தொடங்கி அப்படியே தொல்லியல் ஆர்வலர் ஆனார். அவருடைய பணி என்பது தொல்லியல் இடங்களை பார்த்துப் பதிவுசெய்வது மட்டுமே. குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய நெடுங்கற்கள், நடுகற்கள் போன்றவற்றை விரிவாக பதிவுசெய்துள்ளார். ஶ்ரீவித்யா அந்த அரங்கை ஒருங்கிணைத்தார்.

அவரை ஒரு வலைப்பதிவர் என்றுதாந் சொல்லவேண்டும். ஆனால் பதிவுசெய்வதேகூட இன்று முக்கியமான பணிதான். ஒவ்வொரு அரங்கிலும் இப்படி தன்னார்வத்தால் பணியாற்றுபவர்களை அறிமுகம் செய்வது எங்கள் வழக்கம். முக்கியமான காரணம், இனி வருங்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆர்வமுள்ள அனைவரும் இப்பணியைச் செய்யலாம் என்பதனால்தான். ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய ஒரு பணி உள்ளது. இந்தியா போன்ற மாபெரும் நிலத்தில் தன்னார்வலர்கள் மூலைமுடுக்கெல்லாம் சென்று பதிவிட முடியும். தக்காணப்பீடபூமியின் பல வரலாற்றுக்கு முந்தையப் பதிவுகள் தன்னார்வலர் செய்தவை.

வேலுதரன் தமிழகத்திலுள்ள நடுகற்கள் உட்பட தொல்காலச் சின்னங்களை காட்சிகளுடன் பதிவிட்டு தொகுத்துரைத்தபின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். தொல் பண்பாட்டுடன் இன்றுள்ள பண்பாட்டின் உறவு உடபட பல சுவாரசியமான வினாக்கள் எழுந்தன. வேலுதரனை செந்தில் ஜெகந்நாதன் கௌரவித்தார். நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மாலையில் கே.ஜி. கண்ணபிரான் வானியல் அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தினார். பொதுவாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அன்னியமான ஓர் உலகம் அது. ஆனால் சென்ற நூற்றாண்டு இலக்கியவாதிகள் பலர் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். சிவராம காரந்துக்கும் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவுக்கும் நல்ல பயிற்சி இருந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன். கே.ஜி.கண்ணபிரானை கோவைமணி கௌரவித்தார்.

இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் இருந்தன.நான் களைப்புடன் தூங்கச் சென்றபோது 12 மணி கடந்துவிட்டிருந்தது. பேருந்துகளில் பங்கேற்பாளர்களை வெவ்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரவு நெடுநேரம் வரை திருமணமண்டபம் முழக்கமிட்டுக்கொண்டே இருந்ததைக் கேட்டேன்.

(மேலும்)

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.