சமூக மாற்றம் மற்றும் வலங்கை – இடங்கை பிரிவு- எ.சுப்பராயலு

 முனைவர் எ. சுப்பராயலு 

தமிழ் கல்வெட்டுகளில் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டிலிருந்தும், ஆங்கிலேயே ஆவணங்களிலும் (பொ.யு. 18 – 19 ஆம் நூற்றாண்டு) காணப்படும் வலங்கை – இடங்கை என்னும் சொல்லாட்சி, இரண்டு எதிர் தரப்பான சமூக பிரிவை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி மிக சமீபத்தில் தன் ஆய்வை எழுதிய ஆய்வாளர் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) அதற்கு முன் கூறப்பட்ட அனைத்து பார்வையை தொகுத்தும், அதன் மேல் விமர்சனப்பூர்வமான கருத்துகளையும் தன் நூலில் (Peasant State and Society in Medieval South India, Burton Stein) எழுதியுள்ளார்.

பர்டன் ஸ்டெயின் தன் நூலில் இவ்விரு பிரிவுகளும் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் இல்லையென்றும், வெவ்வேறு சமூக குழுக்கள், சாதிகளிலிருந்து ஒருங்கிணைக்கப் பெற்ற சாத்தியமான சமூக பிரிவுகள் என்ற முடிவை முன்வைக்கிறார். அதே நேரம் வலங்கை – இடங்கை பிரிவைப் பற்றி பரவலாக நம்பப்படும் கருத்தான வலங்கை பிரிவினர் விவசாயம், நிலம் சார்ந்த தொழில் செய்பவர்கள், இடங்கை பிரிவினர் வணிக, கைவினைஞர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்னும் கருத்தையும் முன்வைக்கிறார். காலனிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கருத்து ஒரு ஸ்டீரியோடைப்பாக நிலைப்பெற்றாலும் பர்டன் ஸ்டெயின் அவரே ஆராய்ந்து கொடுத்த நம்பகமான ஆதாரங்களுக்கு எதிராக இது அமைகிறது.

பொ.யு. 18 – 19 அறிக்கைகளிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்டெயின் உருவாக்கிய அட்டவனையில், வடக்கு தமிழகத்திலிருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிருந்தும் என மொத்தம் அறுபத்தியெட்டு முக்கிய சாதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பத்து சாதிகளே இடங்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வலங்கை என பிரிக்கப்பட்ட மற்ற சாதி பிரிவுக்குள்ளும் கணிசமானவர்கள் வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் இருப்பது காணமுடிகிறது. உண்மையில் ஸ்டெயின் தன் வாதத்திலுள்ள பலவீனத்தை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதனை பின்வருமாறு நியாயப்படுத்துகிறார்,

பின்னால் கிடைத்த சான்றுகளின் படி சில நெசவாளர்கள் இடங்கை பிரிவில் இருந்தாலும், பெரும்பானவர்கள் வலங்கைப் பிரிவிலேயே காணப்படுகின்றனர். நெசவாளர்கள் இடங்கை பிரிவுடன் இணைய போதுமான காரணங்கள் கிடைக்கவில்லை. எண்ணெய் வணிகர்களைப் போல் நெசவாளர்களுக்கு சந்தைக்கான பரந்த அளவில் உற்பத்தியும் வினியோகமும் தேவைப்படவில்லை.

என்கிறார். 

எந்த வித முன்முடிவுகளும் இல்லாமல் நாம் கல்வெட்டு ஆதாரங்களை நோக்கும் போது “விவசாயி எதிரீடாக வணிகர்” என்னும் பகுப்பு வலங்கை – இடங்கை பிரிவுக்கு பொருந்தாது என்பதையே அறிய முடிகிறது. 

முதற் காரணம் இடங்கை சார்ந்து பொ.யு. 14 – 15 ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் கல்வெட்டுகள், இடங்கையில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பள்ளி அல்லது வன்னியர் சாதியினர் எனக் குறிப்பிடுகிறது. வன்னியர்கள் இந்த ஆயிரமாண்டு கால வரலாற்றில் ஒருபோதும் வணிகர்களாகவோ, கைவினைஞர்களாகவோ பணியாற்றியதில்லை என்பது தெளிவு. வன்னியர் இனத்தைப் பற்றி முதலில் கிடைக்கக் கூடிய சான்றென்பது அவர்கள் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டில் சோழ படையில் ராணுவ பிரிவில் இருந்தார்கள் என்றும் பின்னர் இருநூறாண்டுகளில் விவசாயிகளாக மாறினர் என்றும் அறிய முடிகிறது. இந்நாள் அவர் அதே சமூக நிலையை அச்சாதியினர் கொண்டுள்ளனர். 

இரண்டாவது காரணம் பொ.யு. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாடு  – இலங்கையில் கிடைக்கக்கூடிய பல்வேறு அய்யவோலே (Ayyavole) வணிகர் குழு சார்ந்த கல்வெட்டுகள் அவர்களை வலங்கை பிரிவினர் என்றே குறிப்பிடுகிறது. 

இலங்கையிலுள்ள பதவியா, வாகல்கட, விகாரேகின்னா ஆகிய ஊர்களில் கிடைக்கப்பெற்ற வணிகக் குழுக் கல்வெட்டுகள் பொ.யு. 11 – 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதில் சில வணிகக் குழுவிலுள்ள வணிகர்களின் பெயர்களுக்கு முன்பாக வலங்கை என்னும் பெயர் காணப்படுகிறது. அதே போல் மதுரை மாவட்டத்திலுள்ள நத்தம் கோவில்பட்டியில் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் குழுக் கல்வெட்டு பின்வருமாறு காணப்படுகிறது,

பல மண்டலங்களிலுள்ள நாட்டு செட்டி, தன்ம செட்டி மற்றும் செம்பியன் சேனாபதி ஆண்டன், வைகுண்ட நாடாள்வன் என்னும் வலங்கை மிகாம-விரகங்க-பிள்ளை, ராஜாதிராஜ-வலங்கை-நபோர்பதி, மேலும்… என 18 பூமியின் வீரக்குடியார் 

என்ற குறிப்பு உள்ளது. வீரக்குடியார் பிரிவில் வரும் பெயர்களின் முன்னே காணப்படும் வலங்கை என்னும் சொல் கவனிக்கத்தக்கது. வீரக்குடியார் எனக் கோவில்பட்டி கல்வெட்டில் காணப்படும் வணிகக் குழுக்கள் இலங்கையிலுள்ள வணிகக் குழுக் கல்வெட்டிலும், கர்நாடகத்திலுள்ள சில கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இவர்கள் ராணுவதினராகவும், வணிகர்களின் பாதுகாவலர்களாகவும் அறியப்படுகின்றனர். வீரக்குடியினர் பற்றிக் குறிப்பிடப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் எரிவீரப்பட்டிணம் என்னும் காவற்படை நகரத்தை சார்ந்தே உள்ளது.

மேற்சொல்லப்பட்ட கல்வெட்டு ஆதாரங்களின் படி வலங்கை பிரிவினர் நில உரிமையாளர்கள் என்றும், இடங்கை பிரிவினர் வணிகர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்வது பொய்யாகிறது. குறைந்தபட்சம் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் இந்த பகுப்பு தவறாகிறது. கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களிலிருந்து வலங்கை – இடங்கை என வகைப்படுத்துதல் சோழர் கால ராணுவப் பிரிவிலிருந்தே காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சோழ நாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் (985 – 1014) காலத்திலேயே முதலில் வலங்கை என்னும் பெயர் கிடைக்கிறது. அவனே படையெடுப்புக்காக பெரும் ராணுவத்தை உருவாக்கிய முதல் அரசன். பின் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வலங்கை – இடங்கை மகாமை என்னும் உள்ளூர் வரி உருவாகியது. இவ்வரி அந்தராயப் பிரிவான ஆயம், பாட்டம் வரிகள் கொண்ட அறுவடை செய்யாதவர்களிடம் வசூலிக்கப்படும். எந்த சாதிப் பிரிவுகள் வலங்கையிலும், இடங்கையிலும் வரி செலுத்தினர் என்ற தெளிவான வரையறை கிடைக்காவிட்டாலும், பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இடங்கை பிரிவு உருவாகிவிட்டது அறிய முடிகிறது. ஆனால் அக்காலத்திலும் வலங்கை பிரிவுக்கான ராணுவ பிரிவுகள் மட்டுமே கிடைத்த கல்வெட்டுகள் சிலவற்றில் உள்ளன. உதாரணமாக, தென் கர்நாடக பகுதியான கோலாரில் பொ.யு. 1073ல் கிடைக்கப்பட்ட கல்வெட்டில் சோழ மண்டலம், ஜெயம்கொண்டசோழ மண்டலம் பகுதிகளிலிருந்து உருவான விவசாயக் கூட்டமைப்பின் பெரிய ராணுவ குழுவான வலங்கை மகாசேனை சோழ அரசின் படைப்பிரிவின் பெரும் பகுதியாக விளங்கியது.

புகழ்பெற்ற வேலைக்கார கல்வெட்டு (இலங்கையிலுள்ள பொலொனார்வாவில் கிடைத்தது – பொ.யு. 12 ஆம் நூற்றாண்டு) வேலைக்காரப் படைப்பிரிவில் வலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர், பரிவாரக் கொண்டம், பலகலனை போன்ற பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நீலகண்ட சாஸ்திரி இப்பிரிவுகள் வேலைக்கார ராணுவத்தின் பிரிவுகளைக் குறிப்பிடவில்லை என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூல சமூகக் குழுவை மட்டுமே குறிப்பிடுகிறது என்றும் கூறுகிறார். 

‘சிலர் சாதி அல்லது சாதிக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர், சிலர் தகுதி அடிப்படையில், சிலர் இனம், தொழில் சார்ந்து’

இதில் சாதிக் குழுக்கள் எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இல்லை. இக்குழுக்களுக்கு சாதி நிலையை குறிப்பிடுவது பொருத்தமாகாது. பொ.யு. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அப்படி சொல்வது பின்னாளில் நிகழ்ந்த சமூக வளர்ச்சியின் போக்கை தவறாக முற்காலத்தில் குறிப்பிடுவதாகும். பொலொனார்வா கல்வெட்டு அல்லது அதற்கு இணை காலத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டு எதிலும் மேலே குறிப்பிட்ட பிரிவுகள் ராணுவ பிரிவுகளன்றி வேறு எந்த சாதிய, இனப் பிரிவுக்கான சாத்தியமாக கருதுவதற்கு இடமில்லை.

தமிழ் சமூகத்தில் பொ.யு. 9 – 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே சாதி ஒரு அடிப்படை சமூக அலகாக உள்ளது. அதில் சாதிய அடுக்குமுறை தோன்றுவது பொ.யு. 11 ஆம் நூற்றாண்டிலிருந்து. முதலாம் ராஜராஜனின் இரண்டு கல்வெட்டுகள் (பொ.யு. 1014) நிலக்கிழார் (ஊர் இருக்கை), வணிகர் (கம்மண்ண சேரி), பறையர் (பறை சேரி)  என தனி சாதிக் குடிகள் உருவாகியிருந்ததைக் குறிப்பிடுகிறது. கங்கைக்கொண்டசோழபுரத்தில் காணப்படும் வீரராஜேந்திரனின் நீண்ட கல்வெட்டு திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் இதே போல் அமைந்த குடியேற்றங்களைக் குறிப்பிடுகிறது (பொ.யு. 1068). பிராமணர்களுக்கு கீழ் படிநிலை சாதியினர் என ஒரு பொது  வரையறையில் குறிப்பிடும் சில தரவுகளும் கிடைக்கின்றன. இந்த படிநிலை அடுத்த இருநூறாண்டுகளில் இன்னும் விரிவாக்கப்பட்டுள்ளது.

பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பாதியில் சோழ பேரரசின் ராணுவ விரிவாக்கத்தின் போது நாட்டின் புறப்பகுதியில் உள்ள பழங்குடிகளின் தற்காப்பு கலையின் ஆற்றலை விவரிக்கிறது. இது சோழ அரசு தன் ராணுவத்திற்காக பழங்குடியில் ஆள் சேர்த்துள்ளதைக் காட்டுகிறது. பல படைப்பிரிவின் வில்லாளிகள் இந்த புறப்பகுதியிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லா வெற்றிகரமான ராணுவ பிரிவைப் போலவும் சோழர்களின் ராணுவத்திலுள்ளவர்களும் மைய பண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, சோழ அரசிற்கு வளமை சேர்த்துள்ளனர். போரின் போது நிகழ்த்தப்பட்ட கொள்ளையாலும், பிற வருமானங்களையும் ராணுவ மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். கராஷிமா, தனி நபர் நிலம் என்னும் கொள்கை இக்காலத்தில் அறிமுகமானதற்கு நாட்டின் இந்த புதிய வளமும் முக்கிய காரணமெனக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்விற்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் முன்பில்லாத வகையில் பழங்குடி நாட்டார் சமூகம் நிலைத்த சமூகமாக இணைந்துள்ளது. 

இந்த தொடர்பு சம்பந்தமாக பொ.யு. 1318 ஆண்டை சேர்ந்த பாண்டிய கல்வெட்டு ஒன்று ஆடுதுறையில் கிடைத்துள்ளது. அதில் சோழர் கால பொ.யு. 1122 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் கல்வெட்டு, பள்ளி மக்கள் காணி (மரபாக வரும் நில அதிகாரம்) நிலத்தை வடக்கு பக்கமுள்ள வறண்ட பகுதியில் பல கிராமத்தில் வைத்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறது. இம்மக்களை பள்ளி நாட்டார் அல்லது பன்நாட்டார் எனக் குழுவாகக் குறிக்கிறது. பள்ளி என்னும் சாதி மறவர், கள்ளர்களைப் போல் போர் சமூகத்தினர். அவர்களின் வீரப்பண்பு மேற்சொன்ன கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு வில்லுக்கு ஒரு பணம் அவர்கள் பெற்றனர் என்ற குறிப்பு வருகிறது. இறுதியில் சாபமிடும் தொனியில் வரக்கூடிய ஒரு வரி பள்ளி நாட்டாரை யாராவது எதிர்த்தால் அவன் வீரனல்ல என குழுவிலிருந்து நீக்கப்படுகிறான் (நம்மில் ஒரு வீரன் அல்லவாகுக). இவை மூலம் பள்ளி நாட்டார்கள் வீரர்களாக இருந்து நில உடைமையாளர்களான சித்திரம் கிடைக்கிறது. நாட்டார் எனப் பள்ளிக்கு பின் வரும் பெயர் நில உடைமையையே காட்டுகிறது. நாட்டார் என்னும் சொல் இதற்கு முற்காலத்தில் நில உடைமை கொண்டிருந்த நாடு என்னும் சிறு பிரதேசத்தைக் கொண்ட வேளாண் சமூகத்தினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இத்தரவுகள் மூலம் பள்ளி இனத்தவர் வேளாண் சமூகமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டது புலனாகிறது. பாண்டியரின் இக்கல்வெட்டு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தருகிறது. கல்வெட்டு பரந்த பகுதியில் (10000 சதுர கிலோமீட்டர்) வாழும் பள்ளி இன மக்களின் எல்லைகளாகக் கிழக்கே வீரநாராயணன் ஏரி, மேற்கே பச்சைமலை, தெற்கு காவேரி, வடக்கு பெண்ணை நதி அமைந்த குறிப்பை அளிக்கிறது. தென்னார்காடு தொடங்கி காவேரிக்கு வடக்கே உள்ள திருச்சி வரை இவர்கள் இருந்ததை அறிய முடிவதோடு பரந்த பிரதேசத்தில் அவர்களின் சமூக ஒருங்கிணைப்பையும் பார்க்க முடிகிறது. 

இதே பகுதியில் சுருதிமான் என்றழைக்ககூடிய மற்றொரு போர் சமூகமும் பின்னாளில் வேளாண் சமூகமானது. பொ.யு. 1015ல் சுருதிமான்களைப் பற்றி முதல் குறிப்பு கிடைக்கிறது. முன்னிலை போர் வீரன் ஒருவன் கடக்கம் (கர்நாடகத்திலுள்ள மன்யகேதா/மல்கேட் பகுதி) போர் களத்தில் தன் உயிரை அரசனுக்காக கொடுத்ததன் கல்வெட்டு இது. உரட்டூர் நாட்டு நாட்டார் உறுப்பினராக சுருதிமான் ஒருவன் இருந்ததன் கல்வெட்டு பொ.யு. 1141ல் கிடைத்துள்ளது. பொ.யு. 1150ல் உடையான் என்னும் நிலமுடையவன் பற்றியும், நாடாள்வான் என்னும் நாட்டைக் காப்பவன் பற்றியும் குறிப்பு உள்ளது. சுருதிமான் இனத்தில் பெரும் நிலமுடையவர்கள் பற்றிய குறிப்பு பொ.யு. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிடைக்கிறது.

சுருதிமான் போலவே நத்தமான், மலையமான் என்ற இரு சமூகத்தினரும் பின்னாளில் நாட்டார் நிலையை எய்தியுள்ளனர். வாலிகண்டபுரத்தில் பொ.யு.1227ல் கிடைத்த கல்வெட்டில் யாதவ குலத்தலைவர் (மேய்ச்சல் சமூக மக்கள்) என்றும் சித்திரமேழி பெரியநாடு (அழகிய ஏர் கலப்பையைக் கொண்ட பெரிய நாடு அல்லது நாட்டார்) என்றும் நத்தமான் குறிப்பிடப்படுகிறார். நத்தமானுக்கு அடுத்து மலையமான் குறிப்பிடப்படுகிறார். மேலும் சில மேய்ச்சல் சமூகத்தினர் நில உடைமையாளர் ஆனதன் சான்றுகள் கிடைத்துள்ளன. பொ.யு. 1184ஐ சேர்ந்த ஶ்ரீரங்கம் கல்வெட்டு வள்ளுவப்பாடி (முசிரி, திருச்சி மாவட்டம்) கிராமத்தில் வாங்கிய வரியை அக்கிராமத்தின் மேல் காணி உரிமைக் கொண்ட ஶ்ரீகோபாலர்கள் வாங்கி ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கியதைக் கூறுகிறது. கல்வெட்டில் கையெழுத்திட்டவர்கள், வள்ளுவநாட்டில் உள்ள ஐம்பது கிராமத்தின் நில உடைமையாளர்கள். இவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்கான சுமையை ஏற்றுக் கொண்டனர். கையெழுத்திட்டவர்களின் பெயரும், ஶ்ரீகோபாலன் என்ற பெயரும் இவர்கள் மேய்ச்சல் சமூகத்தினர் குறிப்பாக மாட்டிடையர்கள் என்பதைக் காட்டுகிறது.

மேற்சொன்ன அனைத்து ஆதாரங்கள் மூலம் வலங்கை – இடங்கையின் பிரிவுகள் வரலாற்றில் ஒரே போல் இருக்கவில்லை என அறிய முடிகிறது. முதலில் ராணுவ பிரிவுக்காக வகுக்கப்பட்டு பின் காலப்போக்கில் சமூக பிரிவாக மாறியது. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும், பதிமூன்றாம் நூற்றாண்டிலும் கிடைத்த கல்வெட்டுகளில் மட்டுமே இடங்கை என்னும் சொல் சாதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சுவாரஸ்யமாக, சாதி உருவாக்கத்தின் தெளிவான வெளிப்பாடு இடங்கை பிரிவில் காணப்படுகிறது. மேலே சொன்ன நிலவுடைமை சாதிகளான பள்ளி (வன்னியர்), சுருதிமான், நத்தமான் என அனைவரும் ராணுவ பிரிவிலிருந்தோ, மேய்ச்சல் சமூகமாக இருந்தோ பின்னாளில் எழுந்தவர்கள். பொ.யு. 1218 ஆண்டை சேர்ந்த உரட்டூர் கல்வெட்டு இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் சுருதிமான்களின் தோற்றத் தொன்மம் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் அவர்கள் ஐந்து நாட்டில் குடியேறியது பற்றியும் இடங்கை பிரிவோடு தொடர்பு கொண்டது பற்றியும் வருகிறது. இவர்களை ‘ஐஞ்சு நாட்டார்’ என்றழைத்தனர். நாடாள்வான் என்ற திருக் கொண்ட சில சுருதிமான்கள் மட்டுமே இந்த குறிப்பிட்ட இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்.

வாலிகண்டபுரம் கல்வெட்டு (பொ.யு. 1227) தொன்னூற்றி எட்டு இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது. இதில் பிராமணர், ஆரியர், நத்தமான், மலையமான், அந்தணர், பன்நாட்டார், வன்னியர்-நாகரர், கைக்கோளர் அடங்குவர். இதில் பிராமணர்களுக்கு அடுத்தப்படியான நிலையில் நத்தமான், மலையமான் இடம்பெற்றுள்ளனர். ஆரியர்கள் பிராமணர்களின் உபசாதியாக இருக்கலாம். அதே ஆண்டில் மேற் சொன்ன கல்வெட்டிற்கு முன்னோடியாக வரஞ்சரம் கல்வெட்டில் இடங்கை பிரிவுக்கு மலையமான், நத்தமான் வருகையும், அவர்கள் கண்ணும், கையுமாக எப்போதும் அப்பிரிவில் இருப்பேன் என எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும், அந்தணர், ஆகயர், நியாயட்டார், கைக்கோளர், வணிகர், பன்நாட்டார், சாலியர் என பிற பிரிவினர் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளனர். மேற் சொன்ன இரண்டு கல்வெட்டு குறிப்புகளும் இணைந்து நத்தமான், மலையமான் பிரிவினர் இடங்கை குழுவில் புதிய நிலவுடைமையாளர்களாக வந்து முக்கிய பங்கு வகித்தனர் என்பதை அறிய முடிகிறது. அதே போல் பன்நாட்டார் எனக் குறிப்பிடப்படும் வன்னியர்/பள்ளி இனத்தவர் வாணியர், கைக்கொல்லருக்கு கீழாகக் கருதப்பட்டனர் (வாணியர் – எண்ணெய், கைக்கோளர் – நெசவு).  

மேற்சொன்ன அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது பன்னிரெண்டாம், பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜியத்தின் புறப்பகுதியில் வாழ்ந்த போர் சமூகத்தினர், நாடோடி, ஆயர் பின்னாளில் நிலவுடைமை சாதியினராக வளர்ந்தது ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இம்மாற்றத்திற்கான தொடக்கம் பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்தே சோழ ஏகாதிபத்தியத்தின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தொடங்கிவிட்டன. இதற்கு நிகராகவே சாதி அமைப்பும் முதிர்ச்சி பெறத் தொடங்கின. ஒவ்வொரு சாதியின் அடையாளமும் தெளிவாக வரையறுக்கப்பட்டன. சாதியினிடையே தரவரிசை ஒன்றும் உருவாகியது. நிலவுடைமை சமூகத்தினர் இதில் முன்னிலை பெற்றனர். இக்காலகட்டத்தில் புதிய நிலவுடைமை சாதிகள் எழுந்து வருவதை பழைய நிலவுடைமை சாதிகள் வெறுத்திருக்கக் கூடும். இந்த நோக்கில் பார்த்தால் இடங்கை ஒற்றுமை ஒப்பந்தத்தில் புதிய நிலவுடைமை சாதிகள் முக்கிய பங்காற்றியது, பழைய நிலவுடைமை சமூகத்திற்கு போட்டியாகவே நிகழ்ந்துள்ளது என அறிய முடிகிறது. நிலவுடைமை சமூகத்தின் இந்த இருன்மை நிலைக்கான சான்று விஜயநகர காலத்தில் காணக் கிடைக்கவில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் விஜயநகர காலத்தில் வலங்கை – இடங்கை பிரிவுக்கான மேலும் துலக்கமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1429ல் கிடைக்கும் கல்வெட்டு தொடரில் இரு பிரிவினரைப் பற்றி இணைந்து வரும் குறிப்புகள் பெரும்பாலும் அதிக வரிக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியதாக உள்ளன. விஜயநகர அமைச்சர்களுக்கு எதிராகவும், ராணுவத்தினருக்கு எதிராகவும், பிராமண, வேளாள நிலவுடைமையாளர்கள் எதிராகவும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அதிக விரிக்காக இரு சாராரும் இணைந்து செய்த கலகம் பற்றிய விவரம் இதில் உள்ளன. இவற்றின் மூலம் வலங்கை – இடங்கை பிரிவில் விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர் சாதியினர், பிற சேவை சாதியினர் இணைந்திருந்தனர் என அறிய முடிகிறது.

எனவே, வலங்கை – இடங்கை பிரிவென்பது தோன்றிய போது ராணுவ பிரிவாகவும் பின் வேளாள நாட்டார் என்னும் பழைய நிலவுடைமை சமூகத்திற்கும், புதிய நிலவுடைமை சமூகத்திற்குமான பிரிவாக மாறியது என்றே கருத வாய்ப்புள்ளது. பின் பதிநான்காம், பதினைந்தாம் நூற்றாண்டில் பொது பெயரிடலாக அனைத்து உற்பத்தியாளர்களையும் குறிப்பதாக ஆகியது. வலங்கை – இடங்கை பிரிவு ஒரு கறாரான பிரிவாக இல்லாமல் தமிழ்நாட்டின் இடைக்கால சமூகத்தில் தொடர் மாற்றத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே திகழ்ந்துள்ளனர். இக்கருத்து விஜயநகர காலத்திற்கு பின்னும், பிரிட்டிஷ் ராஜ்யம் என பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின்  தரவுகளை மேல் சொன்னவற்றுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பர்ட்டன் ஸ்டெயின் சொன்னவை மேற்கத்திய பார்வையிலிருந்து எழுந்தவை அது சோழர் காலத்திற்கு மிக அன்னியமானது.

(தமிழாக்கம் ஜி.எஸ்.எஸ்.வி நவின்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.