இன்று தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா தொடக்கம்.
இன்று தமிழ்விக்கி – தூரன் விருது விழா ஈரோடு ராஜ் மகால் (கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை ரோடு) அரங்கில் மாலை நான்கு மணிக்குத் தொடங்குகிறது. காலை முதலே வெவ்வேறு ஊர்களில் இருந்து நண்பர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள். மாலை 4 மணிக்கு ஆறுமுக சீதாராமன் நடத்தும் நாணயவியல் குறித்த அரங்கு நிகழும். மாலை ஆறு மணிக்கு முனைவர் வெ.வேதாசலம் நடத்தும் தொல்லியல் கல்வெட்டு ஆய்வு குறித்த அரங்கம் நிகழும்.
இந்த அரங்குகள் சொற்பொழிவுகளாக நிகழாது. வாசகர்களின் ஐயங்கள், வினாக்களுக்கு இந்த அறிஞர்கள் அளிக்கும் பதில்களாலானவை. ஆகவே சலிப்பின்றிச் செல்லக்கூடியவை. மூன்று மணிநேரத்திற்குள் இரண்டு அறிஞர்களை நேருக்குநேர் பார்த்து உரையாடும் வாய்ப்பு அமைகிறது. தொல்லியல் போன்ற துறைகளை நம்மால் இப்படித்தான் முதல் அறிமுகம் செய்துகொள்ள முடியும். நாம் அவற்றைப் பற்றி வெவ்வேறு வகையான கற்பனைகளையும் தயக்கங்களையும் கொண்டிருப்போம். அவை உடைந்து நாம் ஒரு புதிய உலகுக்குள் நுழைவோம். நாம் அறிந்த பெரும்பாலான ஆய்வாளர்கள் இப்படி ஒரு தொடக்கம் வழியாக உள்ளே நுழைந்து வாழ்நாள் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு களத்தைக் கண்டடைந்தவர்கள்தான்.
மாலையில் இரவு 7 மணிக்கு ஜி.கண்ணபிரான் வானியல் ஆய்வு சார்ந்து ஓர் அறிமுக நிகழ்வை நடத்துகிறார். இரவு ஒன்பது மணிக்கு தொலைநோக்கி வழியாக வானைப்பார்க்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானியலார்வம் என்பது நம் அன்றாடத்தில் இருந்து நம்மை விடுவித்து வேறொரு அறிவுலகுக்குக் கொண்டுசெல்லும் அனுபவம். சென்ற நூற்றாண்டு வரை அறிஞர்கள் அனைவருக்குமே வானியல் ஆர்வம் இருந்தது. சாமானியர்களும் வானியலை அறிந்திருந்தனர். அந்த தொடர்ச்சி இன்று அறுபட்டுள்ளது. அதை உருவாக்குவதே நோக்கம்.
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முனைவர் வெ.வேதாசலம் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னரே பதிவுசெய்துகொண்டிருந்தால் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த படைப்பாளிகள் பங்குகொள்கிறார்கள். ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு வெளியே மூத்தபடைப்பாளிகளுடன் உரையாடுவதற்கும் இது ஓர் அரிய வாய்ப்பு.
சிறிய அளவில் 2022ல் தொடங்கிய இந்த விருதுவிழா இன்று கோவை விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு நிகரான ஒன்றாக மாறியுள்ளது. நண்பர்கள் கூடுவதும், அறிவுசார்ந்த செயல்களில் ஈடுபடுவதும்போல நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள, நம்பிக்கை கொள்ள இன்னொரு வழி இல்லை. ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
