ஓஷோ: மரபும் மீறலும்-16
ஓஷோ மீதான எனது விமர்சனம்
நண்பர்களே , ஓஷோ பற்றிய என் உரையை அவரை அவருடைய காலச்சூழலில் வைத்து வரலாற்றுபூர்வமாக புரிந்துகொள்ளுதல், அவருடைய பரிணாமத்தை வகுத்துக்கொள்ளுதல், அவருக்கு இந்திய சிந்தனை மரபிலுள்ள தொடர்ச்சியையும் முரண்பாட்டையும் விளங்கிக்கொள்ளுதல், அவர் கூறிய அடிப்படைச் சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளுதல் ஆகிய தளங்களில் நிகழ்த்தினேன். அதன் இறுதியாக ஓஷோ மீதான என் எதிர்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
ஓஷோ மீதான இந்த விமர்சனத்தை நான் எந்த தகுதியில் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். முதலிலேயே அதுபற்றி சொல்லியிருந்தேன். ஓர் எழுத்தாளனாக, ஒரு தத்துவ ஞானியின் மாணவனாக, ஓர் ஆன்மீகப் பயிற்சியாளனாக இந்த விமர்சனங்களை நான் என்னுடைய அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். இதை நீங்கள் பரிசீலிக்கலாம். மறுக்கவும் செய்யலாம். இதை உங்களுக்கு உபதேசம் செய்யவில்லை. நான் உபதேசங்கள் செய்வதில்லை. இவை ஒரு விவாதத்தின் ஒரு தரப்பு மட்டுமே.
ஓஷோவின் மரபு மறுப்புவாதத்தின் சிக்கல்
ஓஷோவிடம் நாம் பார்க்கும் முக்கியமான அம்சம் அவருடைய மரபு மறுப்பு / கடந்தகால மறுப்பு. இந்த விஷயத்தை இளைஞர்களாகிய நீங்கள் எளிதாகக் கையில் எடுக்கும்போது மிகப்பெரிய அபாயத்தை சந்திக்கிறீர்கள். ஆசாரவாதத்தையும் மரபையும் ஒன்றென நினைத்துக்கொள்ளக்கூடிய மனமயக்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆசாரவாதம் வேறு, மரபு வேறு. எல்லாமே மரபில் உள்ளது, அதை அப்படியே கண்மூடித்தனமாக, எந்திரத்தனமாக செய்யவேண்டியது மட்டும்தான் நமது ஒரே வேலை என்று சொல்வது ஆசாரவாதம். ஆசாரவாதிகள் எல்லா மதத்திலும் என்றும் இருப்பார்கள். சொல்லப்போனால் ஆசாரமே என்றும் மதமாக பொதுச்சூழலில் அறியப்படுகிறது. மத அமைப்புகள் எல்லாமே ஆசாரங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்.
ஆனால் மரபு என்பது ஆசாரம் மட்டுமல்ல. மரபு என்பது நெடுங்காலமாக தொகுக்கப்பட்ட உள்ளுணர்வுகளின் மிகப்பெரிய கட்டமைப்பு. அந்த உள்ளுணர்வுகள் இங்கே பலவகையான குறியீடுகளாக (உருவங்களாக / வடிவங்களாக), நடைமுறைகளாக (சடங்குகளாக), வரையறைகளாக (நூல்களாக) தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஓஷோவின் பேச்சைக்கேட்டு ஒருவன் மரபை முற்றாக துறப்பான் என்றால் அவன் பேரிழப்பையே சந்திக்கிறான். ஐம்பது வயதில் அந்த இழப்பை உணர்ந்தபின்பு திரும்பிச்செல்வது மிகமிக கடினம். உதாரணமாக நமது ஆலயங்கள், அதன் சிற்பங்கள், அதன் நடைமுறைகள் யாவும் ஓஷோவால் மறுக்கப்படக்கூடிய அளவுக்கு சிறியவை அல்ல. நம் பக்திமரபு ஓஷோ சொல்வதைப்போல அத்தனை எளியதோ தட்டையானதோ அல்ல.
அவற்றை எல்லாம் மறுக்கலாமா என்று கேட்டால், மறுக்கலாம். ஆனால் நீங்கள், உங்கள் சிறிய அறிவைக்கொண்டு மறுக்கக்கூடாது. வெறும் இளமைத்துடுக்கால் மறுக்கக்கூடாது. அதே அளவு உள்ளுணர்வின் ஆழத்திற்கு சென்று ஒருவித காலமின்மையை தன்னுள் உணர்ந்த ஒரு ஞானியால் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள் என்றால் அவரை நம்பி நீங்கள் மரபை மறுக்கலாம். அந்த படகை நம்பி நீங்கள் கடலில் இறங்கலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய போலியான அறிவுஜீவித்தனத்தை, எளிய தர்க்கபுத்தியை வைத்துக்கொண்டு மரபை மறுப்பீர்கள் என்றால் நீங்கள் இன்னொரு திராவிடர் கழகக்காரனாகத்தான் மாறுவீர்கள். அது இறுதியில் கீழ்மையான எதிர்மறைத் தன்மைகளிடம்தான் சென்று முடியும். அவ்வாறு பலரையும் நான் பார்த்திருக்கிறேன். பரிதாபத்திற்குரிய எளிய மனிதர்கள் அவர்கள்.
நீங்கள் இணையத்தில் ஓஷோ என்று தேடினால் ஓஷோவை படித்தவர்களிலேயே அத்தகைய முட்டாள்களின் வரிசை வந்துகொண்டே இருக்கும். நான் ‘முட்டாள்களின் மடாதிபதி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ‘ஓஷோவை எவனொருவன் மடாதிபதி ஆக்குகிறானோ அவன் முட்டாளாகத்தான் இருப்பான். தன்னைத்தானே உடைத்துக் கொள்வதற்கான சுத்தியலாக அவரை பயன்படுத்துபவன் அவரை கடந்து செல்கிறான்’ என்பது அக்கட்டுரையின் சாரம். ஆனால் இங்கே ஓஷோ பற்றிப் பேசியவர்கள் பலர் புண்பட்டனர். தங்களை முட்டாள் என்று சொல்லிவிட்டார் ஜெயமோகன் என கொதித்து என்னை வசைபாடினர். ஓஷோ இதைப்போன்ற எத்தனையோ எதிர்ப்பொருள் சொற்றொடர்களைக் கையாண்டிருக்கிறார். அப்படியென்றால் ஓஷோவில் இவர்கள் எதைத்தான் படித்தனர்?
ஓர் ஓஷோயிஸ்ட் தன்னை இன்னொருவர் முட்டாள் என்று சொன்னால்கூட புண்படுவாரா என்ன? ஓஷோவே தன்னை அப்படிச் சொல்லிக்கொண்டவர். ஓஷோவை அப்படிச் சொல்லியிருந்தால் சிரித்துக்கொண்டிருப்பார் இல்லையா? தன் தரப்பை, தன் குருநாதரை, தன் நம்பிக்கையை ஒருவர் விமர்சித்தால் சீற்றம் கொள்பவர் யார்? அவர் வெறும் மதவாதி அல்லவா?. ஓஷோவை ஒரு மதநிறுவனத் தலைவராக காண்பவர்தான் ஓஷோ விமர்சிக்கப்பட்டால் கொதிப்பவர். விமர்சிப்பவரை வசைபாடுபவர் உண்மையில் ஓஷோவை அவமதிக்கிறார். ஓஷோ என்ன சொன்னாலும் பயனில்லை, மதவெறியே மக்களின் இயல்பு என்பதையே அவர் காட்டுகிறார்.பரிதாபம்தான்.
நான் பல ஓஷோயிஸ்டுகளை பார்த்திருக்கிறேன். பழைய மலையாளப் படத்தில் அடூர் பாசி ஒரு வசனம் பேசுவார். ‘யாரை பார்த்து அடக்கமில்லாதவன்னு சொன்னே, நான் யார் தெரியுமா ? ஊர்ல யார்ட்ட வேணாலும் கேட்டுப்பாரு. எண்ணப்பத்தி அடக்கமான ஆள்னுதான் சொல்வாங்க. இன்னைக்கு வரைக்கும் ஒருத்தனும் என் முன்னால் நின்று அடக்கமில்லாதவன்னு சொன்னதில்லை. அப்படி சொன்ன எவனையும் நான் விட்டதில்ல’. இந்த அளவுக்கு அடக்கத்துடனும், தன்னிலை அழிந்தவர்களாகவும் தான் ஓஷோயிஸ்டுகள் இருக்கிறார்கள். ஓஷோவின் ‘நிபந்தனையற்ற அன்பு’தான் பிரபஞ்ச உண்மை, அதை மறுத்தால் உன் தாயை வசைபாடுவேன் என்னும் நிலைபாடு கொண்டிருக்கிறார்கள் நம் ஓஷோயிஸ்டுகள் பலர்.
மரபு எனக்கு அளித்த உறைந்தநிலையை உடைப்பதற்கான மாபெரும் சுத்தியல் ஓஷோ. ஆனால் என்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் உடைத்துவிட்டு நான் மட்டும் எஞ்சி இருந்தேனென்றால் அதைப்போல முட்டாள்தனம் எதுவும் கிடையாது. நிராகரிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு வலுவான ஆசிரியர் இருக்கவேண்டும். இல்லையெனில் உங்களுக்குள் உங்களை அறியாமலேயே நம் மரபால் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரிய செல்வத்தை நீங்கள் இழக்கிறீர்கள். நம் முன்னோர் ஈட்டியது அது, அது காலத்தின் துருவும் களிம்பும் தூசியும் கலந்துதான் கிடைக்கிறது. அதை அப்படியே தூக்கி வீசிவிடமுடியாது.
முத்துச்சிப்பியை பற்றி ஒரு அழகான வரி உண்டு. ‘கோடி சிப்பிகளில் ஒன்றில்தான் முத்து இருக்கும். ஆனால் அத்தனை சிப்பிகளுக்கும் முத்தை உருவாக்கும் சாத்தியக்கூறு இருக்கும்’. ஒரு மனிதன் இந்தியாவில் பிறந்து தமிழ் மொழியை கற்று வளரும்போதே அடிப்படையான உருவகங்கள் அவனிடம் வந்துவிடுகின்றன. ஒரு சிற்பத்தை பார்க்கும்போது, அறிவார்ந்து அது என்னவென்று தெரியாதபோதும் கூட உணர்வுரீதியாக அவனால் அதை அடையமுடியும். அதுபோல சில சொற்கள் அவனுக்குள் அகத்திறப்புகளை அளிக்கமுடியும். அவன் எப்போது வேண்டுமென்றாலும் மெய்ஞானத்தின் பயணத்தை தன்னையறியாமலேயே தொடங்கிவிடக்கூடும். அப்படி சுய அனுபவத்தின் ஒரு துளியால் தீண்டப்பட்டு, ஒரு சொல்லால் திறக்கப்பட்டு பெரும் மாற்றங்களை அடைந்து தங்கள் அகப்பயணங்களை தொடங்கியவர்கள் பலரை எனக்கே தெரியும்.
ஜெயகாந்தன் ஓர் உரையில், தமிழ்மொழி இயல்பாகவே வேதாந்தம் நோக்கிச்செல்லும்தன்மை கொண்டது என்றார். ‘மனிதன் தோன்றினான், மறைந்தான்’ என்ற வரியை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால் அற்புதமான ஒரு வேதாந்த கருத்து அதில் உள்ளது. மனிதன் கண்முன்னால் தோன்றுகிறான், கண்முன்னால் மறைகிறான், அவ்வளவுதான். அவன் உருவாவதில்லை, அழிவதில்லை .இப்படி நூற்றுக்கணக்கான சொற்கள் வழியாக, உருவகங்கள் வழியாக நமக்கு வரக்கூடிய ஒரு மரபை, ஓஷோ போன்ற ஒரு சமகால ஞானி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொருவருக்குச் சொன்ன பதில்களைக் கொண்டு ஒரேயடியாக மறுப்போம் என்றால் நாம் இழப்பையே சந்திக்கிறோம்.
ஓஷோவின் ‘இன்று‘வாதத்தை இன்றைக்கு பயன்படுத்துவதின் சிக்கல்.
ஓஷோ பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ‘கடந்தகாலம்’ என்பது அவ்வளவு பிரம்மாண்டமான சுமையாக இருந்தது. ‘இன்று’ என்பது ஒரு இடுங்கிய பாதையாக இருந்தது. அந்த பாதையை வெட்டி பெரிதாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இன்றைக்குள்ள ‘இன்று’ அப்படியல்ல. ‘இன்று’ இல்லாமல் தேங்கியிருந்த அக்கால இளைஞர்களை நோக்கி நவீனத்தொழில்நுட்பம் சொல்லியது ‘உனக்கு இன்றுதானே வேண்டும், இந்தா வைத்துக்கொள்’ என்று. இன்றைக்குள்ள ‘இன்று’ என்பது பத்து திசைகளிலும் திறந்துகிடக்கும் பிரம்மாண்டம். இன்று தொழில்நுட்பம் நம்மிடம் சொல்கிறது. ‘உனக்கு நேற்று இல்லை. நாளை இல்லை. இன்று மட்டும்தான் உள்ளது. அதை நான் உருவாக்கி அளிக்கிறேன். நீ எனக்குள் இரு. என்னை மட்டும் சார்ந்திரு. என்னை மட்டும் அறிந்திரு’
இன்றைக்கு நீங்கள் இங்கே இருந்துகொண்டு உலகின் அத்தனை மனிதர்களிடமும் பேசமுடியும். நான் 1982இல் ஒரு திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படம் பார்ப்பதற்காக காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்யவேண்டி இருந்தது. பூனாவுக்கும் கல்கத்தாவுக்கும் செல்லவேண்டியிருந்தது. ஒரு நல்ல உரையை கேட்பதற்காக மும்பைக்கு டிக்கெட் எடுத்து சென்றிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு எல்லாமே விரல் தொடுகையில் உங்கள் முன்னால் உள்ளது. எல்லா இசையும், எல்லா சினிமாவும் உங்களுக்கு கிடைக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு சதுர கிலோமீட்டர் அகலத்திற்குப் பரப்புவதுபோல இன்றைய ‘இன்று’ உங்களை சிதறடித்து பரப்புகிறது.
இன்றைய சூழலில் ‘இன்றிலிருத்தல்’ என்றால் உங்களை நீங்களே நூறாக, ஆயிரமாக சிதறடித்து வீணாகிப்போவதில்தான் சென்று முடியும். நேற்றும் நாளையும் இல்லாமல் இருத்தல் என்றால் வரலாறும் பண்பாடும் தன்னடையாளமும் ஒன்றும் இல்லாத வெறும் நுகர்வுயிரி ஆக மாறுவதில்தான் சென்று முடியும். இன்ஸ்டாவிலும் ரீல்ஸிலும் வாழும் இளைய தலைமுறை இன்றில் மட்டும்தான் இருக்கிறது. அதற்கு நேற்று இல்லை, நாளை இல்லை. ஓஷோ சொன்ன அந்த ‘இன்று’ அல்ல இன்றைய ‘இன்று’. அது பிரபஞ்சம் அளிக்கும் நிகழ்காலம். தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கக்கூடிய இன்றைய ‘இன்று’ முற்றிலும் வேறுபட்டது. இது உலகளாவிய பெருவணிகம் அளிக்கும் நிகழ்காலம்.
இன்று நீங்கள் உங்களது விருப்பம், உங்கள் பாதை போன்றவைகளை துல்லியமாக வரையறுத்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் இன்று உங்களை வரையறுத்துக்கொள்ளவில்லை என்றால் காற்றில் திறந்து வைக்கப்பட்ட கற்பூரம் போல இல்லாமலாகிப் போவீர்கள். நீங்கள் ‘நோ’ சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பம் உங்கள் முன் கொண்டுவந்து குவிப்பவற்றில் எவையெல்லாம் தேவையில்லை என நீங்கள் உறுதியுடன் முடிவெடுத்தாகவேண்டும். இல்லையேல் உங்களுக்கு உரியவற்றை நீங்கள் அடையமுடியாது. தொழில்நுட்பம் தான் விரும்பியதை உங்களுக்குள் திணித்து உங்களை அதன் அடிமையாக ஆக்கிவிடும். இன்று உங்களைச் சூழ்ந்திருப்பவர்களைப் பாருங்கள், வெறும் தொழில்நுட்ப அடிமைகள் அவர்கள். நவீனத் தொழில்நுட்பம் என்னும் மாபெரும் இயந்திரத்தின் சிறிய உறுப்புகள், கூடவே அதன் இரைகள்.
இன்றைய காலத்தில் ஓஷோவின் வரிகள் தவறாக அர்த்தப்படுத்தப்படக்கூடும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஓஷோவின் வரிகளில் உள்ள ‘என்றுமுள்ள’ அம்சத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே நேரடியாக பொருள்கொள்ளக் கூடாது. இன்று ஒருவர் ‘ஹெடோனிஸம்’ என்று சொல்லப்படுவதை அப்படியே பொருள்கொண்டால் தொழில்நுட்பம் அளிக்கும் செயற்கையான புலன் இன்பங்களில் விழுந்து, அதற்கு அடிமையாக ஆவார். நிகாஸ் கஸண்ட்ஸகீஸ் சொன்னதோ, ஓஷோ சொன்னதோ அது அல்ல.
இன்றைக்கு உள்ள பிரச்சனை, நாம் நம்மை புதிதாக வரையறுத்துக் கொள்வதல்ல; மறுவரையறை செய்துகொள்வதே. நீங்கள் ஒரு ரிலையன்ஸ் வாடிக்கையாளர், ஒரு கூகிள் பயனர், ஒரு அமேசான் உறுப்பினர் என்பது போன்ற ஆயிரக்கணக்கான அடையாளங்கள் உங்களுக்கு உள்ளன. அதற்கு அப்பால் ஒரு அடையாளத்தை நீங்கள் வரையறுக்க முடியாது. அப்படி நீங்கள் வரையறுத்த உடனேயே அது கூகுளுக்கு தெரிந்துவிடும். உடனே அந்த அடையாளத்துக்கான விளம்பரத்தை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடும். ஒரு கதைக்காக இந்திய மதுபானங்களில் விலையுயர்ந்தது எது என்று கூகுளில் தேடினேன். கடந்த ஐந்து நாட்களாக எனது டைம்லைனில் மதுபான விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ஐயா, நான் குடிப்பது கிடையாது என்று கூகுளுக்கு எப்படி சொல்லமுடியும் ? இவ்வளவு பிரம்மாண்டமான எந்திரம் என் முன்னால் நின்றுகொண்டு என்னை வரையறுக்கும்போது அதற்கு ‘நோ’ சொல்வதுதான் இன்று எனது கடமையாக உள்ளது.
இது ஓஷோவுடைய காலமல்ல, வேறொரு காலம். இந்தக் காலத்திற்கு உரிய ஆன்மிகம் என்பது வேறு. இந்த காலத்தில் நீங்கள் எதை வரையறுத்துக் கொண்டாலும், அங்கு நீங்க்ள் செல்லும்போது ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்குச் சென்றபோது அங்கே ஒரு நாயர் டீக்கடை இருந்தது என்று சொல்வது போன்று அங்கு ஏற்கெனவே கூகுள் உட்கார்ந்திருக்கும். நீங்கள், ‘நான் இதிலெல்லாம் இல்லைங்க. நான் மாடர்ன் டெக்னாலஜிக்கு எதிரானவன். என்னை நான் வரையறுத்துக்கொண்டு ஒரு குடிலில் தன்னந்தனியாக வாழ விரும்புகிறேன்’ என்று சொன்னாலும், உடனடியாக ஒரு கூகுள் விளம்பரம் வரும், ‘தன்னந்தனி குடில்கள், இமயமலை சாரலில், வாடகை ரூ.1000’ என்று. ஆகையால் இன்றைக்கு உங்களுடைய ஆன்மீகத்தை கண்டடைவது ஓஷோவிலிருந்து செல்லக்கூடிய பயணம் அல்ல.ஓஷோ அதற்கு உதவுவார், ஆனால் ஓஷோ மட்டும் போதாது.
ஓஷோவின் இலக்கு மறுப்புவாதம் சரியானதல்ல
ஓஷோ அகப்பயணத்தின் வழியைப் பற்றிப் பேசுபவர். இலக்கு / நோக்கம் என்பது இல்லை என்று சொல்கிறார். நானும் அவ்வாறு கருதிய காலமுண்டு. ஆனால் இன்று அப்படியல்ல. செல்லும் வழி எந்த அளவுக்கு மகிழ்ச்சியானது, நிறைவூட்டுவது என்பது வேறு. ஆனால் மனிதப்பிறவி என்பதற்கு இலக்கு என்று ஒன்று உண்டு. இந்த அம்பு சென்று தைக்கவேண்டிய ஒரு புள்ளி உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.
எந்தவொரு பயிற்சியிலும் அது எதன்பொருட்டு என்ற கேள்வி வருகிறது. பயிற்சியின் பொருட்டான பயிற்சி, பயிற்சியின் மகிழ்ச்சிக்கான பயிற்சி என்று ஒன்று இருக்கமுடியாது. முக்தி, மோக்ஷம், வீடுபேறு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அவையெல்லாம் உங்களுடைய வரையறை. ஆனால் அதற்கப்பால் ஒன்றுண்டு. இலக்கை நாம் அறியாமலிருக்கலாம். உணர்ந்தாலும் முழுக்க புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நாம் மிகச்சிறியவர்கள், நம் வாழ்க்கை துளியினும் துளி. ஆகவே நம் அறிதலும் சிறிது. நாம் அறியமுடியாதென்பதனால் அது இல்லை என்பது சரி அல்ல. நாம் அறியாததனால் அது அறியத்தேவையற்றது என்பதும் சரியல்ல.
இயற்கையில் ஒரு சாதாரண விஷயத்தை பார்க்கும்போதும் நாம் சிலவற்றை உணரமுடியும். நான் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தபோது பிரம்மாண்டமான சிதல்புற்றுகளை பார்க்கநேர்ந்தது. என் வாழ்க்கையில் அது ஒரு ஞானதரிசனம். ஆகவேதான் அதை மீண்டும் மீண்டும் உரைகளில் சொல்கிறேன். அந்த புற்றுகள் சாலமோன் காலத்தில் இருந்து இருப்பவை. அவை மண்ணுக்கடியில் மூன்று நான்கு பனைமர உயரத்திற்கும், மண்ணுக்கு மேலே ஒரு பனைமர உயரத்திற்கும் உள்ளவை. மேலே இருப்பவை சாளரங்கள் மட்டும்தான். அவை உள்ளே காற்றும் நீரும் செல்வதற்கான வாயில்கள். நியூயார்க் நகரத்தை மனிதர்களின் அளவோடு ஒப்பிட்டால் அது எவ்வளவு பெரிதோ, அதேபோல அந்தப் புற்றுகளை அந்த சிதல்களோடு ஒப்பிட்டால் அந்த புற்றுகள் நியூயார்க்கைவிட ஆயிரம் மடங்கு பெரியவை. அதன் பொறியியலை இன்றுவரை மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்தப்பகுதியில் அந்த புற்றுகளை ஆராய்வதற்கான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அங்கு ஒரு வெள்ளையர் எங்களிடம் அதுபற்றி விளக்கினார்.உள்ளே காற்று செல்வதற்கான வழிகள், வெளியேறுவதற்கான வழிகள், காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகள், போக்குவரத்து நெரிசலற்ற சாலைகள், தனித்தனியான அறைகள், உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான வழிகள் அப்புற்றுக்குள் இருப்பதாக தெரிவித்தார். அதாவது அது மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மாபெரும் நகரம். அதை ஏன் ஆராய்கிறார்கள் என்றால் என்றாவது ஒருநாள் நாம் விண்வெளியில் மிதக்கும் நகரங்களை அமைப்போமென்றால் அதை இந்த சிதல்புற்று வடிவில்தான் அமைக்கவேண்டியிருக்கும் என்பதால்தான்.
ஆனால் அதில் இருக்கும் ஒரு கரையானுடைய வாழ்க்கை என்பது சில வாரங்கள்தான். அதனுடைய உருவ அளவே மிகச்சிறியதுதான். அப்படியெனில் அந்த பிரம்மாண்டமான புற்றின் பொறியியல் எதில் உள்ளது ? அது அந்த ஒரு கரையானிடம் உள்ளதா ? சொல்லமுடியாது. அதன் மூளைக்குள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதன் மூளை மிகச்சிறியது. அந்த கூட்டத்தில் ஒரு சிதல் பிறந்து வெளியே வந்து சில மண்துகள்களை எடுத்து உள்ளே சென்று வைக்கிறது. சில உணவுகளை கொண்டுசெல்கிறது. அதன்பிறகு இறந்துவிடுகிறது. ஆனால் அது அந்த பிரம்மாண்டமான புற்றை கட்டிக்கொண்டிருப்பது அதற்கு தெரியாது.
அதுபோல நாம் நமது வாழ்வில் எதை கட்டிக்கொண்டிருக்கிறோம் ? நோக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது. நீங்கள் எந்த அளவுக்கு உயிரியல் செய்திகளைப் பார்க்கிறீர்களோ அந்த அளவுக்கு உயிர்களுக்கான நோக்கம் தெளிந்து வருவதைப் பார்க்கலாம். இங்குள்ள வாழ்க்கை பொருளற்றது அல்ல. எப்படியாவது மகிழ்ச்சியாக இருந்து கடந்து சென்றுவிடவேண்டிய ஒன்றல்ல நம் வாழ்க்கை. நாம் எய்த வேண்டிய சில உண்டு. நாம் செய்தேயாகவேண்டிய சில உண்டு. அது உங்களுக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அது உள்ளுணர்வாக தெரியும். அந்த உள்ளுணர்வுக்கு மேல் மற்றவைகளை ஏற்றிவைத்து மறைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் சொந்த மாயை. ஆனால் உள்ளுணர்வால் ஒருவனுக்கு தெரியும், அவன் வந்தது எதற்காக, செய்யவேண்டியது என்ன என்று. அதை செய்வதற்குத்தான் வாழ்க்கை. வாழ்க்கையின் நோக்கம் என்பது அதுதான். அது பிரபஞ்சம், இயற்கை நமக்கு இடுவது. நாம் பிறக்கையிலேயே உடன் வருவது.
இதை கண்டடைந்த பிறகுதான் நான் ஓஷோவை கடந்தகால ஆசிரியன் என்ற இடத்திற்கு கொண்டுசென்றேன். என்னுடைய பணி என்னவோ அதை ஆற்றிமுடித்து இங்கிருந்து செல்வேன். நிகழ் கணத்தில் இருத்தல், ஹெடோனிஸம் என்றெல்லாம் எளிய உலகியல் இன்பங்களில் வாழ்வது வீண் என உணர்கிறேன். அவை இன்பங்கள் அல்ல. அவை நிறைவு அளிப்பதில்லை. செயல்நிறைவே எனக்கான முழுமையான இருப்பை அளிக்கிறது. செயல்வழியாகவே மெய்யான இன்பம் நிகழ்கிறது. இலக்கை எய்துதல் என ஒன்று உள்ளது. அது எனக்கான செயலை நான் முழுமைப்படுத்திக்கொள்வதே. ஆகவேதான் இத்தனை ஆயிராம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
ஆனால் இந்த பிரம்மாண்டமான மானுட சிந்தனை வெளியில் எனது எழுத்துக்கள் கூட குமிழியே. கங்கையில் ஒரு குமிழியைப்போல. அருகில் இருக்கும் இன்னொரு குமிழிதான் டால்ஸ்டாய். மற்றொரு குமிழி ஐன்ஸ்ட்டின். ஆனால் இந்த ஒட்டுமொத்தம் என்பது மிக பிரம்மாண்டமானது. அதை அறிவியக்கம் என்கிறேன். நாம் ஒட்டுமொத்தமாக மானுடம், அந்த அறிவியக்கத்தின் நோக்கம் என்ன என்று நம்மால் சொல்லிவிட முடியாது. மானுடம் ஒட்டுமொத்தமாக சிந்தனைசெய்தாலும் அறிந்துவிட முடியாது. நாம் இதை ஆற்றிவிட்டு செல்வோம். நம்மால் இயல்வது இது என்பதனால் இதைச் செய்கிறோம். என்னால் இயல்வது இது என்பதனால், இதைச் செய்வதே என் மகிழ்வும் நிறைவும் என்பதனால் நான் இதைச் செய்கிறேன். இதுவே விடுதலை. சும்மா இருப்பது அல்ல. நேற்றும் நாளையும் இன்றி இருப்பது அல்ல. பொறுப்பேற்றுக்கொள்ளாமல் இருப்பது அல்ல.
இவ்வாறு வாழ்வின் நோக்கம் பற்றிய நமது தன்னுணர்வு அளிக்கக்கூடிய நிறைவை, அதை எய்தபின்பு அடையக்கூடிய விடுதலையை நீங்கள் ஓஷோவில் தேடமுடியாது. அதுவே ஓஷோவின் எல்லை.
நன்றி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
