அமெரிக்காவில் கம்பராமாயண இசைநிகழ்வு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

நலம்.   நான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஆரம்பித்த எமெர்சன் முகாமில் கம்பராமாயணம் அமர்வில், நாங்கள் கம்பனின் பாடல்களை உணர்வே இல்லாமல் ஒரு  நவீன உரையைப் போல வாசித்து உரையாற்றினோம். ஒரு சின்ன புன்முறுவலுடன், கம்பனை எப்படி வாசிக்கவேண்டும் என்று ஒரு வகுப்பு எடுத்தீர்கள். அடுத்து அடுத்து நடந்த முகாம்களில், நான்கு ஐந்து நண்பர்கள்,  கம்பராமாயணம் அமர்வின் பொழுது , ராலே ராஜனிடம் பயிற்சி பெற்று கற்றுக்கொண்ட மெட்டுடன் அமர்வுக்கான பாடல்களைப் பாடினார்கள். முகாம் முடிந்தும், அந்த அமர்வில் கேட்ட பாடல்கள் காதில் ஒலித்த வண்ணம் இருக்கும். அப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து காணொளி தயாரித்து யூட்யூபில் வெளியிட்டால் உலகளவிய இலக்கிய ரசிகர்கள் கேட்பார்கள் என, கடலோ மழையோ பாடலை ராலே ராஜன் இசையமைத்து ப்ரியா கிருஷ் பாட வித்வான் சிக்கில் குருச்சரண் , நாஞ்சில் நாடன் மற்றும் தங்கள் முன்னிலையில் ஜனவரியில் வெளியிட்டோம். எப்பொழுதும் முன்னகரும் சிந்தனையில் இருக்கும் நண்பர்கள், கம்பனின் பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் முன்னிலையில் பாடினால் என்ன என்று விவாதிக்க, கடலோ மழையோ என நிகழ்விற்குப் பெயரிட்டு, ஆகஸ்ட் 16, மாலை 4 மணிக்கு ப்ரிஸ்கோ (டாலஸ்) நகரில் கம்பராமாயண இசைமழை பொழியவிருக்கிறோம்.

ஒரு “அலை பாயுதே கண்ணா”, பாடலைப் போலவோ, அல்லது “குறை ஒன்றும் இல்லை”  பாடலைப் போலவோ, யாவரும் ரசிக்கவேண்டும் என்றால் தாளம் சேர்ந்த இசை வேண்டும் என்று திட்டமிட்டு, இசையமைப்பாளர் ராலே ராஜன், பத்து பதினைந்து பாடல்களை தேர்வு செய்து,  பாடகர் ப்ரியா கிருஷை , கர்நாடக இசையின் ராகத்தில் , தாளத்துடன் பாடிப் பயிற்சி பெறச் செய்துள்ளார். அவருடன் உமா மகேஷ் (வயலின்) ராஜு பாலன் (மிருதங்கம்) , ஸ்கந்த நாராயணன் (கஞ்சிரா), சாய் கணேஷ் (பியானோ) இணைய இந்தக் கச்சேரி ஆலாபணை, கற்பனை ஸ்வரம், தனி ஆவர்த்தனம் என அனைத்துக் கர்நாடக சங்கீத  விஷயங்களும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமையான கச்சேரியாக இது அமையவிருக்கிறது. பழனி ஜோதி, ஒவ்வொரு பாடலையும் ப்ரியா கிருஷ் பாடுவதற்கு முன், அதன் கவிதை நயத்தையும், சிறப்பையும் விளக்கவிருக்கிறார்.   

வெண்முரசு ஆவணப்படத்திற்கு இசை அமைத்த,  Four Seasons படத்தின் மூலமாக திரை உலகிலும் அடியெடுத்து வைத்த ராலே ராஜனுக்கும்,  விஷ்ணுபுரம் நிகழ்வுகளை பாடித் துவக்கி வைக்கும் , தனது மகள் ஆராதிரிகாவுடன் “பாலும் தெளிதேனும்” பாடியும் பொதுவெளியில் பிரபலமாக உள்ள ப்ரியா கிருஷுக்கும்  அதிக அறிமுகம் தேவையில்லை. அவர்களுடன் இக்கச்சேரியில் இணைந்து வாசிக்கவிருக்கும் டாலஸ், ப்ரிஸ்கோ, ப்ளேனோ, இர்வின் நகரங்களில் பிரபலாகவிருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை தருகிறேன். 

குரு பால பாலகிருஷ்ணா பிள்ளையிடம்,  தனது ஒன்பதாம் வயதிலேயே, வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்ட உமாமகேஷ்,  ஶ்ரீ நெடுமன்காடு சிவானந்தம், பேராசிரியர் ஆர். தியாகராஜன் வழிநடத்தலில், மேலும் தனது வயலின் வாசிப்பை மேன்படுத்திக்கொண்டார்.    இந்தியாவிலிருந்து வந்து இசைக் கச்சேரி நடத்திய  சீர்காழி சிதம்பரம், Dr. பேபி ஶ்ரீராம், விவேக் மூழிகுளம் ஆகியோருக்கு வயலின் வாசித்துள்ளார். 

மிருதங்க வித்வான் ராஜுபாலன், துபாயை பூர்விகமாகக் கொண்டவர். தனது அன்னை விதூஷி சரோஜா பாலனிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சி பெற்று அவரது இசைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். வித்வான் தளவூர் என்.எஸ். ராஜீவ் அவர்களிடம் பத்து வருட பயிற்சி பெற்றுள்ளார். இசை வல்லுனர்கள் தஞ்சாவூர் சங்கீத பாலசுப்ரமணியன், வயலின் மதுரை அனந்தகிருஷ்ணன், மண்டலின் சூர்யா மனோகர் ராவ்  ஆகியோருடன் இணைந்து கச்சேரியில் வாசித்த அனுபவம் ராஜு பாலனுக்கு உண்டு. 

கர்நாடக சங்கீதத்தில் இருபத்து நான்கு வருடம் தொடர் பயிற்சியில் இருக்கிறேன் என்று சொல்லும் Dr சாய் சங்கர் கணேஷ் , சம்பை வைத்யநாத பாகவதர் குருகுல வழி வந்த திருச்சி எஸ். கணேசனிடம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியிருக்கும் இவர் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் -4-ல் கால் இறுதி வரை தேர்வாகியுள்ளார். இசையை பிரதானமாகக் கொண்டு 2014-ல் வெளிவந்த வானவில் வாழ்க்கை படத்தில் முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.எஸ். தமண் அவர்கள் அமெரிக்கப் பயணத்தில் நடத்தும் கச்சேரியில் பியானோ வாசித்த அனுபவமும் உண்டு.

இவர்களுடன் ஆஸ்டினிலிருந்து நண்பர் ஸ்கந்த நாராயணன் இணைந்து கஞ்சிரா வாசிக்க இருக்கிறார். ஸ்கந்தா, பூன் எமெர்சன் முகாமில் நண்பர்கள் பாடும்பொழுது மிருதங்கம், கஞ்சிரா வாசித்து அதை பேரனுபவமாக மாற்றுவார். ஆஸ்டினில்  நடக்கும் வார இறுதி கச்சேரிகளில் ஸ்கந்தா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாசிப்பார் என்பதை கச்சேரி செல்லும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அமெரிக்காவில் முதன் முதலாக நடக்கவிருக்கும் இந்தக் கம்பராமாயணக் கச்சேரியை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன்னின்று நடத்துகிறது. நண்பர்கள், அவர்களை காண அமெரிக்கா வந்திருக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு  அன்புடன் அழைக்கிறோம்.

 நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ள,  இங்கே கிளிக் செய்யவும். 

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

contact@vishnupuramusa.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2025 05:26
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.