ஓஷோ: மரபும் மீறலும்-15

ஓஷோவின் தியான முறை

தமிழ் புனைவிலக்கியத்திலும் கவிதையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர் ந.பிச்சமூர்த்தி. அவர் ‘ஆத்தூரான் மூட்டை’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அது அக்காலத்தில் கும்பகோணத்தில் உண்மையில் இருந்த ஆத்தூரான் என்பவரை பற்றியது. அவரது பழக்கம் என்னவென்றால் சாலையில் செல்லும்போது கையில் சிக்கக்கூடிய காகிதங்கள், அவருக்கு பிடித்த மற்ற பொருள்களையெல்லாம் பொறுக்கி தனது மூட்டைக்குள் போட்டுக்கொள்வார். நாளடைவில் மூட்டை பெருத்துவந்தது. ஒரு கட்டத்தில் அவரால் அந்த மூட்டையை சுமக்க முடியவில்லை. அந்த மூட்டையை கீழிறக்கி வைக்கவும் முடியாது, அதில் மேன்மேலும் பொருள்கள் சேர்வதை தடுக்கவும் முடியாது. பின்பு மூட்டையை அசைக்கமுடியாமல் தரையில் இழுத்து செல்கிறார். அதன்பிறகு இழுக்கவும் முடியாமல் அந்த மூட்டையை பிடித்து அதன் அருகிலேயே படுத்துக்கொண்டு இறந்துபோகிறார்.

இதன் பொருள் என்னவென்று உங்களுக்கு உடனே தெரியும். ஒவ்வொருவரும் ஒரு ஆத்தூரான் மூட்டையுடன் இருக்கிறோம். அந்த மூட்டையை நம்மால் விடமுடியாது. அதை எப்படி கீழே வைப்பது என்பது நமக்கு தெரியாது. அப்போது நம்மிடம் வந்து ஒருவர் சொல்கிறார், ‘அதற்குள் இருப்பது வெறும் குப்பைதான். அது உனது மனச்சிக்கல். அந்த மூட்டையை மட்டும் நீ விட்டுவிட்டால் உன்னால் எழுந்து சென்றுவிட முடியும். ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழமுடியும்’. ஆனால் ஆத்தூரானை பொறுத்தவரை அது அவர் வாழ்நாள் முழுக்க சேகரித்த செல்வம். அதில் அவருடைய உழைப்பு உள்ளது. அவரிடம் இப்படி சொன்னால் அவர் என்ன சொல்லியிருப்பார் ? ‘என்ன உளறிக்கிட்டு இருக்கே? இதை நான் சேர்த்துவைக்க நாற்பது வருஷமாச்சு தெரியுமா ?’ என்று அதட்டியிருப்பார்.

புகழ்பெற்ற ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி மாட்டின் வளைந்த கொம்புகளுக்கு இடையே கழுத்தை விட்டுக்கொண்டார். மாடு ஓடத்தொடங்கியது. ஊர்க்காரர்களெல்லாம் சேர்ந்து வளைத்துப்பிடித்து அவரை மீட்டனர். அப்போது ஒருவர் கோபமாக ‘என்ன நம்பூதிரி, கொஞ்சம்கூட யோசிக்காம இப்படி பண்ணிட்டீங்களே’  என்று கேட்டார். அதற்கு நம்பூதிரி, ‘அத மட்டும் சொல்லாதே. முப்பத்தாறு வருஷமா நான் இதைத்தவிர வேறு எதுபற்றியும் யோசித்தது கிடையாது’ என்றார். இதை எப்படி செய்வது என்பதைத்தான் இத்தனைக்காலம் யோசித்திருக்கிறார். இப்போது செய்துபார்த்துவிட்டார்.

நம் வாழ்க்கை என்பது இப்படியான அபத்தங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கிறது. நாம் அசட்டுத்தனங்களையே யோசித்து, கனவுகண்டு, அர்த்தமில்லாதவ்ற்றைச் சேர்த்துக்கொண்டு, இங்கே வாழ்கிறோம். அதை ஒருவகையில் இயல்புநிலை நோக்கி திருப்பக்கூடியவையாக ஓஷோவின் தியான முறைகள் உள்ளன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் அந்த தியான முறைக்கு சென்றீர்கள் என்றால் அது இயல்பு கடந்த ஒன்று என்றும் நீங்கள் இயல்பாக இருப்பதாகவும் தோன்றும். நீங்கள் சுயபுத்தியோடும் தர்க்கபுத்தியோடும் இருப்பதாகவும், அது கிறுக்குத்தனமாகவும் தோன்றும். ஆனால் உண்மையில் அந்த தியானத்தின் நோக்கம் என்னவென்றால் ஒரு கிறுக்கனுக்கு இயல்நிலையை உருவாக்குவதற்கான முயற்சியே.

டைனமிக் தியானம்

ஓஷோ தனது தியான முறைக்கு Dynamic Meditation என்று பெயரிட்டார். பின்னர் அதற்கு வேறு பெயர்களும் வந்தன. ஆனால் அந்த சொல் அவரால் புகழ்பெற்றது என்பதால் நாம் அதையே பயன்படுத்துகிறோம். அவருடைய பரிணாமத்தின் நான்கு கட்டங்களில் மூன்றாவது நிலையில் அவர் இந்த தியான முறையை ஏற்படுத்த முக்கிய காரணம், அறிவார்ந்து நிறைய பேசிவிட்டோம், அவையனைத்தும் இன்னொரு வகை அறிவாகத்தான் ஆகிறது, எனவே அதை சமநிலைப்படுத்த தராசின் மறுபக்கத்தில் ஒரு அறிவின்மையை  அல்லது  எதிர்அறிவை வைக்கலாம் என்ற அவருடைய நோக்கமே.

ஆனால் இந்தியாவின் மரபார்ந்த தியான முறைகளில் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓஷோவின் தியான முறைகள் நகைப்புக்குரியவையாகவே இருந்தன. தியான முறைகளில் இருக்கும் மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், சிலகாலம் நீங்கள் தியான முறையை பயின்றுவிட்டீர்கள் என்றால் உங்களை நீங்களே ஒரு ஆன்மீக குருவாக கற்பனை செய்துகொள்வீர்கள் என்பதுதான். எனது அறிதலில் மிக அதிகமான ஆன்மீக குருக்கள் நடமாடும் இடம் கோவை. நேற்று ஒருநாள் மட்டும், எப்படி நான் மெய்ஞானத்தை அடைவது என்று ஆலோசனை சொல்லி பதினைந்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. இந்த ‘ரெடிமேட் ஞானிகள்’ ஓஷோவை சகஞானியாக எண்ணிவிடுவார்கள். எனவே அத்தனைபேரும் ஓஷோவைப்பற்றி பரிகாசமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். கபீருடைய பாடல் என்று நினைக்கிறேன். ‘கங்கையில் குளித்தால் மோக்ஷத்திற்கு செல்லலாம் என்றால் கங்கையில் உள்ள மீன்கள் எல்லாம் மோக்ஷத்திற்கு செல்லும்தானே’ என்றொரு வரி உண்டு. அதை கொஞ்சம் மாற்றி வேறுவிதமாக சொல்வார்கள். ‘சக்கரமாக சுழன்றால் மெய்ஞானம் வரும் என்றால் அத்தனை வீட்டுக்கும் ஒரு ரங்கராட்டினம் வாங்கிக்கொடுக்கலாமே’ என்று. கையை விரித்துச் சுழன்றுவரும் ஓஷோவின் தியான முறை பற்றிய கேலி இது.

எது தியானம், எது தியானமல்ல என்று ஒரு சிறிய வரையறை கொடுக்கவேண்டியுள்ளது. தியானம் என்ற சொல் ‘ஆழ்ந்து நினைப்பது’ என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களில் ‘அவன் என்னை நோக்கி கத்தியுடன் வந்தான். நான் என்ன செய்வது என்று தியானித்துவிட்டு…’ என்று வரும். அங்கே தியானித்துவிட்டு என்றால் ஆழமாக யோசித்துவிட்டு என்று பொருள்.ஒரு வசதிக்காக இவ்வாறு பிரித்துக்கொள்ளலாம். யோகம் என்ற சொல்லின் ஒரு மரூஉதான் தியானம். ஆழ்நிலையை அடைவதற்கான அக, புற பயிற்சிகளை மொத்தமாக யோகம் என்றும், அகப்பயிற்சியை மட்டும் தியானம் என்றும் சொல்லலாம். தியானம் என்ற சொல்லுக்கு சமானமாக தமிழில் ஊழ்கம் என்று சொல்லப்படுகிறது. அது ஒரு சமண வார்த்தை. பௌத்தர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். திருமுறைகளில் அந்த வார்த்தை உள்ளது என்று ஒருவர் சொன்னார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை.

ஆழ், ஊழ் இரண்டும் ஒன்றுதான். ஆழ்ந்து செல்லுதல் என்பதில் இருந்து ஊழ்கம் என்ற சொல் வந்திருக்கலாம். ‘ஊழ்’ என்ற சொல்லேகூட ஆழம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இச்சொல் நெடுங்காலமாக இங்கே இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Contemplation என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் அதன் பொருள் ‘கூர்ந்து கவனித்தல்’ என்பது மட்டுமே. Meditation என்பதும் ஊழ்கத்திற்கு இணையானது அல்ல. ஒன்றில் குவிந்திருத்தல் என்றே அதற்குப் பொருள். தியானம் / யோகம் என்பதுதான் சரியான வார்த்தை. யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து யோகம் என்ற சொல் வந்தது என்பார்கள். இணைத்தல் / ஒருங்கிணைதல் என்பது அதன் பொருள்.

இந்தியாவில் நெடுங்காலமாக இந்த தியான முறைகள் இருந்திருக்கின்றன. நமக்கு இன்று கிடைத்திருக்கக்கூடிய மிகத்தொன்மையான அடையாளங்களில் ஒன்று, சிந்து சமவெளியில் கிடைத்த, யோகத்தில் அமர்ந்திருக்கும் பசுபதி உருவம்தான். சிவன் யோகேஸ்வரன் என்று சொல்லப்படுகிறான். கிருஷ்ணனும் யோகத்தில் அமர்ந்தவனே. இந்து மரபின் எல்லா தெய்வங்களும் யோகத்திலமர்ந்த தோற்றம் கொண்டவையே. சமணத் தீர்த்தங்காரர்கள் அனைவருமே யோகத்தில் அமர்ந்தவர்கள்தான். பௌத்தம் யோகத்தை வளர்த்தெடுத்தது, யோகாசார மரபு என ஒன்று அதற்குள் உண்டு.

எவை தியானமல்ல ?

எது தியானம், எது தியானமல்ல என்கிற வேறுபாடு இங்கு மிகவும் மழுங்கிவிட்டதால் அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஜபம் என்பது தியானமல்ல

மந்திர ஜபம், நாம ஜபம் போன்றவை தியானமல்ல. வைதிக மரபின் அடையாளமாக இருப்பது நாம ஜபம்தான். பல்வேறு எண்ணிக்கைகளில் சொல்லப்படவேண்டிய நாம ஜபங்கள் உள்ளன. கூட்டாக சொல்வதும், தனியாக சொல்வதும் உள்ளன. அவர்கள் செய்தே ஆகவேண்டிய ஒன்றாக வேதம் அதை சொல்கிறது. ஜபம் என்பதை ஒரு சொல்லை சொல்லிச்சொல்லி கடத்தல் எனலாம். சொல்லச்சொல்ல சொல் பெருகி, தன்னைத்தானே இல்லாமலாக்கி வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லும்.

மகாபாரதத்தில் தியானம் என்ற சொல் வருகிறது. ஆனால் மகாபாரத காலம் வரை யோகமுறை என்பது நாமஜபத்தோடு தொடர்புடைய விஷயமாகத்தான் இருந்துள்ளது. மந்திர உச்சாடனம், மந்திரத்தை உருவாக்கிக்கொள்ளுதல், தெய்வம் வந்து மந்திரத்தை அளித்து அதை பல்லாயிரம் முறை சொல்வது போன்றவை உள்ளன. தபஸ் என்பதே மந்திரத்தோடு தொடர்புடையதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாரதத்தை ஆராயக்கூடிய நவீன அறிஞர்கள் அதற்குள் யோகத்தை பற்றி நிறைய குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அது வைதிக மரபோடு தொடர்புடையது அல்ல, அவற்றுக்கு வெளியே இருக்கும் மரபுகளோடு தொடர்புடையதாக உள்ளதென்றும் சொல்கிறார்கள். மகாபாரதத்திற்கு பிறகுதான் கீதை உருவாகி வந்தது என்பது என் எண்ணம். அதில் கிருஷ்ணன் தன்னை ஒரு யோகி என்று சொல்லிக்கொள்கிறான். அர்ஜுனன் ஒரு யோகியாகத்தான் மகாபாரதத்தில் வருகிறான். கீதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு யோகம் என்றே அறியப்படுகிறது. இந்த யோகம் என்ற சொல் மகாபாரதத்திலும் கீதையிலும் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

பிரார்த்தனை என்பது தியானமல்ல

வேண்டுதல் என்பது கேட்டுப்பெறுவது. அது தவறு என்று நான் சொல்லவில்லை. நாம் உலகியலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருக்கும் முடிவில்லாத வெளியுடன், நமக்கு அப்பால் இருக்கும் விசைகளுடன், தெய்வங்களுடன் நாம் நமது எளிய ஆசைகளை சொல்லி வேண்டுவது என்பது தவறல்ல. அது தவறு என்று நானும் சொன்ன காலமுண்டு. ஆனால் உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தபின்பு அதை சொல்லமாட்டீர்கள். ஏதோவொரு தருணத்தில் வேண்டிக்கொண்டிருப்பீர்கள். வேண்டுதல் என்பது எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் அது யோகமோ தியானமோ அல்ல.

அதாவது, தியானமானது வைதிக மரபிலும் இல்லை, பக்தியிலும் இல்லை. மிக சமீப காலம் வரைக்கும் ஆலய வழிபாட்டின் ஒரு பகுதியாக யோகமோ தியானமோ இருந்தது கிடையாது. ஆலயத்தில் நாமஜபங்கள், வேண்டுதல்கள், வேள்விகள் உண்டு. ஆனால் யோகமும் தியானமும் கிடையாது. அது துறவிகளுக்குரியதாக, வேறுவகை சாதகர்களுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தமிழகத்தில் யோகத்திற்கு இத்தகைய நீண்ட மரபு இருந்திருந்தும் கூட பதஞ்சலி யோகத்திற்கு மொழிபெயர்ப்போ உரையோ கிடையாது. ஏனெனில் அது குரு சிஷ்ய தொடர்ச்சி வழியாக சொல்லிக்கொடுக்கக்கூடியதாக உள்ளது. அதற்கு நூல் அவசியமானதாக இருக்கவில்லை.

இந்திய மரபிலுள்ள யோகமுறைகள் பல. அவற்றைச் சுருக்கமாக அறிந்துகொண்டால் ஓஷோவின் தியானம் எந்தெந்த மரபுகளில் இருந்து உருவானது என்று அறியமுடியும்.

பதஞ்சலி யோகம்

இந்தியாவின் மைய யோகமரபு என்பது பதஞ்சலி யோகம்தான். அது ஆறு தரிசனங்களில் ஒன்றாக, சாங்கியத்தின் துணை தரிசனமாக உள்ளது. பதஞ்சலி யோகசூத்திரங்கள் நூல் ஒரு வழிநூலே. அதற்கு முன்னால் பல நூல்கள் இருந்திருக்கின்றன. அந்த நூல் ‘யோக: சித்த விருத்தி விரோத:’ என்று தொடங்குகிறது. விருத்தி என்றால் வளரும் செயல். சித்தத்தின் வளரும் செயல்பாட்டை ஒறுத்தல் என்பதே யோகம். ஒரு நதியை அதன் ஊற்றுமுகத்திற்கு கொண்டுசெல்வது. ஒரு புருஷன் தன்னை பரமபுருஷனாக உணர்வதும், பிரகிருதியை மூலப்பிரகிருதியாக உணர்வதும், பிரகிருதி-புருஷ பேதத்தை அழித்து பெருநிலையை உணர்வதும் அதன் இலக்கு. அதற்கான வழிமுறைகளாக யம நியமங்கள் கற்கப்படுகின்றன. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.

தாந்திரீக மரபு

இரண்டாவது முக்கியமான மரபு என்பது தந்த்ரா எனும் தாந்திரீக மரபு. ஓஷோ அதுபற்றி நிறைய பேசியிருக்கிறார். இம்மரபை பற்றி தனியாகத்தான் பேசவேண்டும். இருப்பினும் இதை இங்கு சுருக்கமாக சொல்கிறேன். தந்த்ரா என்ற சொல்லின் நேரடிப்பொருள் ‘நடைமுறை செயல்பாடு’ என்பதே  (Tantra – The regular order). இச்சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன. உதாரணமாக சிற்ப சாஸ்திரமும் தந்த்ரா என்று சொல்லப்படுகிறது. பூஜை முறைகள், தியான முறைகள் போன்றவையும் தந்த்ரா என்று சொல்லப்படுகின்றன. இவை மூன்றும் வேறுவேறே.

தாந்திரீக வழிபாட்டு முறை (Tantric Rituals)

தமிழகத்தில் ஆகம முறைப்படியான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் கேரளத்தில் தாந்திரீக முறைப்படியான வழிபாடுகள் உள்ளன. அந்த தந்திரம் என்பது நாம் இன்று சொல்லக்கூடிய யோக தந்திரங்களோடு இணைந்தது அல்ல. அது வழிபாட்டு, பூஜை முறைகளை பற்றிய தந்திரம். அதற்கு ஆதாரமாக தந்திர சமுச்சயம் (Tantra Samuccaya) என்ற நூல் உள்ளது. அது பஞ்ச மகாரங்கள் என்பதோடு சேர்ந்தது. மது, மங்கை, மாமிசம், மாவு, மந்திரம் என்பவை பஞ்ச மகாரங்கள். கைகளால் காட்டப்படும் சைகைகள், உச்சாடனங்கள் மட்டுமேயான மந்திரங்கள் போன்றவை காணப்படும். அதன் வழிபாட்டு முறையே முற்றிலும் வேறுபட்டது.

வரலாற்று ரீதியாக ராஜராஜ சோழன் கேரளத்தில் தாந்திரீக பூஜையை நிறுத்தி ஆகம முறையை கொண்டுவந்தான். பதினான்காம் நூற்றாண்டில் கேரள மன்னர்கள் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் தாந்திரீக பூஜை முறையை கொண்டுவந்தனர். இன்றுவரை கேரள கோயில்களின் அதிகாரம் என்பது தந்திரீகர்கள் எனும் உபாசகர்களிடமே உள்ளது. அவர்கள் பரம்பரையாக வரக்கூடியவர்கள்.

தாந்திரீக சிற்பமுறை (Tantric Iconography)

சிற்பங்கள், அதில் உள்ள முத்திரைகள் எப்படி அமையவேண்டும் என்று சொல்லும் தந்திர நூல்கள் உள்ளன.  சைவமரபில் நெடுங்காலம் தாந்திரீகம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சைவத்தின் பல பிரிவுகள் தாந்திரீக நடைமுறை உள்ளவையே. இங்குள்ள எல்லா சிவாலயங்களிலும் தாந்திரீகம் தொடர்பான சிற்பம் ஏதோவொன்று இருக்கும். சிலவகை சிற்பங்கள் தாந்திரீக மரபால் மட்டுமே உருவாக்கப்பட்டவை.

உதாரணமாக, யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு நிற்கும் கரியுரித்த சிவன் (கஜசம்ஹார மூர்த்தி). அதற்கு கஜமுகாசுரனை சிவன் வதம் செய்த கதையை சொல்வார்கள். ஆனால் தாந்திரீகத்தில் அது வேறொரு அர்த்தம் கொண்ட வடிவம். ‘இரு நிலவுகள் எழுந்த இரவில் எழும் ஒளி’ என்று அதற்கு குறியீட்டுரீதியான அர்த்தம். யானையின் இரண்டு தந்தங்கள் இரண்டு நிலவுகள். அந்த யானைதான் இரவு. அதை கிழித்து எழக்கூடிய அனல் வடிவம்தான் சிவம்.

அதுபோல லிங்கம் பிளந்து வெளிவரக்கூடிய லிங்கோத்பவர் வடிவம். அந்த லிங்கத்தின் பிளப்பு யோனிவடிவில் இருக்கும். ஆவுடையில் இருந்து வெளிவரக்கூடிய சிவன். அதுவும் தாந்திரீகத்தில் மிக நுட்பமான பொருள் கொண்டவையே. மேலும், பிக்ஷாடனர், கங்காளர் போன்ற சிவ வடிவங்களையும் தாந்திரீகத்தோடு தொடர்புடையதாக சொல்வார்கள்.

இந்த வகைமைகளில் ஒன்றே தாந்தீர்க யோகமுறை.

தாந்திரீக யோகமுறை (Tantric Yoga)

மேற்சொன்ன இரண்டு தாந்திரீக முறைகளும் தாந்திரீக யோக முறையினின்றும் வேறுபட்டவை. அந்த யோகமுறை இந்நாட்டில் நெடுங்காலம் மறைவாகத்தான் இருந்திருக்கிறது. நமது வரலாற்றில் மகாபாரத காலத்திலேயே அது மிக வலுவாக இருந்திருக்கிறது. ஆனால் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பக்தி இயக்கம் வலுவாக இருந்த காலங்களில் பக்தி மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. பக்தி மரபு வேள்விச் சடங்குகளையும் முக்கியமாக கருதவில்லை. மறுபுறம் தாந்திரீக சடங்குகளை வெறுத்து ஒதுக்கியது. அத்தகைய சடங்குகளுக்கு சமூகத்தில் இடமில்லாமல் ஆக்கியது.

இந்தியாவில் எழுநூறாண்டுகாலம் தாந்திரீகத்திற்கு எதிரான மையவோட்டம் உருவானது. தாந்திரீகர்கள் தலைமறைவாகவும் வேறு உலகை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சித்தர்கள், வீரசைவர்கள், அகோரிகள், நாகா துறவிகள் என வெவ்வேறு விதமாக இந்தியா முழுக்க உள்ளனர். தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை தாந்த்ரீக சைவம் மிக வலுவாக இருந்தது. குறிப்பாக பாசுபதம். அதன் முதன்மையாசிரியரான லகுலீஸர் இங்கே தெய்வத்துக்கு இணையாக வழிபடப்பட்டார்.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்கம் உருவானது. அதன் பின் தமிழ்நாட்டில் மதங்களின் மையப்போக்கு என்பது பக்தியால் நிரம்பியிருந்தது. ஒரு சாமானியனிடம் தாந்திரீக சடங்குகளுக்கு செல்லவேண்டாம் என்றுதான் ஆழ்வார்களோ நாயன்மார்களோ சொல்லியிருப்பார்கள். அவை பயனற்றவை என்று சொல்லும் நூல்கள் பக்தி இயக்கத்திலுள்ளன.

பின்பு இங்கு வந்த வெள்ளையர்கள்தான் தாந்திரீக மரபை கண்டுகொள்கிறார்கள். இப்படியொரு மரபு குரு- சிஷ்யத் தொடர்ச்சியாக இங்கு இருந்ததை காண்கிறார்கள். முக்கியமாக பிரம்மஞான சபையின் மேடம் பிளவாட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) இதுபற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு சிறிதளவுதான் தெரியும். பெரும்பகுதி கற்பனைதான். ஆனால் இப்படியொரு விஷயம் இருப்பதை அவர்களால் கண்டடைய முடிந்தது. அதன்பிறகு ஆய்வாளராகிய, ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் எழுதிய சர் ஜான் வுட்ரோஃப் (Sir John Woodroffe) முக்கியமானவர். அவர் ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். ஒரிசாவிலும் வங்காளத்திலும் பணிபுரிந்ததால் தாந்திரீகர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வதற்கும், அவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய தாந்திரீகத்தை பற்றி பேசும்போது அவரைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.அதுபோல அகேகானந்த பாரதி (Agehananda Bharati) என்ற அமெரிக்கர் இந்தியா வந்து துறவுபூண்டு இந்திய தாந்திரீக முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இவர்கள் வழியாகத்தான் தாந்திரீகம் பற்றி நமக்கு தெரியவருகிறது.

பொதுவாக இந்த தாந்திரீக யோகமுறை பலவாறாக பிரிந்திருக்கிறது. அது ஒற்றை அமைப்பு அல்ல. அதில் நான்கு வெவ்வேறு மார்க்கங்கள் உள்ளன.

1) வாசியோகம் – இது மூச்சுப்பயிற்சி சார்ந்தது. இதை தென்னிந்தியாவை சார்ந்ததாக சொல்கிறார்கள். வட இந்தியாவிலும் அதற்கு வேர்கள் உண்டு என்றும் சிலர் சொல்கின்றனர். இதுபற்றி ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அது தெற்கில் மிக வலுவாக இருந்திருக்கிறது. திருமூலர் அதன் முக்கியமான ஆளுமை என்று இங்குள்ள சைவர்கள் சொல்கின்றனர்.

2) அந்தர்யோகம் (அ) சித்தயோகம் – இது அகப்பயிற்சிகளால் ஆன யோகமுறை. ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்தவர்கள் அத்தகைய பயிற்சியை அளித்திருக்கிறார்கள். இதில் புறப்பயிற்சிகள் குறைவு.

3) ஹடயோகம் – இது முழுக்கவே உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சி சார்ந்தது.

4) சக்ரயோகம் (அ) முத்ரா யோகம் இந்த முறைமையில்தான், இன்று அதிகமாக பேசப்படக்கூடிய ஏழு சக்கரங்கள், மையங்கள் உள்ளன. மூலாதாரம் முதல் சஹஸ்ரம் வரைக்குமான ஏழு சக்திநிலைகள் / தாமரைகள் / சக்கரங்கள். அவை உருவகங்கள்தான்.

இதை இங்கே முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும். சென்னை விஜயா பார்க் விடுதிக்கு அருகில் சந்துக்குள் ஒரு அறிவிப்புப்பலகை ஒன்றை பார்த்தேன். ‘இங்கு மூலாதாரம் திறந்து கொடுக்கப்படும், ரூ.300’ என்று இருந்தது. அப்போது என் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டார் ‘சார் முன்னூறு ரூபாய்தானா?’ என்று. ‘திறக்குறதுக்கு முன்னூறுதான். ஒரு வாரம் கழித்து, சாமி மூடிக்கொடுங்க என்று கேட்டு செல்வீர்கள். அப்போது முப்பதாயிரம் கேட்பார்’ என்றேன்.

மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. குண்டலினி என்றால் தீ, குண்டத்தில் இருப்பவள். அந்த நாகவடிவிலான ஆற்றல் எழுத்து சஹஸ்ரத்திற்கு செல்வது என்பது உருவகமாக சொல்லப்படுகிறது. அது பல வடிவங்களில் பேசப்படுகிறது. ஆர்தர் ஆவலோன் ஒரு விளக்கமளிக்கிறார். மூலாதாரம் என்று சொல்லப்படுவது படைப்பாற்றல் (creativity) / இனப்பெருக்க ஆற்றல். அதில் இருந்து பசி, சொல், சிந்தை என்பதாக மேல்நோக்கி செல்கிறது என்கிறார். அதன் முழுமை ஆயிரமிதழ்கொண்ட தாமரையாக மலர்கிறது , அதுவே சகஸ்ரம்.

இந்த நான்கு முறைகளும் இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கின்றன. இவை தனித்தனியாக இருந்திருக்கின்றனவா என்றால் அவ்வாறும் சொல்லமுடியாது. சித்தர் பாடல்களை பார்த்தால் இந்நான்கும் கலந்துதான் காணப்படுகின்றன. குறிப்பாக இந்நான்கும் ஒரே இடத்தில் இருக்கும் நூல் என்றால் அது திருமந்திரம்தான். அதை முழுக்கவே ஒரு யோக நூலாகத்தான் சொல்லவேண்டும். தமிழர்களின் துரதிருஷ்டம், அதை ஒரு அரசியல் நூலாக புரிந்துகொள்ள முற்பட்டிருக்கிறோம். ஒரு யோகிதான் அதுபற்றி உரை எழுதவும் பேசவும் முடியும். ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டும்தான் அதுபற்றி விவாதிக்கவும் முடியும்.

கேளி யோகம்

கேளிக்கையாக, கொண்டாட்டமாக அமையும் ஒரு யோகமுறை உண்டு. அதன் சிறு பகுதியை நீங்கள் மதுராவுக்கு சென்றால் காணலாம். நான் நண்பர்களுடன் மதுராவிற்கு சென்றிருந்தேன். அப்போது வழிகாட்டி ஒருவர் கைதட்டி எங்களிடம் ‘பாருங்க, நீங்க இப்போ பிருந்தாவனம் வந்திருக்கீங்க. இது ராதையின் நிலம், பிரேமையின் நிலம். இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும்தான் இருக்கவேண்டும். இங்கு யாரும் கவலைப்படக்கூடாது. யாரும் எதைப்பற்றியும் எதிர்மறையாக பேசக்கூடாது’ என்றார். ‘யாருக்கெல்லாம் சுகர் இருக்கு’ என்று கேட்டுவிட்டு, ‘சுகர் இருந்தாலும் கவலைப்படக்கூடாது. எல்லோரும் லட்டு எடுத்துக்கோங்க’ என்றார். ‘ராதே ஷ்யாம் சொல்லி எல்லோரும் சிரிங்க’ என்றார். எல்லோரும் சிரித்தோம். இது யோக முறையின் ஒரு சிறு பகுதி.

நான் அலைந்து திரிந்த காலங்களில் காசியில் ஒரு ரயிலில் ஏறி படுத்தேன். பயங்கரமான குளிர். குளிருக்கு சிறந்த வழி இருக்கைகளுக்கு அடியில் படுப்பதுதான். திடீரென்று ஒரு கூட்டம் வந்து ரயிலில் ஏறியது. எல்லோரும் பஞ்சகச்சம், தலைப்பாகை கோலத்துடன் கையில் வாத்தியங்களோடு இருந்தனர். வந்து அமர்ந்து பாடத்தொடங்கினர். என்னை அழைத்து ‘கிருஷ்ணா இங்க வா, சாப்பிடு’ என்றனர். அனைத்தும் இனிப்பு வகைகளாக இருந்தன. இரவு முழுக்க பாடிக்கொண்டே இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தமிழ் தெரியும். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஸ்ரீசைலம் பக்கத்தில் தையற்காரராக பணிபுரிகிறார். ஆண்டில் ஆறுமாதங்கள் தையற்காரராக இருந்து சம்பாதித்ததை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அதன்பின் அங்கிருந்து கிளம்பி இரவும் பகலும் தன்னை ராதையாக மட்டும் உருவகித்துக்கொண்டும் பாடிக்கொண்டும், ஒரு பெரிய கூட்டத்துடன் பண்டரீபுரம் வரைக்கும் சென்றுவிட்டு பின்பு உடுப்பி வழியாக திரும்பி தனது ஊருக்கு வந்து மீண்டும் தனது தையல் தொழிலை செய்யத்தொடங்குவார்.

இப்படியொரு வாழ்க்கை உள்ளது. இனிப்பும் பாட்டும் மட்டுமேயான வாழ்க்கை. நான் அப்போது மெலிந்திருப்பேன். கிளம்பும்போது என் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னார் ‘உடம்ப பாத்துக்கோ கிருஷ்ணா, கிருஷ்ண மதுரத்தை தங்கத்தட்டில்தான் வைக்கணும்’. அதுபற்றி ஒரு அனுபவக்கட்டுரை எழுதியிருக்கிறேன்.

சுவாமி ஆத்மானந்தா எங்கள் ஊரை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் கிருஷ்ண மேனன். அவர் கேரள அரசில் உயர் காவலதிகாரியாக பணியாற்றியவர். ஒவ்வொரு நாளும் தனது வீட்டு முகப்பில் வேதாந்த வகுப்புகள் நடத்துவார். அந்த வகுப்புக்கு திருவிதாங்கூர் மகாராஜா வருவார். பின்பு ஒன்பது மணிக்கு கிருஷ்ண மேனன் சீருடை அணிந்து பணிக்கு சென்று மகாராஜாவை கண்டு சல்யூட் அடிப்பார். அவருடைய உரையை கேட்பதற்காக ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) வந்திருக்கிறார். உலகின் முக்கியமான பல சிந்தனையாளர்கள் வந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி தனது நினைவுக்குறிப்பில் க.நா.சு. அங்கு வந்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். கிருஷ்ணன் நம்பி அங்கு சென்றுவந்து அது ஐ.நா.சபை மாதிரி இருப்பதாக சொன்னதையும் எழுதியிருக்கிறார். க.நா.சு.வுக்கு பிடித்த புகழ்பெற்ற ஆத்மானந்தரின் மேற்கோள் ‘Waves are nothing but water. So is the sea’.

ஆனால் திடீரென்று ஒருநாள் அவர் ராதையாக மாறினார். புடவையெல்லாம் கட்டி, தலையில் பூச்சூடி ராதையாக வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் மட்டும் அவர் கவிஞராக இருந்தார். அதற்கு முன்னர் அவர் கவிஞரல்லர். ஆனால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், இன்றும் புகழ்பெற்று இருக்ககும் ராதா மாதவம் என்ற இசைப்பாடலை எழுதினார். அதன்பிறகு மீண்டும் வேதாந்தியானார். இடையில் அத்தகைய குறிப்பிட்ட யோகம் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ராதையாக இருப்பது ஒன்று, கிருஷ்ணனாக இருப்பது ஒன்று என இருமுனைகளில் அந்த யோகம் உள்ளது.

ஆனால் அந்த யோகத்தை தவறாக செய்த ஒருவர் என்று காந்தியை சொல்லலாம். அவருக்கு சில ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். ரைஹானா தயாப்ஜி (Raihana Tyabji) என்பவர் அதுபற்றி காந்திக்கு எழுதியிருக்கிறார். காந்திக்கு போலோநாத் என்ற ஆசிரியர் இருந்திருக்கிறார். நான் அதுபற்றி காந்தியும் காமமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன்.இன்றைய காந்தி நூலில் அக்கட்டுரை உள்ளது. அந்த ஆலோசனையை காந்தியின் பாரிஸ்டர் மனப்பான்மை தவறாக புரிந்துகொண்டது. வழக்குரைஞராக இருப்பதன் அபாயம் அது. எதையும் தப்பாகப் புரிந்துகொள்ளுதல். இதை நான் எனது நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். காந்தி அந்த யோகத்தை வேறுவிதமாக புரிந்துகொண்டு, ஆசிரியரில்லாமல் தானே செய்யத்தொடங்கி ,கூடுமானவரை எல்லா அவப்பெயர்களையும் வாங்கிக்கொண்டார். யோகத்தை அரசியல் எனும் சந்தை நடுவே வைத்து செய்தவர் என்று அவரை சொல்லலாம்.

சமணத்தின் யோகம்

சமணத்தின் அனைத்து தீர்த்தங்கரர்களும் யோகத்தில்தான் அமர்ந்திருக்கின்றனர். நின்றுகொண்டிருப்பதைக்கூட உத்திஷ்ட யோகம் என்பர். உள்ளங்கைகளை ஒன்றின்மீது ஒன்றாக விரிந்த நிலையில் வைத்திருப்பது உபேக்ஷா. ஆனால் அவர்கள் யோக முறைமை பற்றி குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அவர்களது முறைமை துறவுதான். ஒவ்வொன்றாக உதிர்த்துக்கொண்டே செல்வது. ராக்கெட் மேலே செல்லச்செல்ல எது தன்னை மேலே தூக்கிவிட்டதோ அந்த எரிபொருள் கலனை உதிர்த்துவிட்டுதான் செல்லும். ஞானம் வழியாக மேலே சென்று அந்த ஞானத்தை உதிர்த்துவிடுவது அவர்களது வழி.

ஓஷோ அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார். துறவு சரியானது. ஆனால் எதை வைத்து துறப்பாய் ? அதைவிட பெரிய ஒன்றைக் கொண்டுதானே ? அந்த ஒன்றை எப்படி வெளியே தள்ளமுடியும் ? ஒன்றை துறப்பதற்கு நீ வைராக்கியம் என்பதை உருவாக்கிக்கொள்வாய். ஆனால் அந்த வைராக்கியத்தை உன்னால் துறக்க முடியாது என்கிறார்.

இதற்கு ஒரு சர்தார்ஜி நகைச்சுவை சொல்கிறார். சர்தார்ஜி ஒருவர் இயந்திரத்தை இயக்குபவர். ஒருநாள் இடதுகையில் பெரிய கட்டு போட்டிருந்தார். ஒருவர் என்னவென்று கேட்டதற்கு மெஷினில் கை மாட்டிக்கொண்டுவிட்டதாக சொன்னார். அதை கேட்டவர் ‘நல்லவேளை, வலதுகை மாட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்’ என்றார். அதற்கு சர்தார்ஜி சொன்னார், ‘எனக்கு தெரியாதா, நான்தான் கடைசி நிமிஷத்துல கையை எடுத்துட்டு இடதுகையை விட்டுட்டேன்ல’.  அதுபோல இவர்களுடைய துறவு என்பது இன்னும் பெரிய ஒன்றை பற்றிக்கொள்வதுதான் அது. அத்தகைய வைராக்கியமே துறவுக்கு எதிரானது என்கிறார். எனவே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பௌத்தத்தின் யோகம்

பௌத்தம் மிக விரிவான யோக முறைகளை உருவாக்கிக்கொண்டது. அதற்கு நிறைய கிளைகள் உள்ளன. முக்கியமாக யோகாச்சார பௌத்தம் என்ற கிளையை சொல்லலாம். அதிலும் தேரவாதம் என்றும் மகாயானம் என்றும் இரண்டு கிளைகள் உள்ளன. இன்றைக்கு பௌத்த தியான முறைகள் இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளது. எந்தவொரு எழுத்தாளரை பார்த்தாலும் தான் அதை செய்வதாக சொல்கிறார்கள். முக்கியமாக விபாசனா தியானமுறை. பொதுவாக பார்த்தால் பௌத்தர்களுக்கு இரண்டுவகையான ஊழ்க முறைகள் உள்ளன.

உபாசனா – ஒரு மூர்த்தத்தை உபாசிப்பது. அதன்படி தன்னை தொகுத்துக்கொள்வது. இது திபெத்திய பௌத்தத்தில் மிக வலுவானது. காலதேவர் தொடங்கி போதிசத்வர் வரைக்குமான ஏதோவொரு குறிப்பிட்ட மூர்த்தத்திற்கு தன்னை முற்றாக அளிப்பது.

விபாசனா – தன்னை ஒவ்வொரு கணமும் பகுத்துக்கொண்டே செல்வது. பௌத்தத்தில் முக்கியமான சிந்தனை ஒன்றுண்டு. அதற்கு பிரதீத்ய சமுத்பாதம் (Pratītyasamutpāda) என்று பெயர். இதை ஒரு சிறு உவமை வழியாக விளக்கலாம். மினாண்டர் என்ற மன்னனுக்கு நாகசேனர் சொன்ன உவமை அது. கண்முன்னால் நாம் தீயை பார்க்கிறோம். ஆனால் நாம் பார்த்த கணத்தில் உள்ள தீ அல்ல அடுத்த கணத்தில் இருப்பது. தீ என்பது ஒரு நிகழ்வுதானேவொழிய ஒரு பொருள் அல்ல. ஒரு மலையும் நிகழ்வுதான். தீ வேகமாக நிகழ்கிறது, மலை மெதுவாக நிகழ்கிறது அவ்வளவுதான். இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையானவை அல்ல. எல்லாமே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த நிகழ்வுக்கு ஒரு தர்மம் (Order) உள்ளது. அந்த தர்மம்தான் அதை நம்மை பொருளாக உணரச்செய்கிறது. தீ என்பது ஒளிகொண்டதாகவும் வேகமாக மேல்நோக்கி செல்லக்கூடியதாகவும்  உள்ளது. ஆகவே நாம் அதை பொருளாக பார்க்கிறோம். மலையும் அவ்வாறுதான். கொஞ்சம் மெல்ல நிகழ்கிறது. ஐம்பது லட்சம் ஆண்டுகள் நம்மால் உயிர்வாழ முடிந்தால் அந்த மலை உருமாறியிருப்பதை நாம் பார்ப்போம்.

இதை க்ஷணபங்கவாதம் (Kṣaṇabhaṅgavāda) என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றும் அழிந்து மாறிக்கொண்டே உள்ளன. நாம் அறியும் அந்த கணத்தில் அறிந்த பொருள் இல்லை. ஆகவே நாம் அறிவது அனைத்தும் ஒரு கணத்திற்கு முந்தைய பொருளைத்தான். அதன் தொடர்ச்சியை நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். தன்னிலை (Self) என்பதும் க்ஷணபங்கம்தான். அதை ஒரு யோகமுறையாக விரிவாக்கிக்கொள்வதே விபாசனா.

சமீபத்தில் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் என்பவர் குரு எனும் நூலை எழுதியிருக்கிறார். அவர் கன்னட வீரசைவ மரபை சேர்ந்தவர். அவர் விபாசனா யோகம் செய்ததை பற்றி சொல்கிறார். அதை செய்தபின்பு அவரால் கவிதையே எழுதமுடியாமல் போய்விட்டது. அவர் தனது ஆசிரியரிடம் அதுபற்றி கேட்கிறார். அவர் ‘நல்லதுதானே, நீ விடுபட்டுவிட்டாயே. குறைந்தபட்சம் ஒன்றாவது விலகிச் சென்றிருக்கிறதே’ என்றார். ஆனால் தனது கவிதைதான் தான், அது இல்லாத சுயம் தனக்கு தேவையில்லை என்று விபாசனாவை விட்டு வெளியே வந்து சைவ முறைகளுக்குள் திரும்பியதை எழுதியிருந்தார். இன்று விபாசனா என்பது எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் பரவிக்கொண்டு இரு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.