தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு
தமிழ்விக்கி தூரன் விருது 2022ல் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நிகழ்ந்த தமிழ்விக்கி தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர் தூரனின் நினைவை போற்றும் நோக்கம் கொண்டது இந்த விருது. தமிழின் முதற் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதைக்கு தமிழகத்தில் ஒரு நினைவுச்சின்னம்கூட இல்லை. ஒரு நினைவுகூரல்கூட நிகழ்வதில்லை. எத்தனையோ எளிய அரசியல்வாதிகள், சாதித்தலைவர்கள், சினிமாக்காரகள் கொண்டாடப்படும் நாட்டில் ஓர் அறிவியக்கமுன்னோடி மறக்கப்படுவதென்பது மிகமிக மோசமான ஒரு முன்னுதாரணம். அறிவியக்கத்தில் ஈடுபடுபவர் பொருட்படுத்தப்பட மாட்டார் என்னும் செய்தியை இளைய தலைமுறைக்கு நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
கலைக்களஞ்சியம் போன்ற மாபெரும் பணியை ஆற்றிய ஒருவர் வரலாற்றில் மறைந்து போய்விடக்கூடாது. அது தமிழ்விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் எங்கள் அனைவருக்குமே சோர்வூட்டும் ஒரு விஷயம். நாங்களே எங்களுக்கு அளித்துக்கொள்ளும் உறுதிப்பாடுதான் தூரனுக்கான இந்நினைவுகூரல். அறிவியக்கவாதியை அதிகாரவட்டம் அறியாது, பொருட்படுத்தாது. சாமானியர் இகழ்வார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு அறிவியக்கவாதி நினைவுகூர்வான், அது போதும் என எங்களுக்கே சொல்லிக்கொள்வதுதான் இது.
முதல் விருது மானுடவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு 2022 ஆகஸ்டில் ஈரோட்டில் நிகழ்ந்த விழாவில் வழங்கப்பட்டது. தமிழ்விக்கியின் கௌரவ ஆசிரியர் அ.கா.பெருமாள், கொங்கு ஆய்வாளர் கு.மகுடீஸ்வரன் போன்ற ஆய்வாளர்கள் கலந்துகொண்ட விழா அது. வழக்கம்போல இந்த விழாவுக்கும் தமிழகம் முழுக்கவிருந்து எங்கள் வாசகர்கள் வந்து தங்கி கலந்துகொண்டனர். ஆகவே அவர்களுக்காக வாசகர்சந்திப்பு அரங்குகள் ஒருங்கிணைத்தோம். விஷ்ணுபுரம் அரங்கும், குமரகுருபரன் அரங்கும் இலக்கிய அரங்குகள். இது முழுக்கமுழுக்க ஆய்வாளர்களுக்கான அரங்கு.
ஆய்வாளர்களை அறிமுகம் செய்துகொள்வதும், தொடர்வதும் ஓர் பொது அறிவியக்கவாதிக்கு மிக அவசியமான அடிப்படைப் பயிற்சிகள். ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்று அறியாதவனால் ஒருபோதும் தனிவாழ்வு சார்ந்த ஒரு நல்ல படைப்புக்குமேல் எழுதிவிட முடியாது. வாசகர்களுக்கும் இலக்கியத்தை, சமகால சிந்தனையை அருகமைந்து அறிய ஆய்வுகளுடனான அறிமுகம் அவசியம்.
முதல் ஆண்டில் நாங்கள் தமிழகத்தின் ஆய்வுமாணவர்களுக்கு பயணப்படி, தங்குமிடம் ஆகியவற்றை அளிக்க முன்வந்தோம். ஆனால் மூன்று மாணவர்கள் மட்டுமே அந்தச் சலுகையை பயன்படுத்தினர். ஆனால் மூவருமே ஒரு நிமிடம்கூட அரங்கில் அமரவில்லை. ஈரோட்டில் தங்கள் தனிப்பட்ட வணிகத்தை கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பயணப்படி கோரி சண்டைபோட்டார்கள். ஆகவே அந்த திட்டத்தை ரத்துசெய்துவிட்டோம். தமிழக பல்கலை ஆய்வுகளின் தரம் அது. தமிழகத்தில் கல்வித்துறையில் இருந்து ஒரே ஒருவர் கூட இதுவரை பார்வையாளராகக் கலந்துகொள்ளவில்லை.
அதேபோல தமிழக எழுத்தாளர்களில் மிகச்சிலரே பங்குகொண்டனர், அவர்களும் பொதுவாக மூத்த எழுத்தாளர்கள். இளம்படைப்பாளிகளுக்கு வரலாறு, பண்பாடு சார்ந்த ஆய்வுகள் எதிலும் ஆர்வமிருக்கவில்லை. அந்த ஏமாற்றம் இன்னொரு பக்கம் வாசகர் பங்கேற்பால் நிறைவாக மாறியது. மிகப்பெரிய அளவில் வாசகப்பங்கேற்பு இருந்தது. ஆய்வரங்குகளில் பேசிய அறிஞர்கள் அந்த பெரிய சபையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழில் ஒரு புதிய தொடக்கமாகவே அந்த முதல் விருதுவிழா அமைந்தது.
தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம் தமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம் தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம் தமிழ் விக்கி தூரன் விருது
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
