ஓஷோ: மரபும் மீறலும்-13
நண்பர்களே, இந்த உரைநிகழ்வின் இறுதியில் இன்று ஓஷோவைப் பற்றி இதுவரை நான் சொன்னவற்றையும், ஓஷோ என நான் தொகுத்துக்கொள்வனவற்றையும் சுருக்கிச் சொல்லலாம் என நினைக்கிறேன். அதாவது அடிப்படையில் ஓஷோ முன்வைத்தது என்ன என்பதை ஓரளவுக்கு சுருக்கிக்கொள்வதைப்பற்றி சொல்ல விரும்புகிறேன். சுருக்கிக்கொள்வது என்பது எப்போதுமே ஒரு தெளிவை அளிப்பது. கூடவே, சில விஷயங்களை விட்டுவிடுவதும்தான். ஒரு சிந்தனையாளனை, ஞானியை, தத்துவவாதியை, கலைஞனை சுருக்கிக்கொள்வது என்பது ‘அவர் இவ்வளவுதான்’ என்று சொல்வதல்ல. உள்ளங்கை நெல்லிக்கனி எல்லாம் அல்ல. அப்படிச் சொல்லுவது அவரை அவமதிப்பது. நாம் நமக்கான ஒரு தொடக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் அது. நம்முடைய சொந்த புரிதல் மட்டும்தான்.
நமது தமிழ் மேடை பேச்சுகளில் ஒரு மரபு உள்ளது. எதைப்பற்றிச் சொன்னாலும் “இதோ இவ்ளவுதான்யா விஷயமே” என்று சொன்னால் உடனே அரங்கினர் படபடவென கைதட்டுவார்கள். அவர்களுக்கு எல்லாமே சுருக்கமாக, கையளவாக வேண்டும். ஒரு மேடைப்பேச்சில் இருந்தே எல்லாம் கிடைத்துவிடவேண்டும்.ஆனால் எந்தவொரு சிந்தனையும் எந்த அளவுக்கு சிக்கலாகவும் உள்விரிவுகள் கொண்டதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் உண்மைக்கு அருகே செல்கிறது. எந்த அளவுக்கு எளிமையாகிறதோ அந்த அளவுக்கு அது அரை உண்மையாகிறது. எவரோ ஒருவர் மேடையில் ‘இவ்வளவுதான்யா ஓஷோ’, ‘இவ்வளவுதான்யா சங்கரர்’ என்று சொல்கிறாரென்றால் அவர் அறியாமையை அல்லது பொய்யைச் சொல்கிறார் என்று அர்த்தம். எனவே இங்கு ஓஷோவை சுருக்கும்போது இதை முன்னறிவிப்பாக சொல்ல விரும்புகிறேன்.
ஓஷோவைச் சுருக்குவது
ஆனால் சுருக்குவதென்பது மேலும் பெருக்குவதற்கான தொடக்கப்புள்ளியாக அமையமுடியும். ஓஷோ பாணியில் ஒரு நகைச்சுவை சொல்லலாம். இரண்டு சர்தார்ஜிகள் நாள்தோறும் குருத்வாரா செல்கின்றனர். இருவருமே சீரியஸான மனிதர்கள், அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய தாடி அவர்கள் பேசுகிறார்களா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு தோற்றத்தை அளிக்கிறது. ஒருநாள் ஒருவர் மற்றொருவரிடம் ‘என் குதிரைக்கு வயிற்றுவலி’ என்று சொன்னார். மற்றொருவர், ‘போன வருஷம் என் குதிரைக்கும் வயிற்றுவலி வந்தது’ என்றார். முதலாமவர், ‘அதற்கு என்ன கொடுத்தீர்கள்?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘டர்பன்டைன்’ என்றார். பேச்சு முடிந்து இருவரும் சென்றுவிட்டனர். மறுவாரம் அவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இந்த சர்தார்ஜி ‘என் குதிரைக்கு டர்பன்டைன் கொடுத்தேன். செத்துப்போச்சே’ என்று சொன்னார். அதற்கு மற்றொருவர் சொன்னார் ‘என் குதிரையும்தான் செத்துப்போச்சு’.
இந்த அளவில்தான் இன்று மதங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையேயான உரையாடல் உள்ளது. இரண்டு மதத்தரப்புகள், இரண்டு ன்மீகத்தரப்புகள் விவாதிப்பதை பார்த்தல் ஒன்று தெரியம். அவர்கள் இருவருக்கும் நடுவே, திருமணமாகி இருபதாண்டுகள் கடந்த கணவன் மனைவிக்கு இடையே எந்த அளவுக்கு உரையாடல் இருக்குமோ அந்த அளவுக்குத்தான் உரையாடல் இருக்கும். அதற்கப்பால் ஒரு உரையாடலை உருவாக்குவது எல்லா காலகட்டத்திலும் தேவையாக இருந்திருக்கிறது. ஒருவகையில் சொல்லப்போனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் மாற்று மதங்கள் அனைத்தையும் கற்கக்கூடிய ஒரு பாடத்திட்டத்தை கொண்டுள்ளனர். இன்றைக்குக்கூட ஒட்டுமொத்த இந்திய சிந்தனைகளை படிப்பதற்கான சரியான பாடநூல் என்பது கத்தோலிக்க மதகுருமார்களுக்காக அவர்கள் எழுதி உருவாக்கியிருக்கும் பாடநூல்தான். அவர்கள் இந்திய தத்துவத்தை சார்வாகத்தில் இருந்து, வேதத்தில் இருந்து தொடங்கி ஓஷோ வரை ஓரளவுக்கு படித்த பிறகுதான் கிறிஸ்தவத்தை பற்றி பேசுகிறார்கள்.
அதே அளவுக்கு கிறிஸ்தவத்தை பற்றி பதினைந்து நிமிடம் பேசக்கூடிய தகுதியான இந்து அறிஞர்கள் எத்தனைபேர் என்று யோசித்துப்பாருங்கள். நான் கிறிஸ்தவப் பின்னணி கொண்ட கதைகளை எழுதும்போது அல்லது திரைப்படத்தில் கிறிஸ்தவம் தொடர்பான சில விஷயங்களை சொல்லும்போது, கிறிஸ்தவ இறையியலின் அடிப்படையான சில விஷயங்கள்கூட தமிழ் வாசகர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். ‘கிறிஸ்துவின் ரத்தமும் சதையும்’ என்ற கருத்து அவர்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. அதை நாம் உண்ணவேண்டும், அதோடு கிறிஸ்து நம் பிதாவாக ஆகிறார் என்பது ஒரு குறியீட்டு சடங்காக உள்ளது. சமீபத்தில் ஒரு வெள்ளையானை என்னும் நாவலில் அதை எழுதினேன். கடல் சினிமாவிலும் அந்த குறியீடு வருகிறது. வாசகர்களில் மிகக்குறைவானவர்களுக்குத்தான் அந்த ‘கிறிஸ்துவின் ரத்தம்’ என்பது ஆழ்ந்த இறையியல் அர்த்தம் கொண்டது என்பது தெரிந்திருக்கிறது என அறிந்துகொண்டேன்.
முன்காலத்தில் இங்கு தத்துவ விவாதத்தில் பரபக்கத்தை அழகாகச் சுருக்கிச்சொல்வார்கள். அதன் பின்னர்தான் தனது தரப்பை முன்வைப்பர். ஒருவரிடம் விவாதிக்கும் முன்னால் ‘நீங்கள் சொல்வது இதுதானே’ என்று அவருடைய தரப்பை கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல தனது தரப்பை சொல்வதுதான் வழக்கம். ஆனால் இன்றைக்குள்ள சமூகவலைத்தள விவாதம் என்பது, நாம் என்ன சொன்னாலும், நாம் சொன்னதாக அவர்கள் எதை கருதுகிறார்களோ அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ‘இல்லைங்க, நான் அதை சொல்லவில்லை’ என்றுதான் மீதமிருக்கும் வாழ்நாள் முழுக்க நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஆகவே இங்கு ஓஷோவின் சிந்தனைகளை சில புள்ளிகளாக தொகுத்துக்கொள்கிறேன்.
உரைவடிவம் என்னும் தடை.
அவருடைய சிந்தனைகளை சுருக்குவதில் முக்கியமாக ஒரு சிக்கலும் உள்ளது. ஏறத்தாழ 760 நூல்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவையனைத்துமே அவருடைய உரைகளில் இருந்து பதிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டவை. உரைகள் நூல்வடிவில் தொகுக்கப்படுவதில் ஒரு சிக்கல் உள்ளது. உரை என்பது எதிரில் இருக்கக்கூடியவர்களை நோக்கி பேசுவது. அது அந்த தருணத்தில் தோன்றும் எண்ணங்களை கோர்த்துக் கொண்டே செல்வது. பெரும்பாலான உரைகளில் பெரிய திட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. உரைக்கு ஒரு கட்டமைப்பும் இருப்பதில்லை. குறிப்பாக ஞானிகள் போன்றோர் அப்படியொரு திட்டத்தோடு பேசத்தொடங்குவதில்லை. நான் எழுத்தாளனாகையால் அந்த உரைகளுக்கு ஒரு கட்டமைப்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த உரையைக்கூட ஒரு கட்டமைப்புள்ள விவாதமாக பார்க்கலாம். அது ஒரு புத்தகத்தின் பாணி. ஆனால் பெரும்பேச்சாளர்களாக அறியப்படக்கூடியவர்கள் தன்னிச்சையாக மேடையில் நிகழக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்க மாட்டார்கள்.
ஆகவே அவர்களுடைய நூல்களை தொகுத்தால் அது ஒருவகையான ஊசலாட்டத்துடன் அலைந்துகொண்டே இருக்கும். மேலும் அதில் கூறியதுகூறல் இருக்கும். ஏனெனில் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பார்வையாளர்களின் கேள்விகளுக்கான பதில்களாக அவை உள்ளன. ஓஷோவின் கேள்வி பதில்கள் அனைத்திற்கும் அத்தன்மை உண்டு. பலசமயம் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியும்கூட திரும்பத்திரும்பத்தான் சொல்கிறார். ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற வினாவுக்கு நாற்பதாண்டுக்கு முன் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எல்லா ஞானிகளும் பேசப்பேச தங்கள் சொன்னதை திரும்பச்சொல்ல தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் சொல்வது அடிப்படையான ஒரு தரிசனத்தைத்தான். அதை உலகியலில் வைத்து அவ்வளவு பெரிதாக விரித்துக்காட்டுகிறார்கள். நீங்கள் அவர்களை அணுகி பயிலும்போது அதை மீண்டும் சுருக்கி அளித்துவிடுவார்கள். ஆகையால் ஓஷோவின் 760 பக்கங்களில் விரிந்துகிடக்கும் உலகத்தை சுருக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
அதில் வேடிக்கையான ஒன்று உண்டு. அமெரிக்காவில் மாத்திரைகள் பயன்பாடு மிகத்தீவிரமாக ஆனபோது, மாத்திரைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு மாத்திரையை கண்டுபிடித்ததாக சொல்வார்கள். அதைப்போல ஆன்மிகம் சார்ந்த அத்தனை நூல்களும் பெரும்பாலும் நூல்களுக்கு எதிரான நூல்களே. புத்தக வாசிப்பின் பயனின்மையை சொல்லக்கூடிய புத்தகங்கள் என்று அவற்றை சொல்லலாம்.
சமகாலத்தன்மையின் தடை.
ஓஷோவின் சிந்தனைகளை சுருக்குவதுபற்றி இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். பெரும்பாலான ஞானிகளுடைய, அறிஞர்களுடைய சிந்தனைகள் காலத்தன்மை கொண்டவை. அவர்களுடைய சமகாலத்திற்கு அவர்கள் எதிர்வினையாற்றியவை. கேட்கப்பட்டதனால் சொல்லப்பட்டவை. கேட்கப்பட்டிராவிட்டால் சொல்லப்பட்டிருக்க வாய்ப்பற்றவை. ஆகவே அவற்றுக்கு அடிப்படையில் ஒரு சமகாலத்தன்மை இருக்கும். கட்டமைப்பிலும் சமகாலத்தன்மை இருக்கும். ஆனால் அந்த சமகாலத்தன்மைக்குள் காலாதீதமாக ஒன்று இருக்கும். கடல்நீரில் ஒரு பகுதி கனநீர் என்பார்கள். அதை தனியாக பிரித்தெடுக்க முடியும். அதுபோல இந்த சமகாலத்தன்மை கொண்ட உரைகளில் காலாதீதமாக இருக்கும் ஒன்றை வாசகன் மிக எளிதாக தனது அடிப்படைக் கேள்விகள் வழியாக சென்று தொட்டுவிட முடியும்.
ஓஷோவை பொறுத்தவரை அவர் எழுபதுகளில் அமர்ந்து, அக்காலகட்டத்தின் அமைதியற்ற தலைமுறையினரிடம் பேசியவர். உலகப்போர்களுக்கு பின்னர் பிறந்த அந்த தலைமுறையானது தனது மரபின் மீதும், மதத்தின் மீதும், தங்களுடைய ஆன்மீக அடித்தளங்கள் மீதும் நம்பிக்கையற்று மாற்றுப் பண்பாட்டையும் மாற்று ஆன்மிகத்தையும் உருவாக்கும்பொருட்டு தங்களது வீட்டை துறந்து வெளியேறியவர்கள். அவர்களை ஹிப்பிகள் என்று சொல்கிறோம். அவர்களை நோக்கிப் பேசத்தொடங்கியவர் ஓஷோ, ஹிப்பிகளை பற்றி ஓஷோ சொல்லும்போது ‘Yes சொல்ல மறுத்துவிட்டவர்கள்’ என்கிறார்.
நீங்கள் அமெரிக்காவின் பாடபுத்தகங்களை பார்த்தால் அது என்னவென்று தெரியும். நான் அமெரிக்கா செல்லும்போது அங்குள்ள சிறு குழந்தைகளின் பாடபுத்தகங்களை பார்ப்பேன். அமெரிக்கப் பெருமை என்பது அந்த பாடங்களில் மிக அடிப்படையான ஓர் அம்சம். அமெரிக்கா உலகை காப்பாற்றுகிறது என்பதில், அமெரிக்கா அணுகுண்டை போட்டதுகூட உலகின் நன்மைக்காகத்தான் என்பதில், அமெரிக்காவை உலகமே விரும்புகிறது என்பதில் சராசரி அமெரிக்கக் குழந்தைக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாறுதான் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். உலகில் யாரேனும் அமெரிக்கா மீது தாக்குதல் தொடுத்தால், ‘உலகைக் காப்பாற்றும் நம் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறார்கள்?’ என்று அந்தக் குழந்தைகள் அழுவதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார். இந்த பாடங்களுக்கு எதிராக மறுப்பு சொல்லப்பழகிய ஒரு தலைமுறை எழுபதுகளில் உருவாகி வந்தது. அவர்களிடம்தான் ஓஷோ பேசுகிறார். அவர்களுக்கு வாழ்க்கை என்பது என்ன, மகிழ்ச்சி என்பது என்ன ? எதை மீறி எதுவொன்றை கண்டடைய வேண்டும், எதை மீறி எங்கு வரவேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்கிறார்.
ஆகவே அந்தக் காலகட்டத்தின் சூழலை வைத்துத்தான் நாம் ஓஷோவை அறியத் தொடங்க வேண்டும். இதை இங்கு சொல்லும்போது நினைவுக்கு வருபவர் ஜெயகாந்தன். 1973இல் அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ வெளிவருகிறது. அந்த நூலைப்பற்றி நான் சமீபத்தில் ‘நான்கு வாசிப்புகள் நாற்பதாண்டுகள்’ என்ற கட்டுரை எழுதியிருந்தேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் நான்குமுறை அந்த நாவலை படித்ததன் நினைவு அக்கட்டுரை. அந்த நாவலில் ஓஷோவிடம் சென்றவர்களுக்கு கிட்டத்தட்ட சமானமான ஹென்றி என்ற கதாநாயகன் வருகிறான். அவன் உலகத்தையே வீடாகக்கொண்ட ஒரு மனிதன். அந்த ஹென்றிதான் எப்போதும் ஓஷோவுக்கு முன்னால் உட்கார்ந்து இந்த கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக ஒர் எண்ணம் எனக்கு உண்டு.
தேவை ஒரு தொகுப்புநூல்.
ஓஷோ போன்ற சிந்தனையாளர்களை அணுகுவதில் உள்ள பெரிய தடை என்பது அவருடையனவாக நமக்குக் கிடைக்கும் பெருந்தொகுதிகளான நூல்கள்தான். இந்த சிக்கல் எல்லா தத்துவ ஞானிகளுக்கும் உள்ளது. ஹெகலை எடுத்துக்கொண்டால் ஒரு சிறு நூலகத்தையே நிரப்புமளவுக்கு, கிட்டத்தட்ட அறுபதாயிரம் பக்கங்களுக்கு நூல்கள் உள்ளன. அரவிந்தரை எடுத்துக்கொண்டால் முப்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட தொகுதிகள் உள்ளன. நான் ஒருமுறை ஊட்டி குருகுலத்தில் ஹெகல் தொகுதியில் இருந்து ஒரு நூலை எடுத்து படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நித்யா என்னிடம் கேட்டார், ‘நீ ஹெகலியன் ஆகப்போகிறாயா ?’ என்று. இல்லை என்றேன். அவர் ‘இல்லையென்றால் எதற்கு இந்த முழு தொகுதிகளையும் படிக்கிறாய் ?’ என்று கேட்டார். ‘முழுவதும் படிக்கும் எண்ணமில்லை. ஏதேனும் ஒரு நூலை மட்டும் படிக்கலாம் என்று எடுத்தேன்’ என்றேன். அவர் ‘ஒன்றை மட்டும் படித்துப்பார்ப்பது தப்பான சித்திரத்தை அளிக்கும். ஒரு வீட்டின் ஜன்னலை மட்டும் பார்த்துவிட்டு அந்த ஜன்னல்தான் வீடு என்று நினைப்பதுபோல். உனக்கு முழுமையான புரிதல்தான் வேண்டும். ஆனால் உன்னால் முழுவாழ்க்கையையும் அளிக்காமல் அவருடைய இந்த முழு தொகுதிகளையும் படிக்கவும் முடியாது’ என்றார்.
வெளிநாடுகளில் Reader என்ற நூல்மரபு உள்ளது. ஒரு பெரும் சிந்தனையாளனை சுருக்கி ஆயிரம் பக்கங்களிலோ, இருநூறு பக்கங்களிலோ நூல்களாக வெளியிடுவார்கள். அவர்கள் ஹெகலை விளக்கக்கூடியவர்களே ஒழிய ஹெகலுக்கு மறுவிளக்கம் அளிக்கக்கூடியவர்கள் அல்லர். அவர்கள் நம்பகமான தொகுப்பாளர்கள். நித்யா எனக்கு The essential Hegel என்ற இருநூறு பக்க புத்தகத்தை அளித்தார். ‘ஒரு எழுத்தாளனாக நீ படிக்கவேண்டியது பத்து நாட்களில் படித்து முடிக்கவேண்டிய ஹெகலைத்தான்’ என்றார். Peggy Kamuf என்பவர் தொகுத்த தெரிதா (Jacques Derrida) பற்றிய புத்தகத்தை கொடுத்தார். மட்டுமல்லாமல் ஹெகல், தெரிதா, அரவிந்தர் என எல்லோரையும் படிக்க வேண்டுமென்றால் இருநூறு பக்கங்கள் கொண்ட நூலைத்தான் படிக்க முடியும். இதற்கு அப்பால் ஒரு ஹெகலிய ஆய்வாளன் மொத்த ஹெகலையும் படித்து ஆய்வு செய்யலாம் என்றார். அது எனக்கு முக்கியமான வழிகாட்டலாக இருந்தது. நான் மையச்சிந்தனையாளர்களை தொகுப்புநூல்கள் வழியாகவே அறிந்தேன்.
அவ்வாறாக ஓஷோவுக்கு ஒரு சரியான ரீடர் இந்தியாவில் இன்றுவரை வரவில்லை. ஒரு இருநூற்றைம்பது பக்கங்களுக்குள் ஓஷோ சொன்னவற்றை மட்டும் சரியாக தொகுத்து, தனது தரப்பு ஏதும் இல்லாமல் ஓஷோவின் குரலாக மட்டும் ஒலிக்கக்கூடிய ஒரு தொகுப்பாளர் வழியாக ஒரு ரீடர் வருமென்றால் இந்த விவாதங்கள் அனைத்தும் இன்னும் கூர்பெறும். அப்படி ஒரு ரீடரை ஓஷோ ஆய்வாளர் ஒருவர்தான் வெளியிட முடியும். நான் ஓஷோ ஆய்வாளன் அல்ல. இந்த உரைக்கே கூட பல்வேறு ஓஷோ ஆய்வாளர்களிடம் தொலைபேசியில் பேசி, தகவல்களை தெரிந்துகொண்டுதான் உருவாக்கியிருக்கிறேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
