அந்த வாசகர்கள், அந்த வாசிப்பு…
அன்புள்ள ஜெ
நலம்தானே?
இணையத்தில் உங்கள் கட்டுரைகளில் அடிக்கடி உங்கள் மேல் வசைபாடுபவர்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் மனநிலையை வெவ்வேறு கோணத்தில் பலமுறை எழுதியுமிருக்கிறீர்கள். வசைபாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல்முகமூடி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களின் அடிப்படை என்பது மதம் அல்லது சாதி சார்ந்த காழ்ப்புதான். மிகச்சிலர் மட்டும் கண்மூடித்தனமான அரசியல் பற்று கொண்டவர்கள். ஆனால் இதெல்லாம் உங்கள் வாசகர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. வாசகர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.
உங்கள் வாசகர்களையும் இந்த மழுங்கின உள்ளங்கள் தொடர்ச்சியாக வசைபாடி இழிவுசெய்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். தொடக்க காலத்தில் எனக்கு இந்த கருத்துகள் மேல் ஒரு கவனம் இருந்தது. இப்படி நம்மை சொல்கிறார்களே, உண்மையில் இவர்கள் நம்மைவிட நுட்பமானவர்களாக இருப்பார்களோ, நாம் கவனிக்கவேண்டுமோ என்று நினைப்பேன். ஆனால் முகநூலில் ஒரு மாதம் தொடர்ந்து கவனித்தால்போதும் எப்பேற்பட்ட அசடுகள் என்று தெரியவரும். அந்த அசட்டுத்தனம், அறியாமைதான் அவ்வளவு தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது என்றும் தெரியவரும். உண்மையிலேயே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது.
அதேபோல அவ்வப்போது எழுத்தாளர்கள் உங்கள் வாசகர்களை மட்டம்தட்டி ஏதாவது சொல்வார்கள். நான் உடனே ஒரு குற்றவுணர்ச்சியை அடைவேன். சரிதான், நமக்குத்தான் வாசிப்பு போதவில்லை, இவரையும் வாசிப்போம் என நினைப்பேன். இப்படி பத்துக்கும் மேற்பட்டவர்களின் எழுத்துக்களை காசுகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவர்களில் பலர் தலையில் அடித்துக்கொண்டு தூக்கி வீசவேண்டிய நூல்களைத்தான் எழுதியிருக்கிறார்கள். மிகச்சிலர் பரவாயில்லை ரகப் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் பரவாயில்லை ரக எழுத்தை எழுதியவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். இவர்கள் அதிகம் வாசிக்காதவர்கள் என்பதனால் உண்மையில் இவர்கள் இருக்கும் இடம் இவர்களுக்கே தெரியாது. ஆகவே உங்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். பொறாமையும் கசப்பும் அடைகிறார்கள். ஒரு காலகட்டத்தில் எழுதும் தலைசிறந்த எழுத்தாளர்மேல் எப்போதுமே முதன்மையான கவனம் இருக்கும். அவருடைய எழுத்துக்களால் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என நினைக்கும் வாசகர்களும் இருப்பார்கள். இந்த சராசரி எழுத்தாளர்களை இலக்கியவாதிகள் ஒரு பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமே ஒழிய வாசகர்கள் பொருட்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. ஆகவே எவரும் வாங்குவதில்லை. வாசகனை இவர்கள் மட்டம்தட்டுவதும் வசைபாடுவதும் இவர்களுக்கு வாசகன் என்பவனே இல்லை என்பதனால்தான். அது வருத்தமானதுதான். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. வாசகன் தன் நேரத்தையும் பணத்தையும் வெறும் அனுதாபத்துக்காக இவர்களுக்குச் செலவிடமுடியாது அல்லவா?
ஜெ, நான் கேட்கவருவது இன்னொன்று. இந்த வசைகள் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பதிப்பகம் வெளியிடும் உங்கள் நூல்கள் எல்லாமே விற்றுக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் யூடியூபில் பார்த்தால் உங்களுடைய நூற்றுக்கணக்கான கதைகளை வெவ்வேறு குரல்கலைஞர்கள் சொல்லி, வாசித்து வைத்திருக்கிறார்கள். பல பதிவுகளை லட்சம் பேர் வரைக்கும் கூட பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு பதிவுக்குக் கீழேயும் கண்ணீரும் கொந்தளிப்புமாக ஏராளமான எதிர்வினைகள் உள்ளன. எல்லாமே சாமானியர்கள். பலர் சரளமாகத் தமிழ் வாசிக்க முடியாதவர்கள் என்பதுகூடத் தெரிகிறது. பலருடைய எதிர்வினைகளில் அவர்கள் அவற்றை கதைகளாக எடுத்துக்கொள்ளவில்லை, வாழ்க்கைப்பாடமாகவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரிகிறது.
ஓர் எழுத்தாளராக இந்த சாமானியர்களின் எதிர்வினைதானே உங்களுக்கு முக்கியம்? இவற்றைப் பற்றி நீங்கள் பெரிதாக எழுதியதில்லை. இத்தனை லட்சம் பேர் உங்கள் கதைகளுடன் கொண்டிருக்கும் இந்த ஆத்மார்த்தமான உறவு ஒரு மகத்தான நிகழ்வுதானே? தமிழில் இது ஓர் அரிய பண்பாட்டு நிகழ்வுதானே?
ரா. ஜெயக்குமார்.
அன்புள்ள ஜெயக்குமார்,
உண்மைதான், அந்த வாசகர்களிடம் கதைகள் சென்று சேர்வதும், அங்கே கிடைக்கும் எதிர்வினையும் மிகமிக முக்கியமானவைதான். அவை இன்று தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகள்தான். இலக்கியவாதி எழுதிக்கொண்டிருப்பது இலக்கியத்தை ஒரு வம்பாக, கேளிக்கையாக, அறிவுவிளையாட்டாக எண்ணிக்கொண்டிருக்கும் சிறு வட்டத்திடம் அல்ல. இலக்கியத்தை வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளும் மக்கள் திரளிடம்தான்.
ஆகவே நான் என் கதைகள் ஒலிவடிவில் சென்று சேர்வதை ஆதரித்தே வருகிறேன். அவற்றுக்கு எந்த காப்புரிமைக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. அவற்றை கேட்பவர்கள் எந்த வடிவில் கேட்டாலும் அது நன்றே என எண்ணுகிறேன். அந்த எதிர்வினைகளை அவ்வப்போது நான் பார்ப்பதுண்டு. பல எதிர்வினைகளில் அவை என் கதைகள் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை என்பதைக் கண்டிருக்கிறேன். பவா சொல்லும் பல கதைகளை கேட்பவர்கள் அவர் சொல்லும் கதையாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலென்ன, அதுவும் சரிதான், சென்றடைய வேண்டியது கதைதான் என்று எண்ணிக்கொள்வேன்.
அதேபோல வெண்முரசின் கதைகள் மகாபாரதக் கதைகளாகவே மாறி பல அரங்குகளில் சொல்லப்படுகின்றன. நான் எழுதியவை அவை என சொல்பவர், கேட்பவர் எவருக்கும் தெரியாது. அண்மையில்கூட அப்படி ஒருவர் உருக்கமாக திருவிழா நிகழ்வு ஒன்றில் வெண்முரசுக்கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். அதுவும் இயல்பானதே. மகாபாரதத்தை ஒட்டிய பல வடிவங்கள் அவ்வாறு கலந்தே மகாபாரதம் உண்மையில் பாரதக் கதையாக ஆகியிருக்கிறது. உக்ரசிரவஸ் முதல் நல்லாப்பிள்ளை வரை. என் கதை பவா வழியாக சற்று உருமாறுவதும் அவ்வாறுதான் இயல்பானது, கதைகளின் இயல்பு அது.
நான் வசைகளைப் பற்றிச் சொல்வது ஒரு காரணத்தால்தான், நம் சூழலில் உள்ள மிக அபாயமான பொறிகள் அவை. அவற்றை அறியாமல் இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். ஆனால் சமூகவலைத்தளங்களில் ஈடுபட்டு அவற்றில் சிக்கிக்கொள்பவர்கள் தங்கள் சிந்தனையில் மிகப்பெரிய திரிபை அடையக்கூடும். வாசகர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்கள், விஷயம் அறிந்தவர்கள். மறுக்கவில்லை. ஆனால் வெறும் சுவாரசியத்துக்காக அந்த வசைகளைக் கவனித்தால் கூட மெல்ல மெல்ல நம் உள்ளத்தின் ஒரு பகுதி அவற்றுடன் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிடும். எதிர்மறைத்தன்மை கொண்டவற்றுக்கு அபாரமான வசீகரம் உண்டு. அவற்றைப் பற்றிய எச்சரிக்கை எவ்வளவு இருந்தாலும் பிழையல்ல.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
