ஓஷோ: மரபும் மீறலும்-12
இந்திய சிந்தனை முறைகளில் இந்து மரபுடன் ஓஷோ எங்கெல்லாம் முரண்படுகிறார், எங்கெல்லாம் உடன்படுகிறார், எவற்றை முன்வைக்கிறார் என்று பார்த்தோம். இந்திய சிந்தனையில் முதன்மையிடம்பெறும் தத்துவமரபான பௌத்தத்துடன் ஓஷோவுக்கான தொடர்பு என்ன?
பௌத்தம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தலையை மொட்டையடித்து காவி உடுத்தியிருக்கும் பிக்ஷு. எனவே அதற்கும் ஓஷோவுக்கும் ஒரு தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் பௌத்தம் பற்றிய ஒரு சித்திரத்தை உண்டாக்கிக்கொண்டால் ஓஷோ ஏற்கக்கூடியதும் மறுக்கக்கூடியதுமான நான்கு வித பௌத்தங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஆசாரவாத பௌத்தம்
ஐரோப்பிய ஆய்வாளர்கள் இங்கு வருவதற்கு முன்பிருந்த பௌத்தம் ஆசாரவாத பௌத்தம், அல்லது மரபார்ந்த பௌத்தம். பௌத்தத்தில் முறையே புத்தம், தர்மம், சங்கம் என மூன்று விஷயங்கள் உள்ளன. அதைத் தலைகீழாகப் போட்டால் ஆசாரவாத பௌத்தம் என்று சொல்வார்கள். சங்கம், புத்தம், தர்மம் என்று. சங்கத்துக்காகவே பௌத்தமே. தர்மம் இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பதே ஆசாரவாத பௌத்தம்.
ஆசாரவாத பௌத்தம் ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொன்றாக உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, சீனா என ஆசாரவாத பௌத்தத்தின் முகங்கள் பல. அவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏராளம். ஆனால் அடிப்படையில் அவையெல்லாமே பௌத்தத்தின் மெய்த்தரிசனங்களை அன்றாட அனுஷ்டானங்களாக ஆக்கிக்கொள்பவை, அமைப்புகளாக தங்களை வரையறைசெய்துகொண்டு தங்களையும் பிறரையும் கட்டுப்படுத்த முயல்பவை.
இந்த ஆசாரவாத பௌத்தம் ஓஷோவுக்கு முற்றிலும் முரணானது. அவருடைய மொத்த உரையிலும் இந்த ஆசாரவாத பௌத்தத்திற்கு எதிரான நக்கல்கள், கிண்டல்கள் உண்டு. அவர் இதை காயடிக்கப்பட்ட பௌத்தம் என்று விமர்சிக்கிறார்.
சீர்திருத்த பௌத்தம்
இன்று நாம் பௌத்தம் என்று சொல்லக்கூடியது ஐரோப்பிய ஆய்வாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் அவர்கள் இங்கு வரும்போது கீழைநாடுகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகை பௌத்தம் இருப்பதை பார்த்தனர். அவற்றுக்கிடையே ஒரு ஒற்றுமையை கண்டடைய முயன்றனர். அத்தகைய பௌத்தங்களுக்கு இடையே இருக்கும் பொதுவான நூல்களை மொழிபெயர்த்து ஒன்றாக சேர்த்து ஒரு பௌத்தத்தை கட்டமைத்தனர். அவ்வாறு அவர்கள் கட்டமைக்கும்போது அதில் இருக்கும் பொதுத்தன்மையை பௌத்தர்கள் கண்டுகொண்டனர். அதுவே உலகளாவ பௌத்தம் என்னும் கருத்துரு உருவாக வழியமைத்தது.
கயாவில் இருந்த இடிந்த மகாபோதி ஆலயத்தை அனைத்து பௌத்த தரப்பினரும் சேர்ந்து கட்டியெழுப்புவது என்பது பௌத்தத்தை அவர்களே கட்டியெழுப்பிக் கொள்வதுதான். பௌத்தம் ஒற்றை மதமாக அறியப்பட்டது அதற்குப் பிறகுதான். அதற்கு முன் இலங்கை பௌத்தத்திற்கும் திபெத்திய பௌத்தத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அப்படி வேறு பௌத்தமரபுகள் இருப்பதே அவர்கள் எவருக்கும் தெரியாது. பல்வேறு பகுதிகளில் இருந்த பௌத்த பிரிவினருக்கு இடையே பொதுத்தன்மைகள் உருவாகி வந்தது நவீன காலகட்டத்தில்தான்.
அதில் ரைஸ் டேவிட்ஸ் (Thomas William Rhys Davids) என்ற ஆய்வாளர் முக்கியமானவர். பௌத்த ஆய்வுகளை செய்து அவற்றையெல்லாம் ஒருவாறு தொகுத்தளித்தவர் இவரே. பிரம்மஞான சபையை சேர்ந்த கர்னல் ஆல்காட் (Henry Steel Olcott) ஒரு பௌத்த ஆய்வாளர். பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று இவரை சொல்லலாம். இன்று நாம் பார்க்கக்கூடிய பௌத்தத்தின் முகத்தை உருவாக்கியவர் பால் காரஸ் (Paul Carus) என்பவர். இவர் எழுதிய The Gospel of Buddha என்ற நூல்தான் மேலைநாடுகள் முழுக்க பாடபுத்தகமாக இருந்தது. பௌத்தத்தை பற்றிய உலகளாவிய புரிதலை உருவாக்கியது அந்த புத்தகம்தான். ஆனால் பௌத்தத்தை கிறிஸ்தவ அச்சில் இட்டு வார்த்தெடுத்த ஒரு புத்தகம்.
ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இந்த பௌத்தத்தை செயலூக்கம் கொண்ட பௌத்தம் எனலாம். அதாவது மரபார்ந்த பௌத்தத்தில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகள், பேதங்களை களைந்து ஒருவித சீர்திருத்த பௌத்தத்தை உருவாக்க அவர்கள் முயன்றனர். கர்னல் ஆல்காட்டின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அநகாரிக தர்மபாலா (Anagarika Dharmapala) என்பவர் இலங்கையில் இருந்து உருவாகி வந்தார். அவர் மகாபோதி ஆலயத்தை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றியவர். அநகாரிக என்றால் நகரத்தில் எங்கும் தங்காமல் அலைந்து திரியக்கூடியவர் என்று பொருள். ஆனால் அவர் திருமணமானவர், அதற்குரிய ஆசாரங்களை கடைபிடித்தவர்.
இந்த சீர்திருத்த பௌத்தம் (Activist Buddhism) நம்பிக்கைகளை களைந்த தர்க்கபூர்வமான பௌத்தம். அந்த பௌத்தத்தின் செல்வாக்குதான் அயோத்திதாசரில் வெளிப்படுகிறது. அதன் இன்னொரு வெளிப்பாடுதான் அம்பேத்கரின் நவயான பௌத்தம். ஆனால் இவ்வகையான சீர்திருத்த பௌத்தமும் ஓஷோவுக்கு ஏற்புடையதல்ல. இந்த சீர்திருத்த பௌத்தம் ஆன்மீகத்தன்மையை இழந்து அரசியல்மயப்படுத்தப்பட்ட பௌத்தம். அதாவது பௌத்தம் எதற்காக இருக்கிறதோ அந்த அம்சத்தையே களைந்துவிட்டு எஞ்சிய பௌத்தம் அது. பௌத்தம் எதை சொல்கிறதோ அவை அனைத்தையும் அதில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் சீர்திருத்த பௌத்தம் வந்துவிடும் என்கிறார் ஓஷோ.
ஜென் பௌத்தம்
ஜென் பௌத்தம் ஓஷோவுக்கு ஏற்புடையது. இந்திய சூழலில் ஜென் பௌத்தத்திற்கு இவ்வளவு பெரிய ஏற்பை உருவாக்கியவர் ஓஷோதான். ‘ஒருகூடை ஜென்’ என்ற புத்தகம் தமிழில் பலராலும் படிக்கப்பட்ட ஒன்று. ஓஷோயிஸ்டுகள் பலரும் ஓரிரண்டு ஜென் கவிதைகளை எழுதிப்பார்த்திருப்பார்கள். ஜென் பௌத்தத்தில் ஆசாரம் கிடையாது. அது தூய தத்துவார்த்தமான பௌத்தம். மெய்ஞானத் தரிசனம் கொண்டது. அதேவேளை, தத்துவத்திற்கான தர்க்க அமைப்பு அதனிடம் இல்லை. அந்த தரிசனத்தைக் கவிதைகளாக, படிமங்களாக முன்வைப்பது. ஆகவே இலக்கியம், கலை ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதன் சாராம்சம் என்பது மறைஞானப் பயிற்சிதான்.
ஜென் பௌத்தத்தில் உள்ள ‘ஒருகை ஓசை’ என்ற உவமை ஓஷோவுக்கு மிகவும் பிடித்தது. ஒருகை ஓசையெழுப்புமா என்றால், இந்தப்பக்கம் இருந்து ஒரு நுண்மையான கை சென்று அதை தடுத்தால் ஓசையெழுப்பும். அது உங்களுக்கு மட்டும்தான் கேட்கும். அந்த ஓசையை தியானத்தால் அடைவதுதான் ஜென் பௌத்த நிலை. ஓஷோ ஜென் பௌத்தம் பற்றி பல கோணங்களில் பேசியிருகிறார். ஜென் படிமங்கள்மேல் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஜென் மறைஞானப் பயிற்சிகளையும் தன் மரபுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
திபெத்திய மறைஞான பௌத்தம்
திபெத்திய பௌத்தம் என்பது இந்தியாவில் இருந்த வஜ்ராயன பௌத்த மரபு பத்மசம்பவரால் திபெத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, திபெத்தில் இருந்த மந்திரவாதச் சடங்குமதமாகிய பான் மதத்துடன் இணைக்கப்பட்டு உருவாகி வந்தது. அது வஜ்ர மார்க்கம், அதாவது இடிமின்னலின் பாதை. வஜ்ராயனம் இந்தியாவின் தாந்த்ரீக மரபில் இருந்து உருவாகி வந்தது. தாந்த்ரீக பௌத்தம் என்றே அது சொல்லப்படுகிறது. ஓஷோ தாந்த்ரீகத்தை தன் வழிமுறைகளில் முதன்மையாக கொண்டவர், ஆகவே அவர் திபெத்திய வஜ்ராயன பௌத்த மரபை தனக்கு அணுக்கமானதாக எண்ணினார். அதன் பல வழிமுறைகளை தன் மரபுக்குள் இணைத்துக்கொண்டார்.
ஓஷோ திபெத்தியச் சாவுநூல் என்னும் மறைஞான நூலுக்கு ஆற்றிய விளக்கவுரை குறிப்பிடத்தக்கது. ஓஷோ அந்த தாந்த்ரீகமுறைகளை சடங்குகளாக நம்பிக்கைசார்ந்து ஏற்றுக்கொள்ளவில்லை. அவை அகம்சார்ந்த குறியீட்டுச் செயல்பாடுகள், நவீனமுறையில் அணுகவேண்டியவை என்று எண்ணினார். அவற்றுக்கு நவீன விளக்கம் அளிக்க முயன்றார்.
5 சமணம்
ஓஷோ பிறப்பால் ஒரு சமணர். அவரது இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்த உலகில் அவருக்கு பிடிக்காத மதம் அதுதான் எனலாம். ஓஷோவின் முன்னால் சிவப்பு துணியை காட்டுவது போலத்தான் சமணத்தைப் பற்றிப் பேசுவது . ஒட்டுமொத்த சமணத்திலுமே ஓஷோவுக்கு உவப்பான எதுவுமில்லை என்றுகூட சொல்லலாம். நிர்வாணமாக இருப்பது ஓஷோவுக்கு ஏற்புடையதா என்று கேட்டால், அவர் நிர்வாணத்தை ஆதரிக்கக்கூடியவர் அல்ல. அப்படி ஆதரித்தாலும் இளம் பெண்கள் நிர்வாணமாக இருக்கலாம், மற்றவர்கள் இருக்கத்தேவையில்லை என்றுதான் அவர் சொல்லக்கூடும்.
சமணத்தை பற்றி ஓஷோவின் சொற்களால் சொல்லவேண்டுமென்றால், மனிதனை மகிழ்ச்சியில்லாமல் ஆக்குவது எப்படியென்று, சுவையற்ற உணவு வழியாக, கடினமாக அமரும் முறைகள் வழியாக, தவறான அன்றாட வழக்கங்கள் வழியாக இரண்டாயிரம் ஆண்டுகளாக சோதனை செய்து உருவாக்கியெடுக்கப்பட்ட மதம் சமணம் என்கிறார். இப்படிப்பட்ட ஒரு கோடரி சமண மதத்திற்குள் அவர்களுக்கே எதிராக உருவாகி வந்தது என்பது அவர்களின் நீண்டகால ஊழின் விளைவாகத்தான் இருக்கும். ஓஷோ ஊழில் நம்பிக்கை கொண்டவர். ஆனால் சமணர்களை நாம் நம்பமுடியாது. இன்னும் ஐநூறாண்டுகளுக்குப்பின் இருபத்தைந்தாவது தீர்த்தங்கரராக ஓஷோ அமர்ந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த இயந்திரம் அப்படியே ஓடிவந்து சேர்ந்துவிடும்.
சமணத்திலுள்ள ஊனுண்ணாமை ஓஷோவுக்கு உவப்பானதே. அவர் மாமிச உணவை நிராகரித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவரை நம்ப முடியாது. வேறு எங்காவது மாமிச உணவே சிறந்தது என்றுகூடச் சொல்லியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால் சமணத்தில் உள்ள ஒரு விஷயம் ஓஷோவுக்கு உவப்பானதாக இருக்கலாம். சமணத்தில் சியாத்-வாதம் என்று ஒரு தர்க்கமுறை அல்லது தத்துவக் கொள்கை உள்ளது. ‘ஆனால்-வாதம்’ என்று அதை சொல்லலாம். எல்லா சாத்தியங்களையும் சொல்லிவிட்ட பின்பும் ஒரு ஆனால் மீதமிருக்க வேண்டும். ‘இந்த மலை இங்கு இருக்கிறது. ஆனால்…’ என்பது சமணத்தின் முக்கியமான ஒரு கண்ணோட்டம். எல்லா உண்மைகளும் ஒரு ‘ஆனால்’ஐ சேர்த்துக்கொண்டுதான் சொல்லப்படவேண்டும். முழுமையான ஒன்று இல்லை என்பது அவர்களின் சிந்தனை (Syādvāda – Theory of Non Absolutism). இந்த சியாத்-வாதம் ஒருவேளை ஓஷோவுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் இதுபற்றி எங்கேனும் சொல்லியிருக்கிறாரா என்று புரட்டிப்பார்ப்பது கடினம். எழுநூற்றி அறுபது நூல்களில் எங்கேனும் இருக்க வாய்ப்புண்டு. அதுபற்றி ஓஷோ ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்.
மேலும், பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் பொதுவாக சர்வாஸ்திவாதம் (Sarvāstivāda – The theory of all that exists) என்ற கருதுகோள் உள்ளது. வேதாந்திகள் எதுவும் இல்லை என்ற மாயாவாதத்தை சொல்வர் (Māyāvāda – The doctrine of illusion). சர்வாஸ்திவாதத்தை ‘அனைத்திருப்புவாதம்’ என்று சொல்லலாம். பொருள்கள் அனைத்துமே உண்மையில் இருக்கின்றன, அவற்றின் பருவடிவ இருப்பு மறுக்கமுடியாது என்று சொலும் ஒரு தர்க்கமுறை அவர்களுக்கு உள்ளது. அது ஓஷோவுக்கு உடன்பாடானதாக இருந்திருக்கலாம்.
6 பிறமரபுகள்
இந்திய ஞானமரபுக்குள் ஓஷோவை வைக்கும் பார்வையே இதுவரை நான் முன்வைத்தது. ஏனென்றால் ஓஷோவின் இடம் அதற்குள்தான். அவர் ‘மதமற்றவர்’ என்று சொல்லி இந்திய மரபுகளில் இருந்து அவரைப் பிரித்துப் பார்க்கும் பலர் அவர் தன்னை இந்திய மரபின் தாந்த்ரீகம், யோகம் முதல் பௌத்தம் வரையிலான மரபுகளுடனேயே பிணைத்துக்கொண்டார் என்பதையும்; பிறமதங்களை வெளியில் இருந்தே பார்த்தார் என்பதையும் காண்பதில்லை. அவர் பிறமதங்களை எப்படி அணுகினார் என்பதைக் காணலாம்.
இஸ்லாம்
இஸ்லாமை பொறுத்தவரை, குரானை ஒரு இராணுவ பயிற்சி கையேடு என்றுதான் ஓஷோ கருதுகிறார். அதவாது அது ஒருவகையான இராணுவத்தை உருவாக்குவதற்கான பயிற்சிமுறை என்கிறார். இன்று நினைத்துப்பார்க்கும்போது ஓஷோ சரியான காலகட்டத்தில் பிறந்து பாதுகாப்பாக இறந்துபோனார் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் இன்று ஓஷோ இருந்திருந்தால் எல்லா தரப்பினரிடமும் அடிவாங்கக்கூடியவராக இருந்திருப்பார். இங்கு ஓஷோவை பற்றி பேசும்போது மிக கவனமாகவே பேசுகிறேன். ஆனால் ஓஷோ இவ்வாறு பேசியிருக்கவில்லை. அவர் மிகவும் கட்டுப்பாடில்லாமல்தான் பேசியிருக்கிறார். ஆனால் இஸ்லாமின் ஒரு பகுதி அவருக்கு உடன்பாடானதாக இருந்திருக்கிறது. அது சூஃபிசம்.
சூஃபிசத்திற்கு இஸ்லாமில் வேர் உண்டு. நபியின் குகைத்தோழர்கள் என்று சிலர் இருந்திருக்கிறார்கள். மையப்போக்கிற்கு வெளியே எப்போதும் சிலர் இருந்திருக்கிறார்கள். சூஃபிசம் இன்று இஸ்லாமிய மதத்தால் கடுமையாக தாக்கப்படக்கூடிய காலகட்டம். நான் எனது மனைவியுடன் நாகூர் தர்க்காவிற்கு சென்றேன். பத்துபேர் வழிமறித்து, ‘போகாதீங்க, அது சமாதி வழிபாடு. நீங்கள் வழிபடக்கூடாது’ என்றனர். ‘நாங்க இந்துக்கள்’ என்றேன். ‘சரி போங்க, அது உங்களுக்குத்தான்’ என்றனர். இன்று சூஃபிசத்திற்கு எதிராக மிகப்பெரும் பிரச்சாரம் நடக்கிறது. இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்துக்கள் தங்கள் மதத்தின் ஒரு பகுதியாக சூஃபிசத்தை எடுத்துக்கொள்ளவேண்டி வரும் என்று நினைக்கிறேன். அவர்கள் கைவிடும்போது நாம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏராளமான தீர்த்தங்கரர்களுக்கு கிரீடம் வைத்து முனியாண்டி சாமியாக உட்கார வைத்திருக்கிறோம்.
அந்த சூஃபிசம் ஓஷோவுக்கு நெருக்கமானதாக உள்ளது. சூஃபி மரபில் இருப்பது ஒருவித கட்டற்ற தன்மை. நிறையக் கதைகளை உதாரணமாக சொல்லலாம். எங்கள் ஊரில் பீர் முகமது அப்பா என்ற ஒரு சூஃபி இருந்தார். அவர் ஐந்துவேளை தொழுகை செய்வது கிடையாது என்ற புகார் எழுந்தது. அப்போது மார்க்க பேரறிஞராகிய சதக்கத்துல்லா அப்பா காயல்பட்டினத்தில் இருந்து கிளம்பி இவரை தேடி வருகிறார். ‘நீங்கள் ஐந்துவேளை தொழுகை செய்வதில்லையா ?’ என்று கேட்கிறார். பீர்முகமது ‘இல்லையே, பாங்கு கிடைத்ததுமே தொழுகை செய்துவிடுகிறேனே’ என்கிறார். சரி பார்க்கலாம் என்று சதக்கத்துல்லா அங்கு உட்கார்ந்து கவனிக்கிறார். அப்போது பாங்கு ஒலி கேட்கிறது. பீர்முகமது தொழுகை செய்யாமல் நெசவு செய்துகொண்டிருக்கிறார். அதைக்கண்ட சதக்கத்துல்லா ‘நீங்கள் தொழுகை செய்யவில்லையே’ என்று கேட்கிறார். ‘எனக்கு பாங்கு சத்தம் கேட்கவில்லையே’ என்கிறார் பீர்முகமது.
சிறிதுநேரம் கழித்து ஒரு பசுமாடு கத்தும் சத்தம் கேட்டது. பாங்கு வந்துவிட்டது என்று பீர்முகமது தொழுகை செய்கிறார். ‘இது மாடு கத்தும் சத்தம்தானே’ என்கிறார் சதக்கத்துல்லா. பீர்முகமது அவரிடம் தனது கையை தொட்டுக்கொண்டிருக்கும்படி சொல்கிறார். சதக்கத்துல்லாவும் அவ்வாறே செய்கிறார். அடுத்தமுறை ஒரு நாய் குரைக்கும்போது இருவருக்குமே பாங்கு ஒலி கேட்கிறது.அப்போது சதக்கத்துல்லா பீர்முகமதை இறைஞானி என்று உணர்ந்து அவரை வலியுல்லா என்று அழைக்கிறார். அதன்பின் அவருக்கு தர்க்கா அமைகிறது. ஆகவே ஐந்துவேளை தொழுகைக்கு வெளியே இருப்பவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
கோழிக்கோட்டில் ஒரு புகழ்பெற்ற சூஃபி இருந்தார். அவர் ஆடை அணியும் வழக்கமற்றவர். கோழிக்கோடு சந்தைப்பகுதியில் நிர்வாணமாகத்தான் அலைந்துகொண்டிருப்பார். யாரோ ஒருவர் அவருக்கு வேட்டி அளித்தார்கள். அவர் அந்த வேட்டியை கையில் எடுத்துக்கொண்டு சென்றார். ஒரு காவலர் அவரை பிடித்து ‘எங்கு செல்கிறாய்’ என்று விசாரித்தார். அவர் ‘எஜமான், ஆடை மாற்றுவதற்கு மறைவான இடம் தேடி செல்கிறேன்’ என்றார்.
ஒருநாள் அவர் கோழிக்கோடு அங்காடி முன்னால் துணியில்லாமல் நின்றுகொண்டிருந்தார். திடீரென்று அருகில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்று அவசரமாக ‘ஒரு துண்டு கொடு’ என்று கேட்டார். கடைக்காரர் ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தார். அதை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்து சாலையில் நின்றார். நாராயணகுருவும் அவருடைய மாணவர்களும் அவ்வழியாக சென்றார்கள். அவர்கள் கடந்து சென்றுவிட்டபின்பு மீண்டும் துண்டை அவிழ்த்துப்போட்டுவிட்டு சென்றார். ‘என்ன செய்கிறீர்கள்’ என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘ஒரு மனுஷன் முன்னால் துணியில்லாம நிக்கக்கூடாதுல்ல’ என்றார்.
சூஃபிசத்தில் மீறல் வழியாக, நகைச்சுவை வழியாக தொடர்புறுத்தக்கூடிய ஒரு மரபு உள்ளது. அந்த மரபு ஓஷோவுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. ஓஷோ ஜலாலுதீன் ரூமியை பற்றி எழுதியிருக்கிறார். ஓஷோ அவரை ஒரு சூஃபியாகத்தான் பார்க்கிறார். இந்திய சூஃபி இயக்கம் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். இஸ்லாமில் ஓஷோவுக்கு உடன்பாடான அம்சம் என்பது அதுதான்.
கிறிஸ்தவம்
சமணத்திற்கும் ஓஷோவுக்கும் என்ன உறவு இருக்கமுடியுமோ அதே அளவு உறவுதான் அவருக்கு கிறிஸ்தவத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. ஓஷோவின் உரைகளிலுள்ள கிறிஸ்தவ எதிர்ப்பு புகழ்பெற்றது. எந்த பேருரையிலும் கன்யாஸ்திரீகளையும், கிறிஸ்தவ போதகர்களையும் கிண்டல் செய்ய அவர் தவறுவதில்லை
கிறிஸ்தவத்தில் மையப்போக்காக இருப்பவை மூன்று மரபுகள்.
நாஸ்டிக் (Gnosticism)
ரோமன் கத்தோலிக்கத்திற்கு முன்னால் இருந்த ஒருவகை நோன்புமுறையை நாஸ்டிக் மரபு என்கிறார்கள். அதன் அம்சம் இன்று இந்தியாவில் வேறொரு வடிவில் காணப்படுகிறது. அதாவது உபவாச ஜெபம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது போன்றவை. இன்று அது கிறிஸ்தவத்தின் பல சபைகளின் பொதுவான நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையாக உள்ளது. தொடக்ககாலக் கத்தோலிக்கம் நாஸ்டிக் மரபை முழுமையாக ஒறுத்தது. அவர்கள் ரகசிய இயக்கமாக நீடித்தனர். ஆனால் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் அது கத்தோலிக்கத்திற்குள் வேறுவழியாக உள்நுழைந்துவிட்டது. அதை ஞானவாத கிறிஸ்தவம் என்றும் சொல்வர். இதை ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாஸ்டிக் மதத்தை பற்றி சொல்லும்போது, ‘பட்டினி கிடப்பதென்றால் கிட, அதை ஏன் கிறிஸ்துவின் பெயரால் செய்கிறாய்’ என்று கேட்கிறார்.
கத்தோலிக்க கிறிஸ்தவம் (Roman Catholicism)
கத்தோலிக்க கிறிஸ்தவத்தை எந்நிலையிலும் ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியும். அவருடைய கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் பற்றிய கிண்டல்களை இன்று மேடையில் சொன்னால் சட்டம் என்மேல் பாயும் சூழல் உள்ளது. அவரால் கத்தோலிக்கத்தை எவ்வகையிலும் ஏற்கமுடியாது. சிரிக்காத ஒரு கிறிஸ்தவத்தை உண்டாக்கிவிட்டார்கள் என்று அதைப்பற்றி சொல்கிறார். காயடிக்கப்பட்ட கிறிஸ்து என்கிறார். ஆனால் ஆச்சரியமான ஒன்றுண்டு, கத்தோலிக்க துறவிகளில் ஓஷோவின் செல்வாக்கு கொண்ட பலர் உண்டு. அந்த அமைப்பின் இறுக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் அவர்கள். ஆண்டனி டிமெல்லோ அவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
சீர்திருத்த கிறிஸ்தவம் (Protestantism)
கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக தோன்றியதே சீர்திருத்த கிறிஸ்தவம். அப்படியென்றால், சுரண்டலுக்கு எதிராக உண்டான அந்தp பிரிவு புரட்சிகரமானதாக இருந்திருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படியல்ல. சுரண்டலுக்கு எதிராக தோன்றிய ஒரு அமைப்பு அதைவிட பெரிய சுரண்டல்தனத்துடன் இருக்கமுடியும் என்பதை சீர்திருத்த கிறிஸ்தவம் நிரூபித்தது. ஏனென்றால் அது கத்தோலிக்க ஆட்சிக்கு எதிராக உருவான தேசிய அரசுகளால், அதாவது அரசர்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டது.
உலகம் முழுக்க காலனியாதிக்கத்தை ஏற்படுத்தி, பஞ்சங்களை உருவாக்கி, உலக மக்கட்தொகையில் மூன்றிலொரு பகுதியை கொன்றழித்தது சீர்திருத்த கிறிஸ்தவம்தான். உலகம் முழுக்க உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளை உருவாக்கியதும் அதுதான். இன்று உலகின் மிகத்தீவிரமான அடிப்படைவாதிகள் நீங்கள் எண்ணுவதுபோல ஐ.எஸ்.ஐ.எஸ். அல்ல. அது சீர்திருத்த கிறிஸ்தவம்தான். ஓஷோவுக்கு அது எவ்வகையிலும் உடன்பாடானது கிடையாது.
ஆனால் அந்தக் கிறிஸ்தவத்தில்கூட ஓஷோவுடன் உரையாடக்கூடிய ஓர் இடம் உள்ளது. அது தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், எமிலி சோலா, பேர்லாகர் க்விஸ்ட், நிகாஸ் கசண்ட் ஸகீஸ் போன்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் உருவாக்கிய கிறிஸ்துவின் மானுட வடிவம். பதினேழாம் நூற்றாண்டில் இருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தையும் கடந்து சிந்திக்கக்கூடியவர்கள், வேறுவகையில் கிறிஸ்துவை அணுகக்கூடிய இலக்கியவாதிகள் உருவாகிவந்தனர். கிறிஸ்துவை ஒரு மாபெரும் மனிதநேயராக, ஒரு மகத்தான விடுதலை அடையாளமாக அவர்கள் சிந்தித்தனர். அவர்களுக்கு முந்தைய மூன்று தரப்பினரும் உருவாக்கி வைத்திருந்த மரபான மத அடையாளங்களிலிருந்து கிறிஸ்துவை மீட்டெடுத்தனர்.
எனது கிறிஸ்துவும் அந்த கிறிஸ்துதான். நான் இங்கு கீதை உரை ஆற்றியபோது அரங்கில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புண்பட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கு கிருஷ்ணன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கிறிஸ்துவும் முக்கியம் என்று அந்த உரையில் சொன்னேன். எப்போதும் அதை சொல்வேன். நான் கண்டடைந்த கிறிஸ்து தல்ஸ்தோயுடைய, நிகாஸ் கசந்த்சாகீஸுடைய, யோஸ் செரமாகோவுடைய (José Saramago) கிறிஸ்து. அது கலைஞர்களால் கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்து. ஆதிக்க கிறிஸ்துவோ மதமாற்ற கிறிஸ்துவோ அல்ல. பேருந்தில் நம் அருகில் கையில் பைபிளுடன் வந்து உட்காரும் வெறிகொண்ட தப்பரப்பாளனின் கிறிஸ்து அல்ல.இந்த உலகில் எத்தனையோ ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் தன்னை அறிவற்றவர்களின் தரப்பில் இருந்து, பாவியின் தரப்பில் இருந்து பேசிய ஞானி, மனிதகுமாரர் அவர். அந்த கிறிஸ்துவுக்கு ஓஷோ மிக நெருக்கமானவர். அவருடைய உரைகளில் மேற்கோள்களாக வரும் கிறிஸ்து இந்த கிறிஸ்துதான்.
ஓஷோவின் மீமதம்
இங்கு நான், ஒவ்வொரு மதத்திலும் எது ஓஷோவை சென்று தொடுகிறது, எதைப்பற்றி அவர் பேசியிருக்கிறார், எதை மறுக்கிறார் என்பதைத்தான் சொல்லிவந்தேன். இந்த வரையறை என்பது ஓஷோவை புரிந்துகொள்வதற்கு மிக உதவியானது. வேறொரு வகையில் சுருக்கமாக இப்படி சொல்லலாம். இந்த ஒவ்வொரு மதத்திலும் செயலூக்கம் கொண்ட, வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறிச்செல்லக்கூடிய, மாற்று சிந்தனையாக நிலைநிற்கக்கூடிய, பிறிதொன்றாக எழுந்து வரக்கூடிய ஒரு தரப்பு உள்ளது. அது அந்த மதம் அல்ல, பிறிதொரு தரப்பு என அதைச் சொல்வேன். அந்த பிறிதொன்றுகள் அனைத்தையும் சரடுகளாக கோர்த்து முடைந்து ஓஷோ தனது தரிசனத்தை முன்வைக்கிறார். Seven Samurai போன்ற படங்களில் ஒரு பெரிய செயல்திட்டத்திற்காக வெவ்வேறு திறன்கொண்ட ஆட்களை ஒருங்கிணைப்பார்கள். அதுபோல எல்லா ஞான மரபுகளில் இருந்தும் தகுதியானவற்றையெல்லாம் எடுத்து தொகுத்து முன்வைக்கிறார்.
அவருடைய தரப்பை ஒருவித Meta religion அல்லது Meta spirituality என்று சொல்லலாம். Meta என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து கிளைத்த, ஒன்றுக்கு அடுத்து இரண்டாவதாக இருக்கக்கூடிய என்று பொருள். மீமதம் என மொழியாக்கம் செய்யலாம். மதத்தில் முளைத்து, மதத்தை விமர்சித்து, மதத்தின் மாற்றாக நிலைகொள்ளும் எதிர்மதம் அது. அத்தகைய மீமதத்தை ஓஷோ முன்வைக்கிறார் எனலாம். ஒருவகையில் அவரை சந்தனமரம் என்று சொல்லலாம். சந்தனமரம் மண்ணில் இருந்து எதையும் எடுத்துக்கொள்வதில்லை. மற்ற மரங்களின் வேர்களுடன் பிணைந்து, அம்மரங்கள் எடுக்கக்கூடிய சத்துகளை தான் எடுத்துக்கொண்டு வளர்கிறது. இந்த காட்டில் விளைந்த ஒரு சந்தனமரம் என்று ஓஷோவை சொல்வேன்.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
