தமிழ்,இசை, நினைவுகள்

 

2023 முதல் ஆண்டுதோறும் தமிழிசை முன்னோடியான பெரியசாமி தூரன் நினைவாக நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் தமிழின் சிறந்த இளம் நாதஸ்வரக் கலைஞர்களை அறிமுகம் செய்து தனி இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தற்செயலாகத்தான் இந்த எண்ணம் உருவாகியது. புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞரின் மகனான நண்பர் யோகேஸ்வரன் ஒரு நல்ல நாதஸ்வரக்கச்சேரி வைக்கலாம் என்னும் கருத்தைச் சொன்னார். அதையே தூரனின் பாடல்களால் ஆனதாக வைக்கலாமே என்னும் எண்ணம் தொடர்ந்து உருவானது. அப்படியே அதை விரிவாக்கிக்கொண்டே சென்றோம்.

முதல் ஆண்டு நிகழ்வு நாங்கள் எண்ணியதைவிட சிறப்பாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் அதை மிகச்சிறந்த அனுபவம் என்று சொன்னார்கள். நாஞ்சில் வந்து தழுவிக்கொண்டு பாராட்டினார். அத்துடன் அந்த நிகழ்விலேயே ஓர் அளவீட்டை உருவாக்கிவிட்டொம். நாங்கள் எங்கள் நிகழ்வுக்கு ஒரு நாதஸ்வரக் கலைஞரை அழைப்பதென்பது ஒரு கௌரவம், ஓர் ஏற்பு என்றாகியது. பல கலைஞர்கள் அடுத்த ஆண்டு யார் என பேச ஆரம்பித்தனர். நாதஸ்வர விமர்சகர் நண்பர் இனி நீங்கள் ‘எவரோ ஒருவரை’ அழைக்க முடியாது, உங்கள் அளவீடுகள் தெளிவாக இருக்கவேண்டும், இது ஒரு முக்கியமான அங்கீகாரமாக ஆகிவிட்டது என்றார்.

அதன்பின் எல்லா ஆண்டும் நாதஸ்வரக் கலைஞர்களை தெளிவாக விவாதித்துத்தான் தேர்வுசெய்கிறோம். ஓர் ஆண்டு நாங்கள் தேர்வுசெய்யும் கலைஞர் எங்களுடைய சிபாரிசு. அவர்கள்தான் இப்போது வாசிக்கும் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள். அதை தெரிவுசெய்ய இக்கலையில் ஊறியவர்களின் சிறு குழு ஒன்றும் உண்டு. பொதுவாக கோவை பகுதிகளில் திருமணத்திற்கு கோடிகளை இறைப்பார்கள், சகிக்க முடியாத நாதஸ்வர ஓலமும் இருக்கும். ஏனென்றால் எவரை அழைப்பது என்று தெரிந்திருக்காது, திருமண ஏற்பாட்டாளர்களே அதையும் செய்துவிடுவார்கள். அவர்கள் நல்ல நாதஸ்வரக்கலைஞர்களாக இருப்பதில்லை. எங்களுடைய இந்தப் பரிந்துரை ஒரு முதல்தர மங்கல நிகழ்வுக்கு அழைக்கப்படவேண்டிய கலைஞர்கள் எவர் என்பதற்காகவும்தான்.

இந்தக் கலைஞர்கள் கூடுமானவரை இளையதலைமுறையினராக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறோம். பொதுவான பார்வையில் நாதஸ்வரக் கலைஞர்களில் மேதைகள் இல்லை என்று தோன்றும், ஏனென்றால் நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. ஊடகங்களும் கவனிப்பதில்லை. ஆனால் உண்மையில் நாதஸ்வரம் தமிழிசையின் மைய வாத்தியம். அது எப்படியும் அழியாது நீடிக்கும். அதில் மேதைகள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். நாங்கள் தேடிக்கொண்டிருப்பது அவர்களையே.

முதல் ஆண்டு வாசித்த குழுவினர்.

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்

அவர்களின் தரவுகளை தமிழ்விக்கியில் விரிவாகப் பார்க்கலாம். தொடர்பு எண்களுடன்.

2024 ஆம் ஆண்டுக்கான இசைநிகழ்வில் வாசித்த இசைக்கலைஞர்கள்

முனைவர் சின்னமனூர் ஏ.விஜய் கார்த்திகேயன் இடும்பாவனம் வே.பிரகாஷ் இளையராஜா தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் கோவில்சீயாத்தமங்கை  டி.ஏ.எஸ். குமரகுரு

 

தூரனும் துவஜாவந்தியும்- யோகேஸ்வரன் ராமநாதன் தூரன் விழா இசை நிகழ்வு 2023 இருகரம் கூப்பி கேட்ட இசை அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால் மூன்று இனிமைகள் தமிழ்விக்கி தூரன்விழா இசைநிகழ்வு 2024 தமிழொடு இசைப்பாடல் மறந்தறியேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.