ஓஷோ: மரபும் மீறலும்-10

இந்திய மெய்யியல் மரபுக்கும் ஓஷோவுக்குமான தொடர்பு

தத்துவார்த்தமாக ஓஷோவின் இந்திய சிந்தனைப் பின்னணி, அவருடைய முன்தொடர்ச்சி என்னவாக இருக்கும்? ஓஷோவை எந்தெந்த இந்திய சிந்தனைமரபுகளுடன் இணைத்து யோசிக்கலாம்? ஒவ்வொன்றாகச் சொல்லிப்பார்க்கிறேன். ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்காக.

1. வேதங்களின் பூதவாதம்

வேதங்களை ஆராய்ந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் அதிலிருந்த கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுத்திருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்ய ஆய்வாளராகிய ஷெர்பாட்ஸ்கி (Fyodor Shcherbatskoy) மிக முக்கியமானவர். நான் பல இடங்களில் அவரை மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுக்கிறார். வேதங்கள் என்பவை நீங்கள் நினைப்பதுபோல ஒற்றைக்கருத்து வெளிப்பாடு கொண்டவை அல்ல. அவை வேர்ப்பிடிப்புகள் போல. மண்ணை அகற்றி வேரைப் பார்த்தோமென்றால் நூற்றுக்கணக்கான மரங்களின் வேர்கள் இணைந்து ஒற்றை படலமாக இருக்கும். அதுபோல பின்னாளில் இந்தியாவில் உருவாகிவந்த அனைத்து சிந்தனைகளுக்குமான அடிப்படைகள் வேதத்தில் உள்ளன. இந்தியாவின் வேதமறுப்பு சிந்தனைகளின் அடிப்படைகள்கூட வேதங்களில்தான் உள்ளன.

வேதங்களிலுள்ள பிருஹஸ்பதி ரிஷி அத்தகைய வைதிக மறுப்பு மற்றும் உலகியல்வாதச் சிந்தனைகளின் முன்னோடியாகச் சொல்லப்படுகிறார். அசுரகுரு சுக்ரர் அவருடைய மாணவராகச் சொல்லப்படுகிறார். அஜித கேசகம்பளர், கணாதர், தீஷணன் போன்ற பல்வேறு பூதவாத, ஜடவாத ரிஷிகளின் பெயர்கள் வேதங்களில் இருந்து எடுத்து சொல்லப்படுகின்றன. அவர்கள் உலகியல்வாத சிந்தனைகளை முன்வைப்பவர்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த தொடர்ச்சி உள்ளது. அவர்களில் இருந்து ஓஷோவுக்கான தொலைவு என்பது நான்கைந்து ‘இன்ச்’கள் தான். நம் காலகட்டத்தில் அவ்வாறு ஒருவர் இருந்திருக்கிறார், அவ்வளவுதான். எல்லா ஊர்களிலும் எல்லா காலகட்டத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார். அந்த தொடர்ச்சி அறுபட்டு போய்விடவில்லை.

2. சார்வாகம்

வேதங்களுக்குப் பிறகு ஒரு பெரிய தரிசனமாக சார்வாகம் இருந்திருக்கிறது. பின்னாளில் பக்தி காலகட்டம் மேலோங்கி வரும்போது சார்வாக தரிசனத்தின் நூல்கள், அவர்களுடைய மரபுகள் அற்றுப்போய்விட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சார்வாகம் எத்தகைய வரலாற்று பாத்திரத்தை ஆற்றியதோ அதை சமணமும் பௌத்தமும் ஆற்றத்தொடங்கியபோது சார்வாகத்தின் இடம் சிறிது சிறிதாக குறைந்துபோனது என்பதுதான் மேலும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். அது மறுக்கப்படவில்லை, கரைந்தழிந்தது. அல்லது வேறொன்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. ஆனால் சார்வாகம் மகாபாரத காலம் வரைக்கும் மிக வலுவான ஒரு தத்துவத் தரப்பாக இருந்திருக்கிறது.

இன்றைக்கு அவர்களுடைய சிந்தனைகளை அறிஞர்கள் தொகுத்துள்ளனர். குறிப்பாக வங்க மார்க்சிய அறிஞரான தேவிபிரசாத் சட்டோபாத்யாய (Debiprasad Chattopadhyaya) முக்கியமானவர். அவருடைய ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்ற நூல் கரிச்சான் குஞ்சு அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்திருக்கிறது. அந்த நூலில் சார்வாக சிந்தனைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அளிக்கிறார். பழைய நூல்களில் சுபக்கம், பரபக்கம் என்று உண்டு. ஒரு சிந்தனை தரப்பு தன்னைப்பற்றி (சுபக்கத்தை) சொல்வதற்கு முன் தன்னை மறுக்கும் தரப்புகள் (பரபக்கம்) பற்றி சொல்லும். சார்வாகம் அழிந்தாலும் அதை எதிர்த்த தரப்புகள் தங்கள் எதிர்த்தரப்பைச் சுருக்கி அளித்துள்ளவற்றில் இருந்து சார்வாகத்தை மீட்டுக்கொள்ளலாம். வேதாந்த நூல்களில் பரபக்கமாக எங்கெல்லாம் சார்வாகம் சொல்லப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் தொகுத்து வழங்குகிறார்  தேவிப்பிரசாத்.

அதேசமயம் தேவிபிரசாத்துக்கு முன்னாலேயே சார்வாகர்களை பற்றிய குறிப்பை உருவாக்கியவர் எம்.என்.ராய் (Manabendra Nath Roy). அவர் Radical Humanist இயக்கத்தின் நிறுவனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாக்களில் ஒருவர். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் எழுதிய Materialism: An Outline of the History of Scientific Thought என்ற நூலில் இந்திய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் பற்றி பேசும்போது சார்வாகர்களை பற்றிய ஒரு குறிப்பை அளிக்கிறார். அது மிகமுக்கியமான ஒரு தொடக்கம். ஏனெனில் அன்று இந்திய சிந்தனை என்றாலே மொத்தமாகவே ஆன்மிகம்தான் என்னும் எண்ணமே இருந்தது. இங்கிருந்த நாத்திகவாதச் சிந்தனைகள் வெளித்தெரியவில்லை.

அதன்பின் இந்திய தத்துவங்களை மிக விரிவாக எழுதியவர் எஸ்.என்.தாஸ்குப்தா (A History of Indian Philosophy, Surendranath Dasgupta). அவர் இந்த நாத்திகவாத, ‘ஒழுக்கம் கடந்த’ சிந்தனைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றிய ஒரு சிறு அடிக்குறிப்பை இங்கு சொல்லவேண்டியுள்ளது. இந்த ஒழுக்கம் கடந்த சிந்தனைகள் பற்றி எழுதும்போதெல்லாம் ஒருவித தார்மீக கோபத்துடன்தான் தாஸ்குப்தா எழுதுகிறார். ‘என்ன இது, ஒழுக்கமில்லாமல் இருக்கே’ என்பதாக ஒருவித அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் வாழ்வின் கடைசிக்காலத்தில் அவருடைய தட்டச்சருடன் உறவு ஏற்பட்டு, தன் மனைவியை விட்டுப்பிரிந்து சேரியில் சென்று தங்கி, அங்கு பிரச்சனை செய்து சாலையில் நின்றதை அவர் மகள் மைத்ரேயி தேவி ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். கொல்லப்படுவதில்லை என்றபேரில் தமிழில் வெளிவந்துள்ளது. எனக்கு தாஸ்குப்தாவின் புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும். ‘அறுபது வயதுவரை அப்படி இருந்துவிட்டு அதற்குமேல் இப்படி ஆகியிருக்கிறாய். அப்படியெனில் உனக்கு என்ன பிரச்சனை ?’ என்ற கேள்வியை புன்னகையுடன் எழுப்பிக்கொள்கிறேன். ஒழுக்கவாதிகளுக்கெல்லாம் பெரிய பிரச்சினை என்பது சலிப்புதான் போல.

சார்வாக தரிசனத்தின் அடிப்படை என்ன ? அவர்களுடைய தரிசனத்தை புரிந்துகொள்ள முக்கியமாக மூன்று விஷயங்களை சொல்லலாம்.

இன்பமே புருஷார்த்தம்

பொதுவாக, நான்கு புருஷார்த்தங்கள் (மானுடவாழ்வின் நோக்கங்கள்) சொல்லப்படுகின்றன. அவை தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோக்ஷம் (வீடு). திருக்குறள் இதில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்றை மட்டும்தான் சொல்கிறது. ஆனால் இந்து, பௌத்த, சமண மரபில் நான்கு பால்கள் உள்ளன. அதில் சார்வாகர்களின் தரப்பு இது. ‘இன்பம் மட்டும்தான் உண்மையான புருஷார்த்தம், இன்பத்தை அடையும்பொருட்டு தேவைப்படுவதே பொருள், இன்பத்தை சரியாக பகிர்ந்துகொள்ளும்பொருட்டு இருப்பதே அறம், சரியான முழுமையான இன்பத்தை அடைந்தவனுடைய நிறைநிலைதான் வீடுபேறு’

இங்கு காமம் என்று சொல்லப்படுவது வெறும் பாலியல் இன்பம் மட்டுமல்ல. பொதுவாக உலகியல் இன்பங்கள் அனைத்துமே காமங்கள்தான். அதாவது இவ்வுலகில், இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள். உண்ணுதல், குடித்தல், மகிழ்தல், மைந்தர்களோடும், நண்பர்கள் உறவுகளோடும் இருத்தல், சிறந்த அறிவார்ந்த இன்பங்களை அனுபவித்தல் அனைத்துமே இங்குள்ள இன்பங்களே. வேறு எங்கோ சென்று அனுபவிக்கும்பொருட்டு வாக்களிக்கப்பட்ட இன்பங்கள் அல்ல. இதை சொல்லும் ஒரு தத்துவ தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது.

புலனறிவே பிரமாணம்

நம் மரபில் பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி எனும் மூன்று பிரமாணங்கள் உண்டு. பிரத்யக்ஷம் என்பது புலன்களால் பருவடிவ உலகை நேரடியாக அறிவது. அவ்வாறு அறிந்தவற்றிலிருந்து நாம் செய்யக்கூடியது ஊகம் எனும் அனுமானம். மூன்றாவதான சுருதி என்பது ‘சொல்லப்பட்டது’ என்ற பொருளுடையது. சுருதி என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்சொல்வார்கள். வைதிகம் சார்ந்த எல்லா மதங்களுக்கும் வேதம்தான் சுருதி. முன்னறிவு என்பது வேதம்தான்.

ஆனால் சார்வாகர்களை பொறுத்தவரை சுருதி என்பது வேதமோ அல்லது முன்னால் சொல்லிவைக்கப்பட்ட எந்தவொரு நூலோ அல்ல. நமக்கு முன்னாலேயே தெரிந்த ஞானம்தான் (முன்னறிவு) சுருதி. நான் முதன்முறையாக கடலை பார்க்கிறேன். ஏற்கெனவே நான் ஏரியை பார்த்திருக்கிறேன். எனவே இந்தக்கடல் என்பது ஏரியைவிட பலமடங்கு பெரியது என்று புரிந்துகொள்கிறேன். இங்கு ஏரியைப்பற்றிய முன்னறிவே சுருதி. கடல் என்பது பிரத்யக்ஷம். எனவே சார்வாகர்களை பொறுத்த அளவில் மூலநூல், முன்னூல் என்று ஒன்று கிடையாது. கண்முன் உள்ளவற்றைப் பற்றிய புலனறிதலே அறிதல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

இன்று இந்தியாவிலோ, உலக அளவிலோ சிந்திக்கக்கூடிய மக்களிடையே மிகச்சிலருக்கு, கிட்டத்தட்ட ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும்தான் மூலநூல் (canon) என்று ஒன்று இல்லாமல் இருக்கிறது. அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் சுருதி என்பது பைபிள்தான். இஸ்லாமியர்களுக்கு சுருதி குரான். மார்க்சியர்களுக்கு மூலதனம். இவ்வாறு எந்தவொரு நூலும் இல்லாத, முன்னனுபவத்தை மட்டுமே முன்னறிதலாக எண்ணும் ஒரு சிந்தனை தரப்பு சார்வாகம். அப்படிப்பார்த்தால் சார்வாகர்களுடன் ஒத்துப்போகக்கூடிய சிந்தனையாளர்கள் உலக அளவிலேயே பத்துலட்சம் பேருக்குள் இருப்பதற்குத்தான் வாய்ப்புள்ளது. ‘சற்று முன் கிடைத்த அறிவைத்தான் சுருதியாக எடுத்துக்கொள்வேனேயன்றி, எழுதப்பட்ட எந்தவொரு நூலையும் அல்ல’ என்று சொல்லி காலூன்றி நிற்கக்கூடிய திராணி உடையவர்கள் குறைவுதான்.

தர்க்கம்

சார்வாகர்களுக்கு முக்கியமானதாக இருப்பது தர்க்கம். தான் அறிந்த ஒன்றை அனைவருக்குமான அறிதலாக மாற்றுவதற்குத்தான் அவர்கள் தர்க்கத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்குமேல் தர்க்கத்திற்கு இடமில்லை என்கிறார்கள். ஆகவே அவர்களை தார்க்கிகர்கள் என்றும் சொல்வார்கள். பழைய தமிழ் நூல்களில் தார்க்கிக மதம் என்றுதான் சார்வாகம் குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலையில் ‘சமயக்கணக்கர் திறம்கேட்ட காதை’ என்றொரு பகுதி உள்ளது. மணிமேகலை வெவ்வேறு சமயத்தவர்களிடம் சென்று உரையாடக்கூடிய பகுதி. அதில் சார்வாகர்கள் பூதவாதிகள் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். பூதம் என்றால் பருப்பொருள்கள் (பௌதிகம்). பருப்பொருள்வாதி / பொருள்முதல்வாதி (Materialist) என்பது அதன் பொருள். அக்காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர்களின் இருப்பு உள்ளது.

அந்த மரபில் இருந்து நாம் ஒரு கோட்டை எளிதாக ஓஷோவை நோக்கி இழுக்கமுடியும். ஓஷோ ஒரு நவீனகாலச் சார்வாகர் என்று சொல்லிவிடமுடியும். பின்பு எப்படி தமிழுக்கு, இந்திய மரபுக்கு ஓஷோ அன்னியமானவராக இருக்கமுடியும் ? தத்துவார்த்தமாக அவருடைய முன்தொடர்ச்சி அதுதான். நான் இங்கு சொல்லவருவது, ஓஷோவின் சிந்தனை நமக்கு ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே அதெல்லாம் இங்கு உண்டு என்பது அயல்ல. அப்படி எல்லா சிந்தனைகளையும் பழமையில் கொண்டுசென்று சேர்ப்பது எனக்கு உகந்ததும் அல்ல. ஓஷோ புதியவர்தான். அவரைப் போன்ற ஒருவர் முன்பு இருந்தது கிடையாதுதான். ஆனால் அதேவேளை, நான் முன்பு சொன்னதுபோல தத்துவத்தில் எதுவும் முற்றிலும் புதியது அல்ல. அவ்வாறு முற்றிலும் புதிதாக இருப்பதென்பது சாத்தியமற்றதும்கூட. தத்துவத்தில் எல்லாமே திருப்பி நிகழக்கூடியதுதான். இன்னும் நூறாண்டுகள் கழித்து ஓஷோவை போல இன்னொருவர் வருவார். அவரும் அன்று புதியவராகத்தான் இருப்பார். அதேவேளை, அன்றும் வேறொருவர் வந்து ‘இல்லைங்க, முன்னால் ஓஷோ என்று ஒருவர் இருந்தார். அவரிலிருந்து இவருக்கு ஒரு கோடு இழுக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டும் இருப்பார்.

தமிழகமும் சார்வாகமும்

சார்வாகம் தமிழகத்தில் இருந்ததா? தமிழிலக்கியத்தை எடுத்துப்பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியுடன் மதுரை செல்கிறான். பெரும் செல்வத்தை அழித்த குற்றவுணர்வுடன் செல்கிறான். ஐம்புலன் ஒறுத்த சமணத்துறவியான கவுந்தியடிகள் உடன் செல்கிறார். அப்போது அவர்கள் எவ்வளவு குற்றவுணர்வை உண்டாக்கியிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சமணமதம் என்பதே மனிதர்களிடம் குற்றவுணர்வை உண்டாக்கும்பொருட்டு இறைவனால் அனுப்பப்பட்டது என்கிறார் ஓஷோ. அவர்களுடைய கருவியே குற்றவுணர்வுதான். எனவே ‘நானெல்லாம் மனிதனே அல்ல’ என்ற உணர்வுடன்தான் கோவலன் சென்றிருப்பான்.

நூலின் அந்த இடத்தில் புறஞ்சேரி இறுத்த காதை என்ற பகுதி வருகிறது. அங்கு கோவலன் ஒரு மக்கட்குழுவை பார்க்கிறான். இளங்கோ அவர்களை ”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர்” என்கிறார். இசையோடு இணைந்த பாடலுக்கு வரி என்று பெயர். கானல் வரி, வேட்டுவ வரி போல. மறைநூல் வழுக்கத்து என்றால் வேதங்களை ஓதாமை. அதாவது வேதங்களை ஓதாத, இசைப்பாடல்களை பாடக்கூடிய, முப்புரி நூலணிந்த மனிதர்கள் வாழக்கூடிய சேரி என்கிறார் இளங்கோ. உரையாசிரியர்கள் அவர்களை ‘வேளாப் பார்ப்பனர்’ என்று குறிப்பிடுகின்றனர். அதாவது வேள்வித்தொழில் செய்யாத பிராமணர்கள். புறநானூற்றிலும் இவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

அவர்களுடைய வாழ்க்கைமுறை என்பது இசை, குடி, இன்பம் போன்றவையே. இன்பமே புருஷார்த்தம் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஏன் நகருக்கு வெளியே புறஞ்சேரியில் வாழ்ந்தார்கள் ? அரசன் ஏன் அவர்களை பேணினான் ? அரசன் அளிக்காமல் அந்தணர்கள் வாழமுடியாது. அப்படியெனில் இவர்கள் அரசனுக்கு தேவையாய் இருந்திருக்கின்றனர். எப்படி மூன்று அக்னிகளை வளர்த்து வாழும் அந்தணர்கள் அரசனுக்கு தேவையோ அதுபோலவே வேளாப் பார்ப்பனரும் அவனுக்கு தேவையே. ஏனெனில் அது வேறொரு வழி. வைதிகர்கள் சென்றடைய முடியாத ஓர் இடத்திற்கு இவர்களால் செல்லமுடியும்.

அந்த பகுதியை பற்றி விவாதிக்கும்போது மார்க்சிய அறிஞர் கா. சிவத்தம்பி, பழைய காலங்களில் வேதியியல், வானியல் உட்பட பல உலகியல் ஞானங்களை உருவாக்கக்கூடியவர்களாக இந்த வேளா பார்ப்பனர்கள் இருந்திருக்கலாம், ஆகவே அரசன் அவர்கள் புரந்திருக்கலாம், வேதங்களுக்கு அப்பாற்பட்ட மெய்ஞானங்களை நோக்கி இவர்கள் சென்றிருக்கலாம் என்கிறார். அன்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் போன்றவற்றை பிற்காலத்தில் வேள்விப் பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளும் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்கிறார். ஆகவே இதை செய்யக்கூடிய ஒரு சமூகம் அன்று இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

கோவலன் அவர்களை பார்க்க உள்ளே செல்கிறான். யாழ் ஒன்று கிடைக்கிறது. ஆடிய கால், பாடிய வாய் சும்மா இருக்காதல்லவா. அதை வாசித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிடுகிறான். அதுவரைக்கும் இருந்த குற்றவுணர்வெல்லாம் போய்விட்டது. அதன்பின் மிகமுயன்று அவனை அங்கிருந்து அழைத்து செல்கின்றனர். சிலம்பை படிக்கும்போது, ஒருவேளை அவன் அங்கேயே இருந்திருந்தால் சாகாமல் இருந்திருப்பானோ என்ற எண்ணம் எழாமலில்லை.

இவ்வகையான புறஞ்சேரிகளை மகாபாரதத்திலும் பார்க்கமுடிகிறது. யுதிஷ்டிரனின் முடிசூட்டு நிகழ்வில் ஒரு சார்வாகன் உள்ளே வருகிறான். அந்த இடத்தில் சார்வாகர்களை பற்றி சொல்லும்போது விழவுகளில் மட்டும் நகருக்குள் வரக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்ற காலங்களில் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய சோலைகள், சுடுகாடுகளில் இவர்கள் வாழ்கின்றனர். விழாக்களில் அவர்களை மறுக்கமுடியாது. அவர்கள் ஊருக்குள் வந்தாக வேண்டும். நான் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறேன். அதில் சார்வாகனை பற்றிய மகாபாரதச் சந்தர்ப்பத்தை விரிவாக எழுதியிருக்கிறேன். மகாபாரதத்தில் அந்த சார்வாகன் எலித்தோல் கோவணம் அணிந்து, உடலில் சாம்பல் பூசி, கையில் தண்டத்துடன் வருகிறான். இவனை யார் உள்ளே விட்டது என்று ஒருவர் கேட்கும்போது, ‘நான் இல்லையேல் உனது சபை பூரணமடையாது’ என்று அரசனிடம் சொல்கிறான்.

அதன்பின் யுதிஷ்டிரன் கைநிறைய பொன்னை அள்ளி அனைவருக்கும் கொடுக்கிறான். அந்தணர்களுக்கும் ரிஷிகளுக்கும் இரவலர்களுக்கும் கொடுத்து தனது கருவூலத்தை காலிசெய்தால்தான் ராஜசூயத்தை செய்யமுடியும். ஆகவே அந்த சார்வாகனுக்கும் பொன்னை அளிக்கிறான். அவன் அதை முகர்ந்துபார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். அதில் இரத்தமணம் வீசுகிறது என்று சொல்லி வேறு பொன் கேட்கிறான். மீண்டும் அவ்வாறே முகர்ந்து பார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். இதைக்கண்டு அனைவரும் கோபப்படுகிறார்கள். யுதிஷ்டிரன் என்ன வேண்டும் உனக்கு என்று கேட்க “உன் களஞ்சியத்தில் ரத்தக்கறை படியாத நாணயம் உண்டா?” என்று கேட்கிறான்.

அதிகாரத்தின் முற்றத்தில் வந்து நின்றுகொண்டு சார்வாகன் அந்த கேள்வியை கேட்கிறான். அதனால் பிராமணர்கள் அவனை எரித்துக் கொன்றுவிடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது. அவர்களுக்குள் மிகப்பெரிய தத்துவ மோதல்கள் நடந்திருக்கின்றன. அது என்றும் அழியாத மரபு. உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கலாம், எனக்கு இன்னொன்று இருக்கலாம். நான் ஓஷோ கம்யூனில் சென்று உட்காரமாட்டேன். நான் நித்யசைதன்ய யதியின் வழிவந்த அத்வைதி. ஆனால் அந்தப்பக்கம் அதுவும் இருக்கவேண்டும் என்பது எனது அவசியங்களில் ஒன்று. அதனுடைய இருப்பை, தொடர்ச்சியை நான் மறுப்பேனென்றால் நான் என்னையே மறுத்துக்கொள்வதாகவே அர்த்தம்.

ஓஷோவின் முன்தொடர்ச்சி என்று நான் சொல்லக்கூடியது ஒருவகையில் வேதத்தில் தொடங்குவதுதான். அது என்றுமிருக்கும் தரப்பு. ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார், ‘நீங்கள் துறவியா?’ என்று. ‘ஆம், துறவிதான்’ என்கிறார் ஓஷோ. ‘துறவிக்கு எதற்கு வைரங்கள் பதித்த பட்டை’ என்று அவர் கேட்கிறார். ‘ஏன், துறவிகள் அப்படி போடக்கூடாதா’ என்று திரும்பிக்கேட்கிறார் ஓஷோ. அவர் ‘போடக்கூடாது’ என்கிறார். அதற்கு ஓஷோ, ‘நீ அப்படி சொல்கிறாய் அல்லவா, அதனால்தான் போட்டிருக்கிறேன்’ என்றார். சுருக்கமாக சொன்னால் எலித்தோல் கோவணம் அணிந்து சுடுகாட்டில் தங்கி, கையில் யோகதண்டத்தை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் அவையில் நுழைந்த அந்த சார்வாகன்தான், உலகியேயே விலைமதிப்புமிக்க வைரங்கள் பதித்த பட்டையை நெற்றியில் அணிந்துகொண்டு, பட்டு ஆடைகளுடனும் நூறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடனும் உள்ளே வருகிறார். உண்மையில் அந்த வேறுபாடு அவ்வளவு பெரிதல்ல.

இருபதாம் நூற்றாண்டுக்கு அவர் அவ்வளவு புதியவரா என்று கேட்டால் அதற்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கேரளாவில் சித்தாசிரமம் என்ற ஆசிரமம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஒருவர் பின்பு சித்தராகி சிவானந்த சித்தயோகி என்று அறியப்பட்டார். அவர் நிறுவிய கம்யூன் கேரளாவில் சித்தாசிரமம் என்ற பெயரில் தலைச்சேரிக்கும் வடகரைக்கும் நடுவில் உள்ளது. அதன் ஒரு கிளை சேலத்தில் இருந்தது. தற்போது உள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய காலகட்டத்தில் இருந்தே அந்த கம்யூன் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நான் மூன்றுமுறை அங்கு சென்றிருக்கிறேன். அந்த ஆசிரமம் மிகப்பெரிய வேலியிடப்பட்ட வளாகம். அதற்குள் அதன் உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். அங்கு பொதுவான ஓரிடத்தில் ஆண், பெண் இருவருக்கும் வெள்ளாடைகள் வைத்திருபார்கள். வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது அதை அணிந்துகொண்டு வரலாம். ஆனால் உள்ளே முழுமையான நிர்வாணத்தில்தான் இருப்பார்கள். அங்கு ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் உறவுச்சிக்கல்களும் கிடையாது.

அங்கு பிறக்கும் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதில் மற்றொரு கம்யூனுக்கு அனுப்பப்படும். அவர்களுக்கு உறவுமுறை என ஏதும் இருக்காது. அவர்கள் தனிமனிதர்கள், அவ்வளவுதான்.நீங்கள் நினைத்தே பார்க்கமுடியாத ஒருவகையான உறவு நிகழக்கூடிய இடம் அது. அதை ஒரு நாவலாக எழுதினால் அதை தணிக்கை செய்வார்கள். சினிமாவாக அதை எடுக்கமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இங்கு உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் அங்கே சென்று பார்க்கலாம். முக்கியமாக ஆயுர்வேத மருந்துகள் செய்வதில் அவர்கள் நிபுணர்கள். அந்த மருந்துகளுக்கு பெரும் மதிப்பு இருப்பதால் அவர்கள் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் உள்ளனர். அந்த ஆசிரமத்திற்கு எதிராக அங்கே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன.

அந்த பிரச்சனைகளை செய்தவர்கள் யார் ? அந்த ஆசிரமவாசிகளின் அவ்வகையான ஒழுக்கமின்மை நெறிகள் அல்லது மாற்று ஒழுக்க நெறிகளை பார்த்து புண்பட்டு அவர்களுக்கு எதிராக பிரச்சனை செய்தவர்கள் எந்த தரப்பினர் ? சாரவாத இந்துக்கள் கலாட்டா செய்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். நாயர்களோ நம்பூதிரிகளோ ஐயர்களோ சென்று பிரச்சனை செய்திருப்பார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. ஏனெனில் அந்த மரபுவாதிகளின் பார்வையில் அவர்கள் சித்தர்கள், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .அது சாமானிய அனைவருக்கும் தெரியும். அங்கே பலமுறை பிரச்சனை செய்தவர்கள் மார்க்சிஸ்டுகள்.

ஏனெனில், நான் ஏற்கெனவே சொன்னதுபோல மார்க்சிஸ்டுகளும் ஒரு வகையான செங்கல்சூளை வைத்திருப்பவர்களே. ஒவ்வொரு குடிமகனையும் ஒரேமாதிரியான செங்கலாக அடித்து வெளியே தள்ளுவதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தரப்பு பலமுறை அந்த ஆசிரமத்திற்குமேல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. அப்போதெல்லாம் அந்த தாக்குதலுக்கு எதிராக கருத்து சொல்லி அதை கட்டுப்படுத்த முயன்றவர்கள் இந்திய தத்துவம் பயின்ற மார்க்சிய சிந்தனையாளராகிய கே.தாமோதரன், இந்திய சிந்தனைகளில் அறிமுகம் கொண்ட ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்றவர்களே. அவர்கள் சொன்னார்கள், ‘இல்லப்பா, அது வேறு. இவர்கள் வேதகாலத்தில் இருந்து இருக்கிறார்கள். எப்போதுமே இருப்பார்கள். இந்தியா என்று ஒரு தேசம் இருக்கும்வரை இப்படி சிலர் இருப்பார்கள்’ என்று.

அந்த நீண்ட மரபில் நாம் ஓஷோவை வைத்து பார்க்கவேண்டும். ஓஷோவை எப்படி இந்தியாவின் அனைத்துச் சிந்தனை மரபுகளோடும் தொடர்புபடுத்தி பார்ப்பது என்பதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். ஒரு பொருள் காட்டில் விழுந்தால், நான்கைந்து ஆண்டுகளுக்கு பின் பார்க்கும்போது அங்குள்ள அத்தனை வேர்களும் அந்த பொருளை சுற்றிவளைத்து பிடித்திருக்கும். அதுபோல இந்த சிந்தனை முறை என்பது ஒரு காடு. இந்த காட்டில் ஒரு பொதுப்பொருள் விழும்போது அத்தனை வேர்களும் வந்து அதை கவ்விப்பிடிக்கின்றன. உள்வாங்குகின்றன, அதன் சாராம்சத்தை எடுத்துக்கொள்கின்றன.

(மேலும்)

(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.