கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி
ஒவ்வொரு இலக்கிய வாசகனும் தனக்கான கவிஞனை கண்டடையும் தருணம் ஒன்று நிகழும். ஒவ்வொரு வாசகனும் தனது வாழ்க்கை பார்வை, கேள்விகளை ஒட்டி ஒரு உடைப்பு போல அந்த கவிஞனின் கவிதை வழியாக அத்தருணத்தை அடைவான். அப்படி தேவதேவனை நான் என்னுடைய கவியாக உணர்ந்த தருணம் இந்த கவிதை வழியாக நிகழ்ந்தது.
அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!
தீவிரமான அழுத்தமும், அலைக்கழிதலும் இருந்த காலகட்டத்தில் காடு நாவல் என்னை அதிலிருந்து விடுவித்தது. அதற்கு பிறகு எதேச்சையாகவே இந்த கவிதையை படித்தேன். அந்த நாவலை படித்து முடித்ததும் அடைந்த மன எழுச்சியை இந்த கவிதை வழியாகவும் அடைந்தேன். என்னுடைய அழுத்தத்தையும், அலைக்கழிதலையும் சிறிதாக்கி, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்றாக்கியது இந்த கவிதை. ‘ரிஷி அல்லாதவன் கவியும்’ அல்ல என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது என்பது புரிந்தது. அப்படித்தான் தேவதேவனை என்னுடய கவி என கண்டுகொண்டேன்.
அதற்கு பிறகு அவரை பல முறை சந்தித்துள்ளேன். ஆனால் அருகில் இருப்பதற்கே தயக்கமாக இருக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் நீரின் மெல்லிய நலுங்கல் நினைவுக்கு வரும். அவர் ஒரு புத்த பிக்ஷூ என்றும் தோன்றும். தன்னறம் வெளியிட்ட அவரது கவிதை புத்தக வெளியீட்டில் பேச கீழப்பூங்குயில்குடி சமண தளத்திற்கு வந்திறங்கினார். ஊர் பெயரை கேட்டார். அப்போ மேலப்பூங்குயில்குடினு ஒரு ஊரும் பக்கத்துலயே இருக்க வேண்டுமே என்றார். தமிழர்களின் வாழ்க்கை இயற்கை மட்டுமே சார்ந்து தான் இருந்திருக்கிறது, இப்போ தான் மாறிவிட்டது என்றார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூட்டிச் சென்றால் இந்த சிலைகளெல்லாம் எதற்கு? தேவையேயில்லை என்றார். காவிய முகாம் ‘இலியட்’ அமர்வில் போர்களெல்லாம் ‘Waste of energy’ என்றார். நீலி இதழில் வெளி வந்த புதிய ஏற்பாடு கவிதையில் பெண் பால் மட்டுமே உலகில் இருக்க வேண்டும் என்கிறார்.
நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள் ‘Every poet has a philosopher. Devadevan’s philosopher is Thoreau’ என்று. அவரை அங்கிருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் அவருடைய அருகாமையை மனம் பயந்தது.
கவிஞர் வேணு வேட்ராயனுடன் இருக்கும் வாய்ப்பு ‘இஸ்லாமிய தத்துவ முகாம்’-ல் கலந்து கொண்ட போது ஏற்பட்டது. நிஷா மன்சூர் அவர்கள் வர சிறது தாமதமானதால் வேணு கவிதை குறித்து சிறிய உரையாற்றினார். அப்போதே He is also my poet என்று தோன்றியது. சூஃபி–களின் பாடல்களும், இசையும், தத்துவமும் வேணுவின் இருப்பும், கவிதை குறித்த உரையாடலும் அந்த மூன்று நாட்களை ஆழமான மனப்பதிவாக்கியது. அதற்கு பிறகும் கவிதை பரிமாற்றம், விவாதம் என வேணுவுடனான தொடர்பு தொடர்ந்தது. அவரது ‘அலகில் அலகு’ கவிதை தொகுப்பை வாசித்தேன். இவரும் என்னுடைய கவி தான் என்று உறுதியானது. காந்தி கிராமில் நடத்தப்பட்ட சர்வதோயா நாள் விழாவில் குக்கூ உங்களுக்கு அளித்த விருது நிகழ்வில் நானும், வேணுவும் கலந்து கொண்டோம். அப்போது அங்கு பௌத்த பிக்குகளின் அமைதிக்கான ஊர்வலம் தொடங்கியது. அதில் ஒரு தாளக்கருவியால் ஒரே போன்ற ஓசையை பிக்குகள் ஏழுப்பினர். நான் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தேன். வேணு என்னை அழைத்து, கையால் தட்டி அதன் தாள சப்தத்தை எழுப்பி கவனிக்க சொன்னார். நான் அங்கே ஊன்றிப் பார்த்தது பொருள் கருவியை. ஆனால் கவிஞர் அருவ சத்தத்தை என்னிடம் கவனிக்க சொன்னார். பின்பு மதிய உணவு சாப்பிடுகையில் பரிமாறிய பெண்ணிடம் பிரியாணி இல்லையா என்று விளையாட்டாக கேட்டார், அந்த பெண் புன்சிரிப்புடன் ஏதோ பதில் சொன்னார். எதிரே இருந்த காந்தியர் அதை கேட்டு கொந்தளிப்புடனும், எரிச்சலுடனும் கடுமையாக பேசினார். வேணு வெளியே வந்து வயிறு குழுங்க சிரித்துவிட்டு ‘Even if it is a Gandhian Ideology, Ideology still makes a man rigid’ என்றார். அவர் ‘தவளை’ என்ற கவிதையை எழுத உந்திய ஒரு பயங்கரமான அரசியல் நிகழ்வு. ஆனால் அந்த கவிதை வெளிப்பட்டிருத்த விதம் என்னை ஆச்சரியபடுத்தியது. அது கவிதை, கவிஞர்கள் குறித்து தீவிரமாக யோசிக்க வைத்தது.
தேவதேவனின் ஒரு வரி ‘நீ கவிதை எழுத வேண்டும் என்றால், முதலில் கவிஞனாக இரு’ அந்த வரியின் ஆழத்தை வேணுவே எனக்கு உணர்த்தினார். ‘Being poet is a state’- கவிதை எழுதுவது வேறு, கவிஞனாகவே இருத்தல் வேறு என்று அப்போது தான் புரிந்தது. கவிஞனுடன் இருத்தல் என்பதை ஒரு இலக்கிய வாசகன் தவரவே விடக் கூடாது என்பதை உணர்ந்திருந்தேன்.
இந்நிலையில் வேணு ‘தேவதேனுடன் இருத்தல்’ என்ற ஒரு நாள் நிகழ்வை கடந்த 6-ம் தேதி பாலாஜியின் குழந்தைகள் பள்ளி, ஓசூரில் ஒருங்கினைத்தார். அதில் இருபது பேர் கலந்து கொண்டோம். தேவதேவன் எழுதிய ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பையும், கவிதைகளையும் கட்டாயமாக படித்து வர அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தேவதேவன் உற்சாகமாக இருந்தார். கவிதையின் மதம் கட்டுரைகளிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என்றார். கேள்விகளுக்கு ஆழமான பதில்களை அளித்தார். இடையிடையே குழந்தைகள் வழி தவறி விழிப்பது போல நின்றுவிடுவார். பல வேளைகளில் அப்படியெல்லாமா எழுதியிருக்கேன், எனக்கே ஞாபகமில்லையே என்று சிரிக்க வைத்தார். தேவதேவன் உள்ளுணர்வாலேயே இயங்குகிறவர், அவருடைய தர்க்கத்தின் எல்லை சிறியது. அதனாலேயே அவரது பேச்சில் சில சமயங்களில் தொடர்ச்சி இல்லை, இல்லாதது போல் தோன்றச் செய்தது. ஆனால் அதை நம் தர்க்க மனம் நிராகரிக்க விடாமல் ஊன்றி கவனித்து தொடர்ச்சியை நாமே உருவாக்கினால் அவை அபாரமான ஆழமும், உள்ளொளியும் கொண்டவை என்பது புரிந்தது. இது சாத்தியப்பட்டது அந்த நிகழ்வு அவருக்காக, அவரையும், அவருடைய கவிதையையும் அறிய, உணர விரும்பும் பங்கேற்பாளர்களால் மட்டுமே ஆனது என்பதால் தான் என்று தோன்றுகிறது.
பெரும்பாலும் நானற்ற தன்மையை, இன்மையை, இயற்கை என்ற தூய ஆற்றலை, இந்த கணத்தில் முழுமையாக இருப்பது குறித்தே பேசினார். அடையாளம் என்பதே வன்முறை என்றார். கவிதை என்பது கலை அல்ல. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உன்னதங்களுமே கவிதையாக இருக்கும் போது கவிதை எப்படி கலை மட்டும் ஆகும். யோகியரையும், ஞானியரையும் நிராகரித்தார். பண்பாடு என்று நம் ரத்தத்தில் உரைந்திருக்கும் தொடர் பதிவுகளை நீக்கி எந்த பிடியிலும் சிக்காமல் இங்கு திகழ வேண்டும் என்றார். பண்பாடு, மதங்கள், தேசங்கள் என மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிவையே உருவாக்கியுள்ளன அதனால் அனைத்தையுமே கைவிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கவிதை ஒரு மதமாகும் போதே இந்த உலகம் உன்னதமாகும் என்றார்.
அனைத்துமே நம்மை சீண்டுபவை, நம்பமுடியாதவை. ஆனால் அவை இயற்கை மீதும், மானுடம் மீதும் அந்த கவிஞன் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால் கோடிட்டு காட்டப்படும்போது அவை மகத்தானவை ஆகிறது. அவரது தாள் பனிந்து, சிறமேற்று எடுத்து செல்லப் பட வேண்டிய கனவாக நம்மில் மாற்றப்படுகிறது. வேதக் கவிதைகளிலிருந்தே கலாச்சாரமும், பண்பாடும், மதங்களும் தோண்றியது. ஆதியில் வார்த்தை இருந்தது. கவிதைகளே மானுட பண்பாட்டின் அடிப்படை எனும்போது, கவிஞனே அதன் கர்த்தாவாகிறான். அவனது கனவான அடையாளங்கள், முரண்கள், தத்துவங்கள், மதங்கள், தேசங்கள், சுரண்டல்கள், போர்கள் அற்ற உலகம் ‘கவிதையின் மதத்தால்’ சாத்தியம் என்றால் அதில் நாமும் இனைய வேண்டியதுதான். உங்கள் பார்வைக்கு நேர் எதிரான பார்வைகள் பல இருந்தன.
வெண்முரசில் ஜனமேஜயன் ஆனையிட்டு வைசம்பாயனர் நடத்தும் ‘சர்ப்பசத்ர’ வேள்வியை போன்றது கவி தேவதேவனின் கனவு. இப்புவியில் காணக்கூடிய மகத்தான கனவு அதுவே. அந்த யாகத்திற்கு அழைத்து வரப்படும் காவிகர்த்தனான வியாசர் நீங்கள். இந்த எதிர் பார்வைகள் கவிக்கும்–காவியகர்த்தனுக்குமான பார்வைகள். அந்த கவியும்–காவியகர்த்தனும் அதை அறிவார்கள். தர்க்கமற்ற தூய உள்ளுணர்விலிருந்து எழுந்த வரும் கனவும், அனைத்து தர்க்கங்களை கொண்டு மேலெலும் உள்ளுணர்வும் என அவை எப்போதும் இங்கு இருப்பவை. ஒன்றை ஒன்று பின்னித் தழுவும் பாம்புகள். அதை அறியும் தோறும் ஆழம் கொள்ளும் நம் சித்தம்.
இப்போது ஒன்றை உணர்கிறேன். நாராயண குருகுலத்திற்கு சுவாமி வியாச பிரசாத் அவர்களை சந்திக்க அடிக்கடி செல்கிறேன். அவருடன் அமரும் சில வேளைகளில் நான் அபரிவிதமான உணர்வையும், அதே வேளையில் அற்ப்பமான புழுவாகவும் உணர்வதுண்டு. துறவிகள் மலை போன்றவர்கள். நாம் சிறு புல். நான் அந்த உணர்வை அடையவே திரும்ப திரும்ப அவரிடம் செல்கிறேன் என்று தோன்றுகிறது.
இந்த நிகழ்வில் கவி தேவதேவனுடைய இருப்பு என்னை அபரிவிதமாகவும், அதே வேளையில் அற்பமாகவும் உணரச் செய்தது.
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
மண்ணில் ஞானம் தேடி அலையும் ஒருவனுக்கு தத்துவவாதிகள், பேரறிஞர்கள், அறிவியலாளர்களின் அருகமைதலைவிட ரிஷி என்றான கவியுடன் உடனிருத்தலே மெய்மை பயக்கும் என்றெண்ணுகிறேன்.
தேவதேவன் அருகில் நான் என்ற ஆணவத்தையும், சதா அலைகழிக்கும் காம, க்ரோத, மோகத்தையும், அறிவின் சுமையையும் கழட்டாமல் அமையவே முடியாது. அவ்வாறு அமையும்போது நாம் அடைவதென்பது
“ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு”
பணிவன்புடன ,
வேலாயுதம் பெரியசாமி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
