ஓஷோ: மரபும் மீறலும்-6

ஓஷோவின் நான்கு காலகட்டங்கள்

இந்த உரையில் ஓஷோவின் நான்கு காலகட்டங்களை பற்றிய அறிமுகத்தை அளிக்க விரும்புகிறேன். ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்களுக்குக்கூட இந்த சித்திரம் இல்லாமலிருக்கலாம். இந்தப் பரிணாமக்கோடு அவரைப் புரிந்துகொள்ள மிக அவசியமானது என்பது என் எண்ணம்.

பேச்சாளர்

ஓஷோ ஒரு மேடைச் சொற்பொழிவாளராக, சொல்லப்போனால் கட்டணச் சொற்பொழிவாளராகத்தான் அறுபதுகளின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற கட்டண சொற்பொழிவாளர். அவருக்கு விரிவான வாசிப்பு இருந்தது. நீங்கள் நினைப்பதுபோல அவர் ஓஷோ ஆனபின்பு படித்தவரல்ல. அதவாது பகவான் ரஜ்னீஷாக அறியப்பட்ட பிறகு அவர் படித்தது மிகவும் குறைவு, அநேகமாக இல்லை என்று சொல்கிறார்கள். அவருடைய படிப்புகள் எல்லாம் ஐம்பதுகளில் இருந்து பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள்ளாகத்தான். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் அன்றைய பொதுஅறிவுஜீவி ஆளுமைகளில் மிக அதிகமாக படித்த மனிதர் அவர்தான்.

அவ்வளவு வாசிப்பது சாத்தியம் என்பதே கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம்தான். எழுதுவதிலும் படிப்பதிலும் தீவிரம் கொண்டவன் நான் என்று என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் திரும்பிப்பார்த்து திகைப்படையக் கூடிய சில ஆளுமைகள் உண்டு. ஓஷோ போலவோ அல்லது சிவராமகாரத் போலவோ. அவர்கள் முன்னால் நாம் சிறிய ஆட்களாக ஆகிவிடுகிறோம். அத்தகைய பெரும் படிப்பு, அந்த பெரும்படிப்பை சுமந்து மேடைக்கு வராத எளிமை ஓஷோவுக்கு உண்டு. அவர் தன் இயல்பாகவே புத்தகங்களை பற்றி பேசுகிறாரே ஒழிய திட்டமிட்டு அல்ல. இயல்பான நகைச்சுவை கலந்த ஒரு நட்சத்திர பேச்சாளராக இருந்திருக்கிறார்.

அந்தச் காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிரான வலுவான இந்தியக்குரல் என்று ஓஷோ அவர் அறியப்பட்டிருக்கிறார். அதிகமும் இந்தியிலும், ஆங்கிலத்தில் குறைவாகவும் பேசியிருக்கிறார். சென்னையில் பேசிய ஒரு உரையை தான் கேட்டதாக சுந்தரராமசாமி என்னிடம் சொன்னார். இது அவருடைய முதல் காலகட்டம்.

மாற்று ஆன்மிகம்

தனது இரண்டாவது காலகட்டத்தில் மாற்று ஆன்மீகத்தை முன்வைப்பவராக ஓஷோ மாறினார். அன்றிருந்த மதம் சார்ந்த, மைய ஓட்டமான ஆன்மீக முறைமைகளுக்கு எதிரான, மாற்றான, உலகளாவிய ஓர் ஆன்மீக முறைமையை முன்வைக்கும் ஒரு சொற்பொழிவாளராக அவர் உருவாகிவந்தார்.

இந்தக் காலகட்டத்தில் உலகமெங்கும் அத்தகைய மாற்று ஆன்மீகத்திற்கான தேடல் ஓங்கியிருந்தது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். முதல் உலகப்போருக்குப் பின் பிறந்த தலைமுறையினரின் உளச்சோர்வு ஹிப்பி இயக்கமாக ஆகியது. ஐரோப்பாவில் தேசியம்போன்ற கருத்துக்கள் வலுவிழந்தன. அரசுகள் மேல் நம்பிக்கை குறைந்தது. உலகமெங்கும் புரட்சிகள் தோன்றி அழிந்தன.  இளைஞர்கள் அன்னியர்களானார்கள்.

கூடவே மரபார்ந்த மதங்களின் பாவம்- மீட்பு என்னும் கருத்துக்கள் மேல் சலிப்பு ஓங்கியது. மதங்கள் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்ச உருவாக்கம், காலம், உயிர்க்குலத்தின் இணைவு உட்பட பல்வேறு கேள்விகளை அறிவியல் எதிர்கொண்டு தனக்கான பதில்களை முன்வைத்தது. மதங்கள் முன்வைக்கும் அறம் ஆதிக்கநோக்கம் கொண்டது என்னும் எண்ணத்தில் இருந்து மதம்சாராத புதிய அறத்தை நோக்கிய தேடல் தொடங்கியது.

யோக ஆசிரியர்

மூன்றாவது காலகட்டத்தில் ஓஷோ செயல்முறை தியானம் (Dynamic Meditation) எனும் தியான முறையை கற்பிக்ககும் ஒரு யோக ஆசிரியராக, பயிற்றுநராக உருவானார். அவற்றை பயிற்றுவிக்க அவர் தனக்கான இடத்தை புனே அருகில் உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமைந்தனர். உடல், உள்ளம் சார்ந்த பலவிதமான பயிற்சிகளை அவர் அம்மாணவர்களுக்கு அளித்தார். அவருடைய யோக- தியான முறை இந்தியாவின் பொதுப்போக்கில் இருந்து பெரிதும் விலகியிருந்தது. அதன் வேர்கள் தந்த்ர மரபிலும் பல்வேறு மறைஞானச் சடங்குகளிலும் இருந்தன.

இந்த காலகட்டத்தில்தான் அவர்மீது அவ்வளவு பெரிய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் உருவாகி வந்தன பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த அவர் இந்தியாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. அங்கும் நெருக்கடிகள் உருவாகவே மீண்டும் இந்தியா திரும்பினார். தன்னை ஒரு ஞானாசிரியனாக, ஒரு படிமமாக  மாற்றிக்கொண்டார். அப்போதுதான் ஓஷோ என்ற பெயரை தானே சூட்டிக்கொண்டார். அச்சொல் ஓஷியானிக் என்ற சொல்லில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அது ஜப்பானிய வார்த்தை என்று சொல்பவர்களும் உண்டு. அந்தப்பெயர் நிலைத்துவிட்டது. அதன்பின் சிலகாலங்களில் அவர் மறைந்துவிட்டார்.

மறைவுக்குப் பின்

மறைவுக்குப் பின் ஓஷோவின் முகம் பல்வேறு விவாதங்களில் இருந்து அகன்று விட்டது. ஊடகங்கள் வழியாக நாம் அவரை அறிவது குறைந்து அவருடைய நூல்கள் , உரைகள் மட்டும் முதன்மைப்பட்டன.அவற்றின் வழியாக மட்டுமே அவரை அறியும் ஒரு தலைமுறை உருவாகி வந்தது. இன்று அவர் ஒரு ஞானகுருவாக ஒரு சாராரால் அறியப்படுகிறார். அவர் ஓஷோ என அவர்களால் அழைக்கப்படுகிறார். அவர்களின் குழுமங்கள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில் ஒரு பங்கு அமைப்புசார்பாக தொகுக்கப்பட்டது, தன்னிச்சையான யோகப்பயிற்சிக் குழுமங்களும் அவர் பெயரில் உள்ளன.

இந்தியாவின் பொதுவான அறிவியக்கத்தில் ஓஷோ இன்று தொடர்ச்சியாக பேசப்படுபவராகவே உள்ளார். இடதுசாரி அரசியல் சார்ந்த கோணத்தில் ஓஷோ ஒரு கலகக்காரர் என்றும், இந்துமதம் சார்ந்த ஆதிக்கநோக்குக்கு எதிரானவர் என்றும் கருதும் தரப்பினர் உண்டு. அவர் அறமற்றவர், ஒழுக்கமறுப்பு நோக்கு கொண்டவர், ஆகவே ஒரு நசிவுசக்தி என எண்ணுபவர்களும் இடதுசாரிகளுக்குள் உண்டு.

இந்தியாவின் மததத்துவங்களின் களத்தில் இன்று ஓங்கியுள்ள இந்துத்துவ அலை ஓஷோவை முழுமையாகவே புறக்கணித்து, அவர் உண்மையில் நிகழவே இல்லை என்பதுபோல கடந்துசெல்கிறது. பிற மதங்களும் ஓஷோவை பொருட்படுத்தவில்லை. ஆனால் மாற்று ஆன்மீகம் என்னும் களத்தில் ஓஷோ இன்னும் முதன்மையான பெயர். சம்பிரதாயமும் நம்பிக்கையும் கடந்து அத்வைதத்தை முன்வைப்பவர்கள் அவரை வாசிக்கவும் அவருடன் விவாதிக்கவும் செய்கிறார்கள். மரபான மதம் சார்ந்த நோக்குக்கு அப்பால் சென்று உளவியல் உட்பட நவீன அறிவியல் அடிப்படையுடன் ஆன்மிகத்தை அணுகுபவர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக உள்ளார். குர்ஜீஃப் உட்பட பல்வேறு மாற்று ஆன்மிக குருநாதர்களை அறிமுகம் செய்த ஆசிரியராக அவர் கருதப்படுகிறார். மறைஞானப் பயிற்சிகள் உட்பட பல்வேறு யோகமுறைகளைக் கற்பவர்களும் அவரை ஒரு மறைஞானியாகக் கருதுகிறார்கள். முதல் மூன்று காலகட்டத்தின் விளைவாகவும் அதன் தொகுப்பாகவும் உச்சமாகவும் இன்றுவரை அவருடைய நான்காவது காலகட்டம் நீடிக்கிறது.

இன்று, நம் காலகட்டத்தில் நின்றுகொண்டு ஓஷோவை பேசும்போது ஆரம்பத்திலிருந்தே அவர் திரண்டு வந்த படிநிலைகளை பார்க்கவேண்டும். அது அவரைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.

முதல் காலகட்டம்

ஒரு பேச்சாளராக ஓஷோ திகழ்ந்த அந்த காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிராக ஏன் அவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார் ? அக்காலகட்டத்தின் ஓஷோவின் உரைகள் இன்று அச்சிலோ ஒலிவடிவிலோ கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வந்த பல உரைகளில் தான் ஏன் சோஷலிசத்தையும் காந்தியத்தையும் எதிர்த்தேன் என்பதை மேற்கோள்களாக சொல்லியிருக்கிறார். அந்த மேற்கோள்களை தொகுத்துக்கொண்டு அந்த தரப்புகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டில் உள்ள நியாயங்களை நாம் பார்க்கலாம்.

1. ஒழுக்கவியல்

ஓஷோ சோஷலிசத்தையும், காந்தியத்தையும் எதிர்ப்பதற்கான முதல் காரணம் ஒழுக்கவியல்தான். காந்திய ஒழுக்கவியலுக்கும், சோஷலிச ஒழுக்கவியலுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இங்கே ஒரு விளக்கம். இந்தியாவில் மார்க்சியம் நீர்த்துப்போய், நீர்த்துப்போய் அதைத்தான் சோஷலிசமாக மாற்றிக்கொண்டார்கள். மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் அதிகாரம். அதை வன்முறை மூலம் அடையலாம் என்று சொன்னால் அது கம்யூனிசம். அதையே ஜனநாயக வழிமுறைகள் மூலம் அடையலாம் என்று சொன்னால் அது சோஷலிசம். இதுதான் சுருக்கமான வரையறை.

1956 இல் கம்யூனிச கட்சியே தன்னை ஜனநாயக பாதைக்கு திருப்பிக் கொண்டுவிட்டது. இன்று இந்தியாவில் கம்யூனிசம் கிடையாது. இருப்பது சோஷலிசம் மட்டும்தான். அதை இன்று ஒரு பெரிய வட்டமாக எடுத்துக் கொண்டு இடதுசாரி அரசியல் என்று சொல்லலாம். ஒருபுறம் ராம்மனோகர் லோகியா ஒரு சோஷலிஸ்ட் என்றால் சற்று முற்றிய சோஷலிஸ்ட் என்று இ.எம்.எஸ்ஸை சொல்லலாம். சோஷலிசம் என்பது ஒரே சமயம் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் சொல்லிக்கொண்டிருந்த அரசியல். காந்தியம் என்னும் கொள்கை நேரு வழியாக சோஷலிசம் நோக்கிச் சென்றது. இந்தியாவில் எல்லாமே ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

இவ்விரு தரப்புகளைத்தான் ஓஷோ முதலில் எதிர்த்தார். இவர்களுக்குள் பொதுவாக இருக்கும் முதல் விஷயம் ஒழுக்கவியல்தான். முக்கியமான மார்க்சிய சிந்தனையாளராகிய எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன், ‘ஏன் காந்தியவாதிகளும் மார்க்சிஸ்டுகளும் ஒரேவகையான ஒழுக்க அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள்’ என்று. அவர் சொன்னார், ‘காந்தியவாதி எப்போதுமே ஆணுறை  அணிந்திருப்பவன், அந்த ஆணுறையையே இரும்பிலே செய்து அணிந்திருப்பவன் மார்க்சியவாதி’.

இத்தகைய ஒழுக்கவாதத்தை ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தொடர்ந்து அடிகொடுப்பது இத்தகைய ஒழுக்கவாதத்துக்குதான். தன்னை எப்போதும் விறைப்பாக வைத்துக்கொள்வதை அவர் எதிர்த்தார். இருபத்துநான்கு மணிநேரமும் எழுச்சியடைந்த குறிபோன்ற தன்மை மார்க்சியர்களிடம் உண்டு. அது இயற்கைக்கு மாறான ஒன்று, நெகிழ்வாக இரு என்று ஓஷோ திரும்பத்திரும்ப சொல்கிறார். கேரளாவில் ஒரு நகைச்சுவை உண்டு. இடதுசாரி ஒருவரை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் ஆறுமாதம் கழித்து தனது தோழியிடம் சொல்கிறார், ”நான் பலவிதமாக முயற்சி செய்து பார்த்தேன். அவருக்கு எதுவுமே ஆகவில்லை, என்ன செய்வது ?” என்று. அதற்கு தோழி, ”நீ அந்த நேரத்தில் இன்குலாப் சிந்தாபாத் என்று கோஷம்போடு. சரியாகிவிடும்”. உண்மையிலேயே சரியாகிவிட்டது.  இத்தகைய இறுக்கநிலையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார். காந்தி மீதும் அவருடைய விமர்சனம் அதுவாகத்தான் இருந்தது.

தனக்குத்தானே வகுத்துக்கொண்ட ஒழுக்கம் ஒருவனின் வாழ்க்கை பார்வையையே அதற்கேற்றாற்போல மாற்றிவிடுகிறது. ஒழுக்கவாதி அனைத்தையும் ஒழுக்கத்தைக் கொண்டே புரிந்துகொள்ளுவான். ஒழுக்கம் அவனுடைய பார்வைக்கு எல்லையை வரையறைசெய்து, மேற்கொண்டு எதையுமே அறியமுடியாமல் ஆக்கிவிடுகிறது. ஆன்மிகம், தத்துவம், கலை உட்பட எதையுமே அவர்களால் தீவிரமாகச் அடையமுடியாது. அவை அவர்களின் ஒழுக்க எல்லைக்குள் வந்தால் மட்டுமே அவர்களால் உள்வாங்கமுடியும். நான் பாலியல் ஒழுக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அப்படி பல்வேறு சமூக ஒழுக்கங்கள் உள்ளன. அரசியல்சரிநிலை என்பதேகூட அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கம்தான்.

2. உலகியல் நோக்கு

ஒழுக்கம் சார்ந்த இறுக்கமான பார்வை என்பதை தாண்டி அவர்களை ஓஷோ அடிக்கக்கூடிய நுட்பமான இன்னொரு விஷயம் அவர்களிடம் இருக்கும் உலகியல் தன்மை (Materialism). நாம் ஓஷோவை ஒரு உலகியல்வாதி என்று நினைப்போம். ஏனென்றால் அவர் உலகியலை நிராகரித்து துறவை முன்வைக்கவில்லை. காமம் உட்பட எந்த உலகியல் இன்பத்தையும் ஓஷோ நிராகரிக்கவில்லை. ஓஷோ கருத்துமுதல்வாதி அல்ல. அவரை பொருள்முதல்வாதி என்றே சொல்லலாம். ஓஷோ இலட்சியவாதிகூட அல்ல. ஆனால் ஓஷோ உலகியல்வாதத்தை முன்வைத்தவர் அல்ல. உலகியலுக்கு அப்பாற்பட்ட சிலவற்றையே வாழ்க்கையின் மெய்யான இன்பம், நிறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தவர் அவர். உண்மையில் அவரால் எதிர்க்கப்பட்ட காந்திய, சோஷலிசத் தரப்புகள்தான் உலகியல்வாதிகள்.

இந்த உலகில் உள்ள சமூக அமைப்புகளையோ, பொருளியல் அமைப்புகளையோ மாற்றிவிட்டால் மனிதர்களை மாற்றிவிடலாம் என்று நினைப்பதுதான் பெரிய உலகியல்வாதம். காந்தியம், மார்க்சியம் இரண்டிலும் அது உண்டு. அவர்களிடம் இருக்கும் முழுமையான ‘இவ்வுலகத்தன்மை’யை ஓஷோ போன்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொத்த கோவையையும் மாற்றிவிட்டால் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. ஜெயமோகனின் பிரச்சனைகள் வேறு. மொத்த தமிழ்நாட்டையே மாற்றிவிட்டாலும் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. இப்படிப்பட்ட ‘இவ்வுலகத்தன்மை’யை அடித்து நொறுக்குவதற்கு ஒரு குரல் இங்கு தேவையாய் இருந்தது. அதுதான் ஓஷோவின் குரல். இந்த வரியில் இருந்து ஓஷோ சொன்னவற்றை நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.

ஆனால் இது எந்த ஞானியும் சொல்லக்கூடிய ஒன்றுதான். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அகப்புரட்சி வேண்டும் என்கிறார். 1970களில் உலகமே புரட்சி செய்துகொண்டிருந்த  காலம். புரட்சி என்ற சொல்லே ஒரு தேய்ந்த நாணயமாக புழங்கிய கலாம். பல புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் கியூபா என்ற பஞ்சாயத்து அளவிலான ஒரு நாட்டை தவிர எல்லா புரட்சிகளுமே தோல்வியடைந்தன. எல்லா புரட்சிகளுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரத்தபலி வாங்கின. அது ஒருவகை புரட்சி என்றால், நடிகர்கள் தங்களை புரட்சித்தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட காலமும்கூட.

அப்போதுதான் புரட்சி என்பது வெளியே இல்லை, உள்ள இருக்கிறது என்று ஜே.கே. சொன்னார். ஓஷோவும் அதைத்தான் சொல்கிறார். அவர்கள் உள்மாற்றத்தை பற்றி பேசினார்கள். காந்தியத்திலும் மார்க்சியத்திலும் இருக்கும் அந்த உலகியல் தன்மையை சுட்டிக்காட்டுவதற்கு ஆன்மீகத் தரப்பில் இருந்து ஒரு குரல் வரவேண்டியிருந்தது. அது ஓஷோவின் குரல்.

3. பகுத்தறிவின் வன்முறை

பகுத்தறிவு என்பது ஓர் ஆயுதம், ஒரு அகத்தெளிவு- அதில் ஐயமில்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை அது. அறிவியல்நோக்கு, தர்க்கபூர்வ அணுகுமுறை, மனிதாபிமான பார்வை என அதை மூன்று கொள்கைகளாக வரையறை செய்யலாம். உலகை பல்வேறு மூடநம்பிக்கைகள், தேங்கிய ஆசாரங்களில் இருந்து அதுவே விடுவித்தது.

ஆனால் பகுத்தறிவின் வன்முறை என்று ஒன்று உள்ளது. நாம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக கடவுளுக்கு சமானமாக இந்தப் பக்கம் பகுத்தறிவை வைத்திருக்கிறோம். பகுத்தறிவு என்பது எந்த வகையிலும் பகுத்தறிய தேவையில்லாத அறிவு என்ற ஒரு புரிதல் கடந்த பல ஆண்டுகளாக நமக்குண்டு. ‘பகுத்தறிவா பேசு, இல்லேன்னா வெட்டிருவேன்’ என்று கொதிக்கக்கூடிய மக்களாக நாம் மாறியிருக்கிறோம்.ஆம், பகுத்தறிவுக்கு ஒரு வன்முறை உண்டு.

இந்த காலகட்டத்தில் நீங்கள் பிறந்திருப்பதாலேயே நேற்றுவரை இருந்த அத்தனை பேரையும்விட நீங்கள் புத்திசாலி என்று நினைத்துக்கொள்வது ஒருவகையான பகுத்தறிவு சார்ந்த மூடத்தனம். உங்களுக்கு சில அறிதல்கள் ஏற்பட்டிருப்பதாலேயே, உங்கள் மண்டைக்குள் வந்துசேர்ந்த அறிவை வைத்துக்கொண்டு, இன்னமும் வந்து சேராத அனைத்தையும் பற்றியும் கருத்து சொல்லமுடியும் என்று நினைப்பது ஒருவகையான பகுத்தறிவு மடமை. அறிவின் எல்லையை தனக்குத்தானே வகுத்துக்கொள்ளலாமல் இருப்பது ஒருவகையான பகுத்தறிவுப் பேதமை . ஓஷோ இந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்கிறார்.

ஓரிடத்தில் ஒரு சந்தை வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆட்சியர் அங்கு வருகிறார். அவர் ஒரு நிபுணர். அந்த சந்தையை, வடிவேலு சொல்வதுபோல, அப்படியே தூக்கி அந்தப்பக்கம் வைத்தால் அது இன்னும் வளர்ச்சியடையும் என்கிறார். அங்கு சாலை வசதி, பேருந்து வசதி, வாகன நிறுத்துமிடம், மக்கள் எளிதாக அணுகக்கூடிய தன்மை போன்று பல காரணங்களை சொல்லி அந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். ஆனால் அவ்வாறு மாற்றப்பட்ட பின் சந்தை அப்படியே இல்லாமலாகிவிடுகிறது. ஏன் ? நாம் அறியும் சந்தை விதிகளுக்கு அப்பால் நம்மால் அறியமுடியாத எத்தனையோ விதிகள் உள்ளன. நம் அன்றாடப் பகுத்தறிவுக்கு அப்பாலும் எஞ்சியிருக்கக்கூடிய விஷயங்கள் உள்ளன. நான் கடவுளை பற்றியெல்லாம் சொல்லவில்லை. தர்க்கபூர்வமாகவே பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அந்த பகுத்தறிவு புறக்கணித்து விடுகிறது. இந்த பகுத்தறிவின் வன்முறையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார்.

1971 வரைக்கும் காடுகளை வெட்டி அழித்து விறகாக்கி விற்பதற்கான உரிமையை அரசாங்கமே கூவிக்கூவி ஏலம்போட்டு விற்றுக்கொண்டிருந்தது. அதை எங்களூரில் ‘கூப்பு கான்ட்ராக்ட்’ என்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது கோடைகால விடுமுறையில் நண்பர்களுடன் அந்த வேலைக்கு சென்றிருக்கிறேன். காடுகளை தீவைத்து அழிப்போம். எஞ்சிய பெரிய மரங்களை வெட்டுவோம். 1971 வரைக்கும் காடு ஒரு சொத்தாக தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்ற கருதுகோள் அன்று இல்லை. சமீபத்தில், 1960களில் வந்த விளம்பரங்களை ஒரு நண்பர் போட்டிருந்தார். ஒரு கைக்குழந்தையின் படத்தை போட்டு I will save my darling from flies என்ற வாசகத்துடன் கீழே DDT என்று இருந்தது. இன்று உலகம் உருவாக்கிய மாபெரும் நச்சுகளில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் விளம்பரம் அது. அந்த காலத்திலும் பகுத்தறிவு இருக்கத்தான் செய்தது. அந்தக் காலத் தர்க்க எல்லைக்குள் அது இருந்தது.

எனவே அறிவின்  எல்லை என்று ஒன்று உள்ளது. இந்த மூர்க்கமான பகுத்தறிவு என்பது ஒருவகையான அழிவுசக்தி. அதற்கப்பால் நகராமல் ஆன்மிகம், தத்துவம், அழகியல் ஆகியவற்றை அடையவே முடியாது.அதை சுட்டிக்காட்டி, அதற்கப்பால் எப்போதும் ஒன்று இருக்கிறது என்பதை ஒருவர் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர்தான் ஓஷோ.

4. சராசரிகளின் வன்முறை

இதற்கப்பால் இன்னொன்றும் உள்ளது. அது சராசரிகளின் வன்முறை பற்றியது. இதை இப்போது சொன்னாலும் எந்தவொரு மார்க்சியரும் எழுந்து நின்று ‘அய்யய்யோ ஃபாசிசம்’ என்பார். ஃபாசிசம் என்பது ஒரு நல்ல வசைச்சொல்லாக இன்று மாறியிருக்கிறது. பத்துரூபாய் கடன் கேட்டு தராதவர்களைக்கூட அப்படிச் சொல்வது நம் வழக்கம். மார்க்சியமோ காந்தியமோ மீண்டும் மீண்டும் சராசரிகளை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய நலன், அவர்களுக்கு புரியக்கூடிய அரசியல், அவர்களின் அதிகாரம் என்பதை பற்றியே அவை கவலைகொள்கின்றன. மார்க்ஸியர்களைப் பொறுத்தவரை சராசரி மனிதன் என்பவன் தெய்வம்போன்றவன். வரலாறு, கொள்கை, அழகியல் எல்லாவற்றையும் அவனுக்கே படையலிடவேண்டும்.

ஆனால் சராசரிகளுக்கும் மேலாக ஒருவன் இருக்கிறானல்லவா ? அவன்தான் படைப்பாளன், கட்டமைப்பாளன், முன்னோடி. இலக்கியம், கலை, சிந்தனை, புதிய சமூகஅமைப்பு எல்லாவற்றையும் உருவாக்குபவன் அவன்தான். அவனைப்பற்றி எந்த அரசியல் தரப்புக்கும் அக்கறை இல்லை. ஏனென்றால் அவன் எதிர்காலத்திற்கு உரியவன். சமகால அதிகாரத்துக்கு எதிரானவன். இன்று அவனுக்கு பெரிய எண்ணிக்கை பலமும் இல்லை. இன்றைய ஜனநாயகத்தில் சராசரிகளை புகழ்ந்து படைப்பாளியையும் முன்னோடியையும் இகழ்வது ஒரு வழக்கமாக உள்ளது. சராசரிகள் கூடி சிந்தனையாளனையும் கலைஞனையும் மக்கள்பணியாளனையும் தனிமைப்படுத்தி தாக்குவதும்கூட இயல்பானதாகக் கொள்ளப்படுகிறது.

ஓஷோ கடுமையாகவும் நக்கலாகவும் சொல்லும் ஒன்று, தான் சராசரிகளை விரும்பவில்லை என்பதே. உழைக்கும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டால், ‘உழையுங்கள், சாப்பிடுங்கள், வேறென்ன செய்யமுடியும் நீங்கள்?’ என்கிறார். அசாதாரணமான மனிதர்களுடன் மட்டும்தான் தான் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவன் கலைஞனாக இருக்கலாம், கொலைகாரனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் சராசரியல்லாதவன். அவன்தான் எனக்கு வேண்டும் என்கிறார். இதை நீங்கள் எளிதில் ஃபாசிசம் என்பீர்கள். ஆனால் மனித வரலாறு என்பது அவ்வாறான சராசரிக்கு அப்பாற்பட்ட மனிதர்களால்தான் இயக்கப்படுகிறது. அவனுக்காக ஒருவன் பேசவேண்டாமா ? நீதிமன்றத்தில் அத்தனைபேரும் ஒரே ஆளுக்காகவா பேசுகிறார்கள். எதிர்தரப்புக்காகவும் சிலர் பேசுவார்கள் அல்லவா ? ஆகவேதான் சராசரிக்கு எதிரான, சராசரிகளின் வன்முறைக்கு எதிரான குரல் தேவைப்படுகிறது. மார்க்சுக்கும் காந்திக்கும் எதிராக ஓஷோ முன்வைக்ககும் குரல் அதுதான். அது அசாதாரணமான தனிமனிதர்களுக்கானது. அதுதான் அவரது சிறப்பு, அவரது தொடக்கம்.

அக்காலகட்டத்தில் ஓஷோ பேசவரும்போது மிகக்குறைவான பார்வையாளர்களே இருந்திருக்கிறார்கள். ஓஷோ அவர்களிடம் கட்டணம் செலுத்தச் சொல்கிறார். பெரிய கட்டணம் அது. உரைக்குக் கட்டணம் என்பது அன்று ஓர் ஆடம்பரம். ஓஷோ ‘நீ இதை விலைகொடுத்து வாங்கமாட்டாய் என்றால் இதை நீ மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’ என்கிறார். அக்காலத்தில் ஒரு கேள்வி எழுந்தது, ‘நீங்கள் ஏன் இலவசமாக உரைகளை ஆற்றக்கூடாது’ என்று. அதற்கு ஓஷோ, ‘நான் விந்துவை பீய்ச்சியடித்து செல்வதற்கு தவளை அல்ல’ என்று பதிலளித்தார். பெண் தவளைகள் இட்ட முட்டைகளில் ஆண் தவளை தனது விந்தை பீய்ச்சியடித்து செல்லும். பத்துலட்சத்தில் ஒன்று முளைத்து வெளிவரும். மற்றவை ஏதேனும் உயிரினத்தால் உண்ணப்பட்டுவிடும். தனக்காக பணம் கொடுத்து வந்து உட்காரக் கூடியவர்களிடம்தான் அவர் பேசுகிறார். அப்படிப்பட்ட ஒரு பேச்சாளராகவே அவர் உருவாகி வந்தார்

(மேலும்)

(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.