செம்பரத்தி!
மதியத்துக்கு மேல் டீ குடிப்பதை நிறுத்திவிட்டேன். இரவில் தூக்கம் பாதிக்கப்படுகிறது என்பதனால். காபி, டீ எல்லாமே மதிய உணவுக்கு முன்புதான். உண்மையில் அதற்கு பலனும் உள்ளது. இரவு பத்து மணிக்குக் கிளம்பி டீ குடிக்கச் செல்பவனாக இருந்தவன் நான். நல்ல டீ குடித்துவிட்டு உடனே படுத்து ஆழ்ந்து உறங்கவும் முடிந்திருக்கிறது. வயதுதான்!
ஆனால் மதிய உணவு முடிந்து, ஒரு பதினைந்துநிமிட ஓய்வுக்குப் பின் எதையேனும் படிக்க ஆரம்பித்து, மூன்று மூன்றரைக்கு இடைவெளி விடும்போது சூடாக எதையாவது குடிக்க ஆசைப்படுவேன். மிக மெல்லிதாக கறுப்பு டீ போட்டு குடித்துப் பார்த்தேன். உண்மையில் டீ- காப்பியை நிறுத்த நிறுத்த கஃபீனின் வீரியம் அதிகரிக்கிறது. நண்பர் ஒருவர் சொன்னார், காபி அரைக்கும் கடை வழியாகச் சென்றாலே தூக்கம் கெட்டுவிடுகிறது என்று. விசாரித்தால் அது மிகையல்ல என்றும் தெரிந்தது. மணமே போதுமானது.
அண்மையில் நண்பர் பிரதீபின் அலுவலகம் சென்றிருந்தேன். அமெரிக்க அலுவலகங்களின் பாணியில் என் நண்பரும் பொறியாளரும் கட்டிடவரைவாளருமான நினேஷ் வடிவமைத்த அழகிய நவீன அலுவலகம். அலுவலகத்தின் நட்டநடுவே காபிஷாப். எப்போது வேண்டுமென்றாலும் காபி சாப்பிடலாம். காபி வேலைசெய்தே ஆகவேண்டிய ஊக்கத்தை அளிக்கிறது. உண்மையில் காபி மணமே வேலைக்கான தூண்டுதலை அளிப்பது.
சாயங்காலம் என்னதான் சாப்பிடலாம் என்ற சிக்கலில் இருந்தபோது அருண்மொழி சொன்னாள் ‘ஐபிஸ்கஸ் டீ’ சாப்பிடலாம் என்று. அதாவது செம்பரத்தி இதழ்களைப் போட்டு செய்யப்படும் டீ. எவரோ கொடுத்த ஒரு பாக்கெட் டீ அவளிடமிருந்தது. நிழலில் உலரச்செய்த செம்பரத்தி மலரிதழ்கள். அதை கொதிக்கும் வெந்நீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகச்செய்து வடிகட்டினால் அதுதான் ஐபிஸ்கஸ் டீ. டீ என்ற பெயர் ஒரு மங்கல வழக்குதான், டீக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. செம்பரத்திபோட்டு கொதிக்க வைத்த வெந்நீர். சீனி போடக்கூடாது. பாலை பக்கத்தில் கூட வைக்கக்கூடாது.
செம்பரத்தி டீயின் மருத்துவ குணங்களைப் பற்றி அருண்மொழி உற்சாகமாகச் சொன்னாள். அது ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும். ரத்த ஓட்டம் சீரடைந்து இதயம் சுமுகமாகும். எடை குறைப்புக்கும் உதவும் (8 Benefits of Hibiscus – Healthline). நான் அதை அதிகமாக கவனிக்கவில்லை. பொதுவாக உடம்புக்கு நல்லத்து, அவ்வளவுதானே? என்னைக் கவர்ந்தது அதன் வண்ணம்தான். எனக்கு பாலில்லாத டீயின் வண்ணம் மீது பெரும் மோகம் உண்டு. இது அதைவிட வண்ணம். கண்ணாடி கோப்பையைச் சுடர்விடும் வைரம்போல ஆக்கிவிடும் செம்மை.
முதலில் கொஞ்சநாள் உலரச்செய்த செம்பரத்தி இதழ்களை போட்டுத்தான் செய்துகொண்டிருந்தோம். அப்புறம் எவரோ சொன்னார்கள், அதில் அப்படி கூடுதலாக ஒரு அம்சமும் இல்லை. வீட்டு முற்றத்துச் செம்பரத்தியின் புதிய பூவே போதுமானது, அல்லது அது இன்னும் சிறந்தது என்று. ஆகவே அதன்பின் ஒரு கோப்பைக்கு நான்கு பூ போட்டு நானே செய்ய ஆரம்பித்தேன்.
கொதித்ததும் மலரிதழிலிருந்து செம்மை முழுக்க நீருக்கு வந்துவிடுகிறது. இதழ்கள் இளம்பழுப்பு நிறமாக ஆகிவிடுகின்றன – அழுகிய செம்பரத்திப்பூவின் நிறம். மலரிதழ்களை மட்டுமே போடவேண்டும். அல்லிவட்டம் புல்லிவட்டம் காம்பு ஏதும் இருக்கக்கூடாது. கொதிக்கவைத்து கண்ணாடி கோப்பையில் எடுத்துக்கொண்டால் அந்த நிறமே உற்சாகமானதாக இருக்கும். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் குடிக்கக்கூடாது, ரத்த அழுத்தம் மேலும் குறையும் என்கிறார்கள். ஆனால் ரத்த அழுத்தம், உள அழுத்தம் கொண்டவர்களுக்கு இளைப்பாறலை, நல்ல தூக்கத்தை அளிக்குமாம். ஆமாம் என்று நானும் சொல்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
