தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி
சில நாட்கள் எல்லாம் நன்றாக அமைந்து விடுகின்றன. சென்ற ஜூலை 6 ஆம் தேதியும் அப்படி ஒரு நாள். கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் ஒருங்கிணைத்த “தேவதேவன் அருகிருத்தல்” கவிதை சந்திப்பில் 20 பேர் பங்கெடுத்தோம். ஒரு மாதமாக தேவதேவன் அவர்களின் கவிதையின் மதம் கட்டுரை, “நீல நிலாவெளி” மற்றும் “பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்” கவிதை தொகுதிகளை வாசித்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்த பல முக்கியமான கவிதைகளையும் வாசித்தேன்.
புதிய திறப்புகள்
கவிதையின் மதம் கட்டுரைகள், ஆளுமைகளை துறப்பது குறித்து விரிவாக பேசியது. கவிதை கூடுகையின் முதல் கேள்வியே, ஆளுமைகளை ரத்து செய்வது குறித்து தான் எழுந்தது.
கவிஞர் கொட்டும் அருவி போல், சீராகவும், மிகவும் மென்மையாகவும் தன் கருத்துக்களை முன்வைத்தார் . எந்த ஒரு விஷயத்தையும் தத்துவமாக ஆக்கி விட்டால், அதை அமைப்புகள் கைக்கொள்ளும். அதன் உண்மையான சாராம்சம் திரிந்து விடும் என்று பொறுமையாக, பல உதாரணங்களுடன் விளக்கினார்.
இயற்கை கொடுமையானதா, ஒன்றை ஒன்று அடித்து தின்பதா என்கிற கேள்விக்கு, முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்தார். தேவை அன்றி இயற்கை எடுக்காது என்று புரிய வைத்தார். அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும் என்று விளக்கினார்.
பட்டாம்பூச்சி பற்றிய அவரது கவிதையை மேற்கோள் காட்டி, வாழ்க்கையின் நிலையாமையை, அத்தனை மகிழ்ச்சியான ஜீவனும், ஒரு அடையாளமும் இல்லாமல் இறந்து போகும் தன்மைதான், நிதர்சனம் என்று சொன்னார்.
கவிதை ஒரு ஆன்ம அனுபவம்
கடவுள் பற்றிய கவிதையில், மனிதன் செய்கின்ற அனைத்து தீமைகளுக்கும், கடவுளை பொறுப்பாக்க முடியாது என்ற இடத்தை விளக்கி, கவிஞரின் தரிசனத்தை முன் வைத்தார். மிகவும் ஆழமாக சென்ற அந்த கலந்துரையாடல் மூலம், சமூகத்தில் கவிஞர்கள் வகிக்கும் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
கவிஞர்கள் ஒரு வகையில் விதி சமைப்பவர்கள். அவர்களுடைய உச்ச நிலை தான் கவிதை ஆகிறது. கவிஞர் தன்னை பற்றிய சுய அடையாளத்தை/ஆளுமையை விடும் பொழுதுதான், கவிதை ஒரு ஆன்மீக அனுபவமாக விரிகிறது என்கிறார்.
இந்த நிலையில் இருந்து தான் கவிஞர்கள் சமரசமற்ற கவிதை படைக்க முடியும் என்றார். ஒரு உயர்ந்த தரிசனம் இல்லாத, ஆன்மீக அனுபவமாக இல்லாத எதுவும் நல்ல கவிதையே அல்ல என்று சொன்னார்.
உதிர்ந்த இலைகள் , அரைகுறை உள்ளொளி , பிரமிள்
ஏன் உதிர்ந்த இலைகளை பற்றி இத்தனை கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் கண்ணில் அவை தொடர்ந்து கண்ணில் பட்டு கொண்டு இருப்பதாகவும், வாழ்க்கையின் உண்மையை அதில் பார்ப்பதாகவும் சொன்னார்.
தனக்கே உரிய மென்மையான பாணியில், சாமியார்களையும், ஆன்மீக குருக்களையும், அரைகுறை உள்ளொளி பெற்றவர்கள் என்று விமர்சித்தார். பிரமிள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடன் அவருடைய பரிச்சயம், பிரமிள் எழுத வந்த சூழ்நிலை, அப்பொழுது எழுத்து உலகில் இருந்த அரசியல் எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்கினார்.
பெண்களை பற்றி
பெண்களை பற்றி பெண்களே எழுதும் கவிதைகளில் கூட, இயல்பாக பெண்கள் விரும்பும் அடையாளத்தை துறக்க சொல்லியோ, அல்லது அலங்காரம் போன்ற விஷயங்களை கேலி செய்தோ சில வரிகள் வரும். ஆனால் தேவதேவன் அவர்கள், அத்தகைய கூறுகளை, பெண்மையின் இயல்பாக ஏற்று கொண்டு, அவற்றை அங்கீகரித்து எழுதுவார்.
“முடிச்சு” என்கிற கவிதையில் வரும் முதுகு பற்றிய விவரணைகள், அதை ஆணின் பரந்த மார்போடு ஒப்பிட்டு எழுதியதை குறித்து அவரிடம் கேட்டோம். பெண்களின் முகத்தை விட்டு முதுகை ஒரு நட்பான, ஆதுரமான உறுப்பாக காட்டியது எப்படி என்று வியந்து பாராட்டினோம்.
அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது, தானே ஒரு பெண்ணாக உணர்ந்த தருணங்களை சொன்னார். மிக சிறிய வயதில், தன்னுடைய அக்காவின் தோழிகள் சூழ்ந்த இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நீலி இதழில் அவர் எழுதிய “புதிய ஏற்பாடு” கவிதையை மேற்கோள் காட்டி, ஆண் பெண் உறவு பரிமாணத்தை பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த விஷயத்தில் தன்னுடைய மனநிலையே, எவ்வாறு முன்பு இருந்ததை விட மாறி இருக்கிறது என்று, தனிமையில் ஞானம் தேடும் தன்னுடைய பழைய கவிதையை கூறி விளக்கினார்.
வாசக உரையாடல்
மூன்று வகையான வாசகர்களை தான் தொடர்ந்து சந்திப்பதாக சொன்னார். அவர் மீது மிகவும் பக்தி கொண்டவர்கள், அவரை பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள், அவரை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்.இரண்டாம் வகை வாசகர்கள்தான் மிகவும் முக்கியம் என்றும், தான் அவர்களுடன் உரையாடி, தன்னை பற்றி ஒரு புரிதலை உண்டாக்க முயற்சி செய்வதாக கூறினார்.
கூடுகையின் ஆரம்பத்திலேயே, தன்னை பாராட்டி பேச வேண்டாம் என்றும், கவிதை பற்றி இருக்கும், புரிதல் சார்ந்த சந்தேகங்களை தீர்த்து கொள்ளும்படியும் சொன்னார்.அவருடைய முக்கியமான கவிதைகளை ஒருவர் படிக்க, எந்த வரி, எப்படி முக்கியம் என்று விளக்கினார். யாரையும் புண்படுத்த கூடாது என்பதை தன் இயல்பாகவே கொண்டு இருக்கிறார் இந்த பெரும் கவிஞர்.
தண்ணீருக்காக காத்திருந்த பொழுதும், அந்த வீட்டுக்காரர்கள் மனம் வருந்தி விடக்கூடாது என்று, திரும்பி வராமல் நின்ற மனம் அவருக்கு. மானசா கிருபாவின் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைத்ததையும், அந்த கவிதையை “ஏஞ்சல்” தொகுதியில் இருந்து படிக்கவும் வைத்தார்.
அருமையான ஏற்பாடுகள்
கூடுகை நடந்த பிகின் பள்ளி, ஒரு சோலை போல மரங்கள் சூழ, அருமையான இயற்கை கட்டுமானத்துடன் இருந்தது. சரண்யா உணவு, மற்றும் இதர ஏற்பாடுகளை அருமையாக செய்து இருந்தார்.
கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள், தொடர்ந்து கேள்விகள் கேட்டு, கூடுகையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார். கவிநிலவனும், தீபாவும் பாடிய பாடல்கள் கூடுகைக்கு செறிவு சேர்த்தன. மழை, மூங்கில் மரங்கள் நிறைந்த பூங்கா, மனம் ஒத்த நண்பர்கள் என்று மொத்த நாளும் கொண்டாட்டமாக இருந்தது.
கூடுகையில் கற்றுக்கொண்டவை
கவிதையை, மிகவும் deconstruct செய்ய முயற்சி செய்ய கூடாது. நேரடியாக புரிந்து கொள்வதை விடவும், கவிஞர் கொண்டுள்ள பொது கருத்துக்கள் மூலம் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கவிஞருடனான சந்திப்புகள், உரையாடல்கள் அதற்கு மிகவும் உதவும்.கவிதைக்கு மிகவும் அலங்காரமான வார்த்தைகளோ, உருவகங்களோ தேவை இல்லை. மிக எளிமையான மொழியில், உறுதியான கருத்துக்களை சொல்லி விட முடியும்.கவிதையை, கதை போல வாசிக்காமல், சில முறை வாசித்து விட்டு, அது புரிவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதை பற்றி பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது கவிஞர், “இதை நீ முதலில் இப்படி யோசித்து பார்,” என்று தொடர்ந்து சொல்லியபடி இருந்தார்.வாழ்க்கை கவித்துவமான தருணங்கள் நிறைந்தது. கொஞ்சம் திறந்த மனதுடன், அனைத்தையும் ரசிக்க வேண்டும். அதுதான் கவிதையை புரிந்து கொள்வதற்கான முதல் படி.கவிதையின் தளம் மிகவும் சுருக்கமானது. குறைந்த வார்த்தைகளில், கவிஞருக்கும் படிப்பவருக்கும் ஆன பொதுவான ஒன்று புரிந்துகொள்ள படுகிறது. சில சமயம் அதில் தவறுகள் நேரலாம். ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு அர்த்தங்கள் புரிபடலாம். அது வாசிப்பின் போதாமை தான். தொடர் வாசிப்பும், விவாதமும், உரையாடலும், அத்தகைய தவறான புரிதல்களை களைய உதவும்.மிகவும் நன்றியுடன்,
நாக நந்தினி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
