ஆரணியில் ஒரு முன்னுதாரணம்
எதிர்வரும் ஆகஸ்ட் 1 அன்று துவங்கும் நாகை புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டமை கொண்டு, 1314 ஆவது முறையாக மீண்டும் மதிப்பீடுகள் சரிந்து விட்டதாக எழுத்தாளர்களில் குறிப்பிட்ட சாரர் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் துவங்கி இந்த ஆகஸ்ட் வரை, (நூல் வெளியீட்டுக்கு அழைக்கப்பட்டு பேசபட்டவை, பிற கலந்துரையாடல் அமர்வுகளுக்கு அழைக்கப்பட்டு பேசபட்டவை என்பதை தவிர்த்து,) இந்த சூழலில் கவனம் பெற வேண்டிய நூல் இது என்று ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதி கவனப்படுத்திய நூல்கள் எண்ணிக்கை எத்தனை இருக்கும்? தொடர்ந்து நூல்கள் குறித்து எழுதிக்கொண்டு இருக்கும் சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தொடர்ந்து இலக்கியம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் மனுஷ்ய புத்திரன், பவா செல்லத்துரை என ஒரு பத்து பதினைந்து பேர். அவர்களை தவிர்த்தால் மிச்ச எழுத்து “ஆளுமைகள்” எல்லோருக்கும் பேச இருக்கும் ஒரே விஷயம் சினிமா.
எழுத்தாளர்கள் சினிமா குறித்து பேசிக்கொண்டிருக்கும் சூழலில், சினிமா பிரபலங்கள் (அவர்களாவது) புத்தகங்கள் குறித்து பேச வருவது நன்றுதானே.
இதே தேதியில் ஆரணியில் புத்தக திருவிழா நடக்கிறது. அங்கே சுதாகர் என்று ஒரு இலக்கிய வாசகர் இருக்கிறார். நோய் உள்ள இடத்தில்தான் வைத்தியம் தேவை என்பதை போல, இலக்கியம் இல்லா இடத்தில் தொடர்ந்து இலக்கியத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மாத மாதம் ஒவ்வொரு எழுத்தாளர்களை அழைத்து அங்குள்ள, அறிமுக வாசகர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளர் பிறந்த நாளையும் முடிந்த அளவு விளம்பரம் செய்து, அன்று அந்த எழுத்தாளருக்கான சிறப்பு கூட்டம் நடத்துகிறார். (சென்ற தி ஜா பிறந்த நாளுக்கு ஜி குப்புசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்).
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் ஆரணி புத்தக திருவிழாவை ஆரணி சுதாகர்தான் முன்னின்று நடத்திவருகிறார். அதை வாசகர் மத்தியில் கொண்டு செல்ல தன்னால் ஆனது அனைத்தும் செய்கிறார். இலக்கிய நூல்களுக்கு மட்டுமே என தானே தனியாக விழாவில் ஒரு அரங்கம் அமைக்கிறார். ஊர் முழுக்க எழுத்தாளர்களின் முகங்கள் கொண்ட பாதாகைகளை நிறுவுகிறார். ஒவ்வொரு ஷேர் ஆட்டோ, பிற வாகனம் என அந்த ஓட்டுநர் வசம் பேசி, அந்த வாகனத்தில் விளம்பர பதாகை ஓட்டி, கிராமம் வரை செய்தியை கொண்டு சேர்க்கிறார்.
இப்படி வருடம் முழுக்க. இது போக கொரானா முடக்கம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 பேர் பலனடையும் வண்ணம் அன்னதானம் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார். வயது முதிர்ந்த ஆதரவற்றோருக்கான இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எதிர்கால கனவுடன் சென்று கொண்டிருக்கிறார். எல்லாமே கையில் பெரிதாக காசு இன்றி, சம்பாதிப்பதை இதில் போடுவது, பிறர் வசம் கேட்டு வாங்குவது என்று செய்து கொண்டு இருக்கிறார். (சென்ற ஆண்டு நடிகர் கார்த்தி அவரது பணிக்கு பாராட்டு தெரிவித்து ஆதரித்துள்ளார்)
ஆம், தமிழ் இலக்கியம் தன் இயல்பால் செயல் ஆளுமைகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நிறையில் ஒருவர் சுதாகர்.
ஆகவே குறிப்பிட்ட அந்த மதிப்பீடுகளின் சரிவு சாரர், பிரியதுக்கு உரிய அந்த ஏழுத்தாளர்கள், நம்பிக்கை இழக்க தேவை இல்லை. அவர்கள் அறியாத சுதாகர் போன்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். இலக்கியத்துக்கு ஒரு குறையும் நேராது :).
கடலூர் சீனு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
