ஓஷோ: மரபும் மீறலும்-4
இந்த உரை யாருக்காக ?
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
நண்பர்களே,
ஓஷோ பற்றிய உரையின் இரண்டாவது நாளாகிய இன்று, இந்த உரையை உண்மையிலேயே தொடங்கவிருக்கும்போது, மேலும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த உரை யாருக்காக?
முதன்மையாக, பொதுவாசகர்களுக்காக. ஓஷோவை பற்றிய சிறிய அறிமுகங்கள், குட்டிக் கட்டுரைகள், அவரைப்பற்றிய மேற்கோள்கள், அவ்வப்போது எவராவது ஓஷோவைப்பற்றி சொல்லக்கூடிய வரிகள் வழியாகவே அறிந்திருக்கக்கூடியவர்களுக்காக. அதாவது இலக்கியம், அரசியல், சமூகவியல் ஆகியவற்றில் நூல்களைப் படிக்கக்கூடிய பொது வாசகர்களுக்காக. அத்தகைய வாசகர்களுக்கு ஓஷோவை எப்படி புரிந்துகொள்வது, எங்கே நிறுத்துவது, எப்படி தொடங்குவது என்ற அறிமுகத்தை அளிப்பதற்காகவே இந்த உரையை இங்கு ஆற்றுகிறேன்.
இரண்டாவதாக, ஆன்மீகமான தேடல் கொண்டு, மரபார்ந்த ஆன்மீகத்தில் இருந்து வெளியே வந்து வேறொரு வகையான ஆன்மீகத்தை நோக்கி செல்லக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு ஓஷோவிடம் செல்லத்தக்க ஒரு பாதையை துலக்குவது இந்த உரையின் நோக்கம்.
மூன்றாவதாக, இந்திய சிந்தனை மற்றும் மெய்ஞான மரபை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்காக அந்த மாபெரும் பரப்பில் ஓஷோ என்ற மனிதரை, சிந்தனையாளரை, ஞானியை எங்கு வைப்பது என்றும், அவருடைய முன்பின் தொடர்ச்சிகள் என்ன என்றும் வரையறுக்க முயல்கிறேன்.
என்னுடைய தகுதி என்ன ?
சரி, இந்த உரையை ஆற்றுவதற்கான என்னுடைய தகுதி என்ன என்பதையும் நானே கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக நம் மரபில் அதையும் ஒருவன் சபை நடுவே சொல்லியாகவேண்டும் என்னும் வழக்கம் உள்ளது. அறிவுச்சபைகளில் போலித்தன்னடக்கம் பிழையானது, தன் தகுதியை அறிவித்துக்கொள்வதே அடிப்படையான தேவை. என் தகுதிகள் என்னென்ன?
1. இலக்கியவாதி
எனது முதல் தகுதி, நான் ஓஷோவின் அடிப்படைப் பேசுபொருளான இலக்கியத்தைச் சார்ந்தவன் என்பது. இன்று ஓஷோ இருந்திருந்தால் அவரால் மேற்கோள் காட்டப்படும் தகுதி கொண்ட இலக்கியவாதி என்றே என்னைச் சொல்வேன். நான் தஸ்தாயெவ்ஸ்கியை விட ஒருபடி குறைவானவனாக என்னை நினைக்க மாட்டேன். இன்று இந்த உலகத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் குறைந்தபட்சம் பத்துபேர்தான் எனக்கு நிகரானவர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியாகவே சொல்லமுடியும்.
2. தத்துவ மாணவன்
தத்துவம் பற்றிப் பேசும் தகுதி என்ன என்று பார்த்தால், நான் ஒரு தத்துவ மாணவன். இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானி என்று சொல்லத்தக்க ஒருவருடைய மாணவன். குரு நித்யாவின் காலடியில் பல ஆண்டுக்காலம் அமர்ந்தவன். நாராயணகுருவின் தத்துவ மரபின் தொடர்ச்சி என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்பவன். இந்த எல்லையை தாண்டி வேறு எதையும் நான் கோரமாட்டேன்.
3. ஆன்மீக நாட்டம்
ஆன்மீகத் தகுதி என்ன என்று பார்த்தால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக தேடல் கொண்டு அலைந்து திரிந்து ஆசிரியர்களை கண்டடைந்தவன். என் வகையில் ஒரு யோகசாதகன் என்ற அளவிலே இந்த உரையை ஆற்றுகிறேன்.
ஓஷோவின் மூன்று முகங்களான இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என்பதில் எனது தகுதி என்பது இதுதான். இதை ஓரளவேனும் ஏற்றகவர்கள் என் உரையை கவனிக்கலாம், அல்லாதவர்கள் புறக்கணிக்கலாம். ஒன்றும் பிழையில்லை.
இதற்கப்பால் உள்ள ஒரு கேள்வி, எந்த மரபில் இருந்துகொண்டு இந்த உரையை நான் ஆற்றுகிறேன் என்பது. நான் ஓஷோவின் மாணவனோ அவருடைய மரபை சேர்ந்தவனோ அல்ல. நான் இங்கு நித்ய சைதன்ய யதியின் மாணவனாக, நாராயணகுருவின் அத்வைத மரபை சேர்ந்தவனாக நின்றுதான் பேசுகிறேன். ஓர் அவையில் பேச எழுகையில் தன் மரபு என்ன, தன் நிலைபாடு என்ன என்பதையும் சொல்லியாகவேண்டும் என்னும் வழக்கம் இந்தியாவில் உண்டு.
அத்வைத மரபை சார்ந்தவனுக்கு ஓஷோவை பற்றி பேசுவதற்கான இடம் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. அவர் எல்லா மரபுகளையும் நிராகரித்தவர் அல்லவா? ஒரு குறிப்பிட்ட தத்துவக் கொள்கையைக் கொண்டு அவரை விவாதிப்பது சரியாகுமா? நித்யா வேடிக்கையாக சொன்னதுபோல, அத்வைதம் ஒரு ரப்பர் எண்ணெய். ரப்பர் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுப்பார்கள். அதற்கு நிறம், மணம், குணம் எதுவும் கிடையாது. அதை எதோடும் சேர்க்கலாம். நாம் அனைவரும் சாப்பிடும் ‘சுத்திகரிக்கப்பட்ட’ தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அனைத்துமே முக்கால்வாசி ரப்பர் எண்ணெய்தான். அத்வைதமும் அப்படித்தான்.
நீங்கள் எந்தவொரு தத்துவ சிந்தனையை எடுத்துக்கொண்டாலும் அதன் பெரும்பகுதி அத்வைதமாகத்தான் இருக்கும். ஏனெனில், அடிப்படையில் அத்வைதம் என்பது ஒரு தத்துவ கொள்கை அல்ல, அது ஒரு தரிசனம். அதை ஒருமைத் தரிசனம் என்று சொல்கிறார்கள். இரண்டின்மை, பிளவின்மை என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் Absolutism எனலாம். அந்த தரிசனத்தை விளக்கும்பொருட்டு உருவானவைதான் அதன் தத்துவக் கருவிகள். அதாவது அதை ஐயப்படுபவர்களிடம் விளக்கும்பொருட்டும், மறுப்பவர்களிடம் விவாதிக்கும் பொருட்டும், அதை உலகியலில் வைத்து புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டும் உருவானவைதான் அதன் தத்துவமெல்லாம்.
ஆகவே தத்துவ விவாதங்களில் அத்தனை சிந்தனை முறைகளையும் அத்வைதம் எடுத்துக்கொள்கிறது. அதனுடன் உரையாடாத எந்தவொரு தத்துவ சிந்தனையும் இன்று இருக்கமுடியாது. சாங்கிய தரிசனம் பெருமளவுக்கு கிருஷ்ணனுடைய கீதையில் உள்ளது. பௌத்த சிந்தனைகள்தான் சங்கரருடைய சிந்தனைகளை விளக்க பெருமளவிற்கு உதவின. இன்றைய நவீன சமூகவியல், மொழியியல் சிந்தனைகளையும் அத்வைதம் உள்ளிழுத்துக்கொள்ளும். அத்தனை சிந்தனை முறைகளையும் பயன்படுத்திக்கொண்டு தனது தரப்பை சொல்லும் தன்மை அத்வைதத்திற்கு உண்டு. ஆகவே ஒரு அத்வைதி நவீன அறிவியலை எடுத்துக்கொண்டுகூட பேசலாம். உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் அத்வைதம் பேசமுடியும். அத்வைதம் ஒரு நிலைபாடு அல்ல, ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஓஷோவைப் பற்றிய விமர்சனத்தை இந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நான் சொல்லலாம்.
இதற்கும் மேல் ஓர் அத்வைதிக்கு ஓஷோவுடன் உரையாடுவதற்கான பொது இடம் ஒன்று உள்ளது. அவர் கீதை பற்றி எழுதிய மாபெரும் உரை அவருக்கும் அத்வைதத்திற்குமான ஒரு பாதையை திறக்கக்கூடியது. அத்வைதத்தை அவர் எப்படி பார்க்கிறார், அதை அத்வைதம் எப்படி பார்க்கிறது என்பதற்கான விளக்கம் அந்த நூலில் உள்ளது. ஆகவே இந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஓஷோவைப்பற்றிய சித்திரத்தை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
