வெண்முரசு, இரண்டு வாசிப்பு எல்லைகள்
அண்மையில் வெண்முரசு நூல்களை என் வீட்டுக்காக வாங்கினேன். அதில் ஒரு சுவாரசியத்தைக் காணமுடிந்தது. என் தங்கை அதில் முதல் மூன்று நாவல்களை வாசித்தாள். என் அம்மா இப்போது எட்டாவது நாவலில் இருக்கிறார். என் அம்மாவின் வாசிப்பு ஆழமானதாக இருந்தது. நாவலின் நுட்பமான உறவுகள், குறியீடுகள் எல்லாமே அம்மாவுக்குப் புரிந்தது. அம்மா எட்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்டவர். கல்கி , சாண்டில்யன் படித்திருக்கிறார்.
ஆனால் என் தங்கை எம்.பி.ஏ பட்டதாரி. பாலகுமாரனின் உடையார், சு.வெங்கடேசனின் வேள்பாரி எல்லாம் வாசித்தவள். அவளுக்கு வெண்முரசு நாவல்கள் வாசிப்புச் சுவாரசியம் கொண்டவையாக இருந்தன. ஆனால் அவள் கதையை மட்டும்தான் வாசித்தாள். கதை எங்கே வேகமாக இருக்கிறது , எங்கே தேங்குகிறது என்று மட்டும்தான் அவளால் சொல்லமுடிந்தது.
வெண்முரசில் ஆங்காங்கே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையம்கொண்டு கதை செல்லும்போது ‘சுத்திச் சுத்தி வருது’ என்று தங்கை சொன்னாள். மழைப்பாடல் நாவலில் குந்தி, காந்தாரி இருவரின் திருமணநிகழ்வுகள் சொல்லப்படும் இடத்தில் ‘ரொம்ப வர்ணனைகள்’ என்று சொன்னாள். இந்திரநீலம் நாவலில் சியமந்தக மணி பற்றிய பகுதிகளை ‘ஒண்ணையே சொல்லிட்டு இருக்காப்ல’ என்று சொன்னாள்.
நான் என் அம்மா என்ன சொல்கிறார் என்று அவரிடம் இதைப்பற்றி கேட்டேன். குந்தி மழைபெய்துகொண்டே இருக்கும் ஊரைச் சேர்ந்தவள், காந்தாரி மழை இல்லாத ஊரைச் சேர்ந்தவள். ஆகவேதான் நிலம் அப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது என்று சொன்னதோடு எங்கள் குடும்பத்திலேயே தஞ்சாவூர் மருமகள்களுக்கும் கோயில்பட்டி மருமகள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றும் சொன்னார்கள். அந்த வேறுபாடுதான் மொத்த கதையின் சாரம் என்றும் சொன்னார்கள்.
சியமந்தகம் பற்றி கேட்டேன். அது இந்த உலக இன்பங்கள் மற்றும் பொருட்கள மீதான பற்று. அதற்கு எதிரான பற்றுதான் கண்ணன் மீதுள்ளது. ஒவ்வொருவரும் அதற்கும் இதற்கும் நடுவே அலைமோதுகிறார்கள். அலைமோதாத நிலைத்த தன்மை காளிந்தியிடம் மட்டும்தான் உள்ளது என்று சொன்னார்கள். எங்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினையின்போது ஒரு வைரமோதிரம் எப்படி பெரிய மனக்கசப்பை உண்டு பண்ணியது என்றும், ஒவ்வொருவரின் உண்மையான தன்மையை வெளிக்காட்டியது என்றும் சொன்னார்கள்.
இரண்டு வாசிப்பையும் ஒப்பிட்டால் எனக்கு நாம் கதைகளை நிறைய வாசிக்க வாசிக்க உண்மையான ரசனை இல்லாமலாகிவிடுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஜே.ஆர்.சந்திரமௌலி.
அன்புள்ள சந்திரமௌலி,
வெண்முரசுத் தொகுதிகளை இப்போது அதிகம் வாங்குபவர்கள் இளைஞர்கள், தங்கள் பெற்றோருக்காக. அவர்களுக்கு அளிக்கத்தக்க ஒரு நல்ல பரிசாக அவை உள்ளன. பலர் முதியோர் இல்லங்களுக்குக் கூட வாங்கி அளித்துள்ளனர். முதியவர்களில் கொஞ்சம் வாசிப்பவர்கள் எளிதாக அதற்குள் நுழைந்துள்ளனர். வாழ்க்கையில் வாசித்த ஒரே நூல் வெண்முரசுதான் என்பவர்களும் பலர் உள்ளனர்.
முதியவர்களுக்கு இரண்டு சாதகமான அம்சங்கள் உள்ளன. ஒன்று, அவர்களுக்கு ஏற்கனவே மகாபாரதம் கொஞ்சம் தெரியும். அது ஒரு தொன்மையான கதை என்றும், அன்றைய வாழ்க்கை அது என்றும் புரியும். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள், குந்தி ஐந்துபேரிடம் பிள்ளை பெற்றாள், ராதை கிருஷ்ணனின் அத்தைமுறை என்றெல்லாம் சொன்னால் கலாச்சார அதிர்ச்சியெல்லாம அடையமாட்டார்கள். இரண்டு, அவர்களுக்கு இலக்கியம் , வாசிப்பு சார்ந்த எதிர்மறைப் பயிற்சியும் முன்முடிவுகளும் இல்லை. ஆகவே இலக்கியத்தை வாழ்க்கையுடன் இயல்பாக இணைத்துக்கொண்டு வாசிப்பார்கள்.
ஆனால் தமிழ் வணிக எழுத்தை வாசித்துப் பழகியவர்கள், சீரியல்களில் ஊறியவர்களுக்கு எதிர்மறைப் பயிற்சி உண்டு. அவர்களுக்கு ‘கதை’ முக்கியம். அது அவர்கள் ஏற்கனவே ரசித்த கதைகளின் சாயலுடன் இருக்கவேண்டும். இல்லையேல் ஏமாற்றம் அடைவார்கள். விவாதங்கள், வர்ணனைகள், எண்ணங்கள் எல்லாமே ‘கதைக்கு தேவையற்றவை’ என்றுதான் நினைப்பார்கள். புனைவுத்தருணங்கள், உணர்வுகள், உறவுகள் ஆகியவற்றை எல்லாம் அவர்கள் ஏற்கனவே அறிந்தவற்றைக்கொண்டு மட்டுமே மதிப்பிடுவார்கள்.
இத்தகைய எதிர்மறைப் பயிற்சி கொண்ட வாசகர்கள் அவர்களுடைய நிலையை விட்டு சற்றும் முன்னகர மாட்டார்கள். வாசிப்பினூடாக வளர்ச்சி என்பதே இருக்காது. எந்த பெரும்படைப்பையும் தங்கள் சொந்த அளவுகோலைக்கொண்டு அலட்சியமாக மதிப்பிடுவார்கள். சாதாரண வணிக சினிமாச் சந்தர்ப்பங்களை எந்த விவாதங்களிலும் இழுப்பதை, எந்த புனைவுத்தருணத்துடனும் ஒப்பிடுவதை இவர்களிடம் காணலாம். அதன் வழியாக எல்லாவற்றையும் கொஞ்சம் கேலிக்கூத்தாகவும் ஆக்கிவிடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள் தங்களை வாசகர் என்றல்ல, நுகர்வோர் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். வணிகநுகர்வில் நுகர்வோர்தான் முதன்மையானவர்கள், எல்லாமே நுகர்வோரின் ரசனைக்காகவே படைக்கப்படுகின்றன, ஆகவே நுகர்வோரின் கருத்தே முக்கியம். இலக்கியம் நுகர்பொருள் அல்ல, அது ஒருவகைக் கல்வி, மாணவன் அந்த நூலைநோக்கி எந்த அளவுக்கு நகர்கிறான் என்பதே முக்கியம், முன்னேறிவராத மாணவன் தன்னை தோற்கடித்துக்கொள்கிறான். அதை அவர்கள் உணர்வதில்லை.
இந்த எதிர்மறைப் பயிற்சியை அத்தனை எளிதில் கடக்கமுடியாது. ஏனென்றால் தாங்கள் ‘நிறையப் படித்தவர்கள்’ என இவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இவர்களைப்போலவே சிந்திக்கும் ஒரு பெரிய கூட்டமும் இவர்களுக்கு இருக்கும். ஆகவே இவர்கள் தாங்களே ஏதேனும் ஒரு அகமாற்றத்தை அடைந்து, முன்னகர்ந்தால்தான் உண்டு.
கடந்த நூறாண்டுகளாகவே இலக்கியம் போராடிக்கொண்டிருப்பது இந்த வணிகஎழுத்தின் வாசகர்களுடன்தான். புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் , ராஜமார்த்தாண்டன் என தலைமுறை தலைமுறையாக விமர்சகர்கள் போராடியதும் இவர்களுடன்தான்.
இன்று சமூகவலைத்தளங்கள் வந்தபின் அந்த போர் இன்னும் சிக்கலாகிவிட்டிருக்கிறது. ஒன்றுமே தெரியாத கும்பல், வெட்டி வம்புகளாகவே இலக்கியத்தை அணுகும் கூட்டம் உள்ளே வந்து சகட்டுமேனிக்கு உளறி பொதுவெளியில் எதையுமே பேசமுடியாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. ஆயினும் எதிர்பார்ப்புடன் தொடர் உரையாடல் ஒன்றை நிகழ்த்துவது மட்டுமே நம்மால் செய்யத்தக்கது.சிலர் மேலே வரக்கூடும். அவ்வாறு வந்த சிலர் அளிக்கும் நம்பிக்கையே நமக்கு ஊக்கமளிக்கவேண்டும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
