மழை, முகில், இரவு…
அண்மையில் நான் வாசித்த உங்கள் நாவல் கதாநாயகி. வெண்முரசு முடித்தபின் உங்கள் எழுத்தில் எனக்குப் புதியதாக என்ன இருக்கமுடியும் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. வெண்முரசு முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகியது. மூன்றாண்டும் வெண்முரசிலேயே ஆழ்ந்து கிடந்தேன். அந்த பெரிய அனுபவத்துக்குச் சமானமாக ஏதும் இனி இல்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் கதாநாயகி என் எண்ணத்தை புரட்டிப்போட்டது. தமிழின் பொதுவான வாசகர்கள் அந்நாவலை ஒரு திரில்லர் நாவலாக படித்துவிடுவார்கள். கதைச்சுருக்கம் எழுதும் விமர்சகர்களுக்கும் பிடிகிடைக்காது. அந்நாவல் இத்தனை அடுக்குகள் கொண்டது என்பதை சொன்னாலும்கூட பலருக்கு புரிய வாய்ப்பில்லை.
நான் என் 17 வயது முதல் பிரிட்டிஷ் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். ஏனென்றால் நான் ஆங்கில இலக்கியம் படித்தேன். 18 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பலர் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள். தமிழில் அவர்களைப் பற்றி நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். குறிப்பாக மேரி கெரெலி. அந்தவகையில் இந்நாவலில் ஃபேனி பெர்னி பற்றி சொல்கிறீர்கள். அசல்வரிகள், அசல்வரிகள் போலவே நீங்கள் எழுதிய வரிகள், ஒரு சமகாலப் பேய்க்கதை, அதற்குள் பிரிட்டிஷ் ராஜ் காலகட்டம், அதற்குள் பழைய லண்டன், அதற்குள் ரோமாபுரி காலகட்டம் என சென்றுகொண்டே இருக்கும் இந்நாவலை நான் முழுமையாக வாசித்து முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒரு சுருள்பாதைபோல இழுத்துச் சென்று சரித்திரம் முழுக்க நிறைந்திருக்கும் பெண்களின் கண்ணீரைக் காட்டுகிறது.
த. கிருஷ்ணகுமார்.
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் நாவலை வாசித்தேன். நீங்கள் எழுதிய நாவல்தானா என்ற சந்தேகம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. அத்தனை எளிய நடை. நேரடியான கதை. அறிவார்ந்த விவாதங்கள் ஏதுமில்லை. உருவகங்கள் ஏதுமில்லை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு கவித்துவம் இருந்துகொண்டே இருந்தது. உங்கள் கதைகளில் ஓர் அமர்வில் வாசித்து முடிக்கவேண்டிய நாவல் இது. நாவல் முடிந்தபின்னரும் அந்த ஆ மப்பு ஈ மப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
முதலில் ஓர் உணர்ச்சிகரமான காதல்கதை என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் உலக இலக்கியத்தின் மகத்தான காதல்கதைகள் எல்லாமே புதியகளத்தில் சொல்லப்பட்ட தொன்மையான கதைகள்தான். கதைநாயகன் கதைநாயகியைச் சந்திக்கிறான். பிரிகிறான். அதே கதைதான். ஆனால் அந்த முகில்கள் இணைவதும் பிரிவதும் அற்புதமான ஒரு படிமம். இணையும்போது இரண்டும் ஒன்று. பிரிந்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது வானத்தின் விதி. அந்த சினிமாப்பின்புலம், அதற்குள் நிகழும் காதலின் ஒவ்வொரு உணர்வும் சினிமாப்பின்பலத்தில் உருவகமாகி கதையை ஒரு நீண்ட கவிதையாக ஆக்கிவிடுகிறது.
மகேஷ் ஆனந்த்
அன்புள்ள ஜெ,இரவு நாவலை மீண்டும் வாசித்தேன். இந்த தளத்தில் தொடராக வந்தபோதே வாசித்திருந்தேன். இப்போது மீண்டும் வாசித்தேன். அப்போது இரவில் வாழ்தல் என்னும் அந்த கருத்து அளித்த கிளர்ச்சியும், நீலிமா என்னும் யக்ஷியும்தான் கவர்ந்தன. இன்று வாசிக்கையில் அதிலுள்ள உணர்ச்சிகரமான நுட்பங்கள் மனதைக் கிளரச்செய்கின்றன. குறிப்பாக மேனனின் கனவில் கமலா வரும் காட்சி. கனவுக் காட்சிகளிலுள்ள clairvoyance அம்சம் போன்றவை. மலையாள இலக்கியக் கலாச்சரா உலகை அறியுந்தோறும் இந்நாவல் மேலும் ஒளிகொண்டபடியே செல்கிறது. இரவில்தான் யக்ஷி வாழமுடியும். யக்ஷியுடன் வாழ அனைவராலும் இயலாது. அந்த வாழ்க்கை கூரிய வாளை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவதுபோல. (உங்கள் உவமைதான்) ஆனால் அந்த மகத்தான அனுபவத்தை அடைந்தவன் அதன் பின் வெளிறிய பகல்களை விரும்பவே மாட்டான்.கிருஷ்ணராஜ்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
