நான் எழுதும் அரசியல்
நீங்கள் எழுதிய இரண்டு அரசியல் படைப்புகள் என்று பின்தொடரும் நிழலின் குரல், வெள்ளையானை என்ற இரண்டு நாவல்களையும் சொல்லமுடியும். (வெள்ளையானை இப்போது ஆங்கிலத்தில் வரவுள்ளது என அறிகிறேன். பின்தொடரும் நிழலின் குரல் நாவலும் அவ்வாறு வெளிவரும் என நம்புகிறேன்)
உங்கள் அரசியலை விரிவாக முன்வைத்து இந்நாவலில் எழுதியிருக்கிறீர்கள். பின்தொடரும் நிழலின் குரல் மார்க்சிய எதிர்ப்பு நாவல் என்று சொன்னார்கள். நான் இப்போதுதான் வாசித்தேன். அதில் எங்கே மார்க்ஸிய எதிர்ப்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மார்க்சிய இலட்சியவாதம்தான் அதில் திரும்பத் திரும்ப தூக்கிப்பிடிக்கப்படுகிறது. அதிகார அரசியலால் அது எப்படி ‘கரெப்ட்’ ஆகிறது என்று நாவல் சொல்கிறது. அதை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நேர்மையான கம்யூனிஸ்டுகள் போராடுவதும் அந்நாவலில் உள்ளது. மிகமிக எதிர்மறையாகப் பார்த்தாலும்கூட தொழிலாளர்களுக்கு ஒரு பேரம்பேசும் சக்தியை மார்க்ஸியமே உருவாக்கித் தந்தது, எந்நிலையிலும் அதை மீறமுடியாது என்றுதான் நாவல் காட்டுகிறது.
மார்க்ஸியத்தின் அமைப்பு சார்ந்த இறுக்கம் எவ்வளவோ நல்ல இலட்சியவாதிகளைக் காவுகொண்டிருக்கிறது. மாமனிதர்கள் மனம் வெதும்பி விலகியிருக்கிறார்கள். அதை அந்நாவல் பேசுவதனால்தான் உண்மையில் இங்கே மார்க்ஸியக் கட்சிக்காரர்கள் அந்நாவல்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். 2007ல் இந்நாவலை வாசிக்கும்படி கோவை ஞானி ஐயா என்னிடம் சொன்னார். ஆனால் என்னால் இப்போதுதான் முழுமையாக வாசிக்கமுடிந்தது.
அதே வேகத்துடன் வெள்ளையானையை வாசித்தேன். இது நேரடியான நாவலென்பதனால் நான் வேகமாக வாசித்து முடித்தேன். இந்நாவல் இரண்டு தொன்மங்களை உடைக்கிறது.
ஒன்று, இந்து மதம் என்னும் கட்டமைப்புக்குள் தலித்துக்கள் பஞ்சகாலத்தில் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லி அந்த சமயத்தில் இங்கே இருந்த மத அமைப்புகள் எப்படிச் செயல்பட்டன என்று காட்டுகிறது. அந்த பஞ்சகாலத்தில் அரசுக்கு உடந்தையாக இருந்து, ரத்தம்குடித்தவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்குப் பெரும்கோடீஸ்வரர்களாக தொழில் செய்கிறார்கள்.
இரண்டு, பிரிட்டிஷ் ஆட்சி தலித்துக்களுக்குச் சாதகமானது என்பதும் பொய்தான். பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே தலித்துக்களைச் சாகவிட்டது. உலகமெங்கும் அடிமைகளாகக் கொண்டுசென்றது. அந்த பஞ்சங்களில் தலித் சமூகம் அழியவில்லை என்றால் அவர்கள் 50 சதவீதம் வரை மக்கள்தொகை இருந்திருப்பார்கள். இன்றைய ஜனநாயகத்தில் அவர்களிடமே அதிகாரமும் இருந்திருக்கும். அதை நீங்கள் சொல்லிக் கேட்கும்போது பெரும் திகைப்பே உருவாகிறது.
ஆழமான சிந்தனைகளை உருவாக்கிய இரண்டு நாவல்கள்.
ஜே.ஆர்.கோவிந்தராஜ்
அன்புள்ள கோவிந்தராஜ்,
இங்கே நம் சூழலில் அரசியல் என்பது ‘கட்சியரசியல்’ என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உங்கள் அரசியல் என்ன என்று கேட்டால் அதன்பொருள் நீங்கள் என்ன கட்சி என்பதே. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த அரசியல் தரப்பையும் ஏற்றுக்கொண்டவனும் அல்ல. ஓர் எழுத்தாளன் அப்படி ஒரு கட்சியை, ஒரு தரப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதையே எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி பி.கே.பாலகிருஷ்ணன் என அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் கற்றிருக்கிறேன். கட்சியரசியல் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில், அல்லது சுயநலத்தின் அடிப்படையில் ஒரு திரள் உருவாகி அது அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதும், கைப்பற்றி ஆட்சி செலுத்துவதும்தான். அப்படி ஒரு திரளின் குரலாக ஒலிப்பவன் இலக்கியவாதி அல்ல.
கட்சியரசியல் என்பதற்கு அப்பால் ஓர் அரசியல் இருக்க முடியும். அதைக் கட்சியரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் தங்கள் தரப்பினராகவோ அல்லது எதிரியாகவோதான் இருக்க முடியும். காழ்ப்பு, திரிப்பு, ஏளனம், அவதூறு, வசை ஆகியவற்றினூடாக எதிரியையும்; முடிவில்லாத சப்பைக்கட்டுகள் வழியாக தன் தரப்பையும் அவர்கள் எதிர்கொள்வார்கள். இச்சூழலில் நான் சொல்லும் அரசியலை எந்த அரசியல்கட்சியாளரும் தங்கள் எதிரித்தரப்பு என்றே முத்திரையடிப்பார்கள்.
இலக்கியவாதியின் அரசியல் என்பது அவனுக்கு மட்டுமான ஒன்று என நான் நினைக்கிறேன். அவன் தனக்கான அறத்தை, தனக்கான உலகச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறான். அதற்காகவே அவன் எழுதுகிறான். ஏற்கனவே இருக்கும் அரசியலை அவன் சொல்லவில்லை, அவனுக்கான ஒன்றை மட்டும் சொன்னால்தான் அவன் எழுத்தாளன். அந்த அரசியலையே தன் படைப்புகளினூடாக தொடர்ச்சியாக் விரிவாக்கிக் கொண்டிருக்கிறான். என் படைப்புகளிலுள்ள அரசியல் அவ்வாறு எனக்கான அறத்தில் இருந்து உருக் கொண்டது. அதைத்தான் என் புனைவுகளுக்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறேன். அவை அறுதியான முடிவுகளோ உறுதியான நிலைபாடுகளோ அல்ல. ஏனென்றால் நான் நம்பிக்கையின் வழியில் செல்லவில்லை, என்னுடையது தேடலும் அதன் விளைவான தத்தளிப்பும் சில கண்டடைதல்களும் கொண்டது.
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ளது அந்த அரசியல்தான். அது இடதுசாரி அரசியல் அல்ல, வலதுசாரி அரசியலும் அல்ல. அது அடிப்படையில் மானுட மீட்பைத்தான் கனவுகாண்கிறது. அக்கனவை எந்த தரப்பில் இருந்து எவர் கண்டாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உணர்ச்சிகரமாக இணைந்துள்ளது. மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தை அந்நாவல் பெரும் தாகத்துடன் ஏற்றுக் கொண்டாடுவதை வாசகன் காணமுடியும்.கூடவே அதுமானுடத்துயரம் அனைத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டு தன் துயரமாக உணர்கிறது. அதற்குக் காரணமான ஒடுக்குமுறைகள், அழிவுகள் அனைத்துக்கும் எதிராகச் சீற்றம் கொள்கிறது. ஆகவே மார்க்ஸியத்தின் பெயரால் ருஷ்யாவில் நிகழ்ந்த வன்முறைகளை எழுதுகிறது. மார்க்ஸியக் கொள்கைகளிலுள்ள ஜனநாயகமின்மையை சுட்டிக்காட்டுகிறது. கருத்தியல் நம்பிக்கை எங்கே மானுட விழுமியங்களுக்கே எதிராகச் செல்கிறது என்பதைப் பேசுகிறது.
அந்த சுதந்திரமான அறம் , அந்த தனியறத்தின் அரசியல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர்கள் எப்போதும் தங்கள் எதிர்த்தரப்பு செய்யும் ஒடுக்குமுறைகளை, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவார்கள். கொந்தளிப்பார்கள். ஆனால் அதே ஒடுக்குமுறையும், அதே அநீதியும் தன் தரப்பால் செய்யப்பட்டால் நியாயப்படுத்துவார்கள், ஆதரிப்பார்கள். அதில் வெட்கமே இருப்பதில்லை. பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்கும் ஓர் இடதுசாரி அதில் கூறப்பட்டுள்ள மாபெரும் மானுட அழிவை பொருட்டாக நினைப்பதில்லை, ஏனென்றால் அதைச் செய்தவர் அவருடைய தலைவரான ஸ்டாலின். அந்நூலை அவர் இடதுசாரிகளுக்கு எதிராகவே நினைப்பார். அந்நாவலை மார்க்ஸிய எதிர்ப்பு என கொண்டாடும் ஒரு வலதுசாரி அந்நாவல் காட்டும் மாபெரும் சுரண்டல்களை கண்டும் காணாமல் சென்றுவிடுவார்.
அதேபோல வெள்ளையானை நாவலை வாசிக்கும் ஓர் இந்து மதவாதி அந்நூல் காட்டும் இந்தியச் சித்திரத்தில் பலகோடிப்பேர் பஞ்சத்தில் செத்தழிந்தபோது இந்திய மத அமைப்புகள் திரும்பியே பார்க்காமலிருந்தனர் என்னும் உண்மையை வெறுப்பார். பழியை முழுக்கமுழுக்க பிரிட்டிஷார் மேல் போடவேண்டும் என்று நினைப்பார். அந்நாவலை தங்களுக்கு எதிரான ஒன்றாக முத்திரையடிப்பார். அரசியல்வாதிகள் இந்நாவல்கள் ஒன்றுடனொன்று இணைந்து ஒரே அரசியல்தரப்பாக ஆகவேண்டும் என நினைப்பார்கள், அவ்வாறு ஆகின்றன என்று காட்டவும் முயல்வார்கள். ஆனால் ஒரு வைரத்தின் பட்டைகளை திருப்பித்திருப்பிப் பார்ப்பதுபோல ஒரே உண்மையின் முற்றிலும் வேறுபட்ட பல பக்கங்களைப் பார்ப்பவை இந்நாவல்கள் என்பதே சரியானது.
இலக்கியத்தின் அரசியல் என்பது இந்த அரசியல்கும்பல்களின் ஒற்றைப்பக்கச் சார்புள்ள மூர்க்கமான அறவுணர்வுக்கு அப்பாக் எழுந்து எல்லா திசையிலும் அறத்தை, விடுதலையை முன்வைப்பதேயாகும். அதைத்தான் அவ்விரு நாவல்களும் செய்கின்றன. அந்த அடிப்படை உணர்வை அடைபவர்களுக்குரியவை அவை – எந்த இலக்கியமும் அவர்களுக்குரியது மட்டுமே. தன்னை ஏதேனும் ஒரு தாப்புடன் இணைத்துக்கொண்டு வாசிப்பவர்களுக்கு உரியவை அல்ல. அந்நாவல்களை அரசியல் தரப்புகள் சார்ந்து சத்தம்போடுபவர்களும் வாசிக்கலாம், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அந்த மனசாட்சியுடன் அந்நாவல்கள் பேசும். அவர்கள் ஒளித்துவைத்தாலும் அவர்களுக்குள் அந்த அறத்தின் குரல் வளரும். அவ்வாறு அந்நாவல்களால் பாதிப்படைந்த எத்தனையோ பேரை நான் கண்டதுண்டு.
இலக்கியத்துக்கு அப்பால் என் ‘நடைமுறை அரசியல்’ என்ன? அதை நான் சிற்றலகு அரசியல் (மைக்ரோ பாலிடிக்ஸ்) என்று சொல்வேன். கட்சிசாராமல், அதிகாரம் நோக்கிச் செல்லமுயலாமல், சமூகத்தின் கருத்துநிலையை ஆக்கபூர்வமாக மாற்றமுயலும் அரசியல் அது. அதில் அதிகாரம் இல்லை என்பதனாலேயே அது தீங்கை இழைக்க முடியாது. சமூகம் நோக்கிய ஓர் உரையாடல்தான் அது. சமூகம் தனக்கான கொள்கைகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறது. சேவை, பிரச்சாரம் மூலம் சமூகத்தை நோக்கி செயல்படுவது அது. சமூகம் அதை ஏற்கலாம், ஏற்றால் சமூகம் முன்னகரும். ஏற்காமலும் போகலாம், ஏற்கவில்லை என்றால் எந்த அழிவும் உருவாவதில்லை.
இந்த சிற்றலகு அரசியல்தான் இதுவரையிலான இந்தியச் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. கல்வி மறுமலர்ச்சி, சூழியல் உணர்வு முதல் பலநூறு ஜனநாயக உரிமைகள் வரை நாம் அடைந்துள்ள எல்லாவகையான மாற்றங்களும், வளர்ச்சிகளும் அதனால் உருவாக்கப்பட்டவைதான். ஒரு சமூகத்தின் பிரக்ஞ்ஞை மாறிவிட்டதென்றால் உண்மையான மாற்றம் நிகழ்ந்தே தீரும். அரசு மக்கள் அடிப்படையில் விரும்புவனவற்றைச் செய்தேயாகவேண்டும்.
ஒரு தெரு சுத்தமாக இருந்தாகவேண்டும் என அங்கே வாழும் மக்கள் உண்மையில் உறுதியாக எண்ணினால் அத்தெரு சுத்தமாகும். அரசு மக்களுக்குப் பணியும். ஆகவே தூய்மையை உருவாக்க தூய்மை தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கினால் போதும். அரசதிகாரத்தைக் கைப்பற்றி அங்கே தூய்மையை கொண்டுவருவதென்பது ஒரு மாயை. தூய்மை தேவை எனும் எண்ணம் உருவாகாமல் இருக்கையில் அரசு என்ன செய்தாலும் அந்த தெருவை தூய்மையாக வைக்கவும் முடியாது. எண்ணங்களை மாற்ற போராடுவதுதான் நுண்ணலகு அரசியல். அது பல தளங்களில் செயல்படுகிறது.
அந்த எல்லா நுண்ணலகு அரசியல் செயல்பாடுகளுடனும் நாற்பதாண்டுகளாக உடனிருந்துள்ளேன். அவ்வரசியலை செய்பவர்களை தொடர்ச்சியாக முன்வைத்தும் வருகிறேன். அந்த அரசியலின் ஒரு பகுதியாகவே நான் நேரடியாக அரசியல் கருத்துக்களை எழுதுகிறேன். காந்தியைப் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களுமே அந்தக் கோணத்தில் அவரை அணுகுபவை.
ஆகவே தேர்தலரசியலை முற்றாகவே தவிர்ப்பது என் வழி. தேர்தல் நெருங்கும்போது முழுமையாகவே அமைதியாகிவிடுவேன். கட்சிவிவாதங்களில் கருத்தே சொல்வதில்லை. தேர்தலை ஒட்டி நான் எழுதியது ஒரே தருணத்தில்தான். ஆனால் அப்போதுகூட ஜனநாயகம் என்றால் என்ன என்று மட்டுமே எழுதினேன். ஜனநாயகச் சோதனைச்சாலையில் என்னும் நூலாக அக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
