சு.ரா – கடிதம்
அன்புள்ள ஜெ,
20 ஆண்டுகளுக்கு முன், 2005-ல் சுரா இறந்தபோது உங்களின் நினைவின் நதியை படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வுகளை, இன்று ”ஓர் ஒளிர்விண்மீன்” படித்தபோதும் உணர்ந்தேன். கண்களில் நீர் தளும்பிக்கொண்டே இருந்தது.
1998-ல், காஞ்சீபுரம் இலக்கிய வட்ட நிகழ்வு ஒன்றில் சுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தேன். அப்போதே அவரது காற்றில் கலந்த பேரோசை, விரிவும், ஆழமும் தேடி, புளிய மரத்தின் கதை போன்ற நூல்கள் எனக்கு பைபிள்களாக இருந்தன. அடுத்த மாதம் நம் நிகழுவுக்கு சுரா வருகிறார் என்று அப்பா இலக்கிய வட்டம் நாராயணன் சொல்லியதிலிருந்து இனம்புரியாத மகிழ்ச்சியிலிருந்தேன். அவரை முதன்முதலாக சந்தித்த தருணத்தை நினைவு கூர்கிறேன். அன்று அவரை காஞ்சீபுர இலக்கியவட்ட நண்பர்கள் அமுதகீதன், தரும இரத்தினகுமார் ஆகீயோர் காலச்சுவட்டில் அப்போது வந்துகொண்டிருந்த தினமலர் விளம்பரங்களை வைத்து சாதிய + வணிக நோக்க எண்ணம் கொண்டவர் என்று தீவிரமாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் அக்கூட்டங்களில் கலந்துகொண்ட காலங்களில் பிற எழுத்தாளர்கள் எவரையும் விட (சாரு நிவேதிதா உட்பட) அவர் மீது வன்மம் கொண்டு தாக்கியதாகவே உணர்ந்தேன். அதை அப்பா காஞ்சிபுரம் நாராயணன் அவர்களிடம் பகிரவும் செய்தேன்.
ஆனால், சுரா அவரது உரையில் இவை எவற்றையும் பொருட்படுத்தி பதில் சொல்லவேயில்லை. அவருக்கும், காஞ்சிபுரத்திற்கும் உள்ள உறவை, ஒரு வணிகராக அவர் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிய காலங்களை நினைவு கூர்ந்து சிலவற்றை கூறினார். அவர்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கு அவர் அங்கேயே பதிலுரைத்திருக்கவேண்டும் என்று அந்த இளம் வயதில் எனக்கு தோன்றியது. அவரை மதிய உணவு இடைவேளையில் பூக்கடை சத்திர PTVS வன்னியர் உயர் நிலைப்பள்ளி (அப்போது பெரும்பாலான இலக்கியவட்ட கூட்டங்கள் அங்குதான் நடக்கும்) பெஞ்ச் ஒன்றில் தனியாக அமர்ந்திருக்கும்போது தயங்கித்தயங்கி சந்தித்தேன். விரிவும் ஆழமும் தேடி நூலட்டையில் ஓவியர் ஆதிமூலம் வரைந்திருந்த தாடி வைத்த கோட்டோவியம் சுரா தான் என்பதை ஊகித்திருந்தேன். ஆனால் அன்று அவர் மழித்த முகத்துடன் வந்திருந்தார், அதனால் சற்று துணுக்குறல் ஏற்பட்டது. அவரிடம் என்ன பேசினேன் என்று ஞாபகமில்லை. ஏனெனில், நான் பேசியது ஓரிரு வார்த்தைகளுக்குள்தானிருக்கும். ஆனால், அவரிடம் அவரது காற்றில் கலந்த பேரோசை நூலில் கையெழுத்து வாங்கினேன். ஆனால் அதற்கு முன்புவரை அவரிடம் கையெழுத்து வாங்கலாமா, வேண்டாமா என்று ஒரு பெரும் விவாதம் என்னுள் நடந்துகொண்டிருந்தது (அப்போதைய ”பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே” – மனநிலை). பின்னர் என். ராம், புக்கர் பரிசுபெற்ற அருந்ததி ராயிடம் வரிசையில் நின்று கையெழுத்து வாங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு ஒருவாறாக என்னை சமாதானம் செய்துகொண்டு சுராவிடம் கையெழுத்து வாங்கினேன்.
பின்னர் ஒருமுறை 2003-ல் நாகர்கோவில் சென்று அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். மூன்று மணி நேரங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்; தவறு நான் அவரிடம் என்னவெல்லாமோ (தமிழ் படங்களில் தமிழ் கலாச்சாரம் இல்லை – தேவர் மகன் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் – நீங்கள் கமல்ஹாசனை சந்தித்தது உண்மையா என்ற ரீதியில்…) பேசிக்கொண்டிருந்தேன். அன்று நான் பணகுடி திரும்பும்வரை என் வாழ்நாழிலேயே அதுவரை இல்லாத மகிழ்ச்சியுடனிருந்தேன். வீட்டிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்ததும் அப்படி என்னதான் அவ்வளவு நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாய் என்று சற்று எரிச்சலுடன் அப்பா கேட்டதும் ஞாபகமிருக்கிறது. ஆனால், நினைவின் நதியில் படித்தபின்பு, அது சுராவின் உயரிய குணங்களில் ஒன்றான கணவான் தன்மை என்று புரிந்தபின்பு, நான் ஒரு சாமானியன் என்று உணர்ந்ததும் சற்று துணுக்குற்றேன்.
அவரையும், கமல் ஹாசனையும் 2004’ல் நடக்கவிருந்த எனது திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். வருகிறேன் என்று சொன்னார். ஆனால் எங்களது திருமணத்தின்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். பின்னர் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் அவரிடம் பவானியை அறிமுகம் செய்துவைத்தேன். அப்போதே என்னிடம் ஒரு கையடக்க டிஜிட்டல் கேமரா இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொள்வாரோ என்ற தயக்கத்தால் அவரிடம் கேட்காமலேயே வந்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது சில மாதங்களில் அவர் மறைந்தபின்புதான் எனக்கு உரைத்தது. சலபதி இறுதி அஞ்சலிக்கு நாகர்கோவில் வருகிறீர்களா என அழைத்தார். நான் எனது அப்பா என்ன சொல்வாரோ என்ற தயக்கத்தால் போகவில்லை. என் அப்பா, சுராவின் (குழைந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு முந்தைய) ”எஸ் ஆர் எஸ்” ஸே தான்.
நினைவின் நதியில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கிளிஷே). ஆனால் அப்போதைய ’பதிவர்கள் உலகில்’ உங்களை சுராவின் சாவில் புகழ் வெளிச்சம் தேடுபவராகவே பலரும் அவதூறு செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் புத்தகம் என்னைப் பொறுத்த அளவில் அப்போதைய உங்களின் நூல்களில் உச்சம். அதன் முன்னுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் – ”இது நானறிந்த சுந்தர ராமசாமி, வேறு பல சுந்தர ராமசாமிக்கள் இருக்கலாம்” (என் நினைவில் இருந்து எழுதுகிறேன்).
சுந்தர ராமசாமியை நான் இன்னும் அணுக்கமாக உணர்ந்தது அந்தப் புத்தகத்தினால் தான். அதில் வரும் சில வரிகள் நானும் அப்படித்தானே என உணர்ந்த இடங்கள் – உதாரணமாக அசம்பு ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்க சுரா பேரம் பேசும் இடம். கூடைக்காரிகள் குறித்த அவரது அவதானிப்பு, சுதர்சன் ஜவுளிக்கடையில் சேலை வாங்கவரும் அடித்தளத்திலிருந்து அப்போதுதான் மேலேறி வந்துகொண்டிருக்கும் மக்களின்மேல் அவருக்கிருந்த பெருமிதம் என்று அதில் விவரிக்கப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் எனை அவர்பால் மேலும் ஈர்த்தன. உண்மையிலேயே அவரை அணுகியறிந்து, அவர்மேல் பெருங்காதல் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு எழுதமுடியும் என்பதை உணர்ந்து உங்கள் மேல் நான் மேலும் ஈர்க்கப்பட்டேன். அந்தப்புத்தகம் உங்களையும் நான் மேலும் புரிந்துகொள்ள எனக்கு திருப்புமுனையாக இருந்திருக்கலாம் என இப்போது இதை எழுதும்போது உணர்கிறேன். (ஆம் நீங்கள் சுரா மரணத்தினால் ஆதாயம் அடைந்திருக்கிறீர்கள், ஹிஹி… – இதை எழுதும்போது இன்றைய செயற்கை நுண்ணறிவு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளுமோ என்ற எண்ணமும் மேலெழுகிறது).
காந்தி குறித்த அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் கவித்துவத்தின் உச்சம். இவ்வாறு பல தருணங்கள் நினைவில் நதியிலுண்டு. ஒருமுறை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து யுவனும் நினைவின் நதியில் தனக்கு பிடித்திருந்தது என்று சொன்னார். உண்மையில் சுரா இறந்தபின்பு அவர் குடும்பத்தினர் வெளியிட்ட நினைவுகூறல் புத்தகத்தைவிட நினைவின் நதியில் மூலம்தான் நான் சுராவை ஒரு சாமானியனாக, எழுத்தாளானாக, சிந்தைனையாளராக முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. அவரை இன்னும் காதலிக்க வைக்கவைத்தது. இன்று அது நிறுவவும்பட்டிருக்கிறது.
விஷ்ணுபுரம் வெளியீடாக வரும் நினைவின் நதியில் நூலை உங்கள் கையெழுத்துடன் பெற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
சுரா நினைவின் நதியில் மறுபதிப்பு வெளிவந்த நாட்களில் ஒருமுறை இணையத்தில் சுந்தரசாமியுடன் ‘ஒட்டிக்கொண்டு’ நான் புகழ்பெற நினைத்து எழுதிய நூல் அது என்னும் வசையை ஒருவர் எழுதியிருந்தார். அரங்கசாமி அதைப்பற்றிப் பேசும்போது சொன்னார். ‘சுராவோட இணைந்து உங்களுக்கு புகழோ அடையாளமோ வரவேண்டியதில்லைன்னு தெரியாத ஒருவர் இலக்கியவாசகரே அல்ல, அவர் என்ன நினைச்சா என்ன?’.
ஓர் எழுத்தாளரைப் பற்றிய நினைவை எழுத ஒருவகையான உணர்ச்சிவேகம் தேவை. அவருடன் இருக்கையில் அவரை பெருங்காதலுடன் தொடர்ச்சியாகக் கவனிப்பது அந்த உணர்ச்சிகரத்தால்தான். பின்னர் நினைவுகூர்வதும் அதனால்தான். சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்ட பல அஞ்சலிகளைக் கண்டபோது அவர்களின் வாழ்க்கையில் அவரும் ஒருவர் என்பதற்கப்பால் எந்த இடமும் அவர்களால் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை என்று தெரிந்தது.
எனக்கு அப்படி அல்ல. அன்றுமின்றும் அவர்மேல் இருப்பது ஒரு கொந்தளிப்பான உணர்வுநிலைதான். அதே உணர்வுநிலைதான் வயக்கவீட்டு பாகுலேயன்பிள்ளை பற்றியும் உள்ளது. அன்பும், அன்பின் விளைவான தீவிரமான கோபங்களும், அணுக்கமும் விலக்கமும் எல்லாம் கலந்த ஒன்று.
சு.ரா மறைந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டிருக்கிறது. நான் இன்றும் எல்லா உரையாடல்களிலும் ஏற்றோ மறுத்தோ அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் தோன்றாத தனிப்பட்ட உரையாடல்களே இல்லை. ‘இப்ப நீங்க மட்டும்தான் அவரைப் பத்தி ஓயாம பேசிட்டிருக்கீங்க’ என்று அண்மையில் அரங்கசாமி சொன்னார். ‘அவர் என் சொற்களில் மட்டும்தான் சிரஞ்சீவியாக இருக்கமுடியும்’ என்று நான் சொன்னேன். ‘காலந்தோறும் அப்டித்தான் வழக்கம்’
ஜெ
சு.ரா. நினைவின் நதியில் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
