இருளை அளையும் கைகள்..

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

நான் சமீபத்தில் உங்கள் மத்தகம் குறு நாவலை டல்லாஸ் கூடுகைக்காக படித்தேன். நான் கூடுகையில் பகிர்ந்த அனுபவத்தை உங்களிடம் பகிரவே எழுதுகிறேன்.

பொதுவாக ஒரு கதை படிக்கும் போது  judgemental ஆக இருக்க கூடாது என்று நினைத்தாலும், என்னை அறியாமல் யார் MGR யார் நம்பியார் என்று மனம் படமிடுகிறது. அதுவும் கதை சொல்லிக்கு MGR கிரீடம் கொடுத்துவிடுவேன். மத்தகத்தில் பரமனுக்கும் அதைத்தான் கொடுத்தன். பாதி கதையில் பரமன், அருணாச்சலம் அண்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டு, என் தலையிலும் போட்டு விட்டான். அய்யய்யோ இவன் MGR இல்லை நம்பியார், இவ்வளவு நேரம் நம்பியார் தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதிலிருந்து மீண்டு, இப்போது யாருக்கு MGR கிரீடம் கொடுப்பது என்று யோசித்து, சரி கேசவன் தான் இப்போது MGR என்று நியமித்து விட்டேன். அத்தியாயம் நாலையும், ஐந்தையும் விறுவிறுப்புடன் படித்தேன். எப்படியும் MGR கிரீடம் அணிந்த கேசவன் தன்னை நிலை நாட்டுவான் என்று நம்பினேன். வழக்கமான படங்களில் வருவது போல் கேசவன் இறந்தாவது தன்னை நிலை நாட்டுவான் என்று நினைத்தேன். ஆனால் கேசவன் இறக்கவில்லை, பணிந்து விட்டான். முடிவில் நம்பியார் வென்று விட்டார்.

மத்தகத்தை  இரவில் படித்துக் கொண்டிருந்தேன். கதை முடிந்த பின் தூக்கம் வரவில்லை, கதையில் நடந்த சம்பவங்களை கோர்த்து மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தான் எனக்கு விளங்கியது கதையில் ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் கண்ணாடியை என் பக்கம் திருப்பி வைத்திருக்கிறீர்கள் என்று. கண்ணாடியில் நானே என்னை நம்பியாராக பார்த்து மிரண்டு விட்டேன்.

நீங்கள் கண்ணாடியை என் பக்கம் மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் பக்கம் திருப்பி வைத்து விட்டீர்கள் என்று தெரிந்தது. இது ஒரு யானை கதை என்பதை தாண்டி பல மடிப்புகள் இருப்பது தெரிந்தது. அதற்குப் பின் மனதில் கேள்விகள் வெள்ளம் போல் பொங்க தொடங்கின. பலவீனத்தை தன் வசதிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளும் நம்பியாராக நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி இருக்கிறோமா என்று கேள்வி எழுந்தது. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்பியாருக்கு அடிபணிகிறோமா என்ற கேள்வியும் எழுந்தது. பொதுவாக இது போன்ற கடினமான தத்துவ கேள்விகளுக்கு மனதே ஒரு பதிலை ரெடியாக வைத்திருக்கும். “வாழ்க்கை என்றால் அப்படித்தான் எல்லாவற்றிற்கும் நீ பொறுப்பாளி அல்ல” என்று சொல்லும்.

ஏனோ இம்முறை அது வாயே திறக்கவில்லை.

பரீட்சைக்கு போய்விட்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் சோகமாக இருப்பேன். மத்தகம் படித்து என் மனம் வைத்த பரீட்சையில் எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை. சோகமாக இருக்கிறேனா? புரியவில்லை. கேள்விகள் சலனத்தை தந்தாலும், அது கேட்கப்பட்டதால் ஒரு இன்பம். விசித்திரமான உணர்வு.

நன்றி,

அன்னபூர்ணா

 அன்புள்ள ஜெ,

உங்களுடைய ஐந்து நெருப்பு தொகுப்பை இப்போதுதான் வாசித்தேன். அதில் உள்ள குற்றம் சம்பந்தமான கதைகள் திகைப்பை உருவாக்குகின்றன. நீங்கள் குற்றத்தின் உளவியலுக்குள் செல்லும் இந்தக் கதைகளை எழுதினீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் நான் புனைவுக்களியாட்டுக் கதைகள் அனைத்தையும் வாசித்தவன். இவற்றில் பல கதைகள் அப்போதுதான் வெளிவந்துள்ளன. ஆனால் அப்போது கவனிக்கவில்லை. ஏழாவது போன்ற ஒரு கதையை அப்போதே வாசித்தேன். ஆனால் அது ஏதோ இறையியல் நுட்பம் கொண்டது என்று அப்போது விட்டுவிட்டேன். அன்றைய பாஸிடிட்டிவ் வைப் கொண்ட நிலையில் அக்கதை நோக்கி மனம் செல்லவில்லை. இப்போது வாசிக்கும்போது அந்தக்கதை பயப்படுத்துகிறது. மனிதமனத்தின் குற்றத்தின் ஆழத்தைச் சொல்லும் அந்தக்கதைபோன்ற ஒன்றை நான் குறைவாகவே உலக இலக்கியத்திலும் வாசித்துள்ளேன்.

கி.ராஜகோபால்

அன்புள்ள நண்பர்களுக்கு,

என் படைப்புலகம் இருள்நோக்கியது அல்ல. ‘அதோமுகம்’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்கள், கீழ்நோக்கிய விசை. அது என்னிடம் இல்லை. இயல்பாகவே இல்லை, காரணம் நான் என் வாழ்க்கையின் கடுந்துயர், அலைச்சல்கள் வழியாக உருவாகி வந்தவன் என்பதே. என் ஒளியை நானே கண்டுகொண்டு அதைச்சார்ந்தே முன்னகர்ந்துள்ளேன். அந்த ஒளியையே எல்லா ஆக்கங்களும் சென்று தொடுகின்றன. சாதாரண நிலையில் வெறும் பதற்றம் மட்டுமே கொண்ட நடுத்தரவர்க்க எழுத்தாளர்களே முற்றான எதிர்மறை மனநிலை நோக்கிச் செல்வார்கள். மிக அசாதாரணமான வரலாற்றுச் சூழலில் சிக்கிக்கொண்டவர்களும் அப்படி இருட்டை நோக்கிய பார்வை கொண்டிருக்கலாம், போர் மற்றும் பேரழிவுச்சூழலில் சிக்கிக்கொண்டவர்கள் உதாரணமாக.

ஆனால் அந்த ஒளி என்பது கற்பனாவாதம் சார்ந்தது அல்ல. நான் எங்கும் கற்று ஏற்றுக்கொண்டது அல்ல. என் சுயபாவனையும் அல்ல. அப்படி இருக்கலாகாது என்பதை நான் ஒரு தன்னெறியாகவே வைத்துள்ளேன். ஆகவே எப்போதும் என் நம்பிக்கைகளை, என் பாதையை குரூரமாக மறுபரிசீலனை செய்பவனாகவே இருந்து வந்துள்ளேன். ஒருபோதும் ஒற்றைப்படையான பார்வையை நோக்கி செல்லக்கூடாது என எப்போதும் முயல்கிறேன். என் தெளிவும், ஒளியும் நான் கொள்ளும் அகப்போரின் விளைவாகத் திரள்பவையாகவே இருந்தாகவேண்டும் என நினைக்கிறேன். அப்படித்தான் எப்போதும் அவை உள்ளன.

ஆகவே எப்போதுமே இருளைநோக்கியுள்ள கதைகளும் என் படைப்புலகில் உள்ளன. அவற்றை மட்டும் எடுத்து ஒருவர் தொகுப்பார் என்றால் முற்றிலும் இருட்டை நோக்கிய பார்வைகொண்ட, சொல்லப்போனால் கொடூரமான கதைகளை மட்டுமே கொண்ட பெருந்தொகுதியை உருவாக்கமுடியும். தமிழில் எழுதப்பட்ட வலுவான எதிர்மறைக்கதைகளின் ஒரு தொகுப்பிலேயே அவைதான் பெரும்பாலான இடத்தை நிரப்பியிருக்கும். அவற்றை மட்டுமே கொண்டு என்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.

முற்றிலும் நேர்நிலைகொண்ட நூலான அறம் தொகுதியிலேயே கூட தாயார்பாதம் மிக எதிர்நிலையை சித்தரிக்கும் நாவல். அண்மையில் ஒரு வங்க வாசகர் அவர் வாசித்ததிலேயே துயரம் மிக்க கதை அது, மீட்பில்லாத துயரம் அது, ஏனென்றால் எதிர்வினைகூட இல்லாதவர் அந்த பெண் என்று எழுதியிருந்தார். ஒளியை தன்னுள் செலுத்திச்சுருட்டிக்கொள்ளும் கருந்துளை அந்த கதாபாத்திரம் என சொன்னார். அந்தக் கதைகளின் மொத்தக் கட்டுமானத்தில், தனக்கான ஒரு விகிதத்தில், அக்கதை அமைந்துள்ளது என்பதனால் அது வாசகர்களுக்கு அப்படி தெரியவில்லை.

அதேபோல என் புனைவுலகம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே இதுவரை இருந்துள்ளது. தர்க்கத்தை மீறி எழுதுபவர்களால் மட்டுமே இத்தனைபெரிய புனைவுலகை உருவாக்கவும் முடியும். அவை தன்னிச்சையான அகவெளிப்பாடுகள். ஆனால் என்னால் முடிந்தவரை தர்க்கபூர்வமாக எல்லாவற்றையும் அணுகவே எப்போதும் முயல்கிறேன். தர்க்கத்தின் உச்சியில் இருந்தே அதர்க்கம் இயல்பாக உருவாகிவரவேண்டும் என நினைக்கிறேன். வடிவத்தின் தர்க்கம், பொதுப்புத்தியின் தர்க்கம், தத்துவார்த்தமான தர்க்கம் என்னும் மூன்று எதிர்விசைகளுக்கு நிகர்நிற்கவேண்டிய ஒன்றே புனைவின் பித்துநிலை என்பதே என் புரிதல்அந்த முரணியக்கமே என் புனைவுலகின் இயல்பை உருவாக்குகிறது.

மத்தகம், ஊமைச்செந்நாய், பனி போன்ற கதைகள் அந்த முரணியக்கம் பதிவான படைப்புகள். நன்மை- தீமை என்னும் எளிமையான இரட்டைத்தன்மைகளால் அவை இயங்கவில்லை. மனம் கொள்ளும் இருநிலை, அவற்றின் முரணியக்கமே அவற்றை இயக்கும் விசையாக உள்ளது.

ஜெ

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.