கொற்றவை பயணம்

அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தொல்குடியினரின் காலத்திலிருந்த குமரி முதல் இன்றைய குமரி வரை ஒரு காலப் பயணம்.
கண்ணகி, கோவலன் , நீலி/கவுந்தியடிகளுடன் நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை மற்றும் முல்லை ஆகிய ஐவகை நிலங்களின் வழியே பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிய பயணம்.
வஞ்சிமா நகரில் இருந்து அன்னையின் ஆலயத்திற்கு ஏழு மலை குடிகளின் வழியே சேரன் செங்கூட்டுவனும், பெருந்தேவி, பரிவாரங்களுடன் சென்ற பயணம்.
இளங்கோவடிகளின் மதுரையில் இருந்து கழுகுமலையில் உள்ள மணிமேகலையின் அறச்சாலை நோக்கி நடந்த பயணம்.
எல்லோர் பசிப் பிணியும் தீர்க்க வழி செய்யும் மணிமேகலை அன்னையின் கடற் பயணம்.
டச்சு கப்பல் தலைவன் வான்– கோய்ஸ் கொடுங்கோளூருடன் நடத்திய போரின் கொடும் பயணம்.
தங்கள் குடும்பத்தினருடன் குமரி அன்னையையும், தங்கள் அன்னையையும் உணர்ந்த குமரி பயணத்துடன் முடிகிறது இந்த கொற்றவை பயணம்.
நான் மிகவும் விரும்பிய பயணம் சேரன் செங்குட்டுவனுடன் மலை மீது சென்ற பயணம். அன்றைய கேரளா நாட்டின் அழகில் மயங்கியது மனம். ஐவகை நிலங்களின் வர்ணனையும், அந்நிலங்களை மிகவும் விரும்பி வாழும் உயிரினங்களின் வழியே அவற்றை காண்பதும் பேரனுபவமாக இருந்தது.
(நெய்தல்– சுறா
மருதம்– தவளை
குறிஞ்சி– குட்டி குரங்கு
பாலை– செந்நாய்
முல்லை – கன்று குட்டி)
ஆனால் கோவலன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவனின் மரணத்தை நோக்கி, என்பது தெரிந்திருந்ததால் ஒருவகை படபடப்புடனே வாசித்துக் கொண்டிருந்தேன். மீள்வாசிப்பில் இன்னும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தமிழ் வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். பண்டையன் பாண்டியனானது. அதேபோல் ‘தாலி‘ என்ற சொல்லும், அது எவ்வாறு வந்தது என்ற விளக்கமும் சிறப்பாக இருந்தது. (தாலம்– தட்டு, தலம்– இலை, அரசிலையை வைத்து அன்று தாலி கட்டினர். இப்போது அது பொன்னாலான அரசிலை தாலியாக மாறிவிட்டது. இலை வாடினாலும் அன்பு வாடாது என்பது கவிதை.)
ஒவ்வொரு வரியிலும் எத்தனை வர்ணனைகள். வஞ்சி பெருநகரில் அன்னையின் ஆலய பிரதிஷ்டை விழாவை நேரில் கண்டது போல் உள்ளது. நாள் குறித்ததில் தொடங்கி மக்களின் கொண்டாட்டமும் , மன்னன் கிளம்பி கலந்து கொள்வதும், நான்கு சமயங்களும் ஒன்று சேர்ந்து விழாவை நடத்துவதும் கண் முன்னே விரிகிறது.
இத்தனை பயணங்களையும், அதன் வழியே பல்வேறு அனுபவங்களையும் கொடுத்த உங்களுக்கு, மனதின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
