கடல், அகக்கடல்
அன்புள்ள ஜெ,
கடல் நாவல் முக்கால்வாசி படித்துவிட்டேன். முழுக்கப் படித்துவிட்டு எழுதவேண்டும் என்று இருந்தேன். ஆனால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது தஞ்சையில் வேளாங்கண்ணி அருகே ஒரு சிறிய ஊரில். கடலோரம் நன்கு அறிமுகம்தான். கிறிஸ்தவப் பள்ளியில்தான் படித்தேன். கிறிஸ்தவம் மேல் ஈடுபாடும் உண்டு. ஆகவே இந்நாவலை உடனே வாங்கினேன். வாங்கியதுமே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
என் ஆன்மாவை இதுபோல கொந்தளிக்கவைத்த நாவல் என்றால் டாஸ்டாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்தான். இந்நாவலில் உள்ள அந்த துன்பமும் அதிலிருந்து மீட்சி அடையும் தருணங்களும் மிகமிக ஆழமானவை. அவற்றை வாசிக்கையில் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. அறைக்குள் இருந்தும் வாசிக்கமுடியவில்லை. பெங்களூரில் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து வாசித்தேன். ஒரு கட்டத்தில் தனிமையில் அமர்ந்தும் வாசிக்க முடியவில்லை. ஆகவே காபி ஹஃவுஸ்களில் அமர்ந்து வாசித்தேன். எவரிடமாவது பேசியாகவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்நாவலைப் பற்றிப் பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள், இலக்கியம் அறிந்தவர்கள் எவருமில்லை. ஆகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
துன்பங்கள், கைவிடப்படுதல் ஆகியவற்றின் உச்சங்கள் உள்ளன இந்நாவலில். அதிலிருந்து அப்படியே குற்றங்களின் மறு எல்லை. குற்றங்களில் ஈடுபடும் உள்ளம் மனிதர்களை வேவுபார்த்துக்கொண்டே இருக்கிறது. அதிலுள்ள அந்த மூர்க்கமும் தீவிரமும் இன்னொரு பக்கம் என்னை பதறச்செய்தன. மூழ்கிச் சாகப்போகிறவன் கைக்குச் சிக்குவதைப் பிடிப்பதுபோல தாமஸின் தவிப்பை உணரமுடிந்தது. இந்நாவலில் உள்ள எந்த அனுபவமும் என்னுடையவை அல்ல. நான் சொகுசாகவே வாழ்ந்தவன், வாழ்பவன். ஆனால் இது என் ஆன்மாவின் கதை என்றும் தோன்றியது.
இந்நாவலை ஒரு சினிமாவுக்காக எப்படி எழுதினீர்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் ஒரு பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படத்துக்காக இப்படி ஒரு கதையை எழுதியது என்பது மிகப்பெரிய அத்துமீறல். இதிலுள்ளது ஓர் ஆத்மாவின் கதறல். இன்னொரு ஆத்மாவின் முடிவற்ற பிரார்த்தனை. அந்த இரண்டு குரல்களும் இணைந்து உருவாகும் ஒரு அற்புதமான காஸ்பல் இசை. அதை எப்படி சினிமாவில் கொண்டு வர முடியும். இது ஒரு பெரிய முழக்கம் போல ஒலிக்கிறது. ஒரு பெரிய சர்ச்சில் ஆர்கன் முழங்குவதுபோல. நாவல் முழுக்க அந்த கதறலும் பிரார்த்தனையும் வார்த்தைகளாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மகத்தான விஷுவல்கள் உள்ளன. ஆனால் இது மொழிக்கலை. இதை சினிமாவாக எழுதலாம் என எப்படி முடிவெடுத்தீர்கள்?
அதைவிட, உங்கள் படைப்புகளிலேயே நான் மகத்தானது என்று கருதும் இப்படைப்பை எப்படி ஏறத்தாழ பத்தாண்டுகள் அப்படியே விட்டுவிட்டீர்கள்? பிரசுரிக்க நினைக்கவே இல்லை. இது மின்னஞ்சலில் இருந்தமையால் கண்டுபிடித்து வெளியிடுவதாகச் சொன்னீர்கள். அதாவது உங்களிடம் பிரதிகூட இருக்கவில்லை. அது அழிந்துவிட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நினைக்கவே பதற்றமாக இருக்கிறது. ஏன் அந்த அலட்சியம்? இதை நீங்கள் பொருட்படுத்தவே இல்லையா?
கண்ணன் பார்த்தசாரதி
அன்புள்ள கண்ணன்,
ஒரு நாவலை நான் எழுத முடிவெடுப்பதில்லை – எழுத ஆரம்பித்துவிடுகிறேன். அதற்கு ஏதாவது ஒரு காரணம் அமைந்துவிடுகிறது. பல சமயம் காற்று வந்து மரத்தை உலுக்குவதுபோல. இந்நாவலை எழுதுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட இந்த நாவலை எழுதும் எண்ணமே என்னிடமிருக்கவில்லை. ஆனால் பல நாட்களாக ஐரோப்பிய ஓவியங்களை கேட்டுக்கொண்டும், காஸ்பல் இசை கேட்டுக்கொண்டும் இருந்தேன். இந்நாவலுக்கு அடிப்படையான அந்த நிகழ்வு, அந்த டேப்ரிகார்டர் காட்சி, நினைவில் எழுந்தது. தாமஸை பார்த்துவிட்டேன், எழுத ஆரம்பித்தேன்.
எழுதத் தொடங்கியபோது இந்நாவாலை எப்படி சினிமாவாக ஆக்குவது என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் எதையும் எண்ணிப்பார்க்கவில்லை. என் எண்ணமெல்லாம் இந்நாவல் உருவாக்கும் அகநெருக்கடிகளின் அடுத்தடுத்த கணங்களாகவே இருந்தது. எழுதியதுமே நான் அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டேன், வழக்கம்போல. பொருட்படுத்தாமல் இல்லை, எழுதுவதுடன் என் ஆர்வம் முடிந்துவிடுகிறது, நான் என் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டுவிட்டேன். இதை வெளியிடும் எண்ணம் இருக்கவில்லை. சொல்லப்போனால் மறந்தே விட்டேன். மின்னஞ்சலில் தற்செயலாக கிடைத்தது. முழுமையாக இருந்தது. ஆகவே நூலாக்கலாம் என்று தோன்றியது.
சினிமாவாக இது எப்படி நிகழமுடியும் என்று கேட்டீர்கள். இதிலுள்ள முதன்மைப்புள்ளிகள் என சிலவற்றைச் சொல்லலாம். ஒன்று, தாமஸின் அன்னை சாகும் இடம். இரண்டு, அவன் தன் தந்தையை தேடிச்செல்வது. மூன்று, அவனை சாம் கண்டடைவது, நான்கு அந்த இரண்டு தேவாலயக் காட்சிகள், ஐந்து தாமஸ் பியாவிடம் பாவமன்னிப்பு கோருமிடம். எண்ணிப்பாருங்கள், இந்த இடங்கள் எல்லாமே நாவலில் இருக்கும் அதே வீச்சுடன், ஆனால் முழுக்கமுழுக்க காட்சிவடிவமாக சினிமாவில் இருந்தன இல்லையா? அதிலுள்ள ‘எல்லா’ உணர்ச்சிகளும் திரையில் இல்லை. அது சாத்தியமும் இல்லை. சினிமா மினிமலிஸ்ட் கலை. காட்சிக் கலை. காட்சியாக அது அந்த உணர்வுகளை வலுவாகவே நிறுவியது என நினைக்கிறேன்.
கடல் சினிமாவின் பிரச்சினை அது மிகச்சுருக்கமாக ஆகிவிட்டது என்பதே. அந்தப்பாடல்களை முழுமையாக உள்ளே கொண்டுவந்தமையால் கதைக்கான நேரம் மிகக்குறைவாக ஆகிவிட்டது. ஆகவே கடல் உருவாக்கிய நீண்டகாலம், அகன்ற வாழ்க்கைச்சித்திரங்கள் படத்தில் வெட்டிச்சுருக்கப்பட்டு அது தாவிச்செல்லுவதாக ஆகிவிட்டது. உதாரணமாக செலினா சம்பந்தமான காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தன, அவை சினிமாவில் இல்லை. அது நம் சினிமாவுக்குரிய சிக்கல். ஆனால் அந்நாவலை சினிமாவாக கனவுகாணமுடிந்ததே ஒரு சாதனைதான். இந்நாவல் உருவாக்கும் தொடர்ச்சியை கண்டபின் சினிமாவை இன்னொருமுறை பாருங்கள். அது விரியத்தொடங்கும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
