பண்பாடல்
நீண்டகாலம் ஆகவில்லை, ஒரு விவாதம் இணையத்தில் நிகழ்ந்தது. பண்பாடு பற்றி நான் பேசியபோது ஒருவர் வந்து ‘பண்பாடு என்பது என்ன?’ என்று கேட்டார். கேட்டவர் மேல் எனக்கு பெரிய மரியாதை ஏதுமில்லை, அவர் ஒரு முதிரா (முதிரவாய்ப்பில்லா) அறிவுஜீவி என்பது என் எண்ணம். ஆகவே அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தவகையான கேள்விகளைக் கேட்பது போலிஅறிவுச்செயல்பாடுகளின் வழிகளில் ஒன்று. ‘சீரியஸாக’ சிந்திக்கிறோம் என்னும் பாவனை இது. ‘இது நியாயம் அல்ல’ என்று நாம் எதையேனும் சொன்னால் உடனே வந்து ‘நியாயம் என்பது என்ன?’ என்று தத்துவார்த்தமாக ஆரம்பிப்பது, எதையாவது சொல்ல முற்படுவது.
அதிலுள்ள பிரச்சினை என்ன? அறம், நீதி, அன்பு, கருணை, பண்பாடு, நாகரீகம், மரபு என நாம் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தங்கள் ஒரு சொற்சூழலால் வரையறை செய்யப்படுபவை. அச்சொற்சூழலுக்குள் உள்ள அனைவருக்கும் அவற்றின் பொருள் தெரிந்திருக்கும். அல்லது, அப்படி நாம் உருவகித்துக்கொண்டாகவேண்டும். ஒவ்வொரு உரையாடலிலும் இந்த அடிப்படைகளை வரையறை செய்து நிறுவியபின்னரே பேசவேண்டும் என்றால் அதைப்போல அபத்தம் வேறில்லை
அச்சொற்களை வரையறை செய்யக்கூடாதா? முயலலாம், ஆனால் அது எப்போதுமே தத்துவார்த்தமான வரையறையே ஆகும். ஒரு பண்பாட்டுச்சூழலில், ஒரு குறிப்பிட்ட உரையாடற்சூழலில் மட்டுமே அவற்றுக்கு ஒரு பொது வரையறை அளிக்கமுடியும். அதுவும் மிகப்பொதுவான ஒரு வரையறை, அதன்பின் அவ்வரையறையை கொஞ்சம் விரிவாக்கி விரிவாக்கி தொடர்ந்து பொருள்கொள்ளவேண்டும். எந்தச் சமூகமும் அச்சொற்களுக்கு அறுதிப்பொருள் அளிக்கமுடியாது, அளிக்கும் சமூகம் அழிந்துவிட்ட ஒன்று, வாழ்க்கை நிகழாத ஒன்று.
நான் அன்று பண்பாட்டுக்கு அச்சொற்சூழலில் ஒரு பொருள் அளித்தேன் “நம் ஆழுள்ளத்தை உருவாக்கியிருக்கும் படிமங்கள், ஆழ்படிமங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பையே பண்பாடு என்கிறோம்”. என்னுடன் விவாதித்தவர் அதை மறுத்து விழுமியங்களே பண்பாடு என வாதிட்டார். நான் அது அவரது கருத்து என்றே எடுத்துக்கொண்டேன். அப்படி அவரவருக்கான பொதுவான வரையறையை உருவாக்கிக்கொள்வதே நாம் செய்வது.
நாம் பண்பாடு என்று சொல்வது விழுமியங்கள், வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், சமூகஅமைப்புகள் ஆகியவற்றைத்தான். நீதியுணர்ச்சி, அறவுணர்ச்சி, பாசம் ,கருணை எல்லாம் பண்பாட்டின் வெளிப்பாடுகள். வேட்டிகட்டுவது, சேலை கட்டுவது, பொட்டுவைப்பது, இலைபோட்டுச் சாப்பிடுவது எல்லாமே பண்பாட்டு அடிஅயாளங்கள்தான். பெரியவர்களைப் பார்த்தால் எழுவதும், வரவேற்பதற்காகக் கைகூப்புவதும் பண்பாடுதான். சாவுச்சடங்குகளும் பிறப்புச்சடங்குகளும் பண்பாட்டின் பகுதியே. இறைநம்பிக்கை, மறுபிறப்பு நம்பிக்கை, பாவபுண்ணிய நம்பிக்கை ஆகியவையும் பண்பாடுதான். குடும்பம், சாதி, கிராமம் போன்ற அமைப்புகளும் பண்பாடுதான். ஆனால் ஒட்டுமொத்தமாக இவையனைத்துக்கும் அடியில் இருக்கும் பண்பாடு என்பது ஒருவகையான அகக்கட்டுமானம். ஒவ்வொருவரின் உள்ளத்தில் இருப்பது அது. ஆழுள்ளத்தில் அதன் வேர்கள் உள்ளன. அதன் கட்டுமானப்பொருள், building block என்பது படிமங்கள்தான். அவை ஆழ்படிமங்களாக, தொன்மங்களாக வெவ்வேறுவடிவங்களில் இருக்கலாம்.
இலக்கியமும் கலைகளும் அந்த படிமங்களைக் கையாண்டு தங்களை நிகழ்த்திக்கொள்பவை. ஒலிப்படிமங்கள் இசை என்றும், காட்சிப்படிமங்கள் ஓவியமும் சிற்பமும் என்றும், மொழிப்படிமங்கள் இலக்கியம் என்றும் சொல்லலாம். ஆனால் இலக்கியம் உட்பட எல்லா நுண்கலைகளும் ஒன்றுடனொன்று பிணைந்து, ஒன்றை ஒன்று பயன்படுத்திக்கொண்டுதான் செயல்படுகின்றன. பண்பாட்டின் அடிப்படை அலகுகளான படிமங்களை உருவாக்குபவை, மாற்றியமைப்பவை கலைகளும் இலக்கியமும்தான். ஆகவேதான் அவற்றைப் பண்பாட்டு உருவாக்கச் செயல்பாடுகள் என்கிறோம்.
ஆகவே, ஒரு பண்பாடு பற்றி பேச முதன்மைத் தகுதிகொண்டவர்கள் கலைஞர்களும் எழுத்தாளர்களுமே. அவர்களின் கருத்துக்களுக்கு ஆய்வேடுகளின் முறைமை இருப்பதில்லை. தேவையுமில்லை. ஆய்வேடுகளின் முறைமை என்பது அவற்றுக்கு புறவயமான நம்பகத்தன்மையை உருவாக்கும்பொருட்டு கையாளப்படுவது. ஏனென்றால் ஆய்வேடு தன்னளவில் தொடர்புறுத்துவது. கலையிலக்கியம் புறவயமானது அல்ல, அது அந்த கலைஞனின், ஆசிரியனின் அகத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவனுடைய வெளிப்பாடு வழியாக நாம் அவனையே சென்றடைகிறோம். அவன் சொல்பவை தன்னை, தன் அகத்தை கருவியாக்கி அறிந்தவை. ஆகவேதான் உலகம் முழுக்க கலைஞர்களின் எழுத்தாளர்களின் பண்பாட்டு அவதானிப்புகள் ஆய்வாளர்களால் அத்தனை கூர்ந்து கவனிக்கப்படுகிறன, விவாதிக்கப்படுகின்றன.
ஓர் எழுத்தாளனாக நான் எழுதவந்த காலம் முதலே புனைவெழுத்துக்கு அப்பால் என்னுடைய அகவயமான பண்பாட்டு அவதானிப்புகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். இணையம் வந்தபின் எனக்கு அன்றாடம் எழுதுவதற்கான ஊடகம் அமைந்தது. இவை அவ்வாறு நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வெளிவந்த காலகட்டங்களில் இவை வெவ்வேறுவகையான விவாதங்களையும் உருவாக்கியவை. அவ்விவாதங்கள் எத்தகையவை ஆயினும் ஒரு சூழலில் பண்பாட்டு விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். அரசியல், சினிமா என இடைவிடாது விவாதம் நிகழும் தமிழ்ச்சூழலில் பண்பாட்டின் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்கள் அரிதினும் அரிதானவை. ஆகவே இந்த விவாதங்கள் காலம்கடந்த முக்கியத்துவம் கொண்டவை.
ஒரு பண்பாடு தன் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். தன் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, ஆசாரங்களை, அறங்களை. மறுபரிசீலனைசெய்யவும் முன்னகரவும் அதுவே வழி. அத்தகைய விவாதங்கள் அடங்கியது இந்நூல். செறிவான மொழியில் அமைந்துள்ள நூல், ஆனால் வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மைகொண்டது, ஆகவே தடையற்ற வாசிப்பனுபவமும் ஆவது. தன்னை, தன் சூழலை, தன் வரலாற்றை ஆழ்ந்தறியவும் தனக்கான பார்வையை உருவாக்கிக்கொள்ளவும் விழையும் வாசகர்களுக்கானது.
ஆனால் இந்நூல் எந்த கொள்கை, கோட்பாடு, அமைப்பு சார்ந்ததும் அல்ல. எனக்கு எழுத்தாளன் என்பதற்கு அப்பால் எந்த அடையாளத்தையும் வைத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை. மேலும் உறுதியான கொள்கைகளும் கோட்பாடுகளும் அமைப்புகளும் எப்படியோ ஒரு கருத்தை பரப்பி நிலைநாட்டி அதனூடாக அதிகாரத்தை அடையும் நோக்கம் கொண்டவை. இங்கே கருத்துத்தள விவாதம் என்பது முழுக்கமுழுக்க அப்படி ஏதேனும் ஒரு அதிகாரத்தரப்பின் குரலாகவே உள்ளது. இது அந்த தரப்புகளின் மோதல்களுக்கு வெளியே அந்தரங்கமாக ஓர் எழுத்தாளனும் வாசகனும் உணரும் பண்பாட்டைப் பற்றிய விவாதம்.
என் மதிப்பிற்குரிய ஆசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக பண்பாட்டு விவாதங்களில் ஈடுபட்டு வந்தவர். பண்பாட்டு விவாதங்களைச் செறிவாகவும், அதேசமயம் நல்ல வாசிப்புத்தன்மையுடனும் நிகழ்த்த முடியும் என்று காட்டியவர். இந்நூல் அவ்வகையில் அவருடைய அடியொற்றியது, ஆகவே அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் மறுபதிப்பை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்துக்கும் இப்போதைய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
ஜெயமோகன்
எர்ணாகுளம்
13 ஏப்ரல் 2025
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான பண்படுதல் நூலின் முன்னுரை)
பண்படுதல் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
