வேதாச்சலம், கடிதம்
வேதாச்சலம் அவர்களுக்கு தமிழ்விக்கி – தூரன் விருது அளிக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி. அவருடைய காத்திரமான பங்களிப்புகள் இன்றைய வரலாற்றாய்வுக்கு மிகப்பெரிய கொடை. இன்று உண்மையில் வரலாற்றாய்வே சோர்வுற்றிருக்கிறது. உண்மையான வரலாற்றாய்வுக்கு இன்றைக்கு நம் பொதுச்சூழலில் எந்த மதிப்பும் இல்லை. இன்றைய வரலாற்றாய்வாளர்களுடன் ஒப்பிட நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்கள் எல்லாம் சக்கரவர்த்திகளுக்குரிய மதிப்புடன் இருந்தார்கள் என்று சொல்லவேண்டும்.
இன்று வரலாற்றாய்வாளர்களுக்கு நிதியுதவிகளும் இல்லை. மைய அரசும் சரி, மாநில அரசும் சரி நிதியுதவிகளை நிறுத்திவிட்டிருக்கின்றன. அரசியல்தான் இன்று வரலாற்றாய்விலும் ஓங்கியிருக்கிறது. அரசியலுக்கு ஏற்ப ஆய்வுகளை திரித்தும் ஒடித்தும் சொன்னால்தான் பிழைக்கமுடியும் என்னும் நிலை. இன்று வரலாற்றாய்வாளர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு அறிமுகத்தை அளிக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியவை.
ஆனால் வேதாசலம் அவர்களின் ஆய்வுகளின் கோணம், முடிவு ஆகியவற்றுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு என்பதையும் சொல்லியாகவேண்டும். பொதுவாக உலகமெங்கும் வரலாற்றாய்வில் அமைப்புச்சார்பு, அமைப்பு எதிர்ப்பு என்று இரண்டு கோணங்கள் உண்டு. இரண்டு தரப்பும் வரலாற்று நோக்கில் ஒரு திரிபு கொண்டவர்கள்தான். அதற்கேற்ப முடிவுகளும் திரிபடையும். அமைப்பை ஆதரிக்கும் ஆய்வுகள் இரண்டு வகை. மைய அரசு சார்ந்த ஆய்வுகளில் இந்துமதம், இந்துப்பண்பாடு சார்ந்த பார்வைகளுக்கே இடம். இங்கே தமிழக ஆய்வுகளில் தமிழ்ப்பெருமை சார்ந்த பார்வையை முன்வைப்பதே அமைப்புசார்பாளர்களின் வழக்கம்.
அமைப்பு எதிர்ப்பு பார்வையைக் கொண்டவர்கள் மார்க்ஸியர்கள். அவர்கள் எதை அமைப்புசார்பானவர்கள் சொல்கிறார்களோ அதற்கு நேர் எதிராகச் சொல்ல முயல்வார்கள். ஜே.என்.யூ சார்ந்து அப்படி ஒரு பெரிய மரபு உண்டு. அவர்கள் எம்.என்.ராய், டி.டி.கோஸாம்பி வழி வந்தவர்கள். ரொமீலா தாப்பர் முதல் கே.என்.பணிக்கர் வரை அவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களின் பார்வையும் திரிபானதே. இந்த இரண்டாம் வகையினர் மையப்போக்கான இந்துப்பார்வையின் எதிர்த்தரப்பாக சமணம், பௌத்தம் ஆகியவற்றை முன்வைப்பார்கள். அதற்காக சமணத்தையும் பௌத்தத்தையும் முற்போக்கானவையாகக் கட்டமைப்பார்கள்.
இந்தப் பார்வையின் செல்வாக்கு வேதாச்சலம் அவர்களின் சமணம் பற்றிய ஆய்வுகளில் காணப்படுகிறது என்பதே என்னுடைய கருத்தாகும். சமணத்தின் அழிவு பற்றிய அவருடைய நோக்கும் சரி, அதன் பங்களிப்பு பற்றிய நோக்கும் சரி இடதுசாரிப்பார்வையின் சாயல்கொண்டவை. ஆனால் அவருடைய ஆய்வின் வீச்சும், தரவுகளின் நேர்த்தியும் பாராட்டத்தக்கவை.
எஸ்.ஆர்.சுப்ரமணியம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
