ஓர் ஒளிர்விண்மீன்
எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் உலகம் முழுக்கவே எழுதப்படுகின்றன. ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சனைப்பற்றி அவரது மாணவர் பாஸ்வெல் எழுதிய வாழ்க்கை வரலாறு அவ்வகையான ஆளுமைச்சித்திரங்களில் ஒரு முன்னுதாரணமான படைப்பு. தமிழிலக்கியத்தில் அந்த வகைமையில் செவ்வியல்படைப்பு என்பது உ.வே.சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு. எந்நிலையிலும் தமிழிலக்கியத்தின் ஒரு சாதனைப்படைப்பு அது.
எதற்காக எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படவேண்டும்? இலக்கியம் மாமனிதர்களின் வாழ்க்கையை எழுதிக்கொண்டே இருக்கிறது. காந்தியின் வாழ்க்கைவரலாறுகள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. வெற்றியாளர்களின் வாழ்க்கையையும் எழுதலாம். அரிதாக பெருநிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. இந்த வகையான வாழ்க்கைச்சரித்திரங்களில் விடுபடும் ஓர் அம்சத்தை நிரப்பும்பொருட்டு எந்தவகையான தனியாளுமையும் இல்லாத சாமானியர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. அவை பிரதிநிதித்துவம் கொண்டவை. அவர்கள் வரலாற்றுப் பெருக்கின் ‘சாம்பிள்’ துளிகள்.
ஆனால் எழுத்தாளர்களின் வாழ்க்கை பெரும்பாலும் மிகச்சிறியது. சாகசங்களும் அரிய நிகழ்வுகளும் கொண்ட வாழ்க்கை செவ்வியல் காலகட்டத்துப் படைப்பாளிகளுக்கே உள்ளது. எழுத்தாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் முன்னுதாரணமாக அமைந்த டாக்டர் ஜான்சனின் வாழ்க்கை மிகமிகத் தட்டையானது– பாஸ்வெல்லின் பேரன்பால்தான் அந்நூல் செவ்வியல்படைப்பாக ஆகிறது. எனில் ஏன் எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படவேண்டும்?
இலக்கியம் என்பதன் ஊடகமே இலக்கியவாதிதான். வெளிப்பாட்டை நிகழ்த்தும் ஊடகத்தை அறிந்தாலொழிய வெளிப்படுவதை புரிந்துகொள்ள முடியாது. ஆகவே எழுத்தாளர்களின் வாழ்க்கை பதிவாக வேண்டியுள்ளது. ஓர் எழுத்தாளரின் சரியான ஆளுமைச்சித்திரம் அவருடைய வாழ்க்கையை மட்டும் காட்டுவதில்லை, அவருடைய வாழ்க்கைப் பார்வையைக் காட்டுகிறது, அவருடைய படைப்பு உருவாகும் களத்தைக் காட்டுகிறது. அந்நூலை எழுதியவர் இன்னொரு படைப்பாளி என்றால் அந்த எழுத்தாளரின் படைப்புள்ளம் செயல்படும் விதமும் பதிவாகிவிட்டிருக்கும். அது எந்த இலக்கியவாசகனுக்கும் முக்கியமான அறிதலே.
அதற்கும் அப்பால் ஒன்றுண்டு. இலக்கியம் என்பது, இலக்கியத்தை உள்ளடக்கிக்கொண்ட அறிவியக்கம் என்பது, ஒரு மாபெரும் பெருக்கு. காட்டில் வீசும் காற்றுபோல. அதை நாம் மரங்களின் அசைவாகவே காணமுடியும். இலக்கியத்தையும் அறிவியக்கத்தையும் எழுத்தாளர்கள் வழியாக, அறிஞர்கள் வழியாக மட்டுமே நம்மால் அறியமுடியும். ஆகவேதான் எழுத்தாளர்களின் ஆளுமைச்சித்திரம் பதிவாகவேண்டியது அவசியமாகிறது. எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு, நினைவுக்குறிப்பு சரியாக எழுதப்பட்டால் அக்காலகட்டத்தின் அறிவியக்கச் சித்திரம் அதில் இருக்கும். உ.வெ.சாமிநாதையரின் வாழ்க்கை வரலாறுகளில் அது உள்ளது. இந்நூலிலும் சரி, நான் கோவை ஞானி பற்றி எழுதிய ஞானி என்னும் நூலிலும் சரி, அந்த ஆளுமை அக்கால அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இங்கே நிகழும் அரசியல், பொருளியல், கேளிக்கை எதுவுமே நிரந்தர மதிப்பு கொண்டவை அல்ல. அவற்றுக்கு அழிவிலாத்தொடர்ச்சி இல்லை. அவை அன்றாடத்தின் பகுதிகளே. மானுடம் இப்புவியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறிவுத்திரட்டல் மட்டுமே உண்மையான மானுடத் தொடர்ச்சி. மானுடம் என்பது அது மட்டுமே. அந்த அறிவுத்திரட்டின் ஒரு முகமே மதம், இன்னொரு முகமே வரலாறு. இலக்கியம், அறிவியல், தத்துவம் எல்லாமே அந்த அறிவுத்திரட்டின் உறுப்புகள் மட்டுமே. பிற அனைத்துமே அந்தந்த காலகட்டத்துடன் நின்றுவிடுபவை. அவை அறிவியக்கத்தால் திரட்டப்பட்டு மானுட அறிவுக்குவையில் சேர்ந்தாலொழிய அவற்றுக்கு தொடர்ச்சி இல்லை, காலம் கடந்த இருப்பும் இல்லை.
அறிவியக்கத்தின் அறிவுத்தொகுப்பு சிந்தனைகளிலும் படைப்புகளிலும் உள்ளது. நூல்கள் அவற்றின் பதிவுகள். ஆனால் அறிவியக்கத்தை அதன்பொருட்டு வாழ்ந்த அறிஞர்களின் வாழ்க்கையை தொகுத்து நோக்குவதன் வழியாக மட்டுமே உணரமுடியும். ஆகவேதான் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன.
வாழ்க்கையின் நேர்ப்பதிவு என்பது நவீன இலக்கியத்தின் வழிமுறை. அது உருவான பின்னரே வாழ்க்கை வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே இலக்கியவாதிகளின் வாழ்க்கைகள் தொன்மங்களாக வரலாற்றில் நிறுவப்பட்டன. சக்கரவர்த்திகள்கூட மறைந்துவிட்டனர், இலக்கியவாதிகள் கதைகளின் நாயகர்களாக நிலைகொள்கின்றனர். அவர்களால் பாடப்பட்டதனால் சக்கரவர்த்திகள் நீடிக்கின்றனர்.
தமிழில் நவீன இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாறுகள் மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. பாரதியின் வாழ்க்கையை யதுகிரி அம்மாள், வ.ரா, செல்லம்மாள் பாரதி, கனகலிங்கம் ஆகியோர் சுருக்கமாக எழுதியுள்ளனர். அவை நினைவுக்குறிப்புகளே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை ரகுநாதனால் எழுதப்பட்டுள்ளது. மௌனி, கு.பரா, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என நம் இலக்கியப் பேராளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள் எழுதப்படவே இல்லை.
நவீனத் தமிழிலக்கியத்தில் நல்ல வாழ்க்கைச் சித்திரங்களை எழுதி முன்னுதாரணமாக அமைந்தவர் சுந்தர ராமசாமி. அவர் ஜீவா பற்றி எழுதிய காற்றில் கலந்த பேரோசை, க.நா.சு பற்றி எழுதிய நட்பும் மதிப்பும் ஆகியவை மிக முக்கியமான படைப்புகள். பின்பு சி.சு.செல்லப்பா, க.நா.சு, ஜி.நாகராஜன், பிரமிள். கிருஷ்ணன் நம்பி ஆகியோரைப்பற்றிய அழகிய, கூரிய நினைவுச்சித்திரங்களை அவர் நினைவோடை என்னும் சிறுநூல்தொடராக எழுதினார். தமிழின் மிக முக்கியமான இலக்கியத் தொகை அது.
தமிழில் ஏன் நினைவுநூல்கள் எழுதப்படுவதில்லை என்பதற்கான காரணமும் அவற்றை சுந்தர ராமசாமி எழுதியபோது நிகழ்ந்தது . அவர் எவரைப்பற்றியும் பொய்யோ அவதூறோ எழுதவில்லை. அனைவர் பற்றியும் மதிப்பு தவறாமலேயே எழுதியிருக்கிறார். சிறு எதிர்விமர்சனங்கள் கொண்ட நூல்கள் பிரமிள், சி.சு.செல்லப்பா பற்றி மட்டுமே. ஆனால் அத்தனை நூல்களைப் பற்றியும் கசப்புகள் உருவாக்கப்பட்டன. ஜி.நாகராஜன், கிருஷ்ணன்நம்பி போன்றவர்களின் உறவினர்கள் சீற்றம்கொண்டனர். பிரமிள் பக்தர்கள் வசைபாடினர்.
ஏனென்றால் இங்கே நாம் மறைந்த எவர் பற்றியும் ஒரு தெய்வப்பிம்பம் மட்டுமே கட்டமைத்துக் கொள்கிறோம். அதற்கு ஒரு மாறாத ‘டெம்ப்ளேட்’ நம்மிடமுள்ளது. அதைக்கடந்து எவர் என்ன சொன்னாலும் அது அவமரியாதை, அவதூறு எனக் கொள்கிறோம். எளிய உண்மைகளைக் கூட அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறோம். ஆழமான பழங்குடிமனம் கொண்ட ஒரு சமூகத்தின் எதிர்வினை இது. தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவர் பற்றியும் நேர்மையான, நடுநிலையான ஒரு வாழ்க்கைவரலாறு இன்றுவரை எழுதப்பட்டதில்லை– எழுதவும் இந்நூற்றாண்டில் இயலாது. எழுத்தாளர்கள் சார்ந்து உருவாகும் எதிர்ப்பும் காழ்ப்பும் சிறியவை, வன்முறையற்றவை என்பதனாலேயே எழுதுவது சாத்தியமாகிறது
சுந்தர ராமசாமி பற்றிய இந்நினைவுநூல் அவர் மறைந்ததுமே ஓர் உணர்ச்சிப்பெருக்கில் என்னால் எழுதப்பட்டது. அப்போது கரைபுரண்டு எழுந்த நினைவுகள். அந்நினைவுகளைத் தொகுக்கும் விதத்தில் கற்பனை செயல்பட்டது. எந்த நினைவுநூலையும் போலவே நினைவுகூர்பவனுக்கும் எழுதப்படுபவருக்குமான உறவும் உரையாடலுமே இதிலும் உள்ளது. நான் அவரை அவருடன் நிகழ்த்திக்கொண்ட உரையாடல் வழியாகவே அறிந்தேன், நினைவுகூர்கிறேன், அவையே இந்நூலில் முதன்மையாக உள்ளன. இந்நூல் அவரைப்பற்றியது. கூடவே அவரை, அவர் வழியாக தமிழிலக்கியத்தை, அவர் வழியாகக் காந்தியை கண்டடைந்த இளம் எழுத்தாளனாகிய என்னைப் பற்றியதும்கூட.
இந்நூலின் இலக்கியப்பெறுமதி இதிலுள்ள நுணுக்கமான ஆளுமைச்சித்திரம் வழியாக உருவாகிறது. சுந்தர ராமசாமியின் வாழ்க்கையின் அன்றாடச்சித்தரிப்பு , அவருடைய ஆளுமையின் காட்சி சிறுசிறு செய்திகளினூடாக திரண்டு வருகிறது. அவருடைய சிறு சிறு ரசனைகள், எளிய அன்றாட உணர்வுகள் பதிவாகியுள்ளன. பெரும் பற்றுடன் அவரைக் கண்ட இளைஞனின் கண்களால் பதிவுசெய்யப்பட்டவை அவை. ஆசிரியனைக் காணும் மாணவனின் விழிகள் அவை. அவற்றிலேயே அந்தப்பெரும் பிரியம் திகழமுடியும். இன்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலிலும் அவரை நினைவுகூர்ந்தபடியே இருக்கும் ஒருவனின் உள்ளம் வழியாக அவர் எழுந்து வருகிறார்.
அத்துடன் இந்நூல் அவருடைய உரையாடல் முறைமையை, அவருடைய படைப்புள்ளம் செயல்படும் விதத்தை, அவருடைய உணர்வுகள் அலைபாயும் விதத்தை வாசகனுக்குக் காட்டுகிறது. இந்நூல் முழுக்க வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் சுரா எந்நிலையிலும் மாறாத சிரிப்பும் கேலியும் கொண்டவர். சட்டென்று கவித்துவம் நோக்கி எழும் உள்ளம் கொண்டவர். எழுத்தாளனாகப் பேசிக்கொண்டே சென்று ஒரு கணத்தில் சிந்தனையாளனாக விரிபவர். தன்னியல்பாக உருவாகியிருக்கும் அந்தச் சித்திரம் ஒரு ஆவணப்பதிவு அல்ல. ஆவணப்பதிவர்கள் அதை எழுதமுடியாது. வெறும் அணுக்கர்களும் அதை எழுதிவிடமுடியாது. அவருடன் அந்த உச்சங்களுக்கு தானுமெழுந்த, அவருக்கு நிகரான இன்னொரு படைப்பாளியே அதை எழுதமுடியும். தமிழில் இந்நூலிலுள்ள அத்தகைய தருணங்களுக்கு நிகராக வேறெந்த நூலிலும் எவர் பற்றியும் எழுதப்பட்டதில்லை. அதை எழுதவே கற்பனை தேவையாகிறது – உண்மையை துலக்கும் கற்பனை. அதை பதிவுசெய்தமையாலேயே இந்நூல் பேரிலக்கியம்.
சுரா மறைந்தபின்னர் பலர் அஞ்சலி எழுதினர். அந்த அஞ்சலிகளிலெல்லாம் இரண்டு வரைவுகளே இருந்தன. ஒன்று சம்பிரதாயமான அஞ்சலி. அவையே பெரும்பகுதி. இன்னொன்று, தன்னைப்பற்றி எழுதி தன்னை சுந்தர ராமசாமி எப்படி மதித்தார், எப்படிப் பாராட்டினார் என்ற பதிவு. அதை எழுத்தாளர்கள் எழுதினர். அவை எவற்றுக்கும் இன்று எந்த மதிப்பும் இல்லை, உணர்ச்சிமதிப்போ தகவல்மதிப்போ. அவர்கள் சுராவை கவனித்ததே இல்லையா என்ற பெருந்திகைப்பையே நான் அடைந்தேன். அவருடைய ஒரு சொல்கூடவா அவர்களின் நினைவில் இல்லை? அவர்கள் தங்களையன்றி எவரையுமே பொருட்படுத்துவதே இல்லையா?
ஆனால் ஆச்சரியமாக இந்நூல் பற்றித்தான் பொருமல்கள், கசப்புகள், தாக்குதல்கள் எழுந்து வந்தன. இது சுந்தர ராமசாமியை அவமதிக்கிறது என்று சொன்னவர்களும் உண்டு. நான் என்னை முன்னிறுத்துகிறேன் என்றவர்களும் பலர். அவ்வாற்ய் சொன்ன பலர் சிறிய எழுத்தாளர்கள். சிலர் வெறும் சாதியவாதிகள். குடும்பச்சூழலில் ஒர் அன்பானவர் என்று மட்டுமே அவரைக் கண்டவர்களுக்கும் அப்படி தோன்றலாம். இந்நூலில் அவர் உள்ளம் படைப்பூக்கத்துடன் நாகபடம் என எழும் கணங்களை அவர்களால் உணரமுடியாது.
இன்று இந்நூலைப்பற்றி அவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலக்கியவாசகர் எவரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். சுந்தர ராமசாமியுடன் இணைத்து நிறுவிக்கொள்ளும் தேவைகொண்டதல்ல என் ஆளுமை என வாசிப்போர் அறிவர். இந்நூல் சுராவை எப்படி வரலாற்றின் முன் நிறுத்துகிறது என அவர்கள் வாசிக்கமுடியும். அப்படி அவரைப்பற்றி ஒரு படைப்பூக்கச் சித்திரத்தை அளிக்கும் வேறொரு நூல் எழுதப்பட்டதில்லை என எவரும் காணமுடியும். இது அவரை சிரிப்பவராக, சிறியவற்றில் அழகை அறிபவராக, கவிஞராக, சிந்தனையாளராக, காந்தியை உள்வாங்கிய மார்க்ஸிய இலட்சியவாதியாக முன்னிறுத்துகிறது.
இது சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி அல்ல. இது ஒரு கடமைநிறைவேற்றமோ நன்றிக்கடனோ அல்ல. இது நான் எழுதும் எந்நூலையும்போல அறிவியக்கத்திற்கு என் கொடை மட்டுமே. ஞானி பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் இதுபோலவே . தமிழ் அறிவியக்கம் அவர்களின் வழியாகவே வளர்ந்து வந்தது. இந்நூல் அளிப்பது அதன் சித்திரத்தை. எனக்கு சுரா அறிவியக்கத்தின் ஒளிரும் புள்ளிகளில் ஒன்று மட்டுமே.
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சுரா நினைவின் நதியில் நூலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை)
தொடர்புக்கு : vishnupurampublications@gmail.comPhone 9080283887)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
