காவியம் என்ற இதிகாசம்- சுசித்ரா
1
ஆசிரியருக்கு,
பிரபஞ்சத்தை புரிந்துகொள்ளவும் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ளவும் தான் மனிதர்கள் கதைகளை புனையத் தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ‘காவியம்’ நாவல் எழுதப்பட்டதைப் பற்றிய பதிவுகளை படித்தபோது, மனிதர்களில் மகத்துவமான கதைசொல்லிகள் இங்கே எதையுமே புனைவதில்லை, மாறாக எங்கோ ‘இருந்துகொண்டிருக்கும்’ கதைகளைத்தான் பெற்றுக்கொண்டு நிகழ்த்துகிறார்கள் என்ற எண்ணம் உருவானது. இதிகாசம் என்ற சொல்லின் பொருள் – ‘இவ்வாறு இருந்தது’ என்பது – துல்லியமாகப் புரிந்த பொழுது அது. காவியமும் ‘இவ்வாறு இருந்த’ கதை என்று அக்கதையின் வீச்சும் ஒருமையும் எனக்குள் உணர்த்துகிறது. அப்படிப்பார்த்தால், காவியம், ஒரு நவீன இதிகாசமும் கூட.
‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்றால், எங்கே இருந்துகொண்டிருக்கும் கதை? ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையை பெற்றுக்கொள்வது எவ்வாறு? அக்கதையை சொல்லப் பயில்வது எவ்வாறு?
‘காவியம்’ நாவல் வெளிவரத் தொடங்கிய நாள் முதல், நாள் ஒரு அத்தியாயமாக மொழிபெயர்க்க முடிவுசெய்திருந்தேன். பெங்களூரில் நீங்கள் நாவலின் முன்வரைவை சொன்ன போதே இது பெரிய நாவல் என்று தோன்றியது. ஒரு பெரிய நாவல் எவ்வாறு எழுதப்படுகிறது என்பதை அது எழுதப்படும்போதே பின் தொடர்ந்து சென்று கற்க முடியுமா என்ற விருப்பம் இருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயத்தை வாசித்து, அதன் கதையை, அமைப்பை ஒரு வரைவாக எழுதி, அங்கிருந்து தொடங்கி மொழியாக்கம் செய்ய முற்பட்டேன். அந்த அமைப்பின் பின்னலை புரிந்துகொள்வதன் வழியாக, அடுத்தடுத்து நாவல் எங்கு நகரும், எப்படி மொழிவெளிப்பாடு நிகழப்போகிறது என்று ஊகிக்கமுடியுமா என்று முயற்சித்தேன்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நாவலின் அமைப்பு புரியத் தொடங்கினாலும், அதன் போக்கு எந்த இடத்திலும் கணிக்கக்கூடியதாகவே இல்லை. அடுத்த அத்தியாயத்தில், அடுத்த பகுதியில் என்ன நிகழும் என்று முந்தின பகுதியிலிருந்து எந்த நேரடித் தொடர்ச்சியும் எடுக்க முடியவில்லை. அந்தத் தொடர்ச்சியில் உள்ள மாபெரும் ஒற்றுமை மட்டும் மனதில் கூடிக் கூடி வந்தது. ஆனால் அந்த ஒருமை எப்படி அமைகிறது — அல்லது ஆசிரியர் அதை எப்படி அமைக்கிறார் —- என்று எனக்குள் எரிந்துகொண்டிருந்த கேள்விக்கான பதிலை பிரதியை ஆராய்வதிலிருந்து எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை கைவிட்டேன். ஒரு மகத்தான இயற்கை நிகழ்வைக் காணும்போது மனதைக் கைவிட்டு கண்ணாக மாறிக் காண்போமல்லவா, அப்படி அந்த நிகழ்வுப் பெருக்கை உள்வாங்கத் தொடங்கினேன். ஆம், இது ‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்ற உணர்வு உருவானது அப்போதுதான்.
இந்தப் பயிற்சியில், என் புரிதலுக்காக நாவலின் அமைப்பை நான் இவ்வாறு தொகுத்துக்கொண்டேன், கீழ்கண்ட படத்தைக் காணவும்.
இந்தப் படம் என்னைத் தவிர எவருக்காவது பொருள்படுமா தெரியவில்லை. ஆசிரியரிடம் இதைக் காட்டுவதும் அர்த்தமற்றது ஏனென்றால் இது பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட அமைப்பொருமை. ஆசிரியரின் மனத்தில் எழுதும் கணத்தில் இருந்த ஒருமை முற்றிலும் வேறு விதமாக உணரப்பட்டிருக்கலாம். ஆனால் அதை வாசகர் அறியவும் முடியாது. இந்த இடைவெளிகளுக்கு நடுவில், ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையை ஆசிரியர் எவ்வாறு பெற்றுக்கொண்டார், எவ்வாறு வெளிப்படுத்தினார் என்ற கேள்விக்கான பதிலை சற்றேனும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதி வழியாகவே அது சாத்தியமாகிறது. இந்தப் பிரதியின் அமைப்பில் நான் கண்ட ஒரு சிறப்பம்சத்தை தொட்டுக்காட்டவே இந்த வரைபடத்தைப் பகிர்கிறேன்.
நாவல் நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு குடும்பம், அதன் சமூக இடம், பண்பாட்டுப் பின்புலம், தொன்மப் பின்புலம், அனைத்துக்கும் அடியில் உள்ள மண் என்று படிப்படியாக ஆழம் கொள்கிறது. ஆனால் இந்த இழைகள் கதைக்குள் பின்னப்பட்டு பின்னப்பட்டு, இறுதியாக ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் பிணைந்து வேர் என்றான போக்கு பிரம்மிக்கச் செய்தது.
அடித்தள தலித் வாழ்க்கைக்கும் சிருங்காரம் மினுங்கும் சமஸ்கிருத காவியத்துக்கும் என்ன தொடர்பு? கருணைமிக்க பிசாசும் சாதிமீறும் காதலும் இணையும் இடம் எது? ஏனென்றால் இவையெல்லாமே நம்மைச் சுற்றியுள்ள இழைகள். புரிந்துகொள்ளமுடியாமல் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்றோடொன்று தொடர்பற்றவை என்று எண்ணுகிறோம். ஆனால் ஆழத்திலுள்ள தொடர்பை, ‘இருந்துகொண்டிருக்கும்’ தொடர்பை, காவியம் நிகழ்த்திக் காட்டியது.
இந்தத் தொடர்பை நிகழ்த்தியது ஆசிரியரால் முனைந்து பல்லைக்கடித்து ‘அடையப்பட்ட’, ‘உருவாக்கப்பட்ட’ வடிவம் அல்ல என்பது மேலும் பிரம்மிக்கச்செய்யும் விஷயம். ஆசிரியரின் ஆன்மாவிலிருந்தோ — அல்லது எங்கிருந்தோ ‘பெற்றுக்கொண்ட’வற்றிலிருந்தோ —- தன்னியல்பாக உருகொண்டு எழுந்த ஓர் வடிவம் தான் இந்நாவல், என்று கதையமைப்பும், நாவல் முடிந்தபின் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் வெளிப்படுத்துகின்றன. ஆண்டாண்டுகால பயிற்சியும் கைநேர்த்தியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது, உண்மை. ஆனால் அடிப்படையில் இது புனையப்பட்ட கதை அல்ல, நிகழ்ந்த கதை, ‘இருந்துகொண்டிருக்கும்’ கதை என்ற எண்ணம் எனக்குள் வலுவடைய இதுவே காரணம்.
2
இவ்வாறு ‘உருகொண்டு’ வந்த வடிவத்தை வரைபடம் போட்டுப் பார்த்தபோது, நாவலின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க இழை தெளிந்து வந்தது. நாவலில் கதை சொல்லும் பிசாசு ஒரு மைய இழை. கதாநாயகனும், அவன் தலித் பின்னணியும், அவன் கற்கும் சமஸ்கிருத காவியமும் எல்லாம் மற்ற இழைகள். இவற்றின் பலனாகவே அவன் குணாட்யரையும் அவர் காவியத்தையும் சென்று அடைகிறான்.
ஆனால் கதையில் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வரும் மற்றொரு இழை உள்ளது. அதை அன்பு என்றும் பிரியம் என்றும் கருணை என்றும் மகத்துவம் என்றும் வெவ்வேறாகச் சொல்லலாம். என் வரைபடத்தில் அதை love என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அடிப்படையில், அது ஓர் அறம் என்று நினைக்கிறேன். சைதன்யா பேசிய பண்புசார் அறத்துக்கு நெருக்கமான ஒன்று. ஆரம்பம் முதல் கடைசி வரை இருட்டில் பனிநீர் போல ஈரமாக மின்னிக்கொண்டிருக்கும் ஒன்று. இக்கதையின் உயிரும் மூச்சும் மௌனமும் குடிகொள்வது அங்குதான் என்று நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பை செப்பனிடும்போது தான் கவனித்தேன். பிசாசு கதைசொல்லியின் அம்மாவை தேடி வருவதில்லை. அம்மாதான் கதைசொல்லும் பிசாசை வரித்துக்கொள்கிறார். தன் குழந்தை போல் அவர் வளர்த்தத் தங்கை கொல்லப்படும் அநீதியைக் காண்கிறாள். அதற்கு எதிராக அவரால் நிகழ்த்தப்படும் அறம் அது. அது தான் கதையின் தொடக்கம். அங்கிருந்து வளர்ந்து சென்று, அவள் மரணம் நிகழ்ந்து கதைசொல்லி அதை உணர்ந்த மறு கணத்தில் அம்மா மீண்டும் இயல்பாக வந்து கதைசொல்லும் பிசாசை அவனிடம் கையளித்துவிட்டுச் செல்வதாக அவன் உணரும் இடம் அதிமகத்துவமான ஒன்று. இப்போது எழுதும் போதும் கண்ணீர் துளிகள் விசைப்பலகையில் விழுகின்றன.
அந்தக் கையளிப்பு என்ன? அம்மாவின் இறுதி ஆசையா? அவள் கருணையா? மகனின் ஆழ் விருப்பமா? தன் முழுத்தனிமைக்கு மாற்றாக அம்மா தன்னுடைய பிசாசை தனக்குத் தந்துவிட்டுப் போகவேண்டும் என்ற அவன் மன்றாட்டுக்கு அவள் கொடுத்த அந்தரங்க பரிசா? அம்மாவிடம் அப்படி ஒரு பிசாசை இருந்தது அவனுக்குத் தெரிந்திருந்ததா? தெரிந்திருந்தது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவள் அந்த பிசாசை பெற்றதும் மகனுக்குக் கையளித்ததும் மகனே அதை அவளிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டதும் எல்லாம் ஒரு பேரறத்தின் இயக்கம் தான்.
அம்மா இறந்த தருணத்தில் மகன் உணர்ந்த முற்றிலும் கைவிடப்பட்ட உணர்வும் தனிமையும் அம்மாவும் தன் தங்கை குரூரமாகக் கொல்லப்பட்டபோது உணர்ந்திருப்பாள் அல்லவா? அறம் முற்றிலும் பிழன்ற உலகில் வாழ்கிறோம் என்று உணரும் அனைவரும் அத்தகைய தனிமையை அறிந்தவர்கள் என்று நினைக்கிறேன். யாருமே வரப்போவதில்லை என்று உணர்ந்தவரின் தனிமை அது. அவர்கள் தங்களுக்குள் சென்று தங்களுக்கென்று அறத்தை புனர்கண்டடைய விதிக்கப்பட்டவர்கள். அப்படித் தன் அறத்தைக் கண்டுபிடித்துத் தனக்குள் வாழ்ந்து மறைவதும் ஓர் அறம் தான். அறமும் அவர்களால் தான் நிலைகொண்டு இவ்வுலகில் வாழ்கிறது. அம்மா பிசாசை வரித்துக்கொண்டு வாழ்ந்த அறம் அத்தகையது.
இந்த அறத்துக்கு நேர் எதிராகத்தான் ருக்மிணி தேஷ்பாண்டேயின் துரோகம் நிகழ்கிறது. “தன் குழந்தைகளுக்காக நீதியைக் கைவிடும் தாய் வேறொன்றுக்காகத் தன் குழந்தைகளையும் கைவிடுவாள். எந்நிலையிலும் நீதிக்காக நிலைகொள்பவளாக ருக்மிணி இருந்திருந்தால் ராதிகா கொல்லப்பட்டிருக்க மாட்டாள்,” என்று கானபூதி சொல்வதை, கதைசொல்லியின் அம்மாவின் மகத்துவமான செயலோடு வேறுபடுத்திப் பார்க்கலாம். பிரியம் மாறுபடும்போது, திரியும்போது, ஒற்றைக்கோணம் கொள்ளும்போதெல்லாம் அறமீறல் நிகழ்வதை காவியம் சுட்டிக்காட்டுகிறது.
வால்மீகி இயற்றிய சீதாயனத்தின் முகப்பையும் முடிவையும் வெட்டி சீதை தன் பிள்ளைகள் மூலம் ராமனிடம் கொடுத்தாள் என்று கானபூதி சொல்கிறது. தன் பிள்ளைகள் மீதான பற்றாலேயே அவ்வாறு செய்து, வால்மீகியின் அறவுணர்வின் வெளிப்பாட்டைச் சிதைத்து ராமன் கதையை நிலைநாட்டினாள் என்கிறது அது. ஏற்றுக்கொள்ள கடினமாக பகுதியாக அமைந்த ஒன்று இது. இந்திய பண்பாடு தன் மகுடத்தில் அணிந்திருக்கும் சீதையின் மீதல்லவா இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் மெல்ல மெல்ல அதனுடன் உரையாட முடிந்தது. சீதையின் அனுமதி இல்லாமல் ராமன் கதை அவ்வடிவில் நிலைத்திருக்க முடியாது. அதை சீதையின் பதிவிரதத்துக்குச் சான்றாகவும் கொள்ளலாம். மண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியுடன் அவள் எப்படியோ சமரசம் செய்தமைக்கான சான்றாகவும் கொள்ளலாம்.
அம்மாவைப் போலவே ஶ்ரீகர் மிஸ்ராவின் கதாபாத்திரமும் அறம் உணர்ந்தது, மகத்துவமானது. தூய அழகின் வடிவமாய் பெண்களை பார்க்கும் கண்ணை காவியங்களிலிருந்து பெற்றவராக இருக்கிறார். அண்டை வீட்டுப் பெரியவர் தன் தங்கையை அவள் திருமண நாள் அன்று நிற்க வைத்துக் கண்குளிரக் கண்டதன் காட்சி விவரிப்பு உயரமான ஓர் இடத்தில் நிற்கிறது. அழகைப் பார்த்துக் கண் கலங்குபவன் அடிப்படையில் அறவுணர்வு கொண்டவன், அறம் பிழறமாட்டான் என்று உணர்த்தியது. அழகுணர்வு அறவேயற்ற ஃபணிந்திரநாத், ஹரிந்திரநாத், அஸ்வத் போன்ற பாத்திரங்களுக்கு மறுதட்டில், நாவல் குறுகிய காலத்தில் வந்துசென்றாலும் மகத்துவமாக நிலைகொள்ளும் ஶ்ரீகர் மிஸ்ராவை முன்வைக்கிறது. அம்மாவைப் போலவே அவரும் இந்த நாவலுக்கு ஓர் அளவுகோல்.
ஶ்ரீகர் மிஸ்ரா அந்தக் கரடியைப் பற்றிச் சொல்வதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் அவரில் நிலைத்திருக்கும் அவர் அறவுணர்வின் சான்று. கதைசொல்லும் பிசாசு எப்படி இத்தனை யுகங்களின் அநீதிகளை மீறி கானகத்தில் கதைகளை சொன்னபடி நிலைகொள்கிறதோ, அந்தக் கரடியின் இருப்பைப் பற்றிய உணர்வும் இங்கே சில மனங்களுக்குள் ஆழத்தின் ஊற்றாக நிலைகொண்டு வருகிறது. ஆம், இங்கே ‘இருந்துகொண்டிருக்கிறது’. அந்தக் கரடியை பற்றிய தன் உள்ளுணர்வை ஶ்ரீகர் மிஸ்ரா சொல்லும் இடம் ஓர் அறவெளிப்பாடு. சரியாக அந்த இடத்தில் ராதிகா துக்காராம் மீது காதல்கொள்வதும் அவ்வறத்தின் தவிர்க்க முடியாத நீட்சி என்றே தோன்றியது.
காதல் என்ற உணர்வும் ஓர் அறவெளிப்பாடா என்ற கேள்வி இக்கதை வழியாக எனக்குள் எழுகிறது. மனிதர்கள் ஒருவர் மீது மற்றொருவர் காதலும் பிரியமும் கொள்வது எதனால்? தங்கள் வாழ்க்கைகளை இணைத்துக்கொள்வதும், வேர்களை பிணைத்துக்கொள்வதும் எதை சாதிப்பதற்க்காக? இரு மனித மனங்கள் இணையும்போது ஆழத்தில் கண்ணுக்குத் தெரியாத நிழல்களையும் மூதாதயர்களையும் பிசாசுகளையும் தட்டி எழுப்புகிறதா? அவையே வானில் எழுகையில் மணமும் சங்கீதமும், கந்தர்வர்களாகவும் வித்யாதரர்களாகவும் தோற்றமளித்து அவர்களை சூழ்கின்றனவா? காதலில் ‘ஏழேழு ஜென்மம்’ என்று உணர்வதெல்லாம் எல்லாம் இதைத்தானா? இந்த நாவலின் பின்னணியில் செம்புலப்பெயநீராரின் பிரபலமான நான்கு வரி முற்றிலும் வேறுவகையாக அர்த்தம் பெருகிறது.
ராதிகா துக்காராமின் மேல் காதல் கொள்வது அந்த கரடி, அல்லது பிசாசின் வழியாகத்தான். அவர்களுக்கு (நமக்கும்) அந்த கட்டத்தில் என்னெவென்று முழுதும் புரியாத ஓர் உள்ளுணர்வு தான் அவர்களை இணைக்கிறது. உள்ளுணர்வு இந்த நாவலில் மிகப்பெரிய இடத்தை வகிக்கிறது. ராதிகா ராமை கண்டடைவது தன் உள்ளுணர்வால் தான். அவள் அந்தக் கரடியை அறிவதும் தன் உள்ளுணர்வால் தான். அந்தப் பகுதி கதைக்குள் நேரடியாகக் கூறப்படுவதில்லை என்றாலும் ராதிகாவின் குடும்பக்கதை வழியாக அவளுக்குள் அந்த உள்ளுணர்வு உருவாகியிருக்கக்கூடிய பாதையை நாம் கற்பனையால் அடைய முடியும்.
உண்மையில் அப்படி ஒரு பயணத்தை நிகழ்த்தும் ஒரு வாசகன் அந்த காதலின் தவிர்க்கமுடியாமையை உணர முடியும். இக்கணம் மனம் பெருமூச்சு கொள்கிறது — அப்படி எத்தனை தவிர்க்கமுடியாமைகளால் பின்னப்பட்டுள்ள வாழ்க்கை இது! தவிர்க்கமுடியாதது. ஆனால் உள்ளுணர்வால் உணரக்கூடியது. அந்த உள்ளுணர்வை இறுதி வரை உறுதியாக பின் தொடர்ந்து நிகழ்த்தியதே ராதிகாவின் அறம் என்றும் அவள் மகத்துவம் என்றும் தோன்றுகிறது.
இந்த நாவலை வாசித்துச்செல்லும் போது எனக்குள் ஒரு நடைமுறையாளரின் குரல், ராதிகா ராமை பின்தொடர்ந்து செல்லாமல் இருந்திருக்கலாமே, அவன் வாழ்க்கை அழிந்திருக்காதே என்று ஆதங்கப்பட்டது. பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுவே நடைமுறைக்கு உகந்த நடத்தையோ என்று நினைத்தது உண்மை.
ஆனால் இந்த நாவல் உள்ளுணர்வின் தடத்தில் மட்டுமே பயணிக்கும் அமைப்புக் கொண்டது. உள்ளுணர்வு வழியாக மட்டுமே ராம் அடைந்தவற்றை — கானபூதி, குணாட்யர், ததாகதர் உட்பட — அவன் நடைமுறை வாழ்வில் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படிப் பார்த்தால் ராதிகாவின் அந்தக் காதல் ராமுக்கு ஒரு பெரும் கொடை, வரம். அவளுடைய சாவுக்கு இறுதி வரை நீதி கேட்டு மன்றாடுவதால் தான் கானபூதி அவனை உள்ளே உள்ளே என்று ஆழம் வரை அழைத்துச் செல்கிறது. ‘காவியம்’ இருட்டான நாவல் என்று பல நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அறமும் நீதியும் கருணையும் அத்தனை தவிர்க்கமுடியாமல் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது — ஆம் ‘இவ்வாறு இருந்துகொண்டிருக்கிறது’ — என்ற நிச்சயத்தின் கதையாகத்தான் எனக்கு காவியம் வாசிக்கக்கிடைத்தது.
( 3 )
அறம் அறம் என்று அரற்றிக்கொண்டிருக்கும் மண்ணின் ஓயாத சப்தம் காவியத்தில் கேட்க முடிகிறது. அந்த சப்தத்தைக் கேட்கும் காதை வாசகருக்கு அளித்தது தான் காவியத்தின் சாதனை. இது மண்ணைப் பற்றிய கதை — ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ என்ற வரியே இந்நாவலின் ஆதார சுருதி. ஆனால் இந்த வரியும் ஆசிரியர் கதைக்குள் ‘திட்டமிட்டு’ நுழைக்கவில்லை. மாறாக கதையமைப்பின் பகுதியாக, துக்காராமின் தேடலின் விளைவாக இயல்பாக எழுந்து வந்த வரி என்ற எண்ணமே நாவலை வாசிக்கும் போது உருவாகிறது. ‘இவ்வாறு இங்கே இருந்துகொண்டிருக்கும்’ ஓர் உண்மை, ஒரு மெய்–யதார்த்தம், நாவல் அதன் சுருதியை மீட்டும் போது, அந்த அலைவரிசையை தட்டும்போது, இயல்பாக திறந்துகொள்கிறது.
பொதுவாக புனைவுகளை ‘புனைவு’ என்ற கவசத்தால் மட்டுமே அணுக முடியும். புனைவும் அந்த விருப்புடன் தான் அமைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது. ‘நிஜத்திலிருந்து’ ஒரு தூரத்தை அவை பேண விரும்புகின்றன. அப்போதுதான் நிஜத்தை மேலும் துல்லியமாக அவற்றால் கூறமுடிகின்றது.
ஆனால் காவியம் ஒளி ஊடுருவக்கூடிய காகிதத்தை நினைவுபடுத்துகிறது. அதன் அமைப்பில் அத்தனை மடிப்புகளும் ஆழங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நேரடியாக இங்கே அப்பட்டமாக மறைக்கப்பட்டிருக்கும் யதார்த்தம் ஒன்றைக் காணும் துணுக்குரலை அளிக்கிறது. ஆங்கிலத்தில் hiding in plain sight என்ற பதம் உண்டு. காட்டில் இரவு வேளையில் இன்ஃப்ரா–ரெட் கண்ணாடிகளை அணிந்தால் விலங்குகளின் உடல் வெப்பத்தை ‘பார்க்க’ முடியும். அவற்றின் உடல் வெப்பத்தையே ஒரு தடமாக பின் தொடர முடியும். அது போன்ற ஒரு பார்வைக்கோணத்தை காவியம் அளிக்கிறது. இரவில் கானகத்தில் உலவும் ஒரு கரடியை காட்டுகிறது.
ஒப்புநோக்க பின் நவீனத்துவ நாவல்களில் நிஜத்துக்கு நெருக்கமாக வருகிறேன் என்றும், நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியை மங்க வைக்கிறேன் என்றும் செய்யப்படும் autofiction வகையான சோதனைகள் படு அசட்டுத்தனமாகத் தோன்றுகின்றன. அவை தன்னிலையை சிதறடிப்பதன் மூலம், ரத்துசெய்வதன் மூலம் ஒன்றை அடைந்து வெளிப்படுத்துவதாக கூறிக்கொள்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் அதே தன்னிலையைத்தான் அப்பட்டமான வேஷங்களில் நிகழ்த்துகின்றன. மறுபால் உடையணியும் ஆண், பெண் வேடம் பூணும்போதும், அவன் அணிந்திருக்கும் போலி கண் இமைகளையும் உதட்டு சாயத்தையும் மீறி அவன் ஆண் என்று அப்பட்டமாகவே தெரியும். ஆனால் நீ ஆண் என்று சொன்னால் கோபித்துக்கொள்வான். தான் பெண் என்று போலிக்குரலில் சாதிப்பான். அது போல ‘அது நான் அல்ல’ என்று நாவலாசிரியர் சொல்வதே ஒரு பின்நவீனத்துவ முரண்நகையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் அடிப்படையில் இது சாரமற்ற விளையாட்டு என்ற எண்ணம் காவியம் வாசித்தப்பின் வலுவடைகிறது.
காவியம் இந்த விளையாட்டுகளை வலுவான புனைவின் அமைப்பின் வழியாகவே தவிர்க்கிறது. ஆகவே எந்த தன்னிலையும் ‘நான் நீங்கள் நினைக்கும் தன்னிலை அல்ல,’ என்ற அறிவிப்புடன் கவனம் வேண்டி துருத்தி நிற்கவில்லை. அதே சமயம், துக்காராம் எங்கே முடிகிறான் கானபூதி எங்கே தொடங்குகிறது, கானபூதி எங்கே முடிகிறது வால்மீகியும் வியாசனும் குணாட்யரும் எங்கே தொடங்குகிறார்கள் என்ற மயக்கம் இந்த நாவலில் உள்ளது. ஒவ்வொரு கதைசொல்லியும் ஒரு காகிதத்தாள் போல மறுபக்கம் வீசும் உண்மையென்னும் ஒளியை தன் வழியாக வடிகட்ட அனுமதிக்கிறார்கள். இறுதியில் ஆசிரியர் கானபூதியை கண்டடையும் இடத்தில் கதை தன் ஒருமையின் ஊற்றை வந்தடைகிறது. சிதறடிப்பற்ற இந்த ஒருமை – இதுவே காவியத்தின் மொழிபை பின் நவீனத்துவத்தின் ஆழமற்ற மீபுனைவு உக்திகளிலிருந்து மேலெழச்செய்கிறது.
அடிப்படையில் காவியம் ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒரு கதையைத்தான் சொல்கிறது. இயல்பான வெளிப்பாடாகக் கூறுகிறது. ‘மண்ணின் அறம்’ என்ற ஒருமை தொடக்கம் முதலே கதையின் இணைப்பாக அமைகிறது. அதுவே கதையின் அமைப்பை தீர்மானித்த முதன்மை விசைகளில் ஒன்று என்று நினைக்கிறேன். அந்த ஒருமையை தன் உள்ளுணர்வின் தடத்தில் உணர்ந்த ஓர் ஆசிரியர் இந்தப் பிரதியோடு இணைந்தே இருக்கிறார். அவர் உருவாக்கும் ஆசிரியர் அல்ல. புனையும் ஆசிரியர் அல்ல. கதைச்சொல்லும், கதைக்குள் பேசும் ஆசிரியர் அல்ல. உள்ளுணர்வாலேயே அனைத்துக் கதாபாத்திரங்களின் இயக்கமாக விளங்கும் ஆசிரியர். உள்ளுணர்வாலேயே ஆழங்களை உணர்ந்து அங்கே சென்று வாழ்ந்து மீண்டு வரும் ஆசிரியர். உள்ளுணர்வாலேயே ‘இருந்துகொண்டிருக்கும்’ ஒன்றை அறிந்து சாட்சி சொல்பவர். ஒரு கோணத்தில் இந்தக் கதையில் ஆசிரியர் இல்லை. இன்னொரு கோணத்தில் இந்தக் கதையில் ஆசிரியர் மட்டும் தான் இருக்கிறார். அல்லது அவர் உள்ளுணர்வு மட்டும் தான் இருக்கிறது. அன்புள்ள ரோலந்த் பார்த், உங்கள் அறுவைசிகிச்சையில் இறந்துபோன ஆசிரியர் இப்போது பிசாசாக உருமாறி பிரதிக்குள் ஒழிந்துகொண்டிருக்கிறார். பிரதி எங்கே பிசாசு எங்கே என்று பிரித்துச்சொல்லுங்கள் பார்ப்போம்?
மேலும் இந்தப் பிரதியே மண்ணை ஆதாரம் என்று சொல்கிறது. மண்ணும் கதை சொல்லும் பிசாசும் பிணைக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் பிரதி மட்டும் ஆசிரியர் இல்லாமல், அடிமரம் இல்லாமல், வேர்கள் இல்லாமல், எப்படி அந்தரத்தில் மிதக்க முடியும்? ஆசிரியரின் கற்பனா பரிணாமம் நிகழாமல் இந்த நாவல் அதன் வடிவை எப்படி அடைந்திருக்க முடியும்? அப்படிப்பார்த்தால், ஆசிரியர் இல்லாத, மையமில்லாத, ஒருமையில்லாத, தரிசனம் இல்லாத பிரதிகளுக்கு எதிரான ஓர் அறிக்கை, ஓர் அறைகூவல் என்று கூட காவியத்தை வாசிக்கலாம்.
4
ஆனால் இவ்வளவு ஆழங்களுக்குள் செல்லும் காவியத்தில் ஒரு மர்மமான விடுபடல் உள்ளது. அல்லது ஒரு வெற்றுப்பக்கம். யோசித்தால் இது காவியத்தின் வெற்றுப்பக்கம் அல்ல. காவியம் குவித்துக் காட்டும் பண்பாட்டாழத்தில் தன்னளவில் உள்ள வெற்றுப்பக்கம்.
காவியம் மண்ணைப் பற்றிய நாவல். பெண்ணைப் பற்றிய நாவல். பெண்கள் மீது இயற்றப்படும் அநீதிகளை பற்றி, பெண்கள் தங்கள் மீது இயற்றிக்கொள்ளும் அநீதிகளை பற்றிய கதை.
ஆனால் நாவலுக்குள் கதை சொல்லும், அல்லது கானபூதியிடம் அமர்ந்து கதை கேட்கும் ஒரு பெண்ணும் இடம் பெறவில்லை. கதைசொல்லியின் அம்மா பிசாசின் கதையை கேட்கிறாள், ஆனால் அவள் கேட்ட கதைகள் அவளுடனேயே மறைகின்றன.
ஏன்? அதுவும் உள்ளுணர்வின் விளைவு என்று தான் தோன்றுகிறது. யோசித்தால் அந்த வெற்றுப்பக்கம் ஓர் அகழி போல் எத்தனை அகலமாக இங்கே உள்ளது! நம் பழைய மரபில் காவியம் படைத்தப் பெண் ஒருவர் கூட இல்லை. இந்த நாவல் முழுதும் பெண்ணின் அறமும் அறமீறலும் உள்ளுணர்வால் தொட்டுச் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் இவற்றைத் தன் உணர்வுகளாகத், தன் சொற்களில் கூறிய பெண் எவருமே நம் பண்பாட்டில் இல்லை. நாவலில் காவியம் பயின்று வந்த ஒரே பெண் கதாபாத்திரம் கொலையாவதும் ஒரு குறியீடென்று வாசிக்க இடம் உள்ளது. அந்தக் கொலைக்கான நீதியைத் தேடி நடக்கும் அகழாய்வில், பாற்கடலிலிருந்து என்பது போல் வெளிவருவது, ஒரு வெற்றுப்பக்கம்.
‘வெற்றுப் பக்கம்’ என்ற பெயரில் ஐசக் தினெசன் ஒரு நல்ல சிறுகதையை எழுதியிருக்கிறார். காவியத்துடன் என் மனம் எப்படியோ இந்தச் சிறுகதையை இணைத்துக்கொண்டது. ஒருவேளை அதுவும் மறக்கப்பட்ட கதைகளை உள்ளுணர்வால் ‘பெற்றுக்கொள்வது’ பற்றிய கதை என்பதால் இருக்கலாம். அல்லது அதுவும் பெண்ணைப்பற்றிய, மண்ணைப்பற்றிய கதை என்பதால் இருக்கலாம்.
அக்கதையின் தொடக்கத்தில் ஒரு கதைசொல்லி தன் மாணவியான பேத்தியிடம் சொல்கிறாள்: ‘கதைக்கு விசுவாசமாக இரு. என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தளராமல் உன் கதையை மாறாப்பற்றுடன் பின் தொடர்ந்து போ. கதைசொல்லி எப்போதும், எந்நிலையிலும், கதைக்கு மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரல் அங்கு கேட்கும்.’
கானபூதி சொல்லும் கடைசி கதையில் ஆனந்தர் ஆயிரம் காலடி திருப்பி வைத்து பகதியை அடைந்து அவள் பாதம் பற்றி கண்ணீருடன் ஏதோ சொல்கிறார். பகதி அவரை அணைத்து பதில்சொல் உரைக்கிறாள். ஆனந்தர் பகதியிடம் என்ன சொன்னார், பகதி ஆனந்தரிடம் என்ன சொன்னாள் என்ற கேள்விகளுக்கு, “அளவேயில்லாத கதைகளை அறிந்தவன் நான். மண்ணிலும் விண்ணிலும் நானறியாத ஒன்றுமில்லை. ஆனால் எனக்கும் தெரியாது,” என்கிறது கானபூதி.
கானபூதியே சொல் அணைந்து மௌனமாகும் இடம் இது. ஆழங்களை நிறைக்கிறது மௌனம், ஊற்றெடுத்துக் கொப்பளித்து எழுகிறது மௌனம். கதை சொல்லும் கானபூதியிலும், கதை கேட்கும் துக்காராமிலும், கதையை எழுதிச்செல்லும் ஆசிரியரிலும் அதை படிக்கும் வாசகியிலும் அந்த மௌனம் நிறைகிறது. இந்தக் காவியத்தின் மகத்தான வெற்றுப்பக்கம் அது. அதை வாசிக்கமுடியாது. ஆனால் அதுவரை எரிந்துகொண்டிருந்த உள்ளத்தீ அங்கே சற்று அடங்கத் தொடங்குகிறது. ஆம், இது இருந்தது. இது இருந்துகொண்டிருக்கிறது. இதுவே நிகழும். ஓம், அவ்வாறே ஆகுக.
5
இப்போது நள்ளிறவு தாண்டிவிட்டது. இன்று குரு பூர்ணிமை. ஜன்னலுக்கு வெளிய எரிந்துகொண்டிருக்கும் முழுநிலவை பார்த்துக்கொண்டே, மௌனத்தை உணர்ந்தவாரு அமர்ந்திருக்கிறேன். கதைசொல்லி தன் சொற்பெருக்கை நிறுத்திய பொழுதில் எழும் மௌனம். ஆழமானது. வெள்ளி வழியும் இம்மௌனத்தில் ஒரு புன்னகையை காண்கிறேன்.
இத்திருநாளில், கதைகளின் தெய்வப்பிசாசு கானபூதியையும், அதன் வழிவந்த தெய்வீக கதைசொல்லிகளான என் குருநாதர்களுக்கும், மண்ணில் சிரம் பதித்து வணங்குகிறேன்.
அன்புடன்,
சுசித்ரா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
