காவியம் – கதைகளின் கேள்விகள்
காவியம் நாவலைப் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்களை நண்பர்களுடன் நடத்தி வருகிறேன். பெரும்பாலானவர்கள் நாவலின் கட்டமைப்பை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நாவல் என்னும் கலைவடிவம் unity என்னும் அழகியலைக் கொண்டிருக்கிறது. அந்நாவலின் உள்ளே உள்ள சிக்கலும் விரிவும் எல்லாமே அந்த ஒருமைப்பாட்டின் விளைவாக உருவாகி வருபவையாகவே இருக்கும்.
இந்நாவலை metafiction அல்லது antinovel என்று சொல்லலாம். Meta epic என்று சொல்வது இன்னமும்கூட பொருத்தமானது. இந்நாவல் அந்த ஒருமையை உடைத்து வேறொரு வகையில் சிதறிச் சிதறிக் கதைகளைச் சொல்லிக்கொண்டு செல்கிறது. இந்த வடிவத்தில் நீங்கள் உட்பட தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த வடிவத்தை பரிசோதனை செய்யத்தான் முயன்றார்கள். இந்த வடிவம் நியாயப்படுத்திய நாவல் விஷ்ணுபுரம்தான்.
நாவலுக்குள்ளேயே நாவல் விவாதிக்கப்படுவது என்ற அளவில் விஷ்ணுபுரம் சரியான மெட்டபிக்ஷனததான். இந்நாவலை விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்னரே யோசித்தீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்நாவலில் பேசப்படும் பல விஷயங்களின் முன்னோடி விவாதங்கள் விஷ்ணுபுரம் நாவலிலே உள்ளன. குறிப்பாக காவியங்கள் உருவாவதும் மறைவதும். இந்நாவலில் விஷ்ணுபுரம் நாவலின் அம்சம் வந்துவிடக்கூடாது என்ற கவனம் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்நாவல் நாவலுக்குரிய யூனிட்டி கொண்டது அல்ல. மாறாக அந்த யூனிட்டியை உடைத்து உடைத்து மேலே செல்வது. முதலில் ஒரு அஸ்திவாரத்தைப் போட்டுவிட்டு அதை உடைத்து மீண்டும் கட்டி மீண்டும் உடைத்துக்கொண்டு மேலே செல்கிறது. இது கானபூதியின் கதை. அது அருவமான ஒரு மொழியாக முதலில் தோன்றுகிறது. அங்கிருந்து ராமின் மனதில் திரண்டு உருவாகி வருகிறது. சமகாலம், புராணம், வரலாறு மூன்றையும் கலந்து ஒன்றுடனொன்று அவை எப்படிக் கலந்துள்லன என்று காட்டுகிறது. நாம் எண்ணுவனவற்றை உடனே அது மறுத்துவிடுகிறது.
இந்நாவலிலுள்ள கேள்விகள் முக்கியமானவை. பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கதமாகவோ தத்துவமாகவோதான் பதில் சொல்லப்படுகிறது. சில கேள்விகளுக்கு நேரடியான யதார்த்தமான பதில் சொல்லப்படுகிறது. அந்தக் கேள்விகள்தான் கதைகளாகச் சிதறிப்பரந்து செல்லும் நாவலுக்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன. நாவல் பல கேள்விகளை வரலாற்றைப் பார்த்தும் ,சமகால மனதைப் பார்த்தும் கேட்கிறது. கானபூதியிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அல்லது கானபூதி கேட்கிறது. விடைகள் ஒருவகையில் விடைகளுக்கான ஒரு வாய்ப்புதான்.சிலசமயம் இரண்டு விடைகளைச் சொல்கிறது. இரண்டும் சரிதான். மேலும் விடைகள் இருக்கமுடியும். அந்த ஆழமான உரையாடலை நாவலுடன் நடத்திக்கொள்ளும் வாசகனுக்குரிய நாவல் இது.
ஒருவன் எந்த அளவுக்கு இந்நாவல் உருவாக்கும் சிக்கல்களை எதிர்கொண்டு தனக்கான சொந்த விடைகளை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு இந்நாவல் விரியும் என நினைக்கிறேன். அந்த வாசகர்களுக்கு மட்டுமே இந்த நாவல் நாவலாக மாறும். மற்றவர்களுக்கு ஒரு கதைக்கொத்தாகவே ஆகிவிடும். கதாசரிதசாகரம் போல ஒரு கதைக்கொத்து. அப்படிப்பார்த்தால் கதாசரித சாகரத்தைக்கூட இந்நாவலைப்போல வாசிக்கலாம் போல தோன்றுகிறது.
ஆர். சந்திரசேகர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
