நீலநிழல் (குறுநாவல்)-4

( 4 )

சிறை வாசலிலேயே சகாதேவன் எனக்காகக் காத்திருந்தார். இப்போது அவருடைய பாவனைகள் மாறிவிட்டிருந்தன. எனக்கும் அவருக்கும் பொதுவான ஒரு ரகசியத்தை பேணுபவர் போலிருந்தார்.

“வாங்க… எல்லாம் ரெடியா இருக்கு” என்றார்.

நான் அவர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அவர் கொடுத்த காகிதங்களில் கையெழுத்திட்டேன்.

“வேணுமானா ஒருவாட்டி எல்லாத்தையும் பாத்திடலாம்” என்றார் சகாதேவன். “ஐஜி அங்க காலோஸ்லதான் இருக்கார்… அவரே எல்லாத்தையும் செக் பண்றார்.”

“பாத்திருவோம்” என்றேன்.

என் மனம் படபடத்துக்கொண்டே இருந்தது. நான் ஏன் வந்தேன்? ஏன் என்னை இப்படி கீழ்மைப்படுத்திக் கொள்கிறேன்? ஆனால் எல்லாருக்கும் ஒரு புள்ளி இருக்கிறது, உடைவுப்புள்ளி… அங்கே முறிந்தாகவேண்டும். நான் நேர்மையானவன், ஆனால் என் அகங்காரம் நேர்மையானது அல்ல. இல்லை, என் அகங்காரம்தான் என்னை நேர்மையாக வைத்திருக்கிறது.

தூக்குமேடை புதியதுபோல பழுதுபார்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தது. “எய்ட்டி தௌசண்ட் ருப்பீஸ்ல சரி பண்ணியிருக்கு சார்” என்றார் சகாதேவன்.

ஐஜி அங்கே ஓர் அறையில் இருந்தார். அவருடன் தூக்குபோடுபவர் இருந்தார். ஐம்பது வயதான தடிமனான மனிதர். கூட தூக்குபோடுபவரின் உதவியாளரான இளைஞன்.

ஐஜி என்னிடம் கைகுலுக்கி முகமன் சொன்னார். வறண்ட கண்களும், அடிக்கடி ஏப்பம் விடுவதுபோன்ற பாவனைகளும் உடைய பருத்த மனிதர். பெரிய தொந்தியும் வளைந்த ஆட்டுக்கொம்பு மீசையும் கொண்டவர். “இவரு ஹேங்மேன், நரசய்யான்னு பேரு. தெலுங்கு ஆளுங்க. பழைய நாயக்கர் ஆட்சிக்காலத்திலே இருந்தே இவங்கதான் ஹேங்கிங் பண்றது… வெள்ளைக்காரன் காலத்திலேயும் அப்டியே கண்டினியூ பண்ணிட்டாங்க… தூக்கே இல்லேன்னாலும் இவங்களுக்கு மாசாமாசம் சம்பளம் இருக்கு.”

நரசய்யா வணக்கம் வைத்தார். அந்த இளைஞன் வெற்றுவிழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்றான்.

“கயிறெல்லாம் செக் பண்ணியாச்சா?” என்றேன்.

“ரெண்டு டம்மி கயிறு இருக்கு… நூறு கிலோ எடைய வைச்சு செக் பண்ணியாச்சு. சுருக்கும் செக் பண்ணியாச்சு.”

அவர் சுருக்கு கயிற்றை எடுத்துக் காட்டினார். அதை தொடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் கையை நீட்ட முடியவில்லை. படபடப்பாக இருந்தது. ஒரு பெரிய பாம்பு அது என்று தோன்றியது. பளிங்கு போன்ற வெண்மையான பாம்பு. கழுத்தைச் சுற்றி நெரித்து இறுக்கிக் கொல்லவிருப்பது. எனக்கு மூச்சுத்திணறியது. மெழுகு தேய்த்து வழவழப்பாக்கியிருந்தனர். சட்டென்று அது உயிர்கொண்டு நெளியும் என்று தோன்றியது.

“போகலாம்” என்று கிசுகிசுத்தேன்.

ஐஜியிடம் சொல்லாமலேயே திரும்பிவிட்டேன். சகாதேவனின் அறைக்குள் டாக்டர் வந்திருந்தார்.

சகாதேவன் “ரிப்போர்ட் ஓக்கேயா சார்?” என்றார்.

“ஆமா… ஹி இஸ் பெர்பெக்ட்லி நார்மல்…” என்றார் டாக்டர். “வழக்கமா தூக்குக் கைதிகளோட பிரஷர் ரொம்ப உச்சத்திலே இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அவருக்கு நூறு பர்சண்டேஜ் நார்மலா இருக்கு. ஆளும் அப்டியே கூலா இருக்கார்.”

“நல்லது” என்றார் சகாதேவன்.

நான் அறையில் இருந்து வெளிவந்து திண்ணையில் நின்றேன். சகாதேவன் என்னிடம் “கடைசி ஆசையா மட்டன் குழம்பும் சோறும் கேட்டார். குடுத்தாச்சு. நல்லா திருப்தியா சாப்பிட்டார். தாம்பூலம் போடணும்னு சொன்னார். அதுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு” என்றார்.

நான் “ம்” என்றேன்.

“ரத்தத்தாலே மீசையை வழிச்சு முறுக்கணும்னு சொல்லுவார்னு நினைச்சேன்… நல்லவேளை கேக்கலை” என்றார் சகாதேவன். அவருடைய புன்னகை மாறியிருப்பது போலத் தோன்றியது.

முருகேசன் ஒரு கூடையுடன் வந்தான். என்னை பார்த்ததும் தயங்கினான்.

“என்னய்யா?” என்றார் சகாதேவன்.

“படுத்துட்டார்”

“தூங்குறாரா?”

“ஆமா”

“ஆச்சரியம்தான்… தூங்குறார்னா பெரிய ஆச்சரியம்”

“அவரே சாகுறதுக்கு சம்மதிச்ச மாதிரித்தான்” என்றேன்.

முருகேசன் “ஆமா சார், அப்டித்தான் தோணிச்சு… அந்த நெழல்கிட்ட பேசிட்டே இருந்தார்.”

“என்ன பேசினார்?”

“இந்த மாதிரி…” என்று முருகேசன் தயங்கினார். “கூட இருக்கப்பட்ட ஓராள்ட்டே பேசுற மாதிரி…”

பெரியசாமி வந்து ஐஜி அழைபபதாகச் சொல்ல சகாதேவன் உள்ளே சென்றார். முருகேசன் என்னிடம் “கொஞ்சம் பைத்தியம் மாதிரி இருக்கார் சார்” என்றார்.

“உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா?”

“எங்கிட்ட எல்லாம் நார்மலாத்தான் இருந்தார். ஆனா அவரு பேசிட்டே இருக்காரு” என்றான். “வேப்பம்பழம் பொறுக்கிக் குடுத்தேன். அதை நெறையச் சாப்பிட்டார்.”

“என்ன பேசிக்கிட்டார்?”

முருகேசன் தயங்கி பிறகு “அவரே பேசிக்கிட்டார்” என்றார்.

நான் ஒரு கணம் யோசித்தபின் “நான் அவர மறுபடியும் பாக்கணுமே” என்றேன்.

“ஜெயிலர்கிட்ட கேளுங்க சார்”

சகாதேவன் வெளியே வந்தார். “இந்த புரசீஜர்ஸ்லே சிக்கியே நாசமாப்போகுது சர்க்கார்” என்றார். அவரிடம் ஓர் உற்சாகம் இருந்தது. அது ஒரு பெரிய பொறுப்பை நிறைவேற்றும் உற்சாகம் மட்டும்தானா?

நான் சகாதேவனிடம் “அவரை ஒரு வாட்டி பாக்கணும்” என்றேன்.

சகாதேவன் தயங்கினார். “டிஐஜி என்னமாம் சொல்லுவார்” என்றார்.

“அவர் எங்கிட்ட ஏதாவது பேசணும்னு விரும்பினா அனுமதிச்சுத்தான் ஆகணும்.”

“அவரு இப்ப கூலா இருக்கார்… என்ன பேசப்போறார்னு தெரியலை.”

“நான் பேசணும்… அவர் இப்ப என்ன நினைக்கிறார்ங்கிறது எனக்கு முக்கியம்…”

“ஏன்?”

“இதுவரை நான் ஐநூறுபேருக்காவது தண்டனை குடுத்திருக்கேன்… எட்டுபேருக்கு தூக்கு, பலபேருக்கு ஆயுள்… என் சைடை மட்டும்தான் நான் யோசிச்சிருக்கேன். அவங்க மனசு எப்டி இருக்கும்? இதுதான் தண்டனைகளிலே உச்சம்… இப்ப இவரு எப்டி இருக்காரு? அதை நான் தெரிஞ்சுக்கிட்டாகணும்.”

“காலம்பற பேசினீங்க”

“அப்ப அவரு வேறமாதிரி இருந்தார். இப்ப கடைசி நிமிசம். இப்ப எந்த மனுஷனும் நடிக்க மாட்டான். தனக்குத்தானே கூட நடிக்க மாட்டான்… அவர்கிட்ட நான் பேசியாகணும்.”

சகாதேவன் முருகேசனிடம் தலையசைத்தார். முருகேசன் என்னை பார்க்க நான் அவருடன் நடந்தேன்.

ஜெயிலில் தூக்குத்தண்டனை கைதிகளுக்கான கண்டெம்ட் வார்ட் தனியாக இருந்தது. அதிலிருந்த நான்கு அறைகளில் ஒன்றில்தான் நாயக்கர் இருந்தார். மற்ற அறைகளில் எவருமில்லை. பொதுவான சிறை அறைகளை கனத்த கம்பியழிகளால் தனியாக பிரித்திருந்தனர். கண்டெம்ட் வார்டுக்கான கம்பிக்கதவை முருகேசன் திறக்கும்போது சட்டென்று அப்பால் இன்னொரு கம்பிக்கதவை உதைத்து திறந்து ஒரு கைதி மிக வேகமாக ஓடிவந்தான். என்ன ஏது என நான் எண்ணுவதற்குள் அவன் ஒரு கழியை என்னை நோக்கி கம்பிகள் வழியாக எறிந்தான். முருகேசன் என்னை பிடித்து அப்பால் தள்ளினார். நான் மண்ணில் விழுந்தேன். அது என் கழுத்தை உரசி சட்டையை கிழித்தபடி அப்பால் சென்று மண்ணி விழுந்தது.

அந்த கைதியின் பின்னால் ஓடி வந்த வார்டர்கள் அவனை இழுத்துச் சென்றனர். அவன் திமிறியபடி என்னை நோக்கி கைநீட்டி “டேய், உன் சாவு என் கையாலதான்… டேய் டேய்… விடமாட்டேண்டா… டேய்” என்று கூவியபடி, கால்கள் மண்ணில் இழுபட, நரம்பு புடைத்த உடல் இறுகி திமிறி அசைய, சென்றான்.

என்னால் எழ முடியவில்லை. முருகேசன் என்னை நோக்கி கைநீட்ட நான் அவனை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் உடல் துள்ளிக்கொண்டிருந்தது. இடதுகால் தானாகவே ஆடியது.

ஆனால் என் மனம் பிரமித்திருந்தது. நிதானமாக அதில் எண்ணங்கள் ஓடின. தெளிவான துல்லியமான சொற்களாக அகம் நிகழ்ந்தது.

“வேணாம் சார். போயிடலாம்… வார்டருக்கு தெரிஞ்சா என் வாழ்க்கை அழிஞ்சிரும்.”

“தெரியாது… நான் அவர பாத்தாகணும்” என்றேன். “நீங்க கூடவே வாங்க.”

“சார், ப்ளீஸ் சார்”

“பேசாம வாங்க”

“அலுமினியத் தட்டை நசுக்கி ஈட்டி மாதிரி செஞ்சிருக்கான் சார்… கொல்லப்பாத்தான் சார். மயிரிழையிலே தப்பிச்சீங்க” என்றான் முருகேசன் “நினைக்கவே பயமா இருக்கு… ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா…”

“அதிலே உங்க தப்பு என்ன? பேசாம வாங்க”

“ஏதாவது நடந்திருந்தா சார்…”

“நடக்கலையே… வாங்க பேசாம”

கண்டெம்ப்ட் வார்டை அடையும்போது நான் நிதானமாக ஆகியிருந்தேன். என் சட்டையின் கிழிசலை பார்த்தேன். மெய்ப்பையின் கிழிசல். மெய்யின் கிழிசல் என்றால் இந்நேரம் உயிர் அதன் வழியாகச் சென்றுவிட்டிருக்கும். எத்தனை நொய்மையான பாண்டம்…

நாயக்கர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிந்து அறைக்குள் அமர்ந்திருந்தார். வராந்தாவில் லைட் எரிந்தது. அவருக்குப் பின்னால் அவருடைய நிழல்.

நான் அவர் அருகே சென்று நின்றேன். முருகேசன் நாற்காலியை கொண்டு போட்டான்.

“நீங்கதான் சாட்சிக்குண்டான நீதிபதியா?” என்றார் நாயக்கர். “ஆளு மாறியாச்சு போல.”

“ஆமா” என்றேன். “வரவேண்டியிருந்தது. டியூட்டி மஜிஸ்ட்டிரேட்டை கரண்ட் ஷாக் வைச்சு விழவைச்சிட்டாங்க உங்காளுங்க.”

“என்ன செய்றதுன்னு தெரியாம ஏதேதோ செய்றாங்க…” என்றார். மீசையை நீவியபடி “நானே போறதா முடிவு பண்ணிட்டேன். இவனுக கிடந்து அலைமோதறானுக.”

“ஆமா, இப்பகூட என்னை கொல்ல ஒருத்தன் ஈட்டி மாதிரி ஒண்ணை செய்ஞ்சு வீசினான்.”

“ஓ, அதான் கந்தசாமியோட சத்தம் கேட்டுதா? சரிதான்.”

அவர் அதற்கு எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. என்னிடம் அனுதாபம் காட்டவுமில்லை. நான் அதனால் சீண்டப்பட்டேன்.

“உங்க ஏற்பாடா அது?”

“அதெப்டி? நீங்க இங்க இப்ப வருவீங்கன்னு எனக்கு எப்டி தெரியும்?”

“என்னை கொன்னிருந்தான்னா நீங்கதான் பொறுப்பு” என்றேன்.

நாயக்கர் சிரித்துவிட்டார் “பொறுப்புன்னா? இன்னிக்கு தூக்கிலே போட்டுட்டு பாடிய மறுபடி நாளைக்கு தூக்கிலே போடுவாங்களா? என்ன சொல்றீங்க?” என்றார்.

நான் எனக்குள் ஓர் உக்கிரமான சீற்றம் எழுவதை உணர்ந்தேன். அவரை சீண்ட வேண்டும், நிலைகுலையச் செய்யவேண்டும் என்னும் வெறி எழுந்தது. “நான் வராம இருந்திருந்தா நீங்க தப்பிச்சிருப்பீங்க. காலையிலே சொன்னீங்கள்ல, என் கடமைய நான் செய்யலாம்னு அதான் வந்தேன்.”

“ஆமா, செய்ங்க.”

“இப்பவும் அதைத்தான் சொல்றீங்களா?”

“ஆமா, ஏன்?”

நான் என் உடலெங்கும் பதற்றமாக நிறைந்திருந்த கோபத்தை மெல்ல அடக்கினேன். சொற்களை தெரிவுசெய்தேன் “உங்க வக்கீல் வந்து எங்கிட்ட கெஞ்சினார். மன்றாடினார். நான் நினைச்சா உங்க மேலே இரக்கம் காட்டலாம்னு சொன்னார். நான் இரக்கம் காட்டுறவன்தான். ஆனா உங்களுக்குத்தான் யார் மேலேயும் இரக்கமே இல்லியே… அப்ப உங்கமேலே ஏன் இரக்கம் காட்டணும்?”

“ஆமா… அதான் நியாயம்… காட்டுலே இரக்கத்துக்கு எடமில்லை.”

நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் “என்ன பண்ணிட்டிருந்தீங்க?” என்றேன்.

அவர் நிழலைச் சுட்டிக்காட்டி “அதுகிட்ட பேசிட்டிருந்தேன்” என்றார்.

“என்ன?”

“ரொம்ப நன்றி… மெய்யாகவே ரொம்ப நன்றி… இப்பதான் எல்லாமே ஒருமாதிரி தெளிவா இருக்கு அப்டீன்னு சொன்னேன்” என்றார் நாயக்கர். “நான் சொன்னது இதான். நான் சபிச்சிருக்கேன் உன்னை. என் வாழ்க்கையை மாத்தினது நீ. இல்லேன்னா நானும் ஒரு சாதாரண சம்சாரியா வாழ்ந்திருப்பேன். அசையாம குளுந்து ஒரு எடத்திலே கெடக்கிற பாறாங்கல்லு மாதிரி இருந்திருப்பேன்… இப்டி மலையுச்சியிலே நிக்கிற மரம் மாதிரி காத்திலே பறந்திட்டே இருக்கிற வாழ்க்கை அமைஞ்சிருக்காது… ஆனா இப்ப தெரியுது எல்லாம். நீ என்னோட ஒவ்வொரு செக்கண்டையும் அர்த்தமுள்ளதா ஆக்கியிருக்கே. பலபேருக்கு வாழ்க்கையோட அர்த்தமும் அருமையும் தெரியலை. எனக்கு தெரிஞ்சிருக்கு. நான் ஒரு நாளைக்கூட தவறவிட்டதில்லை. எதிர்காலத்தை நினைச்சு ஏங்கிட்டிருந்ததில்லை. கடந்த காலத்தை நினைச்சு சடைஞ்சு போனதில்லை… எனக்கு வாழ்க்கைன்னாலே அன்னின்னிக்குதான்… அந்தந்த நாளுதான்… ஒரு பருவத்தையும் வாழாம விட்டதில்லை. வெய்யக்காலத்திலே வேப்பம்பூமணம். மல்லிப்பூ மணம். புழுதி, வெங்காத்து. முதல்மழையோட மணம், மேக்குமலை குளுந்து பச்சையடிக்கிறது, ஊதக்காத்து, காத்தடிக்காலத்திலே கெளக்குமலை சருகுக்காத்து, குளிர்காலத்திலே வெடியக்காலை பனி… எல்லாமே அப்டி அருமையா இருந்திருக்கு. ஒவ்வொரு சொட்டா இந்த வாழ்க்கைய வாழ்ந்திருக்கேன்னா அதுக்குக் காரணம் நீ. அடுத்த செக்கண்டு இல்லை, இந்த செக்கண்டு மட்டும்தான் இருக்குன்னு நினைச்சு நினைச்சு இத்தனை ஆண்டு வாழ்ந்திருக்கேன்… ஒண்ணும் ஒரு கொறையும் இல்லை. ஒரு கடனும் இல்லை. ஒரு துளிகூட மிச்சமில்லை. சரிதான்… நீ ஒரு பேய்னு சொல்லுறாங்க. ‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈனும் வாள்’னு உன்னைய சொன்னார் வள்ளுவர். இல்ல, நீ தெய்வம். அருள்புரியற தெய்வம் நீ… எங்கூட இரு… என்னை கட்டிப்புடிச்சுக்கோ… மலைப்பாம்பு மாதிரி கட்டிக்கோ… ஒரு கைகால் வெரல் மிச்சமிருக்கப்பிடாது…” நாயக்கர் புன்னகைத்தார் “அப்டீன்னு அதுகிட்ட சொல்லிட்டிருந்தேன்.”

அவர் சிரிப்புடன், கொந்தளிப்புடன் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு விந்தையான நாடகம்போல. சட்டென்று எழுந்து நின்று அந்த நிழலிடமும் என்னிடமும் சேர்த்து பேசுவதுபோல பேசிக்கொண்டே சென்றார்.

”இந்த சாவு இருக்கே, இது உண்மையிலே என்ன? இதுக்குன்னு ஏதாவது அர்த்தமிருக்கா? இல்ல, நமக்குத்தான் அப்டி தோணுதா? சாவு ஒவ்வொரு முறையும் வேறவேற. நிழலுக்கு வடிவம் உண்டா என்ன? என்னோட நெழலுதான். ஆனா வேளைக்கு ஒண்ணு. எடத்துக்கு ஒண்ணு… வெளிச்சத்துக்கு மாதிரி மாறுது… என்னோட பதினெட்டு வயசிலே முதல்கொலைய பண்ணினேன். தனியா போறதே இல்ல. அப்ப எப்டியோ தனியா அந்த வழியா வர்ர மாதிரி ஆயிட்டுது… அந்தி நெருங்கிட்டிருக்கு. எதிரிங்க எவனாவது பாத்திருவானான்னு துண்ட தலைமேலே போட்டுட்டு, காலை கொஞ்சம் கெந்தி நடைய மாத்திக்கிட்டு வேகமா வர்ரேன். வயலிலே நின்ன ஒருத்தன் ‘ஏய் யார்ராது இந்நேரத்திலே’ந்னு கேட்டான். குரல மாத்தி ‘நான்தான்னு’ சொன்னேன். ‘நாந்தான்னா?’ன்னு கேட்டுட்டு மேலே வந்தான். ‘நான் பெரியசாமி மகன்’னு சொன்னேன். ‘எந்த பெரியசாமி?’ன்னு சொல்லி என் முகத்தப் பாத்தவன் கண்டுபிடிச்சிட்டான். கூப்பாடு போட ஆரம்பிச்சிட்டான். நான் ஓடுறதான்னு தயங்கி நின்னேன். ஓடியிருக்கலாம். ஆனா கேவலமா போயிடும். கத்திக்கிட்டே இருக்கான். சட்டென்று சூரிக்கத்திய எடுத்து அவன் சங்க அறுத்து தூக்கி சோளக்காட்டுக்குள்ள போட்டுட்டேன்.

உள்ள அவன் துடிக்கிறான். சோளம் அசையுது. நான் கத்தியை துடைச்சுக்கிட்டு நிதானமா நடந்தேன். நிலா மேலே வந்திச்சு… நல்ல வெளிச்சம். எல்லாம் அப்டியே ரம்யமா இருக்கு. நான் ஒரு பாட்டை பாடிட்டே நடந்தேன். ஒரு பழைய கீர்த்தனை.  ’ராமா நீ சமானமெவரு…’ எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். ஏன் எனக்கு ஒரு துளிகூட பதற்றம் வரலை? ஏன் செத்தவன்மேலே இரக்கமே வரலை? அதைவிட ஏன் மனசு அவ்வளவு உல்லாசமா இருக்கு? நான் என் நிழல பாத்தேன். நிலாவிலே நிழல் கொஞ்சம் செவப்பா இருக்கிற மாதிரி இருந்தது. நான் அதுகிட்ட சொன்னேன். நீ யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா உன்னைப்பத்தி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு தெரியும். சாவுன்னா என்னமோ பயங்கரம்னு நினைச்சிட்டிருக்கானுக. பயங்கரம்தான். ஆனா சாவு ரொம்ப ரொம்ப அழகானது. இனிமையானது. மனுசனுக்கு புடிச்ச முதல் விஷயமே சாவுதான்… ஒரு பொணம் கிடந்தா மனுஷன் அதை பாக்காம அப்பாலே போறதில்லை. சாவுச்செய்திகளைத்தான் ரசிச்சு ரசிச்சு பேசுவான். சாவுகளை மட்டும்தான் ஞாபகம் வைச்சுக்கிடுவான். ஏன் சார், ராமாயணம் மகாபாரதம் எல்லாமே சாவுக்கதைகள்தானே… செத்துக்கிட்டே இருக்கானுக பக்கம்பக்கமா… சினிமாவிலே சாவத்தானே பாத்துக்கிட்டே இருக்கானுக… சாவு மாதிரி தித்திப்பான பண்டம் வேற இல்ல. அப்ப தெரிஞ்சுது…

”அப்றம் எவ்ளவு சாவு… மத்தவங்களோட சாவு, என்னோட சாவு. மார்க்கெட்ல ஒரு சண்டை… என் மேலே அரிவாள ஒருத்தன் வீசினான். நான் பாய்ஞ்சு தப்பினேன். என் பக்கத்திலே நின்னவன் கழுத்திலே அரிவாள் பட்டுது. அப்டியே விழுந்து துடிக்கிறான். வெட்டினவனை நான் உடனே திருப்பி வெட்டிட்டேன். இன்னொரு அருவாக்காரனை என் ஆளுக வெட்டிட்டாங்க. எனக்காக வெட்டுபட்டவன தூக்கி அவன் மூஞ்சிய பாத்தேன். அணில்பிள்ளைய கையிலே வைச்சா அதோட இதயம் துடிக்குமே, அப்டி அவனோட மார் துடிக்குது… ’நாய்க்கரய்யா உங்கள வெட்ட வந்தான்’னு திக்கித் திக்கிச் சொன்னான். வாய் வழியா ரத்தம் செதறுது. அப்டியே செத்துட்டான். அதென்ன அவன் அப்டி கடைசியிலே அப்டி சொன்னான்னு பலநாள் யோசிச்சேன். அவன் கண்ணிலே ஒரு உணர்ச்சி. அடப்பாவி உனக்காக நான் சாகிறேனேன்னு… அதத்தான் சொல்லியிருக்கான்… டேய் வெட்டத்தாண்டா நமக்கு உரிமை இருக்கு, யாரு சாகணும்னு சாவு தீர்மானிக்கும்டான்னு சொல்லிக்கிட்டேன்.

”அதுக்குமேலே சாவு எப்டி எந்த வழியா எதைச் செய்யுதுன்னுதான் பாத்திட்டே இருந்தேன். என்னோட சந்தோஷமே அந்த கணக்க போட்டுப்போட்டு பாக்கிறதுதான். ஒவ்வொரு வாட்டியும் நம்பவே முடியாத படி புதிசா ஒண்ணைச் செஞ்சிரும் இந்த நெழல்… ஒரு வாட்டி ஒரு சண்டை. ஒருத்தன் என்னை வெட்டினான். என் கால் ஒரு செங்கல்லிலே இடறிட்டுது. அதனாலே நான் நொடிச்சு வளைஞ்ச நேரத்திலே அரிவாள் என் வயித்துப்பக்கம் சட்டைய கிழிச்சு, வயித்திலே ஒரு கீறலப்போட்டுட்டு சீவிட்டு போச்சு. அப்டியே விழுந்துட்டேன். அதே நேரம் ஒருத்தன் என்னைய சுட்டான். குண்டு என்னை வெட்டினவனோட நெஞ்ச துளைச்சுது… நான் தப்பிச்சுக்கிட்டேன்… இப்டி ஒருத்தன் சினிமா எடுத்தான்னா நாம பாக்க மாட்டோம்… என்னய்யா கதவிடுறியாம்போம். ஐயா, சாவு தினம் ஒரு கத விட்ட்டுட்டிருக்கு. நிமிசத்துக்கொரு நாடகம் போட்டிட்டிருக்கு… என்னத்த சொல்ல?”

அவர் சொன்னவற்றை அப்போது நான் ஒவ்வொரு சொல் சொல்லாகப் புரிந்துகொண்டிருந்தேன். சாவு அத்தனை அணுகி வரும் அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. என் வாழ்க்கையே இரண்டாகாப் பிரிந்துவிட்டது போல் இருந்தது. அந்தக் கணம், அந்தக் கணத்தின் நீட்சிதான் இதோ நான் இருந்துகொண்டிருப்பது.

“சாவிலே இருந்து தற்செயலா தப்பிக்காத ஒருத்தன்கூட இருக்கமாட்டான் இந்த உலகத்திலே… எல்லாருக்கும் ஒரு கதை இருக்கும். மடையன் அவனோட புத்திசாலித்தனத்தாலே தப்பிச்சதா நினைப்பான். சாமானியன் கடவுள் அருள்ம்பான்… சாவு வெளையாடுதுன்னு தெரிஞ்சவன் புத்திசாலி. ஐயா இப்ப சாவு உங்களுக்கு ஒரு ருசி காட்டியிருக்கு… இப்ப வாழ்க்கை எவ்ளவு அபூர்வமான அழகான விஷயம்னு தெரியுதுல்ல? புடிச்சுக்குங்க… சாவு குடுத்த வாழ்க்கை உங்களோடது” என்றார் நாயக்கர் “எல்லார் வாழ்க்கையும் அப்டித்தான்… சாவு குடுத்த பிச்சை”

அவர் பேசிக்கொண்டே இருக்க விரும்பினார். அவர் அறிந்தவற்றை எல்லாம் கடைசியாகச் சொல்லிவிடவேண்டும் என்பதுபோல. நான் அதற்கான தகுதியைப் பெற்றுவிட்டேன் என்று உணர்ந்தவர் போல.

”ஒருமுறைகூட, ஒருத்தர் சாவிலேகூட நான் அழுததில்லை. சாவுக்கு அழுறதுமாதிரி அசட்டுத்தனம் எதுவுமில்ல. எதுக்கு அழுறான் மனுஷன்? சாவு தன்னை தோக்கடிச்சிட்டுதேன்னு அழுறான். இப்டி நினைச்சிருக்காம நடந்துட்டுதேன்னு அழுறான். என்னாலே ஒண்ணும் செய்ய முடியலையேன்னு அழுறான். மடப்பய… சாவு எப்டி வரும்னு முன்னாடி சொன்னா மட்டும் புரிஞ்சுகிடுவானா என்ன? புரிஞ்சுக்கிட்டா மட்டும் அவனாலே என்ன செய்ய முடியும்? இந்தா கோடானுகோடி பூச்சி புளுக்கள் இருக்கு. சாதாரணமா மிதிச்சுட்டு போறோம். அதுக்கெல்லாம் என்னத்த சொல்லி புரியவைக்க முடியும்? அசட்டுத்தனம். சாவு வர்ரப்ப சிரிக்க முடிஞ்சா அவன் புரிஞ்சுக்கிட்டவன்னு அர்த்தம்… நான் சிரிச்சிருக்கேன்.

”இருவது வருசம் முன்ன… என் மூணாவது மகனுக்கு அப்ப அஞ்சு வயசு… பிறக்கிறப்பவே அவனுக்கு மூச்சிளைப்பு இருந்திச்சு. அதனாலே பொத்திப்பொத்தி வளத்தோம். அன்னிக்கு நடுராத்திரி இளைப்பு ஜாஸ்தியாயிட்டுது… அப்டியே தூக்கி தோளிலே போட்டுட்டு ஜீப்பை எடுத்தேன். பின் சீட்டிலே பையன் கிடக்கான். டிரைவர் வண்டிய ஓட்டுறான்… நான் அவனுக்கு மூச்சு எளைப்புக்குண்டான ஸ்ப்ரே அடிச்சுட்டு பக்கத்திலே உக்காந்திட்டிருக்கேன்… டவுனுக்குள்ள நுழையறப்ப எனக்கு என்னமோ தப்பா பட ஆரம்பிச்சுட்டுது. கார் ரவுண்டானாவை நெருங்கினதும் ஒருத்தன் சட்டுனு பைக்கை கொண்டுவந்து முன்னாடி போட்டு ஜீப்பை மறிச்சுட்டான். ரெண்டு பைக்குகள் ரெண்டு பக்கமும் வந்து அதிலே இருந்தவனுக சடசடன்னு சுட ஆரம்பிச்சிட்டானுக. இருட்டிலே வெளிச்சம் பளிச் பளிச்சுன்னு தெரியுது. சுடுறவன் முகம் இருட்டிலே. சுத்தி இருக்கிறதெல்லாம் மின்னலா தெரிஞ்சு அணையுது.

”பையன தூக்கி ஜீப்புக்கு அடியிலே என் காலடியிலே போட்டுட்டு நான் திருப்பி சுட்டேன். ஒருபக்கம் வந்த பைக்கிலே இருந்த ரெண்டுபேரையும் சுட்டுட்டு கதவை உதைச்சு திறந்து கீழே இறங்கி ஜீப்புக்கு பின்னாடி மறைஞ்சுகிட்டு மத்தவனுகள சுட்டேன்… நம்ம குறி தவறுறதில்லை… டிரைவர் போய்ட்டான்… எனக்கு தோளிலே ஒரு குண்டு… சுடவந்தவனுக ஆறுபேருமே செத்துட்டான்… பையன் குண்டுபடாம தப்பிட்டான். ’அப்பா அப்பா’ன்னு கத்துறான்… அப்பாலே நின்ன ஒரு கார் என்னைய நோக்கி சுட்டுக்கிட்டே வருது. நான் பையனைத் தூக்கிட்டு தெருவோரமா இருந்த மூடின கடைய நோக்கி ஓடினேன். கால்தடுக்கி பையனோட அப்டியே குப்புற விழுந்துட்டேன். பையன் மேலேயே விழுந்துட்டேன். புரண்டு எந்திரிச்சு ஓடுறப்ப பையன் உடம்பு என் கையிலே துடிச்சுது… அப்டியே தூக்கிட்டு ஓடுறேன். அவன் பின்மண்டை உடைஞ்சு போச்சு… என் கையிலேயே பையன் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டான். ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்சு டாக்டரை பாத்தப்ப என் கையிலே இருந்தது மண்டை உடைஞ்ச சின்ன பொணம்… துப்பாக்கி அவனை கொல்லலை. என்னோட பாதுகாப்பு அவனை கொன்னுட்டுது.

“என்ன செய்றது? சிரிக்கணுமா வேண்டாமா? சிரிச்சேன்… என் நெழலைப்பாத்து சிரிச்சுக்கிட்டே இருந்தேன். யய்யா நீ பெரிய காமெடியன்பா… சர்ரியான கோமாளிய்யான்னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சேன்… இப்பக்கூட நினைச்சா சட்டுனு சிரிப்பு வந்திரும்” அவர் நிழலை நோக்கி கையை காட்டினார். “பொல்லாதது. நம்மள வைச்சு வெளையாடுது… பூனை எலிய வைச்சு விளையாடுமே அது மாதிரி… இல்லே பக்தனை வைச்சு கடவுள் வெளையாடுறது மாதிரி.”

விந்தையான ஒன்று நிகழ்ந்தது. நானும் புன்னகைத்தேன்.

நாயக்கர் “ஐயா சிரிக்கிறீங்க… சமாச்சாரம் பிடிகிடைச்சுப் போச்சு” என்று சிரித்தார்.

நான் பெருமூச்சுவிட்டேன். நீண்ட நேரத்துக்குப்பின் என் முகம் அப்போதுதான் புன்னகைக்காக நெகிழ்ந்தது என்பதை நினைவுகூர்ந்தேன்.

“என் பையனும் இதே மாதிரி சிரிச்சான்” என்றார் நாயக்கர். “ரெண்டாவது மகன்… அப்ப அவனுக்கு இருபத்தெட்டு வயசு… என்னை கொல்ல வந்தாங்க. எனக்கு வெட்டு விழுந்தது, தப்பிச்சிட்டேன். அவனுக்கு கிட்னி கட்டாயிட்டுது… ரத்தமா போய்ட்டிருந்தது.

”என் இடுப்பிலேயும் தோளிலேயும் கட்டோட வீல்செயர்லே அவன பாக்கப்போனேன். முகம் வீங்கியிருந்தது. டாக்டர் சொல்லிட்டார், அவ்ளவுதான்னு. என்னைப் பாத்ததும் தலையை அசைச்சான். அவன் கையை பிடிச்சுக்கிட்டேன். ’நான் பிழைக்கமாட்டேன்பா’ன்னான். ’தெரியும்’னு நான் சொன்னேன். ’கவலைப்படாதீங்க’ன்னு சொன்னான். ’இல்லை, கவலைப்படலை’ன்னு நான் சொன்னேன். என் கண்ணைப் பாத்தான். பிறகு  ’ஆமாப்பா நீங்க நிஜம்மாவே கவலைப்படலை’ன்னு சொன்னான்.  ’ஆமா, கவலைப்படலை… வருத்தமும் படமாட்டேன்’னு சொன்னேன். அவன் என்னைப் பாத்தான். ’வருத்தப்படுறதிலே அர்த்தமே இல்லை. சாவு அப்டித்தான். அது நினைச்சதைச் செய்யும்’னு சொன்னேன்.

அவன் என்னை வெறிச்சு பாத்துட்டே இருந்தான். ’ஏமாற்றமா இருக்கா?’ன்னு கேட்டேன்.  ’ஆமா’ன்னு தலையை அசைச்சான். ’அதுக்காக நான் பொய் சொல்லமுடியாது’ன்னு நான் சொன்னேன். ’இது எப்பவும் எங்கூடவே இருந்திட்டிருக்கு… இத புரிஞ்சுகிடவே முடியாதுன்னு எனக்குத் தெரியும்… இது என்ன செய்யும்னு நம்மாலே கண்டுபிடிக்கவே முடியாது’ன்னு சொன்னேன். அவன் என்னைப்பாத்து ’ஆனா நீங்க என் அப்பா, எனக்காக நீங்க ஒரு செகண்டாவது அழணும்ல?’ன்னு சொன்னான்.  ’அழமுடிஞ்சா அழமாட்டேனா’ன்னு நான் சொன்னேன்.  ’டேய், நான் தப்பிச்சுக்கிட்டேன்… இப்ப இதோ உசிரோட இருக்கேன். உன் மேலே கைவைச்சு சத்தியமாச் சொல்றேன்… ஒரு செகண்டுகூட தப்பிச்சதுக்காக சந்தோசப்படலை… நல்லவேளைன்னுகூட நினைச்சுக்கிடலை. சாவும் தப்பிச்சுக்கிடறதும் எனக்கு ஒண்ணுதான்’னு சொன்னேன். சட்டுன்னு சிரிச்சுட்டான். என் கையை புடிச்சு ’அப்ப நீங்க அழவேண்டாம்பா, உங்களுக்கு அந்த லைசன்ஸ் இருக்கு’ன்னு சொன்னான்… மறுநாளே போய்ட்டான். நல்ல பய… அப்டி ஒரு முத்து. சரி, அவன் விதி அது. பெருமாள் காலடியிலே வைகுண்டத்திலே இருப்பான்.”

நான் பெருமூச்சுவிட்டேன். அவர் என்னிடம் நாட்கணக்காகப் பேசிக்கொண்டே இருப்பதுபோல் இருந்தது.

நாயக்கர் “நீங்க கேக்க வந்ததை கேட்டிட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.

“கேக்கலை, ஆனா பதில் கிடைச்சுது”

“அதேதான் பதில். ஒரு துளிகூட பயமோ வருத்தமோ இல்லை. இது எனக்கும் இதுக்குமான ஆட்டம்…” அவர் நிழலை கைகாட்டினார். “நான் இதை இத்தனை நாள் வைச்சிருந்தேன். செல்லப்பிராணி மாதிரி வெளையாடி வளத்தேன்… இப்ப இதுக்கு என்னைய குடுக்கப்போறேன். அவ்ளவுதான்யா.”

நான் ஒன்றும் சொல்லாமல் எழுந்துகொண்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.