காவியம், பெருந்தேடல்

  

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

காவியம் நாவல் வாசிப்பு விந்தையான, பல உணர்வெழுச்சிகள் நிறைந்த அனுபவமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக தொடர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தமையால் பெரும்பாலான அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனே வாசிக்க நேர்ந்தேன். இரவின் அமைதியுடன் நிழல்கள், பைசாசிக மொழி என முதல் சில அத்தியாயங்கள் வாசித்தது ஒரு வகை ‘திகில்‘ உணர்வே கொடுத்தது. நடந்து செல்கையில், அறையில் அமர்கையில் என நிழல் உடன் இருப்பதாகவே கற்பனை செய்து கொண்டேன். நாகக்கட்ட படித்துறையில் நிழல் அமர்ந்திருந்தது ஒரு சித்திரம் போல மனதில் பதிந்துவிட்டது. அவ்வுணர்வு காணபூதி என்று நிழல் தன்னை அறிமுகம் செய்து கதைகளில் திரண்டு வரும் வினாக்களுக்கு துக்காராமுடன் பதில் கேட்டு உரையாட தொடங்கிய பின் அணுக்கமான ஒன்றாக மாறியது.

வெண்முரசு வெளிவந்த நாட்களில் அதனை உடனுக்குடன் தொடர்ந்து வாசித்த அனுபவங்கள் குறித்து நண்பர்கள் பகிர்ந்த போது இருந்த பெரும்செயல் ஒன்றை தவறவிட்ட ஏக்கம் காவியத்தின் வழியாக நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அத்தகைய அனுபவத்தை அளித்த தங்களுக்கு நன்றி. தங்கள் படைப்பின் வழியாக முற்றிலும் அறியாத ஒரு தளத்திற்குச் சென்று மீள்வதும், அதன் பாதிப்பு என்னுள் தங்கிவிடுவதும் என்றும் ஒரு நிறைவான அனுபவம். எனது அறிவு எவ்வளவு சிறிய எல்லைக்குள் சிறைபட்டுள்ளது என்பதை உணரும் தருணமாக இருக்கும். இந்நாவலில் காலமெனும் பெருங்கடலில் பேரலையாக எழுந்த குணாட்டியர், லோமஹர்ஷர் போன்ற ஆதிகவிகள் முன் அமரச்செய்துள்ளீர்கள்.

சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கி என்றுமே சொல்ல முடியாத ஒன்றை நோக்கி இட்டுச்செல்வதே காவியமாக இருக்குமோ என்று தோன்றுகிறது, அது அனைத்தையும் நிராகரித்துக்கொண்டே முன் செல்கிறது. வேர்கள் இருளும் ஆழமும் நிறைந்தவை நாம் பார்க்கும் கனிகளும் மலர்களும் அவ்விருளின் கொடை என்ற எண்ணம் எழுந்து கொண்டே உள்ளது. அகம் ஒரு சிறு எல்லைக்குள்ளையே தன்னை கட்டமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது, காவியத்தின் பெரும்பரப்பே அகத்தை நிலைகுலையச் செய்கிறது. அது உணர்ந்து கொள்ள முடியாத ஒரு உண்மையை, வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய வழிமுறைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் உடைக்கக் கூடும் என அகம் உணர்ந்த தருணம் குணாட்டியரின் பெருங்காவியம் சபையில் நிராகரிக்கப்பட்ட தருணமாக தோன்றியது.

மெய்யை அறிதல் என்பது புதிதாக நாம் ஒன்றை அறியாமல் இதுவரை அறிந்த அனைத்தையும் நிராகரித்து வெற்றிடமாக்கி அங்கு அமர்ந்துகொண்டு “இப்பொழுது என்ன சொல்கிறாய்? எதை அறிய போகிறாய்?” என அறைகூவுவதாக அமைகிறது. தேடலில் அறிந்த அனைத்தையும் இழப்பதும், இழந்த கணத்தில் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதுமே அத்தகைய தேடலில் அடையும் தரிசனத்திற்கு நாம் அளிப்பதாக எண்ணுகிறேன். அது கோருவது தன்னையே என்று தோன்றுகிறது, தன்னைக் கடந்து நீளும் பெருந்தேடல். ஒரு நோன்பைப் போல அச்செயலை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுவது எவ்வளவு உண்மை என்று உணர்த்து கொண்டே இருக்கிறேன்.

‘நிழல்களுடன் ஆடியது‘ என்று தாங்கள் நாவல் வளர்ந்த தருணங்கள் குறித்து பகிர்ந்தது தங்கள் மேல் பெருமதிப்பு கொள்பவையாக உள்ளது. தொடர் செயல்களின் மூலம் வாழ்வை நிறைத்துக் கொள்ளும் தங்களால் உந்தப்பட்டு அத்தகைய வாழ்வை நோக்கிய முயற்சியும் கொண்டுள்ளேன். தங்கள் அனுபவங்கள் அதற்கு மேலும் உரம் சேர்க்கிறது. பெருங்கதைகளின் தொகுதியான இந்நாவல் அச்சுவடிவாக வெளிவந்ததும் மீள்வாசிப்பு செய்ய ஆவலாக உள்ளேன்.

நன்றி.

அன்புடன்,

ஹரிதங்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.