நீலநிழல் (குறுநாவல்)
ஒளியும் நிழலும் சருகுகளும்
உள்ளறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
தேவதேவன்(1)
“எரக்கம்னா என்ன? ஒருத்தன் தன்னை இன்னொருத்தர் எடத்திலே வைச்சுப்பாக்கிறது இல்லீங்களா? அட, அவனும் நம்மள மாதிரிதானேன்னு ஒரு செகண்டுன்னா ஒரு செக்கண்டு நினைச்சுக்கிடுறதுதான் எரக்கம்ங்கிறது…அது என்னமோ ஒரு தடவகூட எனக்கு அப்டி தோணினதே இல்லீங்க. என்னைய பொறுத்தவரை நான் வேற இந்த மொத்த உலகமும் வேறதான்…”
நாயக்கர் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அது அவருடைய வழக்கம். ஒன்றைச் சொல்லிவிட்டு கூர்ந்து பார்த்துக்கொண்டு சிலைபோல் அசைவற்று உறைந்திருப்பது. மீசையை நீவிய கை அப்படியே நின்றுவிடும்.
அவர் முன் அமர்ந்திருக்கையில் ஒரு அசௌகரியத்தை அது அளிக்கும். ஒரு நிமிடம்கூட நீண்டகாலம் ஆகிவிடும். அந்த காலத்தை தவிர்க்க நாம் எதையாவது செய்வோம். உடலை அசைப்போம். பக்கவாட்டில் எதையாவது பார்ப்போம். எதையோ மறந்துவிட்டதுபோல சட்டைப்பையை தொட்டுப் பார்ப்போம். அந்த இடைவெளியால்தான் அவர் சொல்லும் சில சொற்கள் அப்படி அழுத்தமாக நம் நினைவில் நின்றிருக்கின்றன என்று படுகிறது. இருபத்தேழு ஆண்டுகளாக அச்சொற்கள், அப்போதிருந்த அவருடைய முகம், நான் அடைந்த அமைதியின்மை எல்லாமே நினைவிருக்கிறது.
மீசையை மீண்டும் நீவிக்கொண்டு அவர் கலைந்தார். ஒரு சினிமாச் சட்டகம் அசைவற்று நின்று மீண்டும் சினிமாவாக ஆவதுபோல. அவர் மீசையை நீவுவதும் விந்தையானது மொத்தமாக கையை கவிழ்த்து புறங்கையால் அழுத்தி நீவிக்கொள்வார். உள்ளங்கை வெண்மை நமக்குத்தெரியும்.
“…அதனாலே நம்ம கிட்ட எரக்கமே கெடையாதுங்க… கொஞ்சம் கூட கெடையாதுங்க. ஐயா கூட தீர்ப்பிலே சொல்லியிருந்தீங்க, எரக்கமே இல்லாத கொலைகாரன்னு. அச்சுக்கு அச்சு உண்மைங்க. எரக்கமா இருக்கக்கூடாதுன்னு இல்ல. எனக்கு அது என்னதுன்னு தெரியலை”
நாயக்கர் சிரித்துக்கொண்டார் “சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏன்னா நான் கடவுள் இருக்கிறத உணர்ந்திருக்கேன். இதோ இங்க, இப்ப நாம பேசிட்டிருக்கிற இந்த செயில்ரூமிலே கூட கடவுள் இருக்கார். அதோ வெளியிலே அந்த வேப்பமரத்திலே ரெண்டு காக்கா உக்காந்திட்டிருக்கு.கீழ வேப்பஞ்சருகு உதிந்திருக்கு…எல்லாத்திலயும் கடவுள் இருக்கார்…ஆனா எரக்கம்? தெரியலீங்க. இருக்கலாம். நமக்கு அதை தெரிஞ்சுகிட இந்த சென்மத்திலே கொடுப்பினை இல்ல. அவ்ளவுதான்”
அவர் சிரிப்பு வசீகரமானது. இயல்பான சிரிப்புகளெல்லாம் அழகானவை. அவர் இளமையில் மிக அழகான இளைஞராக இருந்திருக்கவேண்டும். கம்பீரமாக ஐம்பது வயதை அடைந்திருந்தார்.
நான் சிறையின் வராந்தாவில் மரநாற்காலியில் அமர்ந்திருந்தேன். அவர் சிறைக்கம்பிகளுக்கு அப்பால், கூண்டு போன்ற அறைக்குள் கால்களை சப்பணம்போட்டு அமர்ந்திருந்தார். அறைக்குள் மிகக்கச்சிதமாக மடிக்கப்பட்ட ஒரு கம்பிளி. பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் செம்பு. சிறுநீர் கழிப்பதற்கான மண்பானை மூடி ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு மண்கூஜாவில் குடிநீர். சுத்தமான அறை. அதற்குச் சன்னல்களே இல்லை. ஆகவே ஒரு பொந்து போலிருந்தது.
“எப்பவாவது செத்தவனுகளை நினைச்சுக்கிடுறதுண்டா?” என்றேன்.
அவர் மீண்டும் மீசையை நீவிக்கொண்டு வெடித்துச் சிரித்தார். அமர்ந்திருந்த வாக்கில் அச்சிரிப்பில் தொடை துள்ளியது. “அங்க பாருங்க, மரத்திலே அந்த காக்கா… இப்ப கொஞ்சம் முன்னாடி ஒரு வெட்டுக்கிளியை துடிக்கத் துடிக்க கொத்திக்கிளிச்சு தின்னுச்சு…அது எவ்ளவு உசிரை கொன்னுதுன்னு கணக்கு வைச்சுக்கிடும்களா? கேட்டுச்சொல்லுங்கய்யா… நானும் தெரிஞ்சுக்கறேன்”
நான் இயல்பாக திரும்பி அந்த காகங்களைப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டேன்.
“ஐயா என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது… நமக்கு தூக்கு குடுத்தவரு நீங்க… நாளைக்கு தூக்கு. ஐயாவுக்கு குற்றவுணர்ச்சி போட்டு படுத்துது…அதாவது எரக்கப்படுறீங்க. என் எடத்திலே உங்கள வைச்சு பாக்கிறீங்க, அதானே?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. என் உடலில் ஓர் அசௌகரியமான அசைவு உருவாகியது.
“இந்த பேட்டி உங்களுக்கு ஏன் தேவைப்படுதுங்கய்யா? நான் குற்றவுணர்ச்சி அடைஞ்சா உங்க தீர்ப்பு சரீன்னு ஆகும். அடையல்லேன்னாக்க திருந்தவே முடியாத ஒருத்தன சமூகத்திலே இருந்து அப்புறப்படுத்தினீங்கன்னு சொல்லிக்கிடலாம்… எப்டியோ உங்க மேலே கொலப்பழி விழுந்திரப்பிடாது… சரீங்களா?
“இல்ல, அதில்ல…”
“வருத்தப்படாதீங்க. நீங்க ஒரு தப்பும் பண்ணலை. நீங்க பண்ணினது உங்க தொளில்…நான் உங்க அலகிலே மாட்டின ஒரு வெட்டுக்கிளி… எல்லாம் பெருமாளோட வெளையாட்டு… ஐயா, எனக்கு ஒரு துளி வருத்தம்கூட உங்கமேலே கெடையாது. ஆஞ்சநேயரு மேலே ஆணையாச் சொல்லுறேன், ஒரே ஒரு வார்த்தைகூட, உங்களைப்பத்தி தப்பா நினைச்சுக்கிட்டதில்ல. சாபம் போட்டதில்லை, அதனாலே குடும்பத்துக்கோ கொலத்துக்கோ பழி வந்திரும்னு நெனைச்சுக்காதீங்க. உங்க மன ஆறுதலுக்காக வேணுமானா ஏதாவது பெருமாக்கோயிலிலே ஒரு அம்பது பேருக்கு சோறுபோடுங்க…நம்ம வாழ்த்து எப்பவும் உங்க குடும்பம் மேலே உண்டு… ”
உண்மையில் என் பிரச்சினை அதுதான். அதை எனக்கு நானே ஒத்துக்கொள்ளாமலிருந்தேன். அந்தக் கணம் என் உள்ளம் பொங்கியது. அறியாமல் கைகூப்பினேன். என் கண்கள் கலங்க, உதடுகளை அழுத்தி விம்மலை அடக்கிக்கொண்டேன்.
“புள்ளகுட்டிகளோட நெறைஞ்சு வாழணும். தலமொறகள் வளரணும்… ஸ்ரீ ஆச்சாரியன் திருவருளாலே எல்லாம் நடக்கும்…ஆசாரியன் திருவடிகளே சரணம்”” என்று நாயக்கர் என்னை கைதூக்கி வாழ்த்தினார்.
நான் மெற்கொண்டு என்ன சொல்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தேன். என்னையறியாமலேயே கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. கைக்குட்டையால் கண்ணீரை ஒற்ற ஒற்ற கண்ணீர் பெருகியது.
“அட என்னாங்கய்யா, நாளைக்கு தூக்கிலே ஏறப்போற நான் கல்லுகணக்கா இருக்கேன். தீர்ப்ப எளுதின நீங்க அளுவுறீங்க? அட. விடுங்க…எல்லாம் ஒரு தமாஷ்தானே”
நான் கண்ணீரை துடைத்துக்கொண்டேன். என்னை மெல்ல அடக்கினேன்
“சொல்லுங்க நாயக்கர்வாள், நான் என்ன பண்ணணும்?”
“இப்பவா? தோ அந்த வேப்பமரத்தடியிலே விளுந்து கிடக்கிற வேப்பம்பளம் கொஞ்சம் பொறுக்கி கொண்டாங்க…”
“அது..”
”சும்மா பொறுக்குங்கய்யா…ஜட்ஜு வேப்பம்பூ பொறுக்கினா ஒண்ணும் தாழ்வில்ல…என்ன?”
நான் அந்த சிரிப்பால் இயல்பு நிலை மீண்டேன். எழுந்துசென்று வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டு வந்தேன். என் டவாலி கனகசபைப் பிள்ளை அப்பால் என்னை வியப்புடன் பார்ப்பதை கண்டு அவர் பார்வையை தவிர்த்தேன்.
நாயக்கர் வேப்பம்பழங்களை கைநிறைய வாங்கிக்கொண்டார். ஒன்றை வாயில் போட்டார். என்னிடம் இரண்டு வேப்பம்பழங்களை கொடுத்தார். நான் வெறுமே வாங்கிக்கொண்டேன்
“சாப்பிடுங்க…பழம்னு பேரு. ஆனா நல்லா கசக்கும்…அது பெருமாளே நம்ம கிட்ட கேக்குற ஒரு கேள்வி. ஏன், பழம்னா இனிக்கணும்னு என்ன சட்டம்? நல்ல பவுனு நெறம், நல்ல மணம். ஆனா கசப்பு…அதுவும் ருசிதானே…”
நான் ஒரு வேப்பம்பழத்தை வாயிலிட்டேன்.
“சின்ன வயசு முதல் எனக்கு வேப்பம்பழம் பொறுக்குறதுலே ஒரு பெரிய ஆசை…எங்க கிராமம் பூரா வேப்பமரம்தான்…அப்பல்லாம் சின்னப்பசங்க வேப்பங்கொட்டை பொறுக்கி விப்போம். சித்திரமாசம் லீவிலேதான் வேப்பமரம் காய்க்கும். அப்ப பெரிய லீவு விட்டிருவாங்க. வேப்பம்கொட்ட பொறுக்கிவித்த காசிலேதான் பள்ளிக்கூடம் தொறக்கிறப்ப சட்டை புக்கு எல்லாம் வாங்குறது…”
நினைவுகளில் ஆழ்ந்து மீசையை நீவிக்கொண்டார். பின்னர் என்னை பார்த்து, “அருமையான காலம் அதெல்லாம்…” என்றார்.
“ஆனா அப்பவும் உங்க கிட்ட எரக்கமே இல்லாம இருந்திச்சா?” என்றேன்
“மடக்குறீங்க…மடக்குறீங்க” என்று நாயக்கர் தலையை ஆட்டிக்கொண்டு தொடையை தட்டிக்கொண்டு மீண்டும் உரக்கச் சிரித்தார். “நம்புங்க ஐயா, நான் பேச்சுக்கு சொல்லலை. நெஜம்மாவே சொல்றேன்” தன் தோளைத் திருப்பி காட்டி “பாருங்கய்யா இந்த தழும்ப…எப்டி இருக்கு”
“வெட்டுக்காயம்” என்றேன்
“முத வெட்டு…இது விளுந்தப்ப என் வயசு என்னன்னு சொல்லுங்க”
நான் தயங்கி “சின்ன வயசுபோல” என்றேன்.
“ரொம்பச் சின்ன வயசு…அதாவது ஒம்போது மாசம்” என்றார். மீசையை நீவியபடி சிரித்து “அதாவது வைஷ்ணவக் கணக்குப்படி…நாங்க கர்ப்பத்திலே நுழையறப்பவே வயசுக்கணக்கு ஆரம்பிச்சுடுது. அப்பவே பிராப்தம் சஞ்சிதம் ஆகாமியம்னு மூணும் வந்து ஒட்டிக்கிட்டாச்சு…”
“அப்ப?” என்றேன். என்னையறியாமலேயே எழுந்துவிட்டேன்.
“ஐயா, இந்த வெட்டு விழுறப்ப நான் எங்கம்மா கர்ப்பத்திலே இருந்தேன்”
என்னால் சிலகணங்கள் பேசவே முடியவில்லை.
நாயக்கர் சொன்னார். “சில விசயங்களைச் சொன்னா சாதாரணமா நம்ப மாட்டாங்க. ஆனா நல்லா படிச்ச டாக்டருங்க நம்பியிருக்காங்க. எனக்கு அப்பவே ஏதோ ஒரு ஞாபகம் இருக்கு. நான் இருக்கிற எடம் குலுங்கி குலுங்கி ஆடுனது ஞாபகமிருக்கு.எங்கம்மாவோட அலறல் சத்தம் கேட்டுது. அப்பவே எனக்கு அது எங்கம்மா குரல்னு தெரிஞ்சிருந்திச்சு. நான் அண்ணாந்து அம்மாவோட குரலுக்காக கவனிச்சேன்… …அம்மா அலறிக்கிட்டே இருக்கா.. அவளோட பயம் எனக்கு வந்திட்டுது. நானும் பயந்து பதறி சுத்திச்சுத்தி வர்ரேன். செவப்பா ஒரு புகைமூட்டம்… அதுக்குள்ள நான் ஒரு நெழலைப் பாத்தேன்… ஆமா நெழல்… கருப்பான நெழல் இல்ல, ஒரு மாதிரி நீலம். இல்ல வயலெட், கர்ப்பப்பைக்குள்ள செவப்புக்குள்ள நீலம் வயலட்டாத்தானே இருக்கும்… எதோட நெழல்னு தெரியாது. ஒரு நெழல்…அப்ப சட்னு என் உடம்பிலே ஜில்லுன்னு ஒரு தொடுற உணர்ச்சி… ரொம்ப அன்னியமான ஒண்ணு தொடுற மாதிரி… என்னமோ…நான் துடிச்சு அதிர்ந்துட்டு ஒடுங்கிக்கிட்டேன்…அவ்ளவுதான் ஞாபகம்” அவர் சொல்லிக்கொண்டிருக்க அங்கே அவர் குரல் அசரீரி போல ஒலித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
என்ன நடந்திச்சுன்னு வெவரமா என்னைய வளத்த நாரணத்தம்மாங்கிற ஆயாம்மாக்கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுகிட்டது எனக்கு மூணுவயசு இருக்கிறப்ப. என் தோளிலே இருந்த வடுவை தொட்டுக்காட்டி என்னாச்சுன்னு சொன்னாங்க. ஒரு சொத்துத்தகராறுலே எங்க நைனா பஞ்சாயத்துபேசி தீர்ப்பு சொல்லியிருக்காரு…அவரு ஊர்லே பெரியமனுசன். ஒருத்தரையும் கைநீட்டி அடிக்க மாட்டார். தெலுங்குலே ரங்கநாத ராமாயணம்னு ஒண்ணு இருக்கு…அதை முளுசா மனப்பாடம் செஞ்சவரு. பஜனையிலே பெரிய ஈடுபாடு. ’எந்த ருசிரா ராமா ஓ ராமா . நீ நாமம் எந்த ருசிரா’ன்னு பாடினா மளமளன்னு அழுதிருவாரு. பெரிய நியாயஸ்தன். பஞ்சாயத்திலே சொன்னா சொன்னதுதான்… ஒருத்தன் மீறமுடியாது. மீறி ஒரு சொல்லு வந்தா எந்திரிச்சு வந்திருவாரு. வீடு வந்து சேருறப்ப மீறிப்பேசினவன அடிச்சு தூக்கி ரத்தவிளாறா கொண்டாந்து முற்றத்திலே போட்டிருப்பாங்க… அப்டிப்பட்ட ஆளு”
எப்பேர்க்கொத்த கொம்பனுக்கும் அதுக்குண்டான எதிரி இருப்பான்ல? அப்டி ஒரு எதிரி அமைஞ்சான். மேல்கட்டளை மிராசுதார்னு ஒரு குடும்பம். எல்லா பேரும் பெருங்கொண்ட கொலைக்காரனுங்க. அவங்க குடும்பத்துலே ஒரு பஞ்சாயத்து. ஒரு ஏழைக்கிழவி சொத்த மோசடி பண்ணி புடுங்கிக்கிட்டாங்க. கெழவி பஞ்சாயத்துக்கு வந்தா. எங்கப்பா விசாரிச்சுட்டு சொத்த கிழவிக்கு திருப்பிக்குடுக்கச் சொன்னாரு…அவனுக அப்ப சம்மதிச்சாலும் உள்ளுக்குள்ள வஞ்சம் வச்சிட்டாங்க
ஒரு நாள் ராத்திரி எங்க நைனா வீட்டுக்கு முன்னாடி வேப்பமரத்தடியிலே கயித்துக்கட்டில போட்டு தூங்கிட்டிருந்தாரு. மழையில்லேன்னா வானத்தப் பாத்துட்டு வெட்டவெளியிலே தூங்குறதுதான் அவரோட வழக்கம். அந்த வழக்கம் நமக்கும் வந்திட்டுதுன்னு வைங்க…நட்சத்திரங்கள பாத்துட்டு உறங்குறதுதான் சரியான உறக்கம். அது ஒரு சாவு மாதிரி…செத்து வானத்துக்குப்போயி இருட்டோட இருட்டா கரைஞ்சு மறுநாள் புதிசா பிறந்து வாறது மாதிரி… ஐயா, டிவியிலே காட்டுறான், சிம்பன்ஸியெல்லாம் அப்டித்தான்யா தூங்குது. நாமளும் அனுமார் வம்சம்தானே… சரி, இப்ப மூணு வருசமா வானத்தைப்பாக்காம இந்த பொந்துக்குள்ள தூங்கிட்டிருக்கேன்… அத விடுங்க… என்ன சொன்னேன், நைனா வெளியே தூங்கிட்டிருக்காரு. காவலுக்கு ரெண்டு அருவாக்காரனுக கொஞ்சம் அப்பாலே தூங்கிட்டிருக்காங்க. இருட்டுக்குள்ள ஒரு பத்துபேரு வேல்கம்பு அருவாளோட பதுங்கி வந்திட்டானுக.
நாய்கள் நாலு உண்டு எங்க வீட்டிலே. எல்லாம் நல்ல கன்னி எனம். சர்ரியான வேட்டைக்காவல் நாயிங்க. இன்னொருத்தன் கையாலே சுட்டகருவாடு குடுத்தாலும் தொடாது. நாய்களுக்கு மோப்பம் வராம இருக்க என்னென்னமோ செஞ்சிருக்கானுக. ஆனா ஒரு கிழட்டு நாய்க்கு கொஞ்சம் மோப்பம் கெடைச்சுப்போட்டுது. அது குரைச்சப்ப மத்ததும் குரைக்க ஆரம்பிச்சுட்டுது. நாய் குரைச்சதுமே எங்க நைனாவும் காவல்காரனுகளும் எந்திரிச்சிட்டாங்க. அதுக்குள்ள வந்து சூழ்ந்துகிட்டு காட்டுத்தனமாட்டு வெட்ட ஆரம்பிச்சிட்டானுக. அவனுக இருவது பேருக்குமேலே இருந்தானுக. அதான் அவனுகளோட சக்தி. அவனுகளுக்கு எங்க ஆளுகளையும் நாய்களையும் பத்தி நல்லாவே தெரியும். நாய்களையும் காவல்காரங்களையும் வெட்டித்தள்ளிட்டானுக. எங்க நைனா ஒத்தைக்கு நின்னு சண்டை போடுறார். எங்கம்மா அலறிக்கிட்டே வெளியே வந்து நைனாவை காப்பாத்த குறுக்கே பாய்ஞ்சா. ஒருத்தனோட அருவா அப்டியே அவ வயித்த கிளிச்சிட்டுது. அவனை அந்தாப்லே வெட்டி வீசிட்டு எங்க நைனா அம்மாவை அப்டியே அள்ளி துணியாலே வயித்த சுத்துக்கட்டி தூக்கி வண்டியிலே போட்டுட்டு செவல்பட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாரு… எங்க வீட்டுமுன்னாடி ஒம்போது பொணம் கெடக்கு…நாலுபேரு வெட்டு பட்டு ஓடிட்டான்…
செவல்பட்டி ஆஸ்பத்திரியிலே வைரவேலுன்னு ஒரு தெக்குத்தி டாக்டர்… எங்கிட்டோ பணகுடிப்பக்கம் அவருக்கு ஊரு. அவரு என்னைய காப்பாத்திட்டாரு. அம்மா போய்ட்டா. செத்த பொணத்துக்குள்ளே இருந்து என்னை கீறி வெளியே எடுத்தாரு அந்த டாக்டர். என்னோட தோளிலே பெரிய வெட்டுக்காயம்… வாயி மாதிரி செவப்பா காயம் திறந்து இருந்துச்சுன்னு நர்சம்மா சொல்லியிருக்கு. அதை குதிரவாலு நூலு வைச்சு தைச்சாரு அந்த டாக்டர்… பிரசவம் நடந்த அஞ்சாம் நிமிசம் ஆப்பரேசன்… மயக்கமருந்து குடுக்குறதுக்குண்டான சக்தி குழந்தைக்கு இல்ல. அதனாலே கதறக் கதற சதையை வைச்சுத் தச்சாங்க. பொளைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு எல்லாரும் நினைச்சாங்க. செத்தாச்சுன்னே நர்ஸுங்க முடிவுபண்ணியாச்சு. எங்க நைனாவும் அப்டியே நினைச்சுக்கிட்டாரு. அந்த டாக்டரு என்னமோ ஒரு குருட்டு நம்பிக்கையிலே ஆப்பரேசன் செய்தாரு… “என்ன டாக்டர் குழந்தைக்கு இன்னும் பாலே குடுக்கலை, பால் இல்லாம குழந்தை பிழைக்குமான்னே தெரியல்லை, இப்ப ஆப்பரேசனா, வெளையாடுறீங்களா”ன்னு கம்பவுண்டர் கேட்டாராம். ஆனா சிலசமயம் சிலபேர் மேலே ஒரு மாதிரி சாமி வருமே. அதுமாதிரி இருந்தாராம் அந்த டாக்டர். அவர் மேலே வந்தது ஆஞ்சநேயரேதான்னு எங்க நைனா கடசீ வரைக்கும் நம்பினாரு..
ஆப்பரேசன் முடிஞ்சு மூணுநாள் கடும் ஜுரம். உசிரு இருக்கிற தடையமே இல்ல. நைனாவ அதுக்குள்ள போலீஸு புடிச்சுக்கிட்டு போய்ட்டுது. எங்க தாய்மாமன் சிக்கையா ஆஸ்பத்திரியிலே இருந்து பாத்துக்கிட்டாரு. ஆயா நார்ணத்தம்மாளோட பெண் குழந்தைக்கு அப்ப நாலு மாசம். நல்ல முலப்பாலு இருந்துது… அதை கறந்து ஊசி வைச்சு வாயிலே விட்டிருக்காங்க… மூணாம் நாள் முளிச்சுகிட்டு அளுதேன். நாலாம்நாள் வாய்வைச்சு சப்பி பாலு குடிச்சேன்… அப்டியே பொளைச்சுக்கிட்டேன். அப்டி ஒரு கெட்டி ஆயுசுங்க. எங்க நைனாகிட்ட மாமா போயி தகவல் சொன்னாராம். அவரு அது வரை ஒரு வாய் தண்ணிகூட குடிக்கலை. “டேய் ரங்கா ஒரு மொந்தை மோரு கொண்டாடா,நான் உசிரோட இருக்க காரணம் கிடைச்சாச்சு”ன்னு சொன்னாரு. நான் செத்தா அவரும் சாவுறதா முடிவு பண்ணி இருந்தாரு.
நாயக்கர் சொன்னார். “ஒண்ணர மாசத்திலே நல்லாவே தேறிட்டேன். அந்த டாக்டர் பேரையே எனக்கு போட்டாங்க… வைரவேலு… ஆமா, சைவப்பேரு. நாங்க ஸ்ரீ வைணவங்க. தென்கலை. எங்க வம்சத்திலேயே அப்டியொரு பேரு இல்ல… என்னை கொன்னிருவாங்கன்னு எங்க நைனாவுக்கு பயம். அதனாலே என்னையும் ஆயாம்மவையும் அவருக்கு தெரிஞ்ச ஒரு பழைய சினேகிதன் வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாரு. ஜெயிலிலே இருந்தே அவனுகள களையெடுத்தாரு. எட்டு மாசத்திலே ஜாமீன்ல வந்தாரு. கேஸு அதுக்குப்பிறகு நடக்கவே இல்ல…ஒம்பது வருசம் களிச்சு அவருக்கு விடுதலை கிடைச்சுது.ஏன்னா ஒத்த ஒரு சாட்சி கெடையாது…”
நாயக்கர் தன் தோள்மேல் அந்த வடுவை மெல்ல வருடினார். “எங்கப்பாவுக்கு இந்த வடுவ பாத்தாலே நடுக்கம்… சட்டையோ துண்டோ போட்டு மறைக்காம அவரு முன்னாடி நான் போகவே கூடாது. போனா ஒரு மாதிரி வலிப்பு வந்திரும் அவருக்கு… நார்ணம்மா எங்கிட்ட சொன்னாங்க. ‘டேய், நாம வைணவங்க. பெருமாளுக்கு அடிமைச்சேவுகம் செய்றோம்னு சொல்லி அஞ்சு எடத்திலே சூடுவைச்சு தழும்பு பண்ணிக்கிடுவோம்…இது அஞ்சிலே ஒரு தழும்பு…இன்னும் நாலு போரும் உனக்கு’ன்னு… நானும் அப்டித்தான் நினைச்சுக்கிட்டேன். ஆனா அப்றம் தெரிஞ்சுது, இது என்னதுன்னு…”
நாயக்கர் சொன்னார் .அடிமாடுகளை கேர்ளாவுக்கு கொண்டுபோறத கவனிச்சிருக்கீங்களா? மாட்டுக்கு சீக்கு இல்லேன்னு பாத்துட்டு காதிலே ஒரு முத்திரை போடுவாங்க…கொல்லலாம்னு ஆர்டர் அது. அதான் இது… நான் பொறக்கிறப்பவே சாவுமுத்திரை போட்டாச்சு. மூணுவயசுக்குள்ள ரெண்டுவாட்டி கொலைபண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. நமக்கான அரிவாள் எப்பவுமே ரெடியா இருந்திருக்கு… அது எனக்கு தெரியும். எனக்கு அஞ்சுவயசு இருக்கும்… ஒரு ராத்திரி முழிச்சுக்கிட்டேன். .என்னதுன்னு தெரியலை. சட்டுன்னு வெளியே ஏதோ காரு போற வெளிச்சத்திலே எதிர்ச்சுவரிலே ஒரு அரிவாளோட நிழல் ஆடி வளைஞ்சு அப்டியே போச்சு… எந்திரிச்சு உக்காந்துட்டேன்…உடம்பு நடுங்கிட்டிருக்கு. ஆனா சத்தம் வரலை. நைனா எந்திரிச்சு “என்னடா, என்னடா?”ன்னு கேட்டார். என்னாலெ பேச முடியலை.
நைனா அரிவாளோட வெளியே போயி பாத்தார். ”யார்ரா? யார்ரா?”ன்னு சத்தம் போட்டார். ஆளுங்க வந்து தேடிப்பாத்தாங்க. அப்ப நைனா எங்கிட்ட சொல்லல. ஆனா வெளியே போயி அவர் பாத்தப்ப அங்க மண்ணிலே ஒரு செருப்போட தடம் தெரிஞ்சிருக்கு. அரிவாளோட நின்னவன் ஓடிட்டான். “படுரா! படுரா!”ன்னு நாரணம்மா என்னை நாமம் போட்டு படுக்கவைச்சாங்க. “ராமா ராமான்னு சொல்லிக்கோ”ன்னு சொன்னாங்க. நான் சொல்லலை. உதட்டை அசைக்க முடியலை… அப்டியே வெறிச்சு பாத்துட்டு படுத்திருந்தேன். அப்ப தோணிச்சு அடுத்த செகண்டு செத்திருவேன்னு. அடுத்த செக்கண்டுக்காக காத்து இருட்டிலே கிடந்தேன்… அடுத்த செக்கண்டு அடுத்த செக்கண்டு… எங்க வீட்டு கிளாக்கு டிக் டிக் டிக்னு ஓடிட்டே இருந்திச்சு… அடுத்த செக்கண்டிலே இருந்து அடுத்த செக்கண்டுக்கு போனேன்…ஆனா மறுநாள் விடிஞ்சுது. காலைவெளிச்சம் பிரகாசமா இருந்திச்சு… கூட்டாளிங்களோட வேப்பம்பழம் பொறுக்கப்போனேன்… அப்ப தின்ன வேப்பம்பழத்துக்கு அப்டி ஒரு ருசி…இப்பவும் நாக்கிலே இருக்கு அந்த கசப்போட ருசி… அப்ப ஆரம்பிச்சுது வேப்பம்பழ ருசி… என்ன?
அப்ப முதலே நம்ம மனசு ஒருமாதிரி அமைஞ்சு போச்சுங்கையா… நான் ஒருபக்கம், மொத்த உலகமும் மறுபக்கம்… யாரு வேணுமானாலும் என்னைய கொல்லலாம். மிட்டாயி விக்கிறவன், பிச்சைக்கு வர்ர பண்டாரம், பள்ளிக்கூட வாத்தியாரு, கூட வெளையாடுற சேக்காளி… எல்லாரும்தான்… அவங்க வேற நான் வேற…அதான் சொன்னேனே, எனக்கு எரக்கம்னா என்னான்னே தெரியாது. யார்ட்டயும் ஒரு துளி எரக்கம்கூட நான் காட்டினதில்ல… ஆமா, நான் நியாயத்துக்கு பயந்தவன். சாமிக்கு பயந்தவன். ஆனா எரக்கமே கெடையாது… அதான் தீர்ப்பிலே எழுதிட்டீங்களே… எரக்கமே இல்லாத மிருகம்னுட்டு… உண்மைதான்யா. மிருகம்தான்.
மனுசனத்தவிர எல்லா மிருகமும் ஜாக்ரதையாத்தான் இருக்கு. சின்னப்பூச்சிகூட படு விழிப்பா இருக்கு… எங்க நைனா பூனையை சுட்டிக்காட்டிச் சொல்லுவாரு. அதாண்டா மிருகங்களிலே தேவன்னு… எந்த தூக்கத்திலயும் செவி அசைஞ்சுகிட்டே இருக்கும். ஒரு குண்டூசி விழுற சத்தத்திலே முழிச்சுகிட்டு நாணேத்துன வில்லு மாதிரி ஆயிடும்… பூனைக்கு ஏழு ஆயுசுன்னு ஒரு சொலவடை உண்டு. ஏழுதடவ சாவுக்கிட்டேருந்து பூனை தப்பிச்சுக்கும். எட்டாவது வாட்டித்தான் சாகும்… எங்க நைனா, பூனையா இருடாம்பார்… ஒருநாள் ஒரு தென்னமரத்துக்கு கீழே நின்னுட்டிருந்தேன். சட்டுன்னு ஒரு தேங்கா விழுந்துச்சு. நைனா ஆன்னு அலறிட்டு ஓடிவந்தார், நான் வெலகிட்டதினாலே தேங்கா என் மேலே விழலை… நைனா என்னை கட்டிப்பிடிச்சு அழுதார்… “கொடுக்கா உனக்கு பதினாலு ஆயுசுடா”ன்னார்…
மீசையை நீவி புன்னகைத்தபடி தனக்குத்தானே “பதினாலு ஆயுசு… பதினாலு சாவு, பதினாலு பிறப்பு…நல்லாத்தான் இருக்கு” என்றார் நாயக்கர் “அஞ்சு வயசிலே அந்த ராத்திரியிலே அடுத்த செகண்டு செத்திருவேன்னு நினைச்சேன். சாகலை. அந்த ஒரு செகண்டு அப்டியே நீண்டு நீண்டு இந்தா அம்பத்துநாலு வயசா ஆயிருக்கு… நினைச்சுக்கிடுங்க ஐயா, ஒவ்வொரு செக்கண்டு செக்கண்டாத்தான் அம்பத்துநாலு வருசம்… ஆமா” நாயக்கர் சொல்லி மீண்டும் உறைந்து என்னை பார்த்தார்
நான் திகைப்புடன் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு நொடியாக ஐம்பத்துநான்கு ஆண்டுகள்!
“அஞ்சு வயசிலே அன்னிக்கு நான் எப்டி முழிச்சேன்?என் சொப்பனத்திலே அந்த நெழலைப் பாத்தேன்… அதப்பாத்துதான் பயந்து எந்திரிச்சேன்” என்றார் நாயக்கர். “நெழல்னா இன்னதோட நெழல்னு இல்லை. ஒரு நெழலாட்டம். அவ்ளவுதான்… அத நான் எங்கம்மா கர்ப்பப்பைக்குள்ளாரேயே பாத்துட்டேன்”
நாயக்கர் எழுந்து சோம்பல் முறித்தார் “அந்த நெழல் கூடவே இருக்குங்க ஐயா”
நான் நாயக்கர் அந்தச் சிறிய அறைக்குள் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சீரான காலடிகளுடன் கூண்டில் புலி போல நிதானமாக நடப்பதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
அவர் நின்று என்னிடம் “எங்கூடவே இருக்கு…அந்த நிழல்…அதை பயந்த நாட்கள் உண்டு. இப்ப அது ஒண்ணுதான் எனக்கு துணை” என்றார்.
நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “அதென்ன மீசைய கொஞ்சம் வேற மாதிரி நீவுறீங்க?” என்றேன்.
“அதுவா? அது எப்பவோ பழக்கமாயிடுச்சு…ஒரு முப்பது வருசம் முன்ன…ஒருத்தன வெட்டினேன். கையெல்லாம் ரத்தம். அப்டியே மீசைய நீவுறப்ப இப்டி கைய திருப்பி புறங்கையாலே நீவினேன்…அப்ப அந்த மிதப்பிலே அது ரொம்ப புடிச்சிருந்திச்சு…அப்றம் அதுவே பழக்கமாயிடுச்சு…நம்ம கையிலேதான் எப்பவும் ரத்தம் இருந்திட்டிருக்கே…” என்றபின் சிரித்தபடி மீசையை நீவினார்.
நான் எழுந்துகொண்டேன்.
“பயப்படாதீங்க…இனிமே யாரையும் கொல்ல வாய்ப்பிருக்காதுன்னு நினைக்கிறேன்… நாளைக்குத்தான் கயிறு ரெடியாயிருச்சே”
நான் ஒன்றும் சொல்லாமல் கை கூப்பி வணங்கிவிட்டு திரும்பினேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
