பாண்டியநாடும் வேதாசலமும்
ஐயா, வணக்கம்.
இந்த ஆண்டு தூரன் விருது கல்வெட்டியல் ஆய்வறிஞர் நண்பர் திரு.வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட இருப்பது குறித்து மிக்க மகிழ்வெய்துகின்றேன். ஆய்வுலகில் ஆழங்கால் பட்டவர்களைச் சமுதாய அடையாளப்படுத்தாதவர்களை தாங்கள் தேடிக் கண்டுபிடித்து கௌரவிப்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல். உண்மையிலே உங்களுடைய இச்செயல் மிகவும் இன்றைய கால கட்டத்தில் தேவையானதொன்று. இதனைத் திறம்படச் செய்யும் தங்களின் இந்த அமைப்புக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள். இவண் 2024ஆம் ஆண்டு விருதாளர் முனைவர்
மோ.கோ. கோவைமணி
அன்புள்ள ஜெ
வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் விக்கி தூரன் விருது ஒரு அரிய நிகழ்வு. ஆய்வாளர்களுக்கு தமிழகத்தில் பரவலாக கவனமே கிடைக்காத நிலையில் இந்த விருதும் பாராட்டும் மிகமிக முக்கியமானவை. மகிழ்ச்சியானவை. வேதாசலம் அவர்களின் பாண்டியநாட்டில் சமணசமயம், எண்பெருங்குன்றம் ஆகிய ஆய்வுநூல்களை வாசித்துள்ளேன்.
தமிழ் வரலாற்றாய்வாளர்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே சோழர்வரலாறு மிகமிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. பர்ட்டன் ஸ்டெயின் போன்ற அயல்நாட்டு ஆய்வாளர்களும் நிறைய எழுதியுள்ளனர். பல்லவர் வரலாறும் குறிப்பிடத்தக்க அளவுக்கு எழுதப்பட்டுள்ளது. காரணம் கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய உள்ளன. பாண்டியர் வரலாற்றை குறைவாகவே ஆதாரபூர்வமாக எழுதியுள்ளனர். தொல்லியல் சான்றுகள் மிகக்குறைவு. அத்துடன் தொடர்ச்சியின்மையும் உள்ளது. உதிரிக்கல்வெட்டுச் சானறுகளைக் கொண்டு பாண்டியர் காலகட்டத்தை மிக விரிவாக எழுதி ஆழமான அடித்தளம் ஒன்றை உருவாக்கியவர் வேதாசலம் அவர்கள்.
பாண்டிய நாட்டில் சமணம் ஒரு மிகப்பெரிய ஆய்வுநூல். ஒரு வாழ்நாள் சாதனை என்றே சொல்லத்த நூல். அத்தகைய அரிய நூல் மிகமிகக்குறைவாகவே தமிழகத்தில் கவனிக்கப்பட்டுள்ளது என்பது நாம் வரலாற்றாய்வு, தொல்லியல் ஆய்வு தளங்களில் எத்தகைய தேக்கநிலையில் இருக்கிறோம் என்பதற்கான சான்று. அறிஞர் வேதாசலம் அவர்களுக்கும் தமிழ்விக்கி அமைப்புக்கும் என் வணக்கம்.
ஆர்.ஜெயச்சந்திரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
