இந்திய ஆன்மிகம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
எங்கும் ‘எட்டிப் பார்ப்பதும்’ , ‘விலகிச் செல்ல’ எத்தனிப்பதும் பொதுவான மனித இயல்பு. மந்தையின் மிகப் பெரும்பான்மை ஒரு கணத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டிப் பார்த்து விட்டு உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு விடும். அறிய முடியாமை குறித்த பேரச்சம் இயல்பாகவே அதை வழி தவறாமல் கட்டியிழுத்துக் கொள்ளும். மிகச் சிலவே கட்டுக்களை விடுவித்துக் கொண்டு செல்லும் துணிவைக் கொண்டிருக்கும். பலநூறு கட்டுக்களில் ஓரிரண்டை மட்டுமே பிடித்துக் கொண்டு மற்றவற்றை மீறிச் செல்ல முயன்று கொண்டே இருக்கும். மீறல் தொடங்கி படிப்படியாக நிகழ நிகழ அரிதானதொரு சாகசத்தை நிகழ்த்தும் பெருமித உணர்வுடன் முன் செல்லும். சாகசத்தின் பூரிப்பு , அங்கேயே முழு பலத்துடன் இருந்து கொண்டே இருக்கும் அச்சத்தின் பெருவிசையை சிறிது சமன் செய்து எச்சரிக்கை உணர்வு உண்டாக்கும் செயலின்மையை நீர்க்க வைத்து முன்செல்ல உதவுகிறது. இரு பெருவிசைகளுக்கு இடையே திகழும் சமநிலையின் அனுபவம் கணந்தோறும் செறிவாகிக் கொண்டே செல்லும். அச்செறிவின் எடை ஒரு கட்டத்தில் மனத்தின் இருக்கும் ஒரே கட்டினை துண்டிக்கையில் அதலம் திறந்து பேருருவின் காட்சி கிடைக்கிறது. முழு உயிரும் முழு தன்னுணர்வுடன் உச்சபட்ச விழிப்புணர்வுடன் அடியற்ற உணர்வனுபவத்தில் , பிரக்ஞை மட்டுப்பட்டு புத்தி தவிதவித்து , ஏதேனும் ஒரு ‘பிடி’ கிடைக்குமா என தேடி , ஏதேனும் ஒன்றை கண்டடைந்து மீளும். கணத்திற்கும் குறைவான நேரத்தில் நிகழும் இவ்வனுபவம் மரணத்திற்கு நிகரான அழுத்தத்துடன் இருக்கும். அதை அனுபவித்தவன் தன்னுள் ஏதோவொன்று நிரந்தரமாக மாறியிருப்பதை உணர்வான்.
மயிர் மின்னிதழில் அஜிதன் அவர்களது சிறுகதை – ஒரு இந்திய ஆன்மீக தரிசனம் – வாசித்தேன்
கதைநாயகன் மனித கழிவுகள் பிரக்ஞையின்றி உருவாக்கும் அருவருப்பை வெல்வதன் வழியாக ‘எட்டிக் குதிக்க’ முயல்பவன். அதில் ரகசியமான பெருமிதமும் கொண்டவன். கழிவுகளின் காட்சி தரும் அசூசையை வெல்ல முடிகிற அவனுக்கு அது தன்மேல் படக்கூடும் என்னும் சிறிய எண்ணமே பலமடங்கு அசூயை உண்டாக்குகிறது. இந்த ‘கைப்பிடியுடன்’ இருளில் இறங்குபவன், மேலும் மேலும் என அருவருப்புணர்வை வென்ற படி மெதுவாகச் செல்பவன், எந்தவித கைப்பிடியும் இல்லாது ஏற்கனவே இறங்கியிருக்கும் ஒருவனைக் காண்கையில் ஏற்படும் திகைப்பின் கணத்தில் தனது பிடியும் தளர, தன்ணுணர்வு தடுமாறும் கணத்தில் அழகின்மையின் பேருருவை உணர்கிறான். பெரும் அலறலுடன் விஸ்வரூப தரிசனத்தின் விளைவான அறிதலால் தன்னையறியாமல் கை கூப்பியபடியே மீண்டெழ முயன்று வெளிவருகிறான். அந்தரவெளியில் நிற்பவனின் புன்னகையும் அவனுக்குத் தெரிகிறது.
ஒரு அனுபவக் குறிப்பு என்பதிலிருந்து சிறந்த கதையாக இதை மாற்றுவது கதை நாயகன் சட்டென்று அணையும் இருளில் பெரும் கூச்சலுடன் தத்தளிக்கையில் உன்மத்தனின் மென் சிரிப்பே. அவனை நோக்கிய பயணத்தில் இருக்கும் கதைநாயகன், அந்த கணத்தில் உன்மத்தனாகவே மாறி மீண்டுவிடுகிறான்.
பொதுப் போக்கில் குரூரமான அழகின்மையாக மட்டுமே தெரிகின்ற கழிவறை காட்சிகள் உண்மையில் நமது வாழ்க்கையே. சைவ சித்தாந்த சொற்களில் சொன்னால், மும்மலத்தில் உழலும் புழுக்கள் நாம். பேருருவ காட்சி – அது மிகத் தூய அழகானுபவமோ , இங்கு காட்டப்படுவது போன்று அசூசையின் மூச்சு முட்டுகிற காட்சியோ – அத்வைதம் கூறுகின்ற இரண்டற்ற ஒன்றின் வெளிப்பாடே. கழிவிலும் பிரபஞ்ச தரிசனத்தை அடைய முடியும் என்பது பிரமிப்பாக இருக்கிறது.
கதையின் தலைப்பில் உள்ள நஞ்சு மிகக் கூரியது. இந்தியா உண்மையில் ஒரு மாபெரும் கழிவறையே. இந்த மாதிரியான ‘தரிசனம்’ இப்போதைக்கு இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தலைப்பை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
shankaran e r
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
