நிழல்களுடன் ஆடியது-3
வெயிலில் அலைந்த களைப்பும் இரவில் வழக்கம் போல உள்ளங்குளிரும்படி உணவுண்டதும் சேர்த்து கிருஷ்ணன் உடனடியாகத் தூங்கத்தொடங்கினார். நல்ல வளமான குறட்டை. நான் ஒன்பதரை மணிக்கு படுத்து பத்து மணிக்கு தூங்கிவிட்டேன். அன்று மாலை நாகா கட்டிலிருந்து அன்று திரும்பி வரும்போது வழி தவறி இருட்டில் பிரதிஷ்டானபுரியின் சிறு சந்துகளினூடாக சுற்றி வந்திருந்தோம். முற்றிலும் வழி தவறிவிட வாய்ப்பே இல்லை. அவ்வளவு சிறிய நகரம். ஆனாலும் ஒரு சில நிமிடங்களில் ஒரு பதற்றம் வரத்தான் செய்தது. ஏனெனில் அதில் எங்கும் பெரிய வெளிச்சமும் இல்லை. தெரு நாய்கள் செல்லும் இடமெல்லாம் எங்களை நோக்கி குரைத்துக்கொண்டிருந்தன.
நான் ஒரு மணிநேரம் தூங்கியிருக்கக்கூடும். ஏதோ ஓர் உணர்வு ஏற்பட்டு விழித்துக்கொண்டபோது விடுதியில் எனது இடது கைப்பக்கம் இருந்த நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மங்கலான நிழலுரு. ஆனால் கண்களும் சிரிப்பும் மிகத்தெளிவாக இருந்தன. குழந்தைகளுக்குரிய கண்கள் வாய் நிறைந்த வெண்பற்களுடன் கூடிய சிரிப்பு. உடலோ முகமோ தெளிவடையவில்லை. அது கானபூதி என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எந்த வியப்போ அச்சமோ ஏற்படவில்லை. தொடர்ந்து பல நாட்களாக சந்தித்து உரையாடி வரும் ஒருவர் வழக்கம்போல இயல்பாக அங்கு வந்து அமர்ந்திருப்பதாகத்தான் எண்ணினேன். அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் ஓர் அதிர்ச்சி போல நான் அந்த நாற்காலியில் எவரையோ பார்த்ததை நினைவு கூர்ந்தேன்.
உண்மையாகப் பார்த்தேனா அல்லது தூக்கத்தின் நீட்சியில் வந்த கனவா என்று எனக்குச் சொல்ல முடியவில்லை. தர்க்க பூர்வமாகப் பார்த்தால் அது கனவின் நீட்சிதான். ஏனெனில் தூங்கும்போது கானபூதியைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாகவே கானபூதியைப் பார்த்தேன் என்று நம்ப விரும்பினேன். எனக்கு அத்தனை பிரியமான ஒன்றாக அக்கதை சொல்லும் பிசாசு இருந்தது என்பது அளித்த குதூகலத்தை இப்போதும் நினைவு கூர்கிறேன். கைகள் நடுங்கும் அளவுக்கு, கண்ணீர் மல்கும் அளவுக்கு பரவசம்.
கணிப்பொறியை எடுத்து மீண்டும் அதே சொற்றொடரை எழுதி நாவலைத் தொடங்கினேன், முற்றிலும் வேறொரு கோணத்தில். நான் என்று அங்கு உருவாகி வந்த கதாபாத்திரம் நான் அதை எழுதும் கணத்திற்கு முன்புவரை எனக்குச் சற்றும் தெரியாதது. அவன் பெயர் துக்காராம் என்பதும் அவன் ஒரு பங்கி என்பதும் எல்லாம் அந்த இரண்டு நாட்களில் பைத்தான் நகரில் இருந்த அனுபவத்தால் உருவாகி வந்தவை. சமகாலத்தில் ஒரு தலித்தின் பார்வையினூடாக மட்டுமே கானபூதியும், அதன் கதைகளில் விரியும் குணாட்யரும், குணாட்யரின் பெருங்காவியத்தின் பேசுபொருளாகிய இந்திய பண்பாட்டின் புதைந்திருக்கும் வேர்ப்பிடிப்பும் வரமுடியும் என்பது ஓரிரு பத்திகளுக்குள்ளேயே எனக்குத் தெரிந்துவிட்டது. இத்தனை எளிதாக உணரக்கூடிய, இத்தனை மறுக்கமுடியாத ஒன்று எனக்கு அதற்குமுன் ஏன் தோன்றவில்லை என்பதை யோசித்தால் அது விந்தைதான். ஆனால் எப்போதும் அது அப்படித்தான்.
காலையில் கிருஷ்ணன் எழும்போது இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடித்திருந்தேன் கிருஷ்ணனிடம் ”இரண்டு அத்தியாயங்கள் எழுதிவிட்டேன்” என்று சொன்னேன். “இன்று ஏப்ரல் 22, என்னுடைய பிறந்தநாள். இன்று முதல் அதை வெளியிடப்போகிறேன்” என்றேன்
“ஏற்கனவே மூன்று எழுதிவிட்டீர்களே, அப்படியானால் ஐந்து ஆகிவிட்டதா?” என்றார்.
“இல்லை மொத்தமாக இரண்டுதான் எழுதியிருக்கிறேன். அதுவும் இப்போதுதான் எழுதியிருக்கிறேன் இதோ” என்றேன்.
“ஒன்று வெளியாகிவிட்டதா?” என்றார்.
“ஆமாம் நேற்றிரவு எழுதி முதல் அத்தியாயத்தை உடனடியாக வெளியிட்டுவிட்டேன். இரண்டாம் அத்தியாயம் இங்கு இருக்கிறது”
”அப்படியென்றால் நம்முடைய பயணம் …நாம் திரும்பிப்போகவேண்டுமே….அதில் எப்படி எழுதமுடியும்?” என்று அவர் கேட்டார்.
“இங்குதான் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கப்போகிறோமே. குறைந்த ஐந்து அத்தியாயங்கள் எழுதிய பிறகுதான் நாம் இங்கிருந்து போகப்போகிறோம்” என்று சொன்னேன்.
முந்தைய நாள் நாகா கட்டிலிருந்து திரும்பி வரும்போது மீண்டும் அங்கு செல்ல வேண்டியதில்லை என்று கிருஷ்ணனிடம் சொல்லியிருந்தேன். அது ஒருவகையான தொந்தரவை உருவாக்குகிறது, அந்தப்பாழடைதல் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். ஆனால் அன்று மாலை மீண்டும் அங்கேயே செல்லலாம் என்று சொன்னேன். திரும்பத்திரும்ப அங்கேயே சென்றுகொண்டிருந்தோம். மொத்த நாவலுமே அங்கேதான் நிகழவிருக்கிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.
அங்கிருந்த மேலும் இரண்டு நாட்களில் ஐந்து அத்தியாயங்களை எழுதி முடித்தபிறகுதான் கிளம்பினேன். அப்போது நாவலில் ஒரு சிறு பகுதிதான் எனக்குள் உருவாகியிருந்தது. அதன் வடிவம், பேசுபொருள், அது சென்றடையும் தரிசனம் எதுவுமே தெளிவாக இல்லை. அதில் வரும் ஒரு கதாபாத்திரம் கூட என்னுள் இல்லை. துகாராமின் கதாபாத்திரம்கூட என்னுள் திரண்டிருக்கவில்லை. கோதாவரியின் கரையில், பிரதிஷ்டானபுரியின் இடுபாடுகள் எஞ்சிய பைத்தான் நகரில், பங்கிகளின் குடும்பம் ஒன்றில், கானபூதி என்னும் கதை சொல்லும் பிசாசு ஒரு மொழிவெளிப்பாடாக தோன்றிக்கொண்டே இருக்கிறது. தனது முடிவில்லாத அழைப்பை முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. என்னுள் இருந்தது அவ்வளவு மட்டும்தான்.
அந்த ஒரு சரடை பிடித்துக்கொண்டு என் முழு அக ஆற்றலையும் அதன் மேல் செலுத்தி ஓர் அத்தியாயத்தை எழுதி முடித்து விடுபடுவதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். கான யானை கைவிடு பசுங்கழை போலத்தான் என் உள்ளம் ஒவ்வொரு அத்தியாயத்திற்குப் பின்னரும் மீண்டு கொண்டிருந்தது. எழுதி முடித்தபின் அந்த எழுத்தின் மீட்டல் என்னிடம் எப்போதுமே இருக்கும். ஆனால் இந்த நாவல் மட்டும்தான் எழுதி முடித்த அத்தியாயத்தில் இருந்து முழுமையாகவே வெளிவந்து, அப்படியே முற்றிலும் மறந்து விடுபட்டு நான் எழுதியது.
ஓர் அத்தியாயத்தில் நிகழ்பவை எனக்கே விந்தையானவை. ஓர் அத்தியாயம் எங்கு திருப்பங்கள் கொள்கிறது எந்த உச்சத்தை அடைகிறது என்பது அதை எழுதிய பிறகு மட்டுமே எனக்குத் தெரிந்தது. இதன் வாசகர்களும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இதில் என்ன நிகழ்கிறது என்பதை வியப்புடன்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று தோன்றுகிறது. இந்நாவலின் வடிவம் பற்றிய எந்த புரிதலையும் எவரும் இது உருவாகிவந்த பரிணாமத்தின்போது ஊகித்திருக்க முடியாது. தொடர்ந்து இந்த நாவல் உருமாறிக்கொண்டிருந்தது. ஒருவகையான விழிப்புநிலை பைத்தியக்காரத்தனம்தான் இதன் வடிவம். இதை தொடராக வெளியிட்டது இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இதை நான் எழுதி முடித்திருக்க மாட்டேன் என்று தோன்றியமையால். இப்படி வெளியிட்டதனால் என் வாசகர்கள் என்னுடனேயே வந்து இதை வாசித்தனர். அவர்களும் இதன் ஆக்கத்தில் உடனிருந்தனர். நீங்கள் எழுத்தாளனின் எழுத்தறையில் அவனுடன் அமர்ந்து அவன் எழுதும்போதே வாசித்தீர்கள்.
முதலில் இந்நாவலின் களம், பேசுபொருள் பற்றிய ஓரு வியப்பும் அச்சமும் மட்டுமே என்னிடம் இருந்தன. பின்னர் அதன் சமூகவியலும் அரசியலும் திரண்டு வந்தன. அதன்பிறகு சமூகவியலுக்கும் அரசியலுக்கும் அடிப்படையாக இருக்கும் நீண்ட மரபு தன்னை அதற்குள் நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அது மிகச்சரியான ஒரு பாதைதான். ஒரு தனிக்குடும்பம், அக்குடும்பம் அமைந்திருக்கும் அரசியல் மற்றும் சமூகச்சூழல், அச்சூழலைக் கட்டமைத்திருக்கும் மிகப்பெரிய வரலாற்றுப்பின்னணி, அந்த வரலாற்ற்றை உருவாக்கிய தொன்மப்பின்னணி என கச்சிதமான ஓர் அடுக்கு இப்போது தெரிகிறது. சமகாலத்திலிருந்து இறந்த காலத்தின் முடிவற்ற ஆழம் வரை, ஒரு கட்டிடத்தின் முகப்பிலிருந்து அதைத்தாங்கி நின்றிருக்கும் அடித்தளம் வரை, சொல்லப்போனால் அவ்வடித்தளம் நின்றிருக்கும் மண்ணின் ஆழம் வரை ஒரு பயணம். பிரதிஷ்டானம் என்றால் அடித்தளம் என்று பொருள். வேர் என்றும் ஒரு பெயர் உண்டு. இந்நாவல் வேர்களுக்குச் செல்வது, வேராலானது. அதை எழுதிய பின்னரே கண்டுபிடித்தேன்.
எனது எந்த நாவலிலும் இல்லாத ஒரு கதையற்ற கதைத்தன்மை இதில் வாய்த்தது. இதை மேலைஅழகியலின் ‘Meta epic’ வடிவம் கொண்ட நாவல் எனலாம். ஆனால் இந்தியப் புராணங்களின் வடிவத்தை கொண்டதும்கூட. இது ஒரு பெரிய கதைக்குவியல். கதாசரித சாகரம் போலவே தொன்மம், யதார்த்தம் எல்லாமே கலந்துள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றுடன் முட்டி மோதி செல்கின்றன. ஒருகதை உருவாக்கும் வினாவுக்கு இன்னொரு கதை விடையாகிறது. ஒரு கதை உருவாக்கும் பதிலின்மைக்கும் இன்னொரு கதையே தொடர்ச்சியாகிறது. நாம் பண்பாடென்றும், வரலாறென்றும் எண்ணிக்கொள்வதெல்லாமே கதைகள்தான். கதைகள் என்பவை எந்தவகையிலும் தொடர்ச்சியற்றதாகிய மானுட வாழ்க்கைநிகழ்வுகளில் இருந்து மனிதன் உருவாக்கிக்கொள்ளும் தொடர்ச்சிகளின் தொகுப்புதான். அவற்றைத் தொகுப்பது வெவ்வேறு காலங்களில் நாம் அவற்றுக்கு அளிக்கும் அர்த்தம் மட்டும்தான். அவ்வாறு நாம் வாழ்க்கைக்கு அளிக்கும் அர்த்தங்களின் இயல்பை, சிக்கலை மட்டும் தான் இந்த நாவல் பேசுகிறது என்று தோன்றுகிறது.
முற்றிலும் திட்டமிடாமல், முற்றிலும் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல், ஒவ்வொரு நாளும் எழுந்தமர்ந்து முந்தைய அத்தியாயத்தின் கடைசிப் பத்தியை படித்துவிட்டு அதன்பின் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் எழுதிக்கொண்டு சென்று முடித்த நாவல் இது. இதற்கான ஆய்வுகள் அனைத்தையுமே ஏற்கனவே சொன்னதுபோல நாற்பதாண்டுகளாக செய்து வந்திருக்கிறேன். இதனுடைய தரவுகளும் தரிசனங்களும் இதற்கு முன்பு நான் எழுதிய விஷ்ணுபுரத்திலிருந்து வெண்முரசு வரையான பெருநாவல்கள் அனைத்திலுமே ஏற்கனவே உள்ளன.
இதை என்னை எழுதவைத்தவை நிழல்கள். என்னுடன் நிழல்கள் இருந்துகொண்டே இருந்தன. நான் அவற்றுடன் உரையாடிக்கொண்டே இருந்தேன். அதிகாலை நடையின்போது அவற்றுடன் சத்தமாகவே, கைகளை வீசியும் சிரித்தும் பேசிக்கொள்ள முடியும். என்னை நன்கறிந்திருக்கும் பார்வதிபுரத்தின் நாய்கள் மிரண்டு என்னைப் பார்த்தாலே குரைக்க தொடங்கின. ஆகவே நேராகவே மையச்சாலையில் ஏறி பார்வதிபுரம் சந்திப்பு வழியாக மேம்பாலம் மேல் ஏறி நடப்பேன். அங்கே அவ்வேளையில் மானுட அசைவே தென்படாது. ஆனால் நிழல்களின் குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும். சிரிப்புகள், சீண்டல்கள். கண்ணுக்குப் படும் எந்த நிழலும் சட்டென்று தெளிவான உருவாகத் திரண்டுவிடும். கண்ணை சற்று திருப்பினால் மீண்டும் ஏதேனும் பொருளின் நிழலாக ஆகிவிடும்.
இந்நாவல் இத்தனை திசைகளுக்கு விரிந்தமைக்குக் காரணம் நிழல்கள்தான். அவை என்னை ஆளுக்கொரு திசைக்கு இழுத்தன. எது வென்றதோ அதன் திசைக்கு நான் சென்றேன். அங்கே உடன்வந்த இன்னொரு நிழல் என்னை மீண்டும் இழுத்துக்கொண்டு, சீறிக்கொண்டு இருந்தது. மாபெரும் ஊசலாட்டம்- எட்டு திசைகளுக்கும்.
(மேலும்)
மானின் நிழல்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
