தமிழவன்: கலாச்சார நெருக்கடிகள் உருவாக்கிய ஆளுமை…
சண்முக. விமல் குமார் #றாம்_சந்தோஷ்_வடார்க்காடு
[தமிழவனோடு பேசுவோம் நூலின் பதிப்புரை]
தொகுப்பாக்கப் பின்னணியும் கைக்கொண்ட முறையும் :
தமிழவனை நான் 2014 செப்டம்பர் – டிசம்பர் வாக்கில்தான் முதல் தரம் சந்தித்தேன். அன்று தொடங்கிக் கொரோனா ஊரடங்கு காலம் வரை பல முறை தொடர்ந்து சீரான இடைவெளியில் பெங்களூரில் இருக்கும் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்து வந்திருக்கிறேன். பெரும்பாலும் நான் செல்லும் வேலை என்பது அச்சாகி வந்த சிற்றேடு இதழ்களைச் சந்தாதாரர்களுக்கும் தமிழவனுக்கு விருப்பமான ஆளுமைகளுக்கும் அனுப்பி வைக்கும் நிமித்தத்தின் பொருட்டே ஆகும். சிற்றேடு இதழின் ஆசிரியர் குழுவில் என் பெயர் இல்லை என்ற போதும் தமிழவனைப் பார்க்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்காக நான் மறுக்காமல் சென்று வந்தேன். உடன் அவ்வப்போது தமிழ்த் தெரியாத எனது ஆந்திர நண்பர்கள் சிலரையும் துணைக்கு அழைத்துச் செல்வதுண்டு. போலவே, எங்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் என எல்லாத் தேவைகளையும் தமிழவனே பார்த்துக் கொள்வார் என்பதால் எனக்கு அந்தப் பயணங்கள் எதுவும் எந்த வகையிலும் சிரமத்திற்குரியதாக இருந்ததில்லை; இத்தகைய அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாது, மேற்கொண்டு, சிற்றேட்டில் வெளிவரும் எனது படைப்புகளைச் சுடச்சுடத் தொட்டுப்பார்க்கும் வாய்ப்பும் தமிழவன் கையொப்பம் இட்ட நிறைய புத்தகங்களையும் அவர் இனி தேவைப்படாது என்று ஒதுக்கிய பல்வேறு சிற்றிதழ்களையும் இனாமாய்ப் பெற்றுக் கொண்டு வருதல் முதலான சலுகைகளும் கிடைத்து வந்தன. அல்லாமல், அவருடைய அழகிய நூலகத்தையும் எழுத்து மேசை மீதும் குவிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும், குறிப்பாக ஆங்கிலப் புத்தகங்களைப் பார்க்கும் ரகசிய வேட்கையும் எனக்குள் தொடர்ந்து இருந்து வந்தது.
**

தொடர்ந்து தமிழவனை நான் சந்தித்து வந்தபோதும், அவருடனான உரையாடல்களில் பலதரம் ஈடுபட்டிருந்த போதும் எங்கள் உரையாடல்கள் அல்லது அவர் பேசும் தருணங்கள் பெரும்பாலும் சிற்றேடு, என்னுடைய எழுத்து, படிப்பு சார்ந்த அவருடைய அக்கறை போன்றவையாக மட்டுமே இருந்துள்ளன. இதைப் படியுங்கள், இதை எழுதுங்கள் என்பதை மிகவும் தீவிரமாகச் சொல்லும் தமிழவன் பெரும்பாலும், தன்னை, தன் தனிப்பட்ட விசயங்களை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. அதுபோல் என் பொருளாதார நிலைமை உள்ளிட்ட சில விசயங்களை அறிந்துகொள்ள வேண்டி அடிப்படையான சில குடும்பத் தகவல்களை மட்டுமே அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார்; அதுவும் தொடக்கக் கால சந்திப்புகளின் நிமித்தம். ஆக, அவர் குறித்து நான் அறிந்து வைத்திருக்கும் பெரும்பாலான தகவல்கள் பூராவும் எனக்கு அவருடைய வேறுசில மாணவர்கள் சொன்னவைதான். அரிதாய், சில சந்தர்ப்பங்களில் தான் வேலைக்குச் சேர்ந்த விசயங்கள் உள்ளிட்டவற்றை என்னோடு அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆக, அவரோடு மற்ற அறிவார்ந்த உரையாடல்களை எப்படித்தான் இத்தனை ஆண்டுகள் நிகழ்த்தி வந்தேன்!? இன்று யோசித்துப் பார்த்தால் அது முழுக்க முழுக்க அவருடைய நூல்களை வாசிப்பதன் வழி நடைபெற்றதே அன்றி வேறில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
**
இந்தப் பின்னணியில் அவரோடு நான் பேச நினைத்த, அல்லது இப்படியெல்லாம் அவரோடு பேசுவதற்கான வாய்ப்புகளுண்டு என்பது போன்ற பல்வேறு சாத்தியங்கள் எனக்கு முதல்முறை அவருடைய பேட்டி ஒன்றை பழைய சுபமங்களா இதழில் படித்த போதுதான் ஏற்பட்டது. அதில், தமிழவனின் இளமைக்காலம் அழகாக வெளிப்பட்டிருந்தது. அன்றி, அதைப் பின்னணியாகக் கொண்டு நான் முன்பு படித்திருந்த அவருடைய ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மீள ஒருதரம் வாசிக்கும்போது மிகவும் துலக்கமாக விளங்கியது. பின்னர், அவர் எழுதிய ‘ஆடிப்பாவைப் போல’ நாவலைப் படித்து முக்கியத் திருத்தங்களைப் பகிர்ந்துகொண்ட போதும் இந்த நேர்காணல் என் நினைவுக்கு வந்துசென்றது.
அடுத்து, திருப்பத்தூரில் எனது நலன்விரும்பிகளில் ஒருவரான பி.பாலசுப்பிரமணியனைச் சந்தித்த போது அவருடைய நூலகத்தில் இருந்து கிடைத்த ‘தமிழவனோடு ஓர் உரையாடல்’ என்ற காவ்யா சண்முக சுந்தரம் தொகுத்த, அவரே பதிப்பித்த, வழக்கம் போல் அச்சில் இல்லாத ஒரு நூலைக் காண நேர்ந்தது அல்லது பி.பா.வே கையளித்தாரா? என்பதைச் சரியாக நினைவு கூற இயலவில்லை. எப்படி இருப்பினும், லாபம் போல் கிடைத்த அந்த நூலைப் படித்த போது எனக்குத் தமிழவனை மேலும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள பல்வேறு சாத்தியங்கள் அத்தொகுப்பின்வழி வாய்த்தன. குறிப்பாக, அவர் ஓர் ஆளுமையாக உருவாகி வந்த சரித்திரத்திற்குப் பின்னால் உள்ள செய்திகளும் அவற்றின் நெருக்கடிகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின. சில விசயங்களில் என்னைப் பொருத்திப் பார்த்து, ‘என்னாலும் அப்படி நாளை உருவாக முடியும் இல்லையா’ என்கிற கனவினை, ஏக்கத்தினை வருவித்துக்கொண்டேன்; அஃதொரு பெரிய காரியம் என்றாலும், தோன்றியதை இங்கு ரகசியமின்றிச் சொல்கிறேன். அவ்வளவே.
**
கடந்த பல வருடங்களில் தமிழவனைக் குறித்துத் தொடர்ந்து தப்பும் தவறுமாகவேனும் நான் பேசியும் எழுதியும் வருவதால் அவர் குறித்த, அவருடைய சிந்தனைப் பள்ளி என்று அறியப்படும் சில தலைமுறைக் கோட்பாட்டாளர்கள் குறித்த என் ஆழ்ந்த வாசிப்பினை நூலாக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனா. வழக்கம்போல் எனது சோம்பேறித்தனத்தால் அது கிடப்பில் இருக்கிறது. கூடுதலாக, நான் முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இந்தக் காலத்தில் இயலாது என்பதையும் உணர்ந்து, அவருடைய பதிப்பில் இல்லாத, நூலாக்கம் பெறாத படைப்புகளை மட்டுமாவது முதலில் பதிப்பிக்க வேண்டும் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். அதன் முதல் படியாக அவருடைய நேர்காணல்களைத் தொகுக்கும் எண்ணத்தை (வழக்கம்போல்) மின்னஞ்சல் வழி வெளிப்படுத்தினேன். அது ஏனோ சில மாதங்கள் அவருடைய கவனத்திற்கு எட்டவில்லை. நானும் அவருக்கு விருப்பம் இல்லையோ என்னமோ என்று தயங்கி சும்மா இருந்துவிட்டேன். பிறகு, மீண்டும் அந்த விசயத்தை நினைவுபடுத்திய போது, அப்படியொரு மின்னஞ்சல் தனக்கு வந்ததாகத் தெரியவில்லை என்று சொன்ன தமிழவன், உடனே அந்த வேலைக்கு அனுமதி அளித்ததோடு, ‘அதற்கு முன்பாக’ என்று சொல்லி வேறொரு வேலையைக் கையளித்தார். அதுவும் இனி வெளிவரும் என நினைக்கிறேன்.
இந்நூலுக்கான சில கோப்புகளை அவரிடமிருந்தே தயார் நிலையில் பெற முடிந்தது வசதியாக இருந்தது; வேறு சில நேர்காணல்களை நான் படியெடுத்தேன். குறிப்பாக, தென்றலில் வெளிவந்த நேர்காணலை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது, முன்னர் நாகார்ஜுனனின் வலைதளத்தில் பதிவானது என்கிற செய்தி கிடைத்த போதும், அந்த இணைப்பினையும் என்னால் சரியாகப் பயன்படுத்த இயலவில்லை. மாறாக, தென்றல் நேர்காணலைத் ‘தமிழ்த் தொகுப்புகள்’ என்ற இணையதளத்தில் இருந்து படி எடுத்துப் பயன்படுத்தி உள்ளேன். கூடவே, இதை மீள ஒருதரம், அவ்வப்போது சரியாக வேலை செய்யாத, ‘திணை இசை சமிக்ஞை’ என்ற தளத்தின் வடிவத்தோடு ஒப்பிடவும் நேர்ந்தது.
இப்படி நான் தொகுத்த, எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போதிருந்து அதாவது 1995 லிருந்து, எனக்கு முப்பத்தி இரண்டு வயசாகும் இதுநாள் வரை அதாவது 2024 வரை, கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு பத்திரிகைகளுக்குத் தமிழவன் அளித்த நேர்காணல்களின் திரட்டே இந்நூல். இதை ஒப்புநோக்கும் போது சிறிதும் பெரிதுமான மொத்தம் எட்டு நேர்காணல்கள் இடம்பெறுகின்றன. பல்வேறு பத்திரிகைகளுக்காக வேண்டி பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு ஆளுமைகள் தமிழவனைக் கண்ட பேட்டிகள் இவை. இந்நேர்காணல்கள் மட்டுமல்லாது, தமிழவனின் நாவல்கள் வெளிவரும் சமயங்களில் அவை குறித்த உரையாடலைப் போன்ற வடிவில் சில பேட்டிகளும் சிற்றேடு இதழில் அவ்வப்போது வெளிவந்துள்ளன. அவை இப்போதைக்கு இந்நூலில் இடம்பெறவில்லை.
இத்தொகுப்பில் முறையே சுபமங்களா, உயிர்நிழல், ஆறாந்திணை, பன்முகம், தென்றல், தீராநதி, புத்தகம் பேசுது ஆகிய இதழ்களுக்காகக் கண்ட ஏழு பேட்டிகளையும் ‘தமிழவனின் மாற்றுக்குரல்’ என்ற தனது தொகுப்பு நூலுக்காக வேண்டி ப. சகதேவன் கண்ட ஒரு பேட்டியையும் வரிசை தவறாது அவை வெளிவந்த ஆண்டுகளை ஒட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நேர்காணல்களின் வடிவங்களைப் பொறுத்தளவில் தமிழவன் பேசி இருக்கும் பேச்சு மொழிக்குப் பங்கம் வராத அளவிலான எழுத்துப்பிழைகள் மட்டுமே களையப்பட்டு, அவை வெளிவந்த வடிவத்திலேயே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டும் அவர்கள் குறிப்பிடப்படும் அச்சர சுத்தத்திற்கு மாற்றியுள்ளேன். உதாரணமாக, நாகார்சுனன் என்று இடம்பெற்றிருந்தவற்றை நாகார்ஜுனன் என்று நிறைய இடங்களில் மாற்றியுள்ளேன்.
ஆனால், வேறு ஆங்கில அல்லது மேலை எழுத்தாளர்களின், கோட்பாட்டாளர்களின் பெயர்களைத் திருத்திய போதும் அதிகம் மெனக்கெடவில்லை. அதனால் அவர்களை நினைவுகூறுவதில் ஒரு தொந்தரவும் இருக்காது என்று கருதியதொரு காரணம். மேலும், அப்பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவது என்கிற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பது மற்றுமொரு காரணம், உதாரணமாக போர்ஹேஸ், போர்ஹே, போர்கேஸ் என்று பல முறைகளிலும் எழுதும் பழக்கம் நம்மிடையே உண்டு. இவற்றை ஒரேமாதிரி வரும்படி மாற்றியுள்ளேன்.
மாறாக, தமிழவன் தன் காலப் பின்னணியில் கூறும் சில செய்திகளுள், தற்போதைய வாசகர்களுக்குப் புரியாது என்று நான் கருதிய இடங்களில் மட்டும் அடிக்குறிப்பிட்டு சில கூடுதல் தகவல்களைச் சேர்த்துள்ளேன். உதாரணமாக, ஒருங்கே கல்விப்புலம் மற்றும் எழுத்துலகப் பின்னணியில் பேசும் தமிழவன் தன் பேட்டிகளில் நிறைய இடங்களில் எழுத்தாளர்களின் சுருக்கப் பெயர்களைப் பயன்படுத்துகிறார். க.நா.சு., வி.ஐ.சு., வ.ஐ.ச. என்று சொல்கிறார். இதில், எழுத்துப்பின்னணி கொண்ட க.நா.சு.என்ற சுருக்கப்பெயர் மேற்சுட்டிய இரண்டு தரப்பு வாசகர்களுக்குமே தெரியும். ஆனால், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழில் சில படங்களில் நடித்த கவிஞர் வ.ஐ.ச.வின் பெயரை அவருடைய பூர்த்தி பெயரான வ.ஐ.ச. ஜெயபாலன் என்று சொன்னால்தான் தமிழ்நாட்டு வாசகர்களுக்குத் தெரியுமோ என்கிற சந்தேகம் தோன்றியது. அதேபோல், கல்விப் புலத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த மேதை வ. ஐ. சுப்பிரமணியம் பெயரை வி.ஐ.எஸ். என்று தன் பேச்சில் குறிப்பிடுகிறார் தமிழவன். அது அப்பெயரின் ஆங்கிலச் சுருக்கம், தமிழவன் வ.ஐ.சு.விடம் கேரளத்தில் படித்தவர் என்பதால் அங்கு அவர் அழைக்கப்படும் முறையிலேயே குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரான அன்னாரை வ.ஐ.சு. என்று தமிழ்ச் சுருக்கப் பெயரால் அழைப்பதும் வழக்கத்தில் உள்ளதுதான். எனவே, இது பொது வாசகர்களால் கண்டுகொள்ள முடியுமா என்று தெரியாது போனதால் அடிக்குறிப்பில் இத்தகைய பெயர்களுக்கான விரிவுகளைத் தந்துள்ளேன்.
அன்றி, நேர்காணல்கள் அச்சான பழைய பதிப்புகள் யாவற்றிலும், எல்லாக் கேள்விகள், பதில்களின் போதும் கேள்வி கேட்டவர், பதில் சொல்லும் தமிழவன் ஆகியோரின் பெயர்கள் திரும்பத் திரும்ப அச்சாகி உள்ளன. அதேசமயம், சில பேட்டிகளில் பேட்டி கண்டவர்கள் யாரும் முன்னிலைப்படுத்தப் முன்னிலைப்படுத்தப் பெறாமல், இதழ்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு கேள்வியையும் கேட்பவர்களாக அவ்இதழ்களின் பெயர்களே திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. உதா. சுபமங்களா, உயிர்நிழல். இவற்றுள், சுபமங்களாவுக்காகச் சமூகவியலாளர் ஜி.கே. ராமசாமி, காவ்யா சண்முகசுந்தரம், ப. கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தமிழவனோடு அவருடைய சிறுபத்திரிகை, பதிப்பு முயற்சிகளில் உடன் நின்றவர்கள். இப்பணிக்கு, பா. வெங்கடேசனும் நேர்காணலை ஒருங்கிணைத்து நஞ்சுண்டனும் உதவி இருக்கிறார்கள். இப்படி பலர் கண்ட பேட்டியில் யார் என்ன கேள்வியைக் கேட்டனர் என்கிற துல்லியமான பின்னணி எதுவும் இதன் முந்தைய வடிவத்தில் இல்லை.
எனவே ஒரே சீராக, இப்படித் திரும்பத் திரும்ப இடம்பெறும் நபர்களின் பெயர்களையும், இதழ்களின் பெயர்களையும் நீக்கிவிட்டுப் பெரும்பாலும், கேள்விகளைப் பேட்டிகள் தற்போது இதழ்களில் அச்சாகும் விதத்தில் கூடுதல் அடர்த்தியாக்கியும் பதில்களின் முதல் வார்த்தைகளைச் சற்று தள்ளிக்காட்டியும் இரண்டையும் வேறுபடுத்திக்காட்டி உள்ளேன். எனினும், இந்த வடிவில் ஏனோ ஒருவித சமானமின்மை இருப்பதாகவே இப்போதும் தோன்றுகிறது. இருக்கட்டும்.
இவற்றுள் சில நேர்காணல்களுக்குக் குறிப்பிட்ட தலைப்புகளும், சில நேர்காணல்களுக்குத் தமிழவன் நேர்காணல் என்று பொதுப்படையாகவும் தலைப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து இப்பதிப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உள்ளவற்றை அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நேர்காணலின் நிமித்தம் சந்தித்த ஆளுமைகளின் பெயர்கள், உதவியவர்களின் பெயர்கள், பேட்டி வெளிவந்த இதழ், வருடம் போன்றவை தனிப்பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அது அவற்றின் முக்கியத்துவம் கருதியது. இத்தகைய நேர்காணல்களில், பேட்டி காண்பவர்கள், நேர்காணல் காணப்படுபவர்களைக் குறித்து அளிக்கும் சிறு குறிப்புகள் எனக்குப் பிடித்தமானவை. இப்படியான சில குறிப்புகள் சில பேட்டிகளில் இடம்பெற்றுள்ளன; சிலவற்றில் இல்லை. உள்ளவற்றிற்காக தனிப்பக்கங்களை ஒதுக்கி உள்ளேன்.
அன்றி, முந்தைய வடிவிலுள்ள மயக்கங்கள் பலவற்றையும் குறிப்பாக ஒற்று இடுவதில் நேர்ந்துள்ள கால மாற்றங்களையும் அவதானித்துச் சொன்னவர் நண்பர் அழகுராஜ். அவரை அனுசரித்து சில திருத்தங்களைச் செய்துள்ளேன். எனினும், பேட்டிகள் பத்திரிகைகளில் எழுத்தாக்கம் பெற்ற விதத்தில் இருவருக்கும் முழு திருப்தி இல்லை.
இந்தப் பேட்டிகள் யாவும் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளிலும், ஆந்திராவிலும்கூட எடுக்கப்பட்டவை. இவற்றைப் பற்றி அடுத்த பகுதிகளில் தெளிவாகச் சொல்கிறேன்.
**

கேள்விகள் – ஓர் அறிமுகம் :
இந்நேர்காணல்கள் யாவும் தமிழகப் பத்திரிகைகளாலும் தமிழவன் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில் அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழிலக்கியவாதிகளாலும் எடுக்கப்பட்டவை.
தமிழகத்துப் பத்திரிகைகளின் அக்கறைகள் யாவும் தமிழவன் ஓர் ஆளுமையாக உருவாகி வந்தவிதம், அவருடைய சிந்தனை முறைமை, அரசியல் ஈடுபாடு, புனைவு மற்றும் கவிதை சார்ந்த கோட்பாடுகள் ஆகியவற்றைக் குறித்தவையாக இருக்க, அயல் தமிழிலக்கியவாதிகளின் அக்கறை மேற்சுட்டியவற்றோடு கூடவே புலம்பெயர் இலக்கியம், உலகலாவிய தமிழ் இலக்கிய மரபு ஆகியவற்றைக் குறித்த கேள்விகளை உள்ளடக்கியதாக உள்ளன. இக்கேள்விகளின் வழி தமிழவன் ஒருசேர தன் முயற்சிகளின் மீதான வியப்பினையும் விமரிசனங்களையும் எதிர்கொண்டு பதிலளித்துள்ளார்.
முதல் பேட்டி சுபமங்களா கண்டது. (யாரெல்லாம் இப்பேட்டியில் பங்கேற்றுள்ளார்கள் என்பதை முன்னமே கூறிவிட்டேன் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்). இதில், தொடக்க காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் உந்துதல் பெற்ற தமிழவன் பின்பு, தி.மு.க. ஈர்ப்பிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் ஆன கதையையும், புதுக்கவிதையை ஏற்பவன் மார்க்சிஸ்ட் ஆக மாட்டான் என்கிற வரலாற்று அழுத்தத்திலிருந்து விடுபட்டு, அதாவது, புதுக்கவிதையை ஏற்கும் சாத்தியம் கொண்ட மார்க்சிய தத்துவங்களைச் சொல்லும் அல்தூசரைக் கண்டுபிடித்து வாசிப்பதன் வழி, புதுக்கவிதையை ஏற்கும் மார்க்சிஸ்ட் ஆக தமிழவன் மாறும் விசயங்கள் உள்ளிட்டவை பேசப்பட்டுள்ளன.
அடுத்த பேட்டி, ஜெர்மனியில் நடைபெற்ற ஆறு நாள் நாட்டுப்புறவியல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகச் சென்ற தமிழவன், அப்படியே பிரான்ஸும் சென்றுள்ளார்; அங்குள்ள தமிழர்களின் வாழ்முறையைப் பார்ப்பது அவருடைய விருப்பமாக இருந்துள்ளது. அப்போது கலைச்செல்வனால் ‘உயிர் நிழல்’ இதழுக்காகக் காணப்பட்ட பேட்டியே இரண்டாவதாக உள்ளது. இப்பேட்டியில் அவர் பாரிஸ் சென்ற நோக்கம், புலம்பெயர் இலக்கியம், அகில உலகம் தழுவிய தமிழ்க் கலாச்சாரம், அகவயம், புறவயம், தமிழக இலக்கிய மரபிலுள்ள பிரச்சனைப்பாடுகள், பார்ப்பனியம், தலித்தியம், பின்நவீனத்துவம் குறித்த தமிழவனின் பார்வைகள் ஆகியவை கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன.
மூன்றாவதாக உள்ள பேட்டி, மதுசூதனன் ‘ஆறாம் திணை’க்காகக் கண்டது. இதில் முதல் கேள்வியாக ஒரே சமயத்தில் இலக்கியவாதியாகவும் தமிழாசிரியராகவும் இருப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்துக் கேட்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்த்துறைகள் குறித்த பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மேற்சுட்டிய பேட்டியில் இடம்பெறுவது போலவேயான அகில உலகு தழுவிய தமிழ்ப் பரிமாணம் குறித்தும் பேசுகிறார் தமிழவன். புலம்பெயர் இலக்கியத்தைத் தமிழகத்திலுள்ள தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று வருடம் 2000 திலேயே சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது.
நான்காவதாக உள்ள நேர்காணல் பன்முகம் இதழுக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர்களுள் முன்னாள் எழுத்திரட்டையர்களான பிரேம் – ரமேஷ் கண்டது. இப்பேட்டியை உரையாடல் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். இப்பேட்டியை இப்படைப்பாளிகள் இருவரும் தமிழவன் எழுதி அப்போது வெளிவந்திருந்த ‘ஜி. கே. எழுதிய மர்ம நாவல்’ என்கிற நாவலை ஒட்டித் தொடங்குகிறது. இதில், தமிழவனின் நாவல்கள் மீது வைக்கப்படும் வாசிப்புகள் குறிப்பாக, விமரிசனங்கள், மேலை, கீழை இலக்கிய மரபுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள், மௌனி குறித்த தமிழவனின் வாசிப்பிலிருந்து தாங்கள் மாறுபடும் விதம் குறித்த உரையாடல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
ஐந்தாவதாக உள்ள நேர்காணல், தென்றல் இதழுக்காக மு. மணிவண்ணன் கண்டது. இந்நேர்காணலை ஒலிப்பதிவு செய்தவர் ஆஷா மணிவண்ணன். இப்பேட்டி கிருஸ்துமஸ் விடுமுறைக்காகத் தமிழவன் சான் பிரான்சிஸ்கோவுக்குச் சென்றிருந்த சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழவன் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் என்பதால், அங்கு இயங்கும் தமிழ்த்துறை யாருடைய, எதன் பொருட்டான ஆர்வத்தின் அடிப்படைகளில் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளும் விழைவு கடைசியில் கேள்வியாக வெளிப்படும் இந்நேர்காணலில் அதிகமும் தமிழ்த்துறைகளைப் பற்றி விமரிசனங்கள், தமிழ்ச் சிறுபத்திரிகை மரபிலிருந்து எழுதப்படும் பரிட்சார்த்த முயற்சிகள் யாவும் மேலை இலக்கியத்தைப் பார்த்து எழுதும் வேலைகள் என்பதான புரிதலுடைய வினாக்களாக உள்ளன.
ஆறாவது நேர்காணல் தீராநதி இதழுக்காகக் கடற்கரை, எங்கள் திராவிடப் பல்கலைக்கழகத்தில் கண்டது. அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இருந்த ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவல் குறித்த கேள்வியோடு ஆரம்பிக்கும் நேர்காணலில், மற்ற எழுத்தாளர்கள் ஒரு நாட்டிற்குப் புலம்பெயரும் போது அந்நாட்டின் கலாச்சாரத்தைத் தழுவியே எழுத, தமிழ்ப் புலம்பெயர் எழுத்தாளர்கள் மட்டும் தங்களுடைய பிறந்த நாட்டில் கழித்த பால்யத்தை, நாஸ்டாலஜியாக எழுதுகிறார்களே என்கிற கேள்வி இடம்பெற்றுள்ளது. அத்தோடு பல்வேறு கோட்பாட்டாளர்களின் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டு அவை குறித்த தமிழவனின் பதில்கள் கோரப்பட்டுள்ளன.
ஏழாவதாக உள்ள நேர்காணல் சற்று பெரியது. புத்தகம் பேசுது இதழுக்காக இப்பேட்டியைக் கண்டவர் ப்ரதிபா ஜெயச்சந்திரன். பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பேட்டி என்பதாலோ என்னவோ இக்கேள்விகள் தமிழவனின் இளமைக்காலம் குறித்துத் தொடங்கி, அவருடைய முதல் கவிதைசார் பங்களிப்பு, மரபான மார்க்ஸிய விமரிசனத்திலிருந்து அமைப்பியலை நோக்கிச் சென்றதன் பின்னணி, தமிழவனின் சங்க இலக்கியம் குறித்த பார்வைகள், அவரின் நாவல்களான ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள், ஜி.கே. எழுதிய மர்ம நாவல், வார்ஸாவில் ஒரு கடவுள், ஆடிப்பாவை போல, ஷம்பாலா ஆகிய நாவல்கள் குறித்த தனித்தனிக் கேள்விகளாக, இம்முயற்சிக்கான போதிய அங்கீகாரத்தைப் பெற்றீர்களா? என்பதான வினவுதல்களையும் வேறுசிலவற்றையும் கொண்டுள்ளது.
எட்டாவதாக உள்ள நேர்காணலில் தினுசாக அவருடைய மதப்பின்னணி குறித்த கேள்வி இத்தனை ஆண்டுகள் கழித்துக் கேட்கப்பட்டுள்ளது. கூடவே தமிழவன் பங்காற்றிய சிறுபத்திரிகைகள் குறித்தும், நாட்டுப்புற ஆய்வுகள் குறித்த அறிமுகம் கோரும் கேள்விகளும் உள்ளன.
**
தமிழவன் பதில்கள் – ஒரு வாசிப்பு :
தமிழவனின் நேர்காணல்களைக் குறுக்கும் நெடுக்குமாக வாசிக்கும் போது, அவருடைய ஆர்வம் இன்னதென்று தனியே சொல்லிவிட முடியாதபடி பல்வேறு தளங்களில் பரவியுள்ளது தெரிய வருகிறது. எனினும், அவையாவும் மையம் கொண்டிருக்கும் புள்ளி என்பது பண்பாடும், அதன் ஆதார அலகுகளின் ஒன்றான மொழியுமே ஆகும். அடிப்படையில் தமிழவன் மொழிப் போராட்டம் (இந்தி எதிர்ப்பு) என்கிற பண்பாட்டு நிகழ்வினை ஒட்டி மேற்கிளம்பிய இளைஞர்களின் பிரதிநிதி ஆவார். பின்னர், தி.மு.க. மீதான தன் நாட்டத்தினை இழந்து கம்யூனிஸ்ட் ஆகிறார். இவை தொடர்பான பல்வேறு சுய மற்றும் சமூக வரலாற்று நினைவுகள் பலவும் இந்நேர்காணல்களில் பலவேறு இடங்களில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அண்ணா கறுப்பு பேட்ஜ் அணியாதவன் தமிழன் இல்லை என்று சொன்னதைக் கேட்டு தன் நண்பனோடு சேர்ந்து தமிழவன் தனது கத்தோலிக்க விடுதியில் கறுப்புக் கொடி ஏற்றியது, அன்று அவருடைய சீனியரான வைகோ. வை வியப்பில் ஆழ்த்தியதைப் பதிவு செய்கிறார். இத்தோடு, வலம்புரிஜான் அவருடைய விடுதி நண்பர் என்ற தகவலும் இவற்றின் ஊடே கிடைக்கிறது.
தமிழவன் தன் வாழ்க்கையில் தொடர்ந்து அனைத்து மட்டங்களிலும் ஒரு சிறுவாரியாக இருந்துள்ளது இந்நேர்காணல்களின் வழி புலனாகிறது. மதத்தால் கிறுத்துவராக, பிறப்பிடத்தால் பொதுத் தமிழ்ச் சமூகம் ஏற்காத மலையாளம் கலந்த தமிழைப் பேசிய இடத்திலிருந்து வந்தவராக (பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நாகர்கோவில்), கர்நாடகாவில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியராக, தொடர்ந்து தமிழ்நாடு அல்லாத வெளி மாநிலங்களிலும் (கர்நாடகா, ஆந்திரா), வெளிநாடுகளிலும் (போலந்து) வேலை பார்த்தவராக, எழுத்தில் கோட்பாடு, பரிட்சார்த்த முயற்சிகளைக் கைக்கொண்டவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்துள்ளார்.
இத்தகைய பின்னணிகளும் அதன் பொருட்டான நெருக்கடிகளுமே அவரை இப்போதுள்ள தன்மைக்கு மாற்றியுள்ளன எனலாம். புதுக்கவிதையின் வரவை மரபான மார்க்சியர்கள் எதிர்த்தபோது, முதலில் அதை வழிமொழிந்த தமிழவன், சில ஆண்டுகள் கழித்துத் தான் எழுதியதைத் தானே மறுக்கவும் செய்துள்ளார். புதுக்கவிதையை ஏற்பதற்குரிய வழிகள் எதுவும் மார்க்சியத்தில் இருக்கிறதா? என்பது அவருக்கு மிகப் பெரிய கேள்வியாக இருந்துள்ளது. இது குறித்துப் பேசும் இடங்களில் தமிழவன் இப்படிச் சொல்கிறார்: “புதுக்கவிதையையும் ஏத்துக்கிட்டு மார்க்சிஸ்ட்டாகவும் இருக்கலாங்கிறத நான் ஏற்றுக்கொண்டேன்.” ஆனால், இதை ஒட்டிப் பல விமரிசனங்களை அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது. “புதுக்கவிதையை ஏத்துக்கறது அப்ப வாழ்வா சாவா என்கிற பிரச்சனையா மாறுது” என்கிறார். அந்த சமயம் கேரளப் பத்திரிகை வழி அவருக்கு அறிமுகமான அமைப்பியலானது, புதிய கோட்பாட்டுக் கண்டடைதல்களுக்குத் தமிழவனை இட்டுச் சென்றுள்ளது. அப்போது, தான் விரும்பும்படியான இலக்கியக் கொள்கைக்கு உதவும் மார்க்சியராக அல்தூசரை அடையாளம் காண்கிறார் தமிழவன்.
அதேசமயம் அமைப்பியலைக் கற்றதன் வழி அதைத் தமிழுக்கு ஏற்ற விதத்தில் தகவமைத்து அறிமுகப்படுத்துகிறார். மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதைக் கொள்கையாகக் கொண்ட தமிழவன் கட்சி மார்க்சியம் கடந்தவர், வர்க்க அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுகள் தனக்கு ஏன் உவப்பில்லை என்பதை இந்நேர்காணல்களில் கூறுகிறார். மரபு என்பதே மாற்றம் என்று கூறும் தமிழவன் மார்க்சியத்தை மட்டும் சடங்காகப் பார்ப்பாரா என்ன? மார்க்சியம் படித்தால் எல்லாத் தத்துவங்களையும் புரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் அதே தமிழவன்தான், பின்நவீனத்துவத்தை ஏற்ற மார்க்சியத்தையும் தன் பேச்சுகளின் போது சுட்டுகிறார். அதுபோல, புதுகம்யூனிசம் பற்றியும் அவர் அறிமுகக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தமிழவனிடம் தொடக்கத்தில் தி.மு.க. எதிர்ப்பு என்பது கடுமையாக இருந்துள்ளது. முதல் முறை ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சி தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கருதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று தன்னை ஓரிடத்தில் குறிப்பிடும் தமிழவன், “பெரியார்லேருந்து வெளிக்கிளம்பிய பின் தி.மு.க.வானது சிந்தனைக்கு, creativity-க்கு எதிரான இயக்கமா மாறுது. இப்படி anti intellectual ஆக தி.மு.க. ஏன் மாறினாங்க அப்படீங்கறது புரியல. ‘சிந்தித்தலை’ தடைபண்ணக்கூடிய பாப்புலிஸ்ட் தன்மை, அடிப்படையில் creativity-யை ஆதாரமாகக் கொண்டு உருவான ஒரு இயக்கத்தில் எப்படி புகுந்திருக்க முடியும்னு பாக்கறேன்” என்கிறார். அதேசமயம் திராவிடச் சிந்தனைகளை ‘புனருத்தாரணம்’ செய்ய வேண்டும் என்பதும் அவருடைய வேட்கையாக வெளிப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவே அவருடைய பிற்கால, பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோரை மையமிட்ட தமிழ்த் தேசிய வாசிப்புகளையும் கோட்பாட்டாக்கங்களையும் கூற முடியும்.
தி.மு.க.வின் அரசியல் நிகழ்வும் இலக்கியத்தில் நேர்ந்த ‘மார்டனிச’த்தின் வரவும் இருவேறு பாதைகளில் நிகழ்ந்துள்ளதாகக் கருதும் தமிழவன், தமிழில் அல்லது இந்திய ஒன்றியத்தில் நவீனத்துவம் என்பது பார்ப்பனர்களை மையமிட்டதே என்ற முடிவுக்கு வருகிறார். பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தை மையப்படுத்திய கோட்பாடுகளைத் தான் எதிர்ப்பதாகக் கூறும் தமிழவன், அதேசமயம் அவர்களின் இலக்கியக் கொள்கைகள் மீது தனக்குள்ள ஈடுபாட்டினையும் வெளிப்படுத்துகிறார். அந்தவகையில், மௌனியின் ‘மிஸ்டிகல்’ தன்மை குறித்து தமிழவனின் சிலாகிப்பினை மறுத்து பேசும் பிரேம் – ரமேஷின் பேச்சுகள் இந்நேர்காணல் திரட்டில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழவன், மௌனியின் தன்மை என்பது ஏற்கனவே தமிழ்ப் பண்பாட்டில் உள்ள ஒன்றுதான் என்றும் அரசியல் அதன் புனைவு சாத்தியங்களைக் காலி செய்துவிட்டதாகக் கருதுகிறார். அப்படித் தட்டையானதல்ல பண்பாடு என்பது அவருடைய முடிவு. ஓரிடத்தில் தமிழவன், மாலை போட்டுக் கொண்டு சபரிமலைக்குப் போகும் மார்க்சியர்கள் குறித்துப் புரிந்துகொள்ள (ஆராய்ச்சி செய்ய) வேண்டும் என்று சொல்கிறார்.
மேலும் இந்நேர்காணல்களில், தமிழ்த் தலித் கோட்பாடு தமிழுக்கு வந்தவிதம், பெண்ணியம், பின்நவீனத்துவம் பற்றியெல்லாம் பேசுகிறார். “பின்நவீனத்துவம் என்பது வர்க்கப் பார்வைக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட, சாதிப்பார்வைக்கு முக்கியத்துவம் தருகிறது, தலித் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருகிறது, பெண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருகிறது என்று கூறலாமா?” என்ற கேள்விக்கு, “பின்நவீனத்துவத்தை ஒரு சித்தாந்தமாகப் பார்க்கும் போக்கு இது. மார்க்சியம் போல் பின்நவீனத்துவம் ஒரு சிந்தாந்தம் இல்லை என்பது என் அறிதல்” என்கிறார். தொடர்ந்து, “அப்படியென்றால் பின்நவீனத்துவம் என்பது…?” என்ற கேள்விக்கு, “பின்நவீனத்துவத்தை நான் ஒரு புதிய ஆய்வுமுறையாக சிந்தனை முறையாகவே காண்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அதற்கான கூடுதல் விளக்கங்களையும் தருகிறார். ஓரினப்புணர்ச்சி, ஒழுங்குகளைக் குலைப்பது போன்றவையே பின்நவீனத்துவமாக கருதும் சூழலில், அதை ஒட்டியக் கேள்விக்கு, இவ்வாறு பேசப்படும் விசயங்கள் மட்டுமே அக்கோட்பாடு அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலை நாடுகள் பின்நவீனத்துவத்தைக் கைவிட்டாலும், அது நமது கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள உதவும் என்பதே அவருடைய எண்ணம்.
கோட்பாட்டாளரான தமிழவன், மார்க்சியம் மதம் இல்லை என்று கூறுகிறார்; புதிய எழுத்துப்பாணி வந்ததும் பழைய எழுத்துப்பாணிகள் அவுட் ஆகிவிட்டன என்ற வாதம் எடுபடாது என்கிறார். அதேபோல், கோட்பாடுகளைக் கொண்டு தனக்கு லேபில் ஒட்டுவதில் ஈடுபாடு இல்லை என்றும் தொடக்க காலத்தில் நிறைய பெயர்களை அள்ளிப்போட்டுத் தான் கட்டுரைகள் எழுதிய போக்கை மாற்றிக் கொண்டதாகவும் வெவ்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது கூறுகிறார். இவை யாவும் புதிய கோட்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை.
ஓரிடத்தில், “பின்நவீனத்த முழுசா படிச்சு, விரிவான நூல் எழுதி பின்பு சர்ச்சை செய்து இது இது பயன்படும், இது இது பயன்படாது என்று சொல்ற அளவு தமிழ்ச்சூழல் வளர்ந்திருக்கிறதா? என்று தெரியல” என்கிறார். கூடுதலாக, “ஒரு பேஷன் என்று பார்த்து அந்தப் பெயரை உச்சரிக்கிறதா தெரியுது” என்கிறார். இன்று வரை அந்த நிலைமை மாறவில்லை என்பதும், கூடுதலாக, பேஷன் மட்டுமல்லாது தற்குறித்தனத்தாலும் அக்கோட்பாட்டைக் குறித்து பலரும் தெரிந்தது போல் உளறி வருவது வேடிக்கை இல்லையா?
தமிழகத்துக்கு வெளியே இருந்து பார்ப்பதால், யாரும் பார்க்காத கோணத்தில் தன்னால் பார்க்க முடிகிறது என்பதைத் தமிழவன் ஓரிடத்தில் கூறுகிறார். மேலும், தமிழ்ப் பயிற்றுவிக்கும் முறையைத் தொடர்ந்து சாடி வந்தவர்களில், சாடி வருபவர்களில் தமிழவன் முதன்மையானவர். தமிழ்நாட்டில் நடக்கும் தமிழாய்வுகள் தகவல்களை மையமிட்டவை என்றும் இலக்கிய முதன்மை பெறாதவை என்பதும் அவருடைய மதிப்பீடுகள். இன்று வரை தமிழ்த்துறைகள் மாறவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். அதேசமயம் அவை மாறவேண்டும் என்ற தீராத விருப்பமும் அவரிடத்தில் தொடர்ந்து வெளிப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை விதைத்த பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரிய பேராசிரியர்களை அவர் நினைவுகூர்க
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

