வ.உ.சி. குறித்த ரெங்கையாவின் உரை – கடிதம் – சண்முக. விமல் குமார்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்,

நலமா?? சமீபத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வேலைக்காக விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைக்காது என்பது எனக்குத் தெரிந்த சேதி தான் என்றபோதும், குறைந்தது யாராவது நேர்காணலுக்காகவாவது அழைப்பார்கள் என்று நம்பினேன். ஒரு அறிகுறியும் இல்லை. சும்மா இருந்தால் மனம் சோர்ந்துவிடும் என்று உடனடியாக நடக்கும் எல்லா கருத்தரங்குகளுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். ஆக இந்த மாதம் முழுவதும் ஒருநாள் விடாமல் கருத்தரங்குகளில் பங்கேற்கிறேன்.

அந்தவகையில் கடந்த ஆறு நாட்களாக, ‘தமிழ் இலக்கண மரபுகள்’ என்கிற தலைப்பில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் கலையியல் புலம், தமிழ்த் துறை ஒருங்கிணைத்த ஆறு நாள் (இணைய வழி) ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் பங்கேற்றேன். அது சற்று முன் தான் முடிந்தது. அதனையொட்டி முகநூலில் எழுதிய பதிவினை இணைக்கிறேன்.

ஆனால், இந்நிகழ்விற்கு முன்பு இதே நிறுவனத்தின், தமிழ் மன்றம் ஒருங்கிணைத்த மாதாந்திர ஒருநாள் இணையவழி கருத்தரங்கத்திலும் பங்கேற்றேன். இது குறித்து முன்னமே எழுத வேண்டும் என்று எண்ணின போதும் சமயம் கூடி வரவில்லை.

இப்போது முடிவதில் மகிழ்ச்சி; பங்கேற்ற கருத்தரங்கின் தலைப்பு: வ.உ.சியும் தமிழும் என்பது; உரையாற்றியவர் நூலகர் திரு ரெங்கையா முருகன் அவர்கள்.

நண்பர் சிலம்பரசன் – முனைவர் சிலம்பரசனாகப் பரிணமித்த நாளில் அவருடைய வாய்மொழித் தேர்வுக்காக வேண்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது (அவருடைய ஆய்வேட்டில் எனது நூலினைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருந்தது கண்டு எனக்குச் சந்தோஷம் தாளவில்லை. தமிழ்மாறன் ஐயா வழக்கம் போல் மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்; மேன்மக்கள் மேன்மக்களே. அது குறித்த பதிவு: ) கிட்டத் தட்ட எனது திறன்பேசி சாகும் நிலைமை. மின்கலம் நான்கு சதவீதத்திற்கும் கீழே ஆற்றல் இழப்பு கண்டிருந்தது. திடீர் முடிவாய், கிருஷ்ணகிரி NCBH இல் சரணடைய எண்ணினேன். மின்னூட்டமேற்றியபடியே (சரியான வார்த்தைதானா?? வ.உ.சி. நிறைய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவாராம். அதனால் இப்படி ஒரு முயற்சி. ஹஹா.) அப்படியே அங்கேயே உட்கார்ந்து உரைமுழுவதும் கேட்டு முடித்தேன்; சும்மா உதவி பெறுவதற்குக் கூச்சமாக இருந்ததால், கையில் இருப்பு குறைவாக உள்ள நிலையிலும் சுமார் 3000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி வர நேர்ந்தது. (நான் உருப்பட ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்களேன்??)

இவற்றுள் உரையைக் கேட்கக் கேட்க எழுந்த காவிய சோகத்திற்கிடையே கண்ணில் பட்ட வ.உ.சி. குறித்த ஆ. சிவசுப்பிரமணியன், நா. வானமாமலை ஆகியோரின் குறுநூல்களும் அடக்கம். (இது கொஞ்சம் ஆறுதலான தகவல்தான்)

முடித்துக் கொண்டு இரவு பத்து, பத்தரை வாக்கில் விடுதிக்கு வரும்போது நாய்களுக்குப் பயந்து பயந்து குளிரில் விடுதியை அடைந்தேன்.

நான் பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் கவர்னராக வேண்டும், மதியம் மந்திரி ஆகவேண்டும் என்று கற்பனை செய்யும் வகையறாவைச் சேர்ந்தவன் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். எனது ஆர்வம் ஏனோ ஒன்றில் இருக்க மாட்டேன் என்கிறது கருமம். எனவே, முனைவர் பட்ட ஆய்வு முடியும் மட்டும் எந்தப் புதிய ஈடுபாட்டையும் வளர்த்துக்கொள்ளும் எண்ணமும் எனக்கில்லை என்பதால், வ.உ.சி. பற்றிய எந்த அறிமுகத்தையும் நான் இப்போதைக்கு வளர்த்துக்கொள்ள ஆசையில்லாமல்தான் இருந்தேன். வருங்காலத்திற்குத் தேவைப்படுமே வாங்கி வைத்திருக்கும் பெரியவர் வ.உ.சி. குறித்த ஆ. இரா. வேங்கடாசலபதியின் Swadeshi Steam, பரிசல் வெளியிட்ட பெரியவர் குறித்த தொகை நூல் ஆகியவை என்னிடம் உள்ள போதும் அவற்றை இப்போதைக்குச் சும்மாதான் வைத்திருக்கிறேன்.

ஆக, வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், வ.உ.சி. குறித்து நான் கேட்கும் முதல் உரையும் ரெங்கையா முருகன் பேசக் கேட்கும் முதல் உரையும் இதுவே.

ஒரு துறையில் ஆழங்கால் பட்டவர்களால்தான் அத்துறை குறித்து தங்குதடையின்றி பேசமுடியும். உரையாடலில் மிளிர முடியும். ரெங்கையா உரையாடலில் பேசிய போது தேதி முதலாகச் சொன்னபோது என் காதுகள் விடைத்தன என்றுதான் உருவகிக்க விரும்புகிறேன்.

கப்பல் ஓட்டிய தமிழன் என்ற அடைமொழியைத் தாண்டி வ.உ.சி. குறித்து அவர் ஏற்படுத்தித் தந்த பிம்பம் வ.உ.சி குறித்த ஒரு துன்பியல் இலக்கிய வடிவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம், வ.உ.சி.யின் அரசியல் ஈடுபாடு, தொழிலாளர் புரட்சி, அரசியல் தொய்வு நேர்ந்த நிலையில் அவரை ஆட்கொண்ட மொழி ஈடுபாடு, என் செல்லப் பனுவல்களான தொல்காப்பியம் – திருக்குறளில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்; இரு நூல்களையும் பதிப்பித்தார்; உரை கண்டார் (திருக்குறளுக்கு உரை கண்டது; அது பின்னாளில் வீ. அரசுவால் பதிப்பு கண்டதும் தகவலளவில் நான் முன்னரே அறிவேன்.) வாழ்க்கையில் துவண்டு போகும் போது தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்று அவர் சொன்னார் என்றெல்லாம் கேட்டபோது நான் அவ்வாளுமையோடு மனப்பிணைப்புக் கொள்ள வேறு ஏதும் பிரத்தியேகக் காரணங்கள் வேண்டுமா என்ன??

ரெங்கையாவின் உரையில், வ.உ.சி.தான் முதன் முதலில் மொழி வழி அரசியலை முன் வைத்தவர், நீதிக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்திற்கு அடிப்படையாக இருந்தவர் ஆகிய நிறைய முதன் முதலில் வந்தபோது தொடக்கத்தில் சற்று நான் நம்பத் தயங்கினேன் என்ற போது பின்னர் அந்த உரையின் முடிவில் அது காணாமல் போய்விட்டது. அந்தவகையில் இருந்தது அவருரை.

வ.உ.சி.யின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது குறித்து ரெங்கையா எழுப்பிய ஆதங்கம் மிக மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். அத்தகைய இருட்டடிப்பினை முழுக்க முழுக்கச் செய்தவர்கள் அந்நாளின் காங்கிரஸ்தான் என்று அறிந்த போது அரசியல் எவ்வளவு கீழ்த் தரமானது என்று தோன்றியது; பெரியவரைப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என இரு தரப்புமே விரும்பவில்லை என்று அறிந்து வருத்தம் தேக்கினேன்.

வாழும் நாட்களில் பெரியவர் வ.உ.சி. ’மகாத்மா’ காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தபோதும் சரி. பெரியவர் பங்காற்றிய பல பத்திரிக்கைகளும் சரி அவரின் மறைவுக்கு யாருமே அஞ்சலிக் குறிப்பு வெளியிடவில்லை என்று தெரிந்ததும் வருத்தம் மேலும் தளும்பியது.

வ.உ.சி. வாழ்வும் மறைவும் ஒரு பெருந்துன்பியல் காவியம் என்றுதான் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது.

இனி, வருங்காலத்தில் எனது ஆர்வம் வ.உ.சி. குறித்தும் திரும்பும் என் மாணவர்களையும் அவ்வழி ஆற்றுப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

உரையாற்றிய ரெங்கையா முருகனுக்கும் ஒருங்கிணைத்த தமிழ் மன்றத்தின் *** (அவசரத்திற்கு அவர் பெயர் நினைவில் வரவில்லை) நான் சொல்ல வேண்டியது பாக்கிவுள்ளது.

வாய்ப்பமையும் நேரத்தில் ஏனைய, வரும் நாட்களின் திட்டங்கள், அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன். (ஆங் ஏதோ மடல் இலக்கியம் முழுக்கவும் எதுகைத் தொடையில் அமையுமாம் இன்றைய யாப்பிலக்கண மரபுகள் குறித்த உரையில் அ. சதீஷ் சொன்னார் – சுவாரசியமான தகவல் அல்லவா?; ஆனால், அப்படி எழுதினால் நாக்குத் தள்ளிவிடும். ஹஹா. இருந்தும் பாரதிதாசன் எழுதியுள்ளாராம். ஈஇ.)

வாய்ப்புள்ளோர் வ.உ.சி.யின் நூல்களை, அவர் குறித்த நூல்களை (இவற்றிற்கு எனக்குமே பட்டியல் வேண்டியுள்ளது) வாசிக்க வேண்டுகிறேன். அதுவே இந்தக் கடிதத்தின் மைய நாடி.

– சண்முக. விமல் குமார் (றாம் சந்தோஷ்)

07.09.2024 (கடிதம் எழுதப்பட்ட நாள்)

Rengaiah Murugan

**அந்த ஒருங்கிணைப்பாளர்: Ganesh Gopal

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2024 08:37
No comments have been added yet.