நிழல்களுடன் ஆடியது-2
என்னுடைய நாவல்கள் எல்லாமே ஒரு சொற்றொடரில் இருந்து தொடங்குபவை. ’கதை சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மா சொன்னாள்’ என்ற வரிதான் பெங்களூர் ஜெயநகரில் நள்ளிரவில் ஆளோய்ந்த சாலையில், மழைச்சாரல் விழுந்துகொண்டிருந்த வேளையில், ராட்சதர்கள் போல கைவிரித்து நின்றுகொண்டிருந்த கொன்றை மரங்களின் கீழே நடந்துகொண்டிருக்கும்போது என்னில் தோன்றியது. என்னுடைய அம்மாவும் குணாட்யரின் கதையும் இணையும் ஒரு வரி அது என்று இப்போது உணர்கிறேன். அந்த வரி அகத்தூண்டுதலை உருவாக்கிக்கொண்டே இருந்தது. என்னை அமர முடியாமல் செய்தது. மந்திரம் போல அதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வரியையே பலமுறை தட்டச்சு செய்து முதல் அத்தியாயத்தை எழுதினேன். தூங்கி எழுந்து, அன்றே இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களையும் எழுதி முடித்தேன்.
அதன் பிறகு ஏதோ ஒரு வகையில் அந்த தொடக்க விசை குறைவதை உணர்ந்தேன். அந்த மூன்று அத்தியாயங்களும் தன்னளவில் சிறப்பாகவே இருந்தன. ஆனால் ஒரு நாவலை எழுதும்போது எனது அனுபவம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதனுடைய உள்ளிருக்கும் ஒரு விசை பெருகிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே. ஓர் அத்தியாயம் மேலும் பல அத்தியாயங்களை உருவாக்குவதாக, தன்னுள் இருந்தே வெளியேதள்ளி என்னை முன்னே செலுத்துவதாக இருக்கவேண்டும். உயிர்களின் இயல்பு அதுதான். இரண்டு இலைகளை விட்டு நிற்கும் செடிக்குள் மரம் தன்னை வெளிப்படுத்தும்பொருட்டு துடித்து உந்திக்கொண்டிருக்கிற்து.
அந்த விசை அந்த மூன்று அத்தியாயங்களில் இல்லையோ என்று தோன்றியதனால் பிரதிஷ்டானபுரிக்கே சென்றாலென்ன என்று எனக்குத் தோன்றியது. இணையத்தில் தேடிப்பார்த்தால் அங்கே பழைய தொல்பொருள் ஆய்வுகள் நிகழ்ந்து சாதவாகனப் பேரரசின் சிறு தடயங்கள் கிடைத்திருக்கின்றனவே ஒழிய, முக்கியமான இடங்களோ சுவாரசியமான இடங்களோ எதுவுமே இல்லை என்று தெரிந்தது. இருந்தாலும் அங்கே போய் அந்த மண்ணை உணர்வோம், அங்கு சில நாட்கள் இருந்து அந்த விசையை உள்வாங்கிக்கொள்வோம், ஏதோ ஒன்று அங்கு எனக்காகக் காத்திருக்கக்கூடும் என்று தோன்றியது.
இந்த உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. நான் அறியாத நிலங்களில் எங்கோ எனக்காக எதுவோ காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டே இருப்பேன். அந்தக் கற்பனைதான் என்னைத் தூண்டும் விசையாக இருக்கிறது. ஆகவே கிருஷ்ணனிடம் தொலைபேசியில் அழைத்து பிரதிஷ்டானபுரிக்கு செல்கிறேன். நீங்கள் வருகிறீர்களா என்றேன். ‘ஆனால் எங்கும் நாம் செல்லப்போவதில்லை. சுவாரசியமாக எதுவுமே அங்கு பார்க்கப்போவதில்லை. ஒரு சின்ன நகரத்தில் வெறும் ஐந்து நாட்கள் ஒன்றுமே செய்யாமல் சும்மா சுற்றியலையப் போகிறோம். ஆர்வமிருந்தால் வாருங்கள்’. என்று சொன்னேன். அவர் வருகிறேன் என்று ஒத்துக்கொண்டார்.
பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் ஏப்ரல் 20-ம் தேதி எங்கள் நிகழ்ச்சி முடிந்தவுடனே காரில் கிளம்பி விமானநிலையம் சென்று, அங்கிருந்து விடியற்காலையில் ஔரங்காபாத் சென்று இறங்கினோம். அங்கிருந்து டாக்சியில் பைத்தான் நகருக்கு காலை எட்டு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பைத்தான் அதிகபட்சம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஒரு சிறு ஊர். அதன் அருகே இருக்கும் ஒரு மிகப்பெரிய அணைக்கட்டு இல்லையேல் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அங்கே ஏக்நாதரின் பிறப்பிடம் ஒரு ஆலயமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நிகழ்கிறது. ஆண்டு முழுக்க ஏக்நாத்தின் பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஜைனர்களுக்கு அது முக்கியமான இடம். அங்கு முக்கியமான ஆலயம் ஒன்று உள்ளது. பைத்தானி புடவைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகையான பட்டுப்புடவைகள் அங்கு புகழ் பெற்றவை. மராத்திய மாநிலத்தில் திருமணத்திற்கு பைத்தானி புடவைகள் எடுப்பது ஒரு வழக்கமாக உள்ளது
கோதாவரி ஆறு அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் மிக அகன்ற ஒரு வளைவாக அந்நகரத்தை ஒட்டி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரே மகத்துவம் என்பது அது கோதாவரிக்கரையில் அமைந்திருக்கிறது என்பதுதான். ஒரு இடைநிலை விடுதியில் அறை போட்டுக் கொண்டோம். மாலையிலேயே ஏக்நாத் ஆலயத்தை சென்று பார்த்தோம். நகரத்துத் தெருக்களில் சுற்றிவந்தோம். ஏப்ரல் மாதத்தின் உச்சகட்ட வெயில். பத்து மணிக்குமேல் மாலை ஐந்து மணிவரை எங்கும் வெளியே செல்லமுடியாது. உண்மையிலேயே தலைசுட்டெரிவது போல் உணர்ந்தோம். அப்பொழுது முழுக்க அறைக்குள்ளேயே இருந்தோம்.
கிருஷ்ணன் நிலைகொள்ளாத பயணி. தன் வாழ்நாளுக்குள் அதிகமான இடங்களை பார்த்துவிடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர் ஆகவே மானசீகமான ஒரு பட்டியலில் ’டிக்’ அடிப்பது என்பதே அவருடைய வழக்கம். அத்தனை தூரம் வந்து நான்கு நாட்கள் ஒரே ஊரில் ஒன்றும் பார்க்காமல் சும்மா இருப்பது அவருக்கு மிகக்கடினம். திரும்ப திரும்ப அருகிலிருக்கும் பிற ஊர்களைச் சொல்லி ‘அங்கெல்லாம் சென்று பார்ப்போம். இரண்டு மணிநேர பயணம்தான். ஒருமணி நேரப்பயணம்தான்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ‘எல்லாத்தையும் கதையிலே கொண்டுவரலாம்’ என என்னை கவர முயன்றார். முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கிரேட்டர் லேக் என்ற ஊருக்கு போவதற்கு டாக்சியையும் பதிவு செய்துவிட்டார். ’நீங்கள் சென்று வாருங்கள் நான் எங்கும் வருவதாக இல்லை’ என்று நான் சொன்னபிறகு சோர்வுடன் அதை ரத்து செய்தார்.
ஒவ்வொரு நாளும் காலையில் அங்கிருக்கும் இடங்களைச் சுற்றிப்பார்ப்போம். காலை உணவுக்குப்பின் அறைக்குள் வந்து அமர்ந்திருப்போம். மதியம் ஒரு தூக்கம். மாலையில் மறுபடியும் உலா. அங்கே கோதாவரிக்கரையில் இருக்கும் நாக கட்டம் என்னும் பாழடைந்த படித்துறைக்கு செல்லும் ஒரு பாதை உள்ளது. அப்பாதை கோதாவரிக்கரை முழுக்க நிரம்பியிருக்கும் தலித் மக்களின் குடியிருப்புகள் வழியாக செல்கிறது.
பங்கிகள் என்றும் சமர்கள் என்றும் அழைக்கப்படும் தலித் மக்கள் இந்நகரத்தில் பெருவாரியாக இருக்கிறார்கள். இந்நகரத்தின் அரசியலைத் தீர்மானிப்பவர்களாகவும் அவர்கள் திகழ்கிறார்கள். *நகரத்தின் பேருந்து நிலையம் பாழடைந்து கைவிடப்பட்ட ஒரு பகுதி. ஆனால் அதற்கு அருகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் நினைவிடம் புத்தம் புதியதாகக் கட்டி வண்ணப்பொலிவுடன் உள்ளது. அது ஒருவகையான அறைகூவல். அதுவே பைத்தானின் வரலாற்றுக்கும் வரலாற்றை மீறி அது இன்றிருக்கும் உளவியலுக்கும் சான்று என்று தோன்றியது.
பைத்தானே நெரிசலான, அழுக்கான தெருக்களால் ஆனதுதான். ஆனால் தலித் குடியிருப்புகள் மேலும் நெருக்கமான வீடுகளுடன், இடிபாடுகளும் குப்பைகளும் மண்டி, நிறைந்து வழியும் சாக்கடைகளுடன் காணப்படுகின்றன. நகரத்தின் முழுச் சாக்கடையும் கோதாவரியை நோக்கி திறந்துவிடப்படுகிறது. அனைத்து சாக்கடைகளும் வந்து சேரும் அந்த தாழ்ந்த பகுதியில் தலித்கள் குடியிருப்பு இருப்பதனால் அவர்கள் அதற்குள்ளேயே தான் வாழவேண்டியிருக்கிறது.
குறுகலான தெருக்களில் சோர்வுற்ற முகங்களுடன் இடுங்கிய கண்களுடன் பீடியை ஆழ இழுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மக்களில் எவர் தலித் எவர் அல்லாதவர் என்பதை மிக எளிதில் கண்டடைய முடியும். தலித்கள் பொதுவாக தலைப்பாகையோ அல்லது மராட்டிக்கே உரிய காந்தித்தொப்பியோ அணிவதில்லை. வெறும் தலையர்கள் பெரும்பாலும் தலித்கள் என்று சொல்லிவிட முடியும்.
நாகா காட்டுக்கு செல்லும் வழியில் இருந்த பிரம்மாண்டமான மாளிகைகளைக் கண்டு திகைத்து நின்றுவிட்டேன். கோட்டை போன்ற ஓங்கிய சுவர்கள் கொண்டவை. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள். தலைக்குமேல் திறந்துகிடக்கும் சன்னல்கள். ஆனால் மாளிகைகளுக்கு கூரை கிடையாது. கூரைகள் அழிந்து இருநூறு ஆண்டுகள் கடந்திருக்கும். அப்பகுதியை ஆண்ட ராஜபுத்திரர்களால் கட்டப்பட்டு, இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்டு, வெவ்வேறு ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட மாளிகைகள் அவை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மொகலாய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டபோது கைவிடப்பட்டவை. அழிந்து பெரும் சுவர்களாக நின்றிருக்கின்றன.
அவற்றின் கதவுகள் எப்போதைக்குமாக மூடப்பட்டுள்ளன. அவற்றின் இடுக்குகள் வழியாகப்பார்க்கும்போது உள்ளே குப்பையும் கூளமும் முட்செடிகளும் மண்டி இருளடைந்த செறிந்த காடு ஒன்று இருப்பதை உணர முடிந்தது. ஒரு வீட்டுக்குள் காடு என்பது ஒரு திகைக்க வைக்கும் படிமம். அப்போது அந்தக் காட்சி அளித்த திகைப்பு மட்டுமே இருந்தது. நாகா கட்டுக்கு செல்லும் பாதையும் ஆளோய்ந்தது .சுடுகாட்டுக்கு அருகே அந்த படிக்கட்டு இருக்கிறது. ஈமச்சடங்குகளுக்கு மட்டும் தான் அது பயன்படுத்தப்படுகிறது அங்கும் கோதாவரியை ஒட்டி ஓர் இடிந்த மாளிகை உள்ளது. ஒரு காலத்தில் மிக அழகிய ஒரு வசந்த மாளிகையாக அது இருந்திருக்கலாம். எல்லா வாசல்களும் கோதாவரியின் பெருநீர்ப்பரப்பை நோக்கித் திறப்பவை. ஆனால் இன்று உள்ளே புதர்கள் மண்டி முட்கள் செறிந்து கிடக்கிறது.
அந்த மாளிகைகள் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருந்தன. அந்த நிலம் என்னுள் ஓடிக்கொண்டிருந்த ’கதைசொல்லும் பிசாசு ஒன்று உண்டென்று அம்மா சொன்னாள்’ என்ற வரியுடன் இணைந்துகொண்டது. அந்தக் கதைப்பிசாசு வாழுமிடம் என்று நான் ஏற்கனவே கற்பனை செய்திருந்தது எனக்கு நன்கு தெரிந்திருந்த ஒரு மழைக்காடு, பசுமையின் இருட்டு நிறைந்தது. அந்த அகநிலம் நான் அங்கு வந்தவுடனே மாறிவிட்டது. ஆனால் பிறிதொன்று அமையவும் இல்லை.
என்னுடைய கையில் இருந்த அத்தியாயங்கள் எல்லாமே மனதில் மிகப்பெரிய பின்னடைவை அடைந்துவிட்டிருந்தன. அவை நேரடியாக பிரதிஷ்டானபுரியின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. குணாட்யர் பிறந்து, பிரதிஷ்டானபுரியில் வளர்ந்து ,கவிஞனாகும் வாழ்க்கையின் தொடக்கச் சித்திரங்கள் அவை. ஆனால் அவை விஷ்ணுபுரத்தின் நேரடியான செல்வாக்கு கொண்ட அத்தியாயங்கள் போன்றிருந்தன. ஆகவே அவ்ற்றை நான் பயன்படுத்தவில்லை. அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்ற எண்ணமும் எனக்கு எழவில்லை.
எழுதிய ஒன்றை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது என்பது என்னுடைய அனுபவம். ஒன்று பிறந்து வருகிறது. அழகும் மகத்துவமும் கொண்டதாக இருக்கலாம். இறந்தும் பிறக்கலாம் .விரைவில் இறந்தும் போகலாம். ஆனால் அது ஒரு செய்பொருள் அல்ல. சிறு மாற்றங்கள் செய்யலாம். படிப்படியாக ஒரு படைப்பை மேம்படுத்த முடியாது. ஆகவே எழுதிய அத்தியாயங்களை கைவிட முடிவு செய்தேன். வேறொன்று எழுதத் தொடங்கவேண்டும் ஆனால் அந்த முதல் வரியில் என் உள்ளம் விலகிச்செல்லவும் இல்லை.
(மேலும்)
பெங்களூர், இன்னொரு வாழ்க்கைத்துளிJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
